ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள்: தகவல் திரட்டுகள்
தமிழில்: வெண்பா
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது முன் எப்போதும் இல்லாத பாரிய அளவிலான தடைகளை விதித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்துவகை அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் மனித உரிமை மீறல்கள்
ஏன் தடைகள்?
குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரின் பின்னணியில், ரஷ்யாவில் மனித உரிமைகள் தொடர்ந்து மோசமடைந்து வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
ஆக்கிரமிப்பு விரிவாக்கம், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிரான திட்டமிட்ட தீவிரமான ஒடுக்குமுறை, ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள், அரசியல் எதிர்க் கட்சியினர், ரஷ்யாவுக்கு எதிரான விமர்சனக் குரல்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டிக்கிறது.
பிப்ரவரி 19, 2024 அன்று, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கோபத்தை வெளிப்படுத்தியது, மேலும் இந்த மரணத்திற்கான பொறுப்பு அதிபர் புடின் மற்றும் ரஷ்ய அதிகாரிகளையே சாரும் என்று கூறியது.
மார்ச் 21-22, 2024 அன்று நடந்த ஐரோப்பிய கவுன்சிலில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்யாவில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் என்றும், நாட்டின் அரசியல் எதிர்க்கட்சிகள் மீதான துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.
அலெக்சி நவால்னியின் மரணம் குறித்து சுதந்திரமான - வெளிப்படையான சர்வதேச விசாரணைக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
என்னென்ன தடைகள்?
ரஷ்யாவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு பிரிவுகளின் கீழ் தடைகளை விதித்துள்ளது:
• உலகளாவிய மனித உரிமைகள்
• மே 27, 2024 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாடு சார்ந்த ஆட்சிமுறை (தடைகள்)
கடுமையான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், சிவில் சமூகம் மற்றும் ஜனநாயக எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல், ரஷ்யாவில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பொறுப்பானவர்களை இலக்காகக் கொண்டு இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளன.
அவை தனிநபர்களுக்கான பயணத் தடைகள், தனிநபர்கள் - நிறுவனங்களின் சொத்து முடக்கம், நிதிகள் அல்லது பொருளாதார வளங்களுக்கு தடை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
தண்டிக்கப்படவுள்ள தனிநபர்கள் – நிறுவனங்கள் பட்டியலில் பின்வருவனவை உள்ளடங்கும்:
• ஜூன் 2022 முதல் அவர் இறக்கும் வரை நவால்னி வைக்கப்பட்டிருந்த தண்டனை குடியிருப்புகள்
• ரஷ்யாவின் ஃபெடரல் சிறைச்சாலை
• நவால்னி, மற்ற பல சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு தண்டனை வழங்குவதில் ஈடுபட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையின் பிற உறுப்பினர்கள்
• சிறைச்சாலை அமைப்பு, நீதி அமைச்சகத்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள்
• ரஷ்ய துணை-அரசு சார்ந்த பாதுகாப்பான இணையக் கூட்டமைப்பு (Safe Internet League)
ரஷ்யாவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்பம், பொருள் ஆதரவை வழங்குபவர்களை அல்லது அத்தகையவர்களுடன் வேறுவிதமாகக் தொடர்புடையவர்களை இலக்காகக் கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை (மே 28, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ள) நாடு சார்ந்த ஆட்சிமுறை (தடைகளை) அனுமதிக்கிறது.
இந்த ஆட்சிமுறையானது உள்நாட்டு ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தக்கூடிய உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு வர்த்தகக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது, அத்துடன் தகவல் தொடர்பு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக பயன்படுத்த உபகரணங்கள், தொழில்நுட்பம் அல்லது மென்பொருட்கள் மீதும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
தற்போது இந்த ஆட்சிமுறையின் கீழ் 52 தனிநபர்கள் மற்றும் ஒரு நிறுவனம் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு
ஏன் தடைகள்?
மார்ச் 2014 முதல், ஐரோப்பிய ஒன்றியம் பின்வருவனவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக ரஷ்யா மீது படிப்படியாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதித்துள்ளது:
• கிரிமியாவின் சட்டவிரோத இணைவு (2014)
• உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு (2022)
• உக்ரைனின் டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளை சட்டவிரோதமாக இணைத்தல் (2022)
இதுவரை, 18 தொகுப்புத் தடைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ரஷ்யா மீது அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலமும், அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்கான ரஷ்யாவின் திறனைக் குறைப்பதற்காகக் கிடைக்கக்கூடிய அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவதன் மூலமும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐரோப்பிய ஒன்றிய கொள்கையின் நோக்கத்தை அடைவதற்காக இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் கவனமாக இலக்கு வைக்கப்பட்டு - விகிதாசாரமாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் இயல்பில் தற்காலிகமானவை. இதன் பொருள், அவை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நோக்கங்களை அடைய அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், இவை சரிசெய்யவோ, தளர்த்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ கூடும்.
