ரஷ்ய எண்ணெய் ஒரு தடைக்கல்லா?
வரிவிதிப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை நெருங்குகிறது
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தகப் பிரச்சினைகளில் அமெரிக்காவுடனான வர்த்தக உபரியை இந்தியா குறைத்து வருகிறது. ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்றின்படி, இரு தரப்புகளும் “சாதகமான” முன்னேற்றங்களை அறிவித்துள்ளன. 18.10.2025 அன்று புது டெல்லியில் இந்திய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரிவிதிப்புகள் மற்றும் வர்த்தக உபரிகள் குறைந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகத்தில் பெரிய உபரிகள் இல்லை என்றும், விவாதங்கள் சாத்தியமான ஒப்பந்தத்தை நோக்கி நகர்கின்றன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரம் வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளுடன் இந்தியாவில் இருந்து வந்த பிரதிநிதிகள் குழு, ஆக்கபூர்வமான சந்திப்புகளை நடத்தியது. ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான பதட்டங்கள் வர்த்தக உரையாடலைத் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன
டிரம்ப், இது குறித்து மோடியுடன் பேசியதாகவும், ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல்களை இந்தியா படிப்படியாக நிறுத்தும் என்றும் அண்மையில் கூறினார். பல மாத விமர்சனங்கள் மற்றும் இந்தியப் பொருட்களின் மீது 50% சுங்க வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நான் மோடியுடன் பேசினேன், அவர் ரஷ்ய எண்ணெய் தவறை மீண்டும் செய்யப் போவதில்லை என்று கூறினார். அவ்வளவுதான்,” என்று தெரிவித்தார். இந்தியா இதற்கு இணங்கவில்லை என்றால், தொடர்ந்து “மிகப் பெரிய வரிகளை” எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
ஆயினும், டிரம்ப் கூறிய அத்தகைய அழைப்பு குறித்து எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்கை நுகர்வோர் நலன்களால் தொடர்ந்து வழிநடத்தப்படுகிறது என்றும் அது கூறியது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, சுத்திகரிப்பு ஆலைகள் காலப்போக்கில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கலாம் என்றும், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து கொள்முதலை அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய எண்ணெய் தகராறின் மையமாக உள்ளது
2022 இல் உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னர், இந்தியா சலுகை விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக மாறியது. தற்போது அத்தகைய இறக்குமதிகள் நாட்டின் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் மூன்றில் ஒரு பங்காக உள்ளன. இந்தப் பெட்ரோலிய வருவாய்கள் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு நிதியளிக்க உதவுகின்றன என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இது இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் முக்கியமான முட்டுக்கட்டையாக உள்ளது.
இந்தியப் பொருட்களின் மீதான டிரம்பின் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளில் பாதி இந்த எரிசக்தி வர்த்தகத்தில் இருந்துதன் உருவாகின்றன என்று கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது நடந்து வரும் வர்த்தக விவாதங்கள் "இணக்கமானவை" என்று ராய்ட்டர்ஸிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இது சூழல் மேம்பட்டு வருவதைக் குறிக்கிறது.
கடந்த வாரம் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை பாதியாகக் குறைத்துள்ளது என்று கூறியிருந்தாலும், ராய்ட்டர்ஸால் மேற்கோள் காட்டப்பட்ட இந்திய அதிகாரிகள், அத்தகைய குறைப்பு எதுவும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். சுத்திகரிப்பு ஆலைகள் நவம்பர் மற்றும் டிசம்பர் சரக்குகளுக்கான ஆர்டர்களை ஏற்கனவே அளித்துள்ளன என்றும் அவர்கள் கூறினர். மாஸ்கோவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்பட்ட தடைகளைத் தொடர்ந்து ரஷ்யா ஏற்றுமதியை அதிகரிப்பதால், இந்த மாதம் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி உண்மையில் சுமார் 20% அதிகரித்து, நாளொன்றுக்கு 1.9 மில்லியன் பேரல்களை எட்டும் என்று பொருட்களின் தரவு நிறுவனமான கேப்லரின் (Kpler) மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
(ப்ளூம்பெர்க், ராய்ட்டர்ஸ் தகவல்களுடன்)
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு