சரக்கு போக்குவரத்துக்கு தடை விதித்த லிதுவேனியாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

3-ம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

சரக்கு போக்குவரத்துக்கு தடை விதித்த லிதுவேனியாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியிடம் இருந்து கலினின்கிரேடு பகுதியை ரஷ்யா தன் வசமாக்கி கொண்டது.

எனினும், ரஷ்யாவுடன் இணைந்த ஒரே நிலப்பரப்பாக இல்லாத கலினின்கிரேடு பகுதி, நேட்டோ உறுப்பு நாடுகளாக உள்ள போலந்து - லிதுவேனியாவுக்கு இடையில் பால்டிக் கடல் பகுதியை ஒட்டியுள்ளது.

கலினின்கிரேடு பகுதிக்கு லிதுவேனியா வழியாக ரயிலில் சரக்குப் போக்குவரத்தும் காஸ் குழாய்களையும் ரஷ்யா கொண்டு செல்கிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. அதை காரணம் காட்டி தற்போது ரஷ்ய பொருட்களை ரயில் பாதை வழியாக கலினின்கிரேடுக்கு கொண்டு செல்ல லிதுவேனியா திடீரென தடை விதித்துள்ளது. இதனால் கட்டுமான பொருட்கள், நிலக்கரி உட்பட முக்கிய பொருட்களை கலினின்கிரேடுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. லிதுவேனியாவின் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘பொருட்களை கொண்டு செல்ல லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அது லிதுவேனியா மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். கலினின்கிரேடு பகுதிக்கும் ரஷ்யாவுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கான தடை நீடித்தால், லிதுவேனியா மீது நடவடிக்கை எடுக்க ரஷ்யா அனைத்து உரிமைகளும் உள்ளன’’ என்று எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், லிதுவேனியாவின் முடிவு பெரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிபர் புதின் ஆய்வு நடத்தி வருகிறார் என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறினார்.

ஆனால், லிதுவேனியா வெளியுறவுத் துறை அமைச்சர் கேப்ரிலியஸ் லேண்ட்ஸ்பெர்கிஸ் கூறும்போது, ‘‘ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையைதான் அமல்படுத்தி இருக்கிறோம். அதன் வழிகாட்டுதலின்படிதான் செயல்பட்டிருக்கிறோம். அதை ரஷ்யா தவறாக புரிந்து கொண்டுள்ளது’’ என்றார்.

கலினின்கிரேடு கவர்னர் ஆன்டன் அலிகனோவ் கூறும்போது, ‘‘லிதுவேனியாவின் தடை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் பீதியடைய வேண்டாம்’’ என்றார்.

ஆனால், ‘‘ஒரு சின்ன சம்பவம் கூட 3-ம் உலகப் போர் ஏற்படுவதற்கு சக்திவாய்ந்ததாக மாறக் கூடும்’’ என்று சர்வதேச ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. போக்குவரத்து தடையை நீக்காவிட்டால், உக்ரைன் மீதான போர் லிதுவேனியாவுக்கும் பரவக்கூடும் என்று ஊடகங்கள் கணித்துள்ளன.

 

நன்றி – இந்து தமிழ்திசை