உக்ரைனுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பில் ரஷ்யாவிற்கு அளித்த ஆதரவுக்குப் பதிலளிக்கும் விதமாக பெலாரஸ், ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது.
தனிநபர்கள் - நிறுவனங்களுக்கு எதிரான தடைகள்
உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 2,500 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும்.
தண்டிக்கப்பட்ட தனிநபர்களுள்:
• விளாடிமிர் புடின்
• ரோமன் அப்ராமோவிச்
• செர்ஜி லாவ்ரோவ்
• விக்டர் மற்றும் ஒலெக்சாண்டர் யானுகோவிச்
• ரஷ்ய டூமாவின் உறுப்பினர்கள்
• அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள்
• தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் மற்றும் பிரச்சாரகர்கள்
• தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள்
• உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இராணுவப் பணியாளர்கள்
ஆகியோரும் உள்ளடங்குவர்.
பின்வருவரும் செயல்களுக்குப் பொறுப்பானவர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர்:
• உக்ரைனில் 2022 இல் நடந்த 'பொதுவாக்கெடுப்புகள்' மற்றும் 2023 இல் நடந்த 'தேர்தல்கள்'
• பூச்சா மற்றும் மரியுபோலில் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள்
• பொதுமக்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல்கள்
• உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்துதல் மற்றும் கட்டாயமாக தத்தெடுத்தல்
• உக்ரேனிய குழந்தைகளுக்கு இராணுவ மறு கல்வி அளித்தல்
• உக்ரைனில் சண்டையிட சிரிய கூலிப்படையினரை நியமித்தல்
• ட்ரோன்களின் உற்பத்தி மற்றும் வழங்கல்
• தடைகளைத் தவிர்த்தல்
• ரஷ்யாவின் இரகசியக் கப்பற்படையின் (shadow fleet) செயல்பாடு
• உக்ரைனின் கலாச்சார பாரம்பரியத்தை சூறையாடுதல்
ஈரான், பெலாரஸ், வட கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தண்டிக்கப்படும் நிறுவனங்கள்:
• அரசியல் கட்சிகள்
• வாக்னர் குழுமம் உட்பட ஆயுதப் படைகள் மற்றும் துணை இராணுவக் குழுக்கள்
• வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்
• பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களுக்குப் பொறுப்பான ஊடக நிறுவனங்கள்
• இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் உள்ள நிறுவனங்கள்
• போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள நிறுவனங்கள்
• விமானப் போக்குவரத்து, கப்பல் கட்டுதல் மற்றும் இயந்திரங்கள் தயாரிப்புத் துறைகளில் உள்ள நிறுவனங்கள்
• தகவல் தொழில்நுட்பம் (IT), தொலைத்தொடர்பு மற்றும் காப்பீட்டுத் துறைகளில் உள்ள நிறுவனங்கள்
• முந்தைய தடைகளைத் பொருட்படுத்தாத நிறுவனங்கள்
• ரஷ்யாவின் இரகசியக் கப்பற்படையைச் சேர்ந்த கப்பல்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள்
• உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்க நிறுவனமான பிஜேஎஸ்சி அல்ரோசா (PJSC Alrosa)
• 'அகில ரஷ்ய மக்கள் முன்னணி' (All-Russia People’s Front) இயக்கம்
• மறு கல்வித் திட்டங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் மற்றும்
• ரஷ்யாவின் போருக்கு ஆதரவளித்த மூன்றாம் நாடுகளின் நிறுவனங்களும் தடைகளுக்கு உட்பட்டவை.
இந்த நடவடிக்கைகள் முதலில் மார்ச் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் மிக சமீபத்தில் மார்ச் 15, 2026 வரை நீட்டிக்கப்பட்டன.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:
• பயணத் தடை: இலக்கு வைக்கப்பட்ட நபர்கள் ஐரோப்பிய ஒன்றியப் பிரதேசங்களுக்குள் நுழையவோ அல்லது அதன் வழியாகப் பயணிக்கவோ முடியாது.
• சொத்து முடக்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தண்டிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
• நிதிகள் முடக்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிதியையும் கிடைக்கச் செய்யாது.
முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்கள்
பிப்ரவரி 28, 2022 அன்று ரஷ்யாவுக்கு எதிரான மூன்றாவது தொகுப்புத் தடைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம், ரஷ்ய மத்திய வங்கியின் சுமார் 210 பில்லியன் யூரோ மதிப்புள்ள சொத்துக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முடக்கப்பட்டன.
மே 2024 இல், ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவதால் ஏற்படும் கூடுதல் வருமானங்கள் உக்ரைனுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய கவுன்சில் சட்ட கட்டமைப்பை மாற்றியமைத்தது.
ஜூலை 2024 இல், ஐரோப்பிய ஒன்றியம் 1.5 பில்லியன் யூரோவைப் பெற்றது, இது ஐரோப்பிய அமைதி வசதிக்கு (90%) மற்றும் உக்ரைன் வசதிக்கு (10%) ஒதுக்கப்பட்டது. இரண்டாவது தவணையாக 2.1 பில்லியன் யூரோ ஏப்ரல் 2025 இல் கிடைத்தது.
அக்டோபர் 25, 2024 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி, 95% கூடுதல் வருமானங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு, உக்ரைன் கடன் ஒத்துழைப்பு பொறிமுறையின் மூலம் அனுப்பப்படும். இது சுமார் 45 பில்லியன் யூரோ மதிப்புள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 கடன்களை உக்ரைன் திருப்பிச் செலுத்த உதவுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கருவியாகும். மீதமுள்ள 5% ஐரோப்பிய அமைதிக்கு ஒதுக்கப்படும்.
உக்ரேனிய அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல்
மார்ச் 2014 இல், உக்ரேனிய அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்குப் பொறுப்பானவர்களின் சொத்துக்களை முடக்க கவுன்சில் முடிவு செய்தது. இந்த நடவடிக்கைகள் மிக சமீபத்தில் மார்ச் 6, 2026 வரை நீட்டிக்கப்பட்டன.
பொருளாதாரத் தடைகள்
கிரிமியாவை சட்டவிரோதமாக இணைத்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, 2014 இல் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்ட பொருளாதாரத் துறைகளில் ரஷ்யாவுடனான பரிமாற்றங்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத் தடைகளை விதித்தது.
மார்ச் 2015 இல், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், ஏற்கனவே உள்ள தடைகளை மின்ஸ்க் ஒப்பந்தங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு ஏற்ப சீரமைக்க முடிவு செய்தனர், இது டிசம்பர் 2015 இன் இறுதியில் நடைபெற திட்டமிடப்பட்டது.
இது நடக்காததால், கவுன்சில் பொருளாதாரத் தடைகளை ஜூலை 31, 2016 வரை நீட்டித்தது.
ஜூலை 2016 முதல், பொருளாதாரத் தடைகள் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது ஜனவரி 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தடைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் நிதி, வர்த்தகம், எரிசக்தி, போக்குவரத்து, தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறைகள் மற்றும் ரஷ்யாவுக்கோ அல்லது ரஷ்ய குடிமக்களுக்கோ வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் இலக்காகக் கொண்டுள்ளன.
ரஷ்யாவுக்கு உடந்தையாக இருந்ததால் பெலாரஸையும், ட்ரோன்களின் உற்பத்தி செய்து வழங்கியதற்காக ஈரானையும் அவை இலக்காகக் கொண்டுள்ளன.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் சுருக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
• நிதி
• பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம்
• எரிசக்தி
• வர்த்தகம்
• போக்குவரத்து
• சேவைகள்
நிதி
நிதித் துறையில் உள்ள தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலதனம் மற்றும் நிதிச் சந்தைகளை பெறுகுவதற்கான ரஷ்யாவின் அணுகல் மீதான கட்டுப்பாடுகளையும் பின்வருவனவற்றிற்கான தடைகளையும் உள்ளடக்கியுள்ளது:
• 45 ரஷ்ய வங்கிகளுடனான பரிவர்த்தனைகள்
• 'நிதித் தரவுகளை மாற்றுவதற்கான அமைப்பை' (SPFS) பயன்படுத்துதல்
• ரஷ்ய மத்திய வங்கி, ரஷ்ய பிராந்திய மேம்பாட்டு வங்கி மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி ஆகியவற்றுடனான பரிவர்த்தனைகள்
• ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளில் ரஷ்ய குடிமக்களின் பெரிய வைப்புத் தொகைகள்
• ரஷ்ய நேரடி முதலீட்டு நிதித் திட்டங்களில் முதலீடு செய்தல்
• யூரோ நாணய கையிருப்புக்கு ஈடான ரூபாய் நோட்டுகளை ரஷ்யாவிற்கு வழங்குதல்
• ரஷ்ய குடிமக்களுக்கு கிரிப்டோ சொத்துக்கள் மற்றும் அறக்கட்டளைகள் (trusts) பற்றிய ஆலோசனைகளை வழங்குதல்
எரிசக்தி
எரிசக்தித் துறையில் உள்ள தடைகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் கடல்வழிப் போக்குவரத்து தொடர்பான விலை உச்சவரம்பையும், நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 மீதான முழு பரிவர்த்தனைத் தடையையும் உள்ளடக்குகின்றன. மேலும் பின்வருவனவற்றிற்கான தடைகளையும் அவை உள்ளடக்குகின்றன:
• ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் நிலக்கரி இறக்குமதி
• ரஷ்ய எண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்டு மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி
• ரஷ்யாவிலிருந்து பெட்ரோலிய வாயு (LPG) இறக்குமதி
• ரஷ்ய குடிமக்களுக்கு எரிவாயு சேமிப்புத் திறனை வழங்குதல்
• ஐரோப்பிய ஒன்றிய ஆலைகளில் உள்ள ரஷ்ய இயற்கை எரிவாயுவின் (LNG) மறு ஏற்றுமதி
• ரஷ்யாவின் LNG திட்டங்களில் புதிய முதலீடுகள்
• எரிசக்தித் தொழிலுக்கான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்தல்
• ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் சுரங்கத் துறைகளில் புதிய முதலீடுகள்
போக்குவரத்து
போக்குவரத்துத் துறையில் உள்ள தடைகள் - அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்வெளியை பயன்படுத்த தடை மற்றும் அனைத்து ரஷ்ய கப்பல்கள் உள்ளிட்ட 444 கப்பல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களை பயன்படுத்த தடை ஆகியவற்றை உள்ளடக்கியது, அவற்றில் பல ரஷ்யாவின் இரகசியக் கப்பற்படையின் ஒரு பகுதியாகும். மேலும் பின்வருவனவற்றிற்கான தடைகளையும் அவை உள்ளடக்குகின்றன:
• விமானப் போக்குவரத்து, கடல்சார் மற்றும் விண்வெளித் துறைகளில் உள்ள பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்தல்
• ஜெட் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து விமான பாகங்களையும் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்தல்
• ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பொருட்களை கொண்டு செல்லும் ரஷ்ய வாகனங்கள்
• ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பொருட்களை கொண்டு செல்லும் ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட டிரெய்லர்கள் மற்றும் செமி-டிரெய்லர்கள்
• ரஷ்ய கடல்சார் கப்பல் பதிவேட்டுடனான பரிவர்த்தனைகள்
• வாகன பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் நிதிச் சேவைகளை வழங்குதல்
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம்
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள தடைகள் ரஷ்யாவின் இராணுவ மற்றும் தொழில்துறைக்குகு நேரடியாக ஆதரவளிக்கும் மூன்றாம் நாடுகளிலுள்ள நிறுவனங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியது, மேலும் பின்வருவனவற்றை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையையும் அவை உள்ளடக்குகின்றன:
• இராணுவப் பயன்பாட்டிற்கான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம்
• ட்ரோன் என்ஜின்கள் மற்றும் ட்ரோன்கள் உற்பத்தி செய்வதற்கான பாகங்கள்
• ஆயுதங்கள், சிவில் துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் பாகங்கள்
• வெடிமருந்துகள், இராணுவ வாகனங்கள் மற்றும் துணை இராணுவ உபகரணங்கள்
• தகவல் தொழில்நுட்பம் (IT), மின்னணு மற்றும் ஒளியியல் பாகங்கள்
• இரசாயனங்கள், வழிகாட்டி கருவிகள், ஜெனரேட்டர்கள் மற்றும் தெர்மோஸ்டாட்டுகள்
• கேமராக்கள், லென்ஸ்கள், பொம்மை ட்ரோன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஹார்ட் டிரைவ்கள்
• ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைகளை மேம்படுத்தக்கூடிய பிற பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்
மூலப்பொருட்கள் மற்றும் பிற பொருட்களில் வர்த்தகம்
வர்த்தகத் துறையில் உள்ள தடைகள் - ரஷ்யாவிற்கு சொகுசுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடை, பொட்டாசியம் குளோரைடு இறக்குமதி செய்வதற்கான ஒதுக்கீடுகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து பின்வருவனவற்றை இறக்குமதி செய்வதற்கான தடை ஆகியவற்றை உள்ளடக்குகின்றன:
• எஃகு, இரும்பு, ஃபிக் அயர்ன் மற்றும் அலுமினிய தாது
• செம்பு மற்றும் அலுமினிய கம்பி, குழாய்கள் மற்றும் தகடுகள்
• சிமெண்ட், நிலக்கரி மற்றும் தார்
• மரம், காகிதம், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்
• ஹீலியம் மற்றும் பிற இரசாயனங்கள்
• கடல் உணவு, மதுபானங்கள், சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள்
• நகைகள் உட்பட வைரங்கள் மற்றும் தங்கம்
• ரஷ்யாவின் தொழில்துறை திறன்களை மேம்படுத்தக்கூடிய பிற பொருட்கள்
சேவைகள்
பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவுக்கோ அல்லது ரஷ்ய குடிமக்களுக்கோ பின்வரும் சேவைகளை வழங்குவதற்கான தடையை உள்ளடக்கியுள்ளன:
• கணக்கியல், தணிக்கை, கணக்குப் பதிவு மற்றும் வரி ஆலோசனை
• கட்டுமானம், கட்டிடக்கலை மற்றும் பொறியியல்
• தகவல் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சட்ட ஆலோசனை
• விளம்பரம், சந்தை ஆராய்ச்சி மற்றும் பொதுக் கருத்துக் கணிப்பு
• பிற தடைகளின் கீழ் உள்ள பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தொழில்நுட்ப உதவி, தரகு அல்லது நிதி உதவி
• பிற தடைகளின் கீழ் உள்ள பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது வர்த்தக ரகசியங்கள்
• நிறுவனங்களின் மேலாண்மை, தொழில்துறை வடிவமைப்பு, உற்பத்தி, வங்கி மற்றும் நிதித் துறையின் பயன்பாடுகளுக்கான மென்பொருள்
மேற்கண்ட பட்டியல்கள் முழுமையானவை அல்ல. தடைகளின் முழுமையான பட்டியல் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.
பொருளாதார உறவுகள் மீதான கட்டுப்பாடுகள்
குறிப்பிட்ட பகுதிகளுக்குத் தொடர்புடைய இலக்கு வைக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளை பின்வருவனவற்றைத் தொடர்ந்து கவுன்சில் ஏற்றுக்கொண்டது:
• கிரிமியா மற்றும் செவாஸ்டோபோலை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்தது
• டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்தது
போன்ற நடவடிக்கைகள் பின்வருவனவற்றில் கட்டுப்பாடுகளை உள்ளடக்குகின்றன:
• இறக்குமதி
• ஏற்றுமதி
• சேவைகள்
கிரிமியா மற்றும் செவாஸ்டோபோலை சட்டவிரோதமாக இணைத்ததற்குப் பதிலளிக்கும் விதமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, அவை சமீபத்தில் ஜூன் 23, 2026 வரை நீட்டிக்கப்பட்டன.
உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஒப்லாஸ்ட்களின் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளை சுதந்திரமானவைகளாக அங்கீகரிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், அந்தப் பகுதிகளுக்கு ரஷ்ய துருப்புக்களை அனுப்பும் முடிவுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பிப்ரவரி 2022 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அக்டோபர் 2022 இல், இந்த நடவடிக்கைகள் சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டன. அவை சமீபத்தில் பிப்ரவரி 24, 2026 வரை நீட்டிக்கப்பட்டன.
பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகள்
2014 ஆம் ஆண்டில், ஐரோப்பிய புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (EBRD) ரஷ்யா இனி பயனாளி நாடாக இருக்காது என்று முடிவு செய்தது, மேலும் அந்த நாட்டில் முதலீடுகளை அங்கீகரிப்பதை நிறுத்தியது.
அதே ஆண்டில், ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIB) ரஷ்யாவில் புதிய நிதியுதவி நடவடிக்கைகளுக்கான கையெழுத்திடுவதை நிறுத்தியது. ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புத் திட்டங்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு இடைநிறுத்தப்பட்டன.
கூடுதலாக, உலக வர்த்தக அமைப்பின் பிற உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில் உள்ள ரஷ்ய தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான - மிகவும் விருப்பமான நாடு (most-favoured-nation) என்ற அந்தஸ்தை மறுத்தன.
ஊடக நிறுவனங்கள் மீதான தடைகள்
2022 முதல், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய ஆதரவு தகவல் பரப்பும் நிறுவனங்களின் ஒளிபரப்புச் செயல்பாடுகளையும் உரிமங்களையும் இடைநிறுத்தியுள்ளது.
இந்த நிறுவனங்கள் ரஷ்ய அரசாங்கத்தால் தகவல்களைக் கையாளவும், உக்ரைனுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பு குறித்த தவறான தகவல்களைப் பரப்பவும் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ரஷ்யாவுக்கு அண்டை நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரமும் அடங்கும்.
தற்போது ஒளிபரப்புத் தடை இந்த 27 ஊடக நிறுவனங்களுக்குப் பொருந்தும்:
EADaily / Eurasia Daily, Fondsk, Izvestia, Katehon, Krasnaya Zvezda / Tvzvezda, Lenta, New Eastern Outlook, NewsFront, NTV/NTV Mir, Oriental Review, Pervyi Kanal, REN TV, RIA Novosti, RuBaltic, Russia Today மற்றும் அதன் துணை நிறுவனங்கள், Rossiya RTR / RTR Planeta, Rossiya 24 / Russia 24, Rossiya 1, Rossiyskaya Gazeta, SouthFront, Spas TV Channel, Sputnik மற்றும் அதன் துணை நிறுவனங்கள், Strategic Culture Foundation, Tsargrad TV Channel, TV Centre International, Voice of Europe.
பொதுவெளியில் தவறான தகவல்களைப் பரப்புகின்ற ஊடக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதும் ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய அரசியல் கட்சிகளுக்கு நிதியளித்தல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஜனநாயக செயல்முறைகளில் தலையிடவும், செல்வாக்கு பிரச்சாரங்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் அதன் ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தவும் ரஷ்யா தொடர்ந்து முயற்சிக்கிறது.
எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், சிந்தனைக் குழாம்கள் (think tanks) மற்றும் ஊடக சேவை வழங்குநர்கள் ஆகியோர் ரஷ்ய அரசு மற்றும் அதன் முகவர்களிடமிருந்து நிதியுதவியைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உரிமைகள் சாசனத்தின்படி, இந்த நடவடிக்கைகள் ஊடக சேவை வழங்குநர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்கள் ஆராய்ச்சி மற்றும் நேர்காணல்கள் போன்ற பிற நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்வதைத் தடுக்காது.
இராஜதந்திர நடவடிக்கைகள்
2014 இல் ஐரோப்பிய ஒன்றிய - ரஷ்ய உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது. ரஷ்யாவுடன் அனைத்து இருதரப்பு உச்சி மாநாடுகளை நடத்துவதை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் முடிவு செய்தன. விசா தொடர்பான ரஷ்யாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் இடைநிறுத்தப்பட்டன.
சோச்சியில் நடைபெறவிருந்த ஜி8 உச்சி மாநாட்டிற்குப் பதிலாக, ரஷ்யா இல்லாமல் ஜி7 கூட்டம் ஜூன் 4 மற்றும் 5, 2014 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது. அன்று முதல், ஜி7 வடிவத்தில் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD), சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) ஆகியவற்றில் ரஷ்யா இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன.
விசா ஒப்பந்தத்தை இடைநிறுத்துதல்
பிப்ரவரி 2022 இல், ரஷ்ய இராஜதந்திரிகள், பிற ரஷ்ய அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் விசா எளிதாக்கும் விதிகளிலிருந்து இனி பலன் பெற முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்தது.
செப்டம்பர் 2022 இல், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான விசா எளிதாக்கும் ஒப்பந்தத்தை முழுமையாக இடைநிறுத்தும் முடிவை கவுன்சில் ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக, விசாவின் பொதுவான விதிகள் ரஷ்ய குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும்.
உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவில் வழங்கப்பட்ட ரஷ்ய பாஸ்போர்ட்டுகளை ஏற்காதது குறித்து டிசம்பர் 2022 இல் கவுன்சில் ஒரு முடிவை ஏற்றுக்கொண்டது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட்டுகளை வழங்கும் ரஷ்யாவின் நடைமுறைக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு வந்தது. இது 2008 இல் அப்காசியா மற்றும் தெற்கு ஒசேஷியா ஆகிய ஜார்ஜிய பிரதேசங்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதற்கான ரஷ்யாவின் ஒருதலைப்பட்ச முடிவைத் தொடர்ந்து வந்தது.
உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அல்லது ஜார்ஜியாவில் பிரிந்து சென்ற பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு அல்லது அங்கு வழங்கப்பட்ட ரஷ்ய பயண ஆவணங்கள் விசா பெறுவதற்கோ அல்லது ஷெங்கன் பகுதியின் எல்லைகளைக் கடப்பதற்கோ செல்லுபடியாகும் பயண ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விவசாயப் பொருட்கள் மற்றும் உரங்கள் மீதான வரிகள் (Tariffs)
ஜூன் 12, 2025 அன்று, ரஷ்யா மற்றும் பெலாரஸிலிருந்து வரும் விவசாயப் பொருட்கள் மற்றும் நைட்ரஜன் உரங்கள் மீது வரிகளை அறிமுகம் செய்யும் ஒரு ஒழுங்குமுறையை கவுன்சில் ஏற்றுக்கொண்டது.
புதிய வரிகள் ஜூலை 1, 2025 அன்று நடைமுறைக்கு வந்தவுடன், ரஷ்யாவிலிருந்து வரும் அனைத்து விவசாய இறக்குமதிகளும் ஐரோப்பிய ஒன்றிய வரிகளுக்கு உட்படும். ரஷ்ய இறக்குமதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உர இறக்குமதியில் 25% க்கும் அதிகமாகும், இது சுமார் 3.6 மில்லியன் டன்கள் ஆகும்.
இந்த வரிகள் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்புப் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஒழுங்குமுறை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இறக்குமதி செய்வதை மட்டுமே கவனிக்கும். மூன்றாம் நாடுகளுக்கான ரஷ்ய விவசாய மற்றும் உர ஏற்றுமதிகள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
தடைகளை தவிர்ப்பதற்கு எதிரான நடவடிக்கைகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளின் அளவைக் கருத்தில் கொண்டு, குறுக்குவழியில் நிதித் திட்டங்களைப் பயன்படுத்துதல், வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் தன்மை அல்லது தோற்றத்தை மாற்றுதல் அல்லது மூன்றாம் நாடுகளின் அதிகார வரம்புகளை நம்புதல் போன்ற பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றைத் தவிர்க்க முயற்சித்துள்ளன.
பட்டியலிடப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை மறைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
தடைகளை தவிர்ப்பதைத் தடுக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அவற்றில்:
• மூன்றாம் நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்
• தவிர்ப்புக்கு வசதி செய்து கொடுப்பவர்களை இலக்காகக்குதல்
• மூன்றாம் நாடுகளில் அமைந்துள்ள - கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்குத் தண்டனை வழங்குதல்
• புடினின் இரகசியக் கப்பற்படையை நிர்வகிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தண்டனை வழங்குதல்
ஐரோப்பிய ஒன்றியம் பின்வருவனவற்றில் தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது:
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ரஷ்யா வழியாக மூன்றாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் போர்க்களப் பொருட்கள் ஆகியவற்றை கடத்தல்
• ரஷ்யாவில் பயன்படுத்தப்படுவதற்காக குறிப்பாக உணர்திறன் மிக்க பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை மறு ஏற்றுமதி செய்தல்
• கப்பலுக்கு-கப்பல் என பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ள - தடைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களுக்கு அணுகல்
• புடினின் இரகசியக் கப்பற்படையின் ஒரு பகுதியாக உள்ள அல்லது ரஷ்யாவிற்கு இராணுவ உபகரணங்களை அல்லது திருடப்பட்ட உக்ரேனிய தானியங்களை கொண்டு செல்வதற்குப் பொறுப்பான 444 கப்பல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களுக்கு அணுகல்
• ரஷ்ய எண்ணெயை கொண்டு செல்லும்போது சட்டவிரோதமாக தலையிடுவதாக அல்லது தங்கள் கப்பலில் உள்ள தானியங்கி அடையாள அமைப்பை முடக்குவதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களுக்கு அணுகல்
• எண்ணெய் விலை உச்சவரம்பைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவில் உள்ள சில துறைமுகங்கள், கிடங்குகள், விமான நிலையங்களுடனான எந்தவொரு பரிவர்த்தனையும்
ஐரோப்பிய ஒன்றியம் பின்வருவனவற்றைக் கோரியுள்ளது:
• தடைகளை தடுக்க முயலும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் தங்கள் மூன்றாம் நாட்டு துணை நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தாய் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்
• மூன்றாம் நாடுகளுக்கு போர்க்களப் பொருட்களை விற்கும்போது முறையான வழிமுறைகளை (due diligence mechanisms) ஐரோப்பிய ஒன்றிய இயக்குநர்கள் செயல்படுத்த வேண்டும்
• போர்க்களப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்துறை நிபுணத்துவத்தை மூன்றாம் நாடுகளுக்கு மாற்றும் ஐரோப்பிய ஒன்றிய இயக்குநர்கள், அத்தகைய நிபுணத்துவம் ரஷ்யாவிற்காக உத்தேசிக்கப்பட்ட பொருட்களுக்குப் பயன்படுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்த ஒப்பந்த விதிகளைச் சேர்க்க வேண்டும்
ரஷ்யர்களுக்கு கிரிப்டோ-கரன்சி சேவைகளை வழங்குவதற்கான தடையைத் தவிர்ப்பதைக் கட்டுப்படுத்த, அத்தகைய சேவைகளை வழங்கும் சட்டப்பூர்வ நிறுவனங்களில் ரஷ்யர்கள் எந்தப் பதவிகளையும் வகிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறுவப்பட்ட ரஷ்ய நிறுவனத்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே 100,000 யூரோவை தாண்டிய நிதிப் பரிமாற்றங்களுக்கு முன்அனுமதிகள் பெறவேண்டியது கட்டாயம்.
ரஷ்யாவின் பலதரப்பு அச்சுறுத்தல்கள்
ஏன் தடைகள்?
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவின் பொறுப்பற்ற - அலட்சியமான நடத்தை - விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு மற்றும் சட்டத்தை அது மீறுவதையும் விளக்குகின்றன.
சைபர் தாக்குதல்கள், தகவல் கையாளுதல், தலையீட்டுப் பிரச்சாரங்கள், தீவைத்தல், நாசவேலைகள், சேதப்படுத்துதல், இடம்பெயர்வுக்கான கருவியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பரந்த அளவிலான பல்தரப்பு அச்சுறுத்தல் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்துள்ளது. ரஷ்யா தொடர்ந்து செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளை சீர்குலைக்கிறது, ஐரோப்பிய வான்வெளியை மீறுகிறது, ஐரோப்பிய ஒன்றிய தனிநபர்களுக்கு எதிராக உடல்ரீதியான தாக்குதல்களை நடத்துகிறது.
ரஷ்யாவால் மேற்கொள்ளப்படும் இந்த தீங்கிழைக்கும் நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளை சீர்குலைக்கவும் பலவீனப்படுத்தவும், அத்துடன் உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவையும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அதன் திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கைகளைக் கையாள்வதற்கும், குற்றவாளிகளைப் பொறுப்பேற்க வைப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது.
என்னென்ன தடைகள்?
அக்டோபர் 8, 2024 அன்று, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு எதிரான சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக தடைகள் தொகுப்பை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்தது.
இந்த தொகுப்பானது, ரஷ்ய அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை இலக்காகக் கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை அனுமதிக்கிறது.
புதிய தடைகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் பின்வரும் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கையாள முடியும்:
• தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் செயல்பாடுகளை பலவீனப்படுத்துதல்
• பொருளாதார நடவடிக்கைகள், பொது நலச் சேவைகள் அல்லது முக்கியமான உள்கட்டமைப்புக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் நாசவேலை
• மோசடி தகவல், வெளிநாட்டு தகவல்களை கையாளுதல் மற்றும் தலையீடு (FIMI)
• தீங்கிழைக்கும் சைபர் நடவடிக்கைகள்
• குடியேற்றவாசிகளின் கருவியைப் பயன்படுத்துதல்
மே 20, 2025 அன்று, ரஷ்யாவின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்ட கப்பல்கள், விமானங்கள், அசையாச் சொத்துக்கள் (real estate), டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகளின் பாகங்கள் போன்ற உருவமுள்ள சொத்துக்களை இலக்காகக்கும் வகையில் தடைகள் தொகுப்பை ஐரோப்பிய ஒன்றியம் விரிவுபடுத்தியது. அத்துடன் கடன் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோ சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பரிவர்த்தனைகளையும் இலக்கு வைக்க கூடும்.
மேலும், அண்டை நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படும் ரஷ்ய அரசு ஆதரவு ஊடக நிறுவனங்களின் ஒளிபரப்பு உரிமங்களை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைக்கும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவற்றின் ஒளிபரப்பின் உள்ளடக்கங்களை மறுபதிப்பு செய்வதையும் தடை செய்யும்.
தற்போது இந்த தடையின் கீழ் 47 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் அடங்குபவை:
• வெளிநாட்டு தகவல் கையாளுதல் மற்றும் தலையீடு (FIMI) ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள சங்கங்கள்
• ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கூட்டாளி நாடுகளுக்கு எதிரான சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிப்பட்ட குடிமக்கள்
• ரஷ்ய ஆதரவு பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் தனிநபர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் வலையமைப்புகள்
• 'டோப்பல்ஜாங்கர்' பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள்
• பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் ரஷ்ய அரசாங்கத்தின் கூட்டுப்பணியாளர்கள்
• எஸ்டோனியா மற்றும் ஜெர்மனியில் ஜனநாயக அரசியல் செயல்முறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள்
• ரஷ்ய இராணுவ உளவுத்துறையில் உள்ள இரகசியப் பிரிவான 'ஜிஆர்யு யூனிட் 29155'
ரஷ்யாவின் பலதரப்புத் தாக்குதல்கள் தொடர்பான தடைகள் தனிநபர்களுக்கான பயணத் தடைகள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குதல் மற்றும் நிதிகள் அல்லது பொருளாதார வளங்களை முடக்குவது ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
இவை சமீபத்தில் அக்டோபர் 9, 2026 வரை நீட்டிக்கப்பட்டன.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு