அமெரிக்காவின் கடன் நெருக்கடி ‘பொருளாதார பேரழிவை’ உண்டாக்க கூடும்: யெல்லன்

தமிழில் : விஜயன்

அமெரிக்காவின் கடன் நெருக்கடி ‘பொருளாதார பேரழிவை’ உண்டாக்க கூடும்: யெல்லன்

ஏப்ரல் 20, 2023 அன்று அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நீட்சே அரங்கில் ஒரு கருத்தரங்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “அமெரிக்க – சீனா பொருளாதார உறவு” என்ற தலைப்பில் அமெரிக்காவின் நிதியமைச்சர் ஜானட் யெல்லன் கருத்துரையாற்றினார்.

அரசாங்கம் கடன் பெறுவதற்கான உச்சவரம்பை அமெரிக்க நாடாளுமன்றம் அதிகரிக்க தவறினால் கடன் நெருக்கடியில் சிக்குவதோடு “பொருளாதார பேரழிவையும்” ஏற்படக்கூடும். மேலும் இது வருடக்கணக்கில் வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.

அமெரிக்க அரசாங்கம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் நெருக்கடியில் சிக்குவதனால் வேலை இழப்புகள் ஏற்படும்; வீடுவாங்கவதற்காக வாங்கிய கடன்களுக்கான வட்டி, கார் வாங்குவதற்காக வாங்கிய கடன்களின் வட்டி, கிரிடிட் கார்டுகளுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதமும் அதிகரிக்கக்கூடும் என்று கலிபோர்னியா மாகாணத்திலிருந்து வந்திருந்த தொழிலதிபர்கள் முன்னிலையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கூட்டத்தில் யெல்லான் பேசினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சியை இந்த கடன் நெருக்கடி பாதிக்கும் என்று எச்சரித்ததோடு தற்போது கடன் பெறுவதற்காக இருந்து வரும் உச்ச வரம்பை(31.4 டிரில்லியன் டாலர்) அதிகரிப்பது அல்லது இடைக்காலமாக இரத்து செய்வதென்பது அமெரிக்க நாடாளுமன்றத்தின் “அடிப்படை கடமையாகும்” என்று அவர் கூறினார்.

“அமெரிக்காவின் கடன் நெருக்கடி அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்லாது உலக நிதியமைப்பின், பேரழிவிற்கே இட்டுச் செல்லக்கூடும். இது கடன் பெறுவதற்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்வதோடு இதே நிலையை தொடரச் செய்துவிடும். வட்டி விகித அதிகரிப்பால் கடன் பெற்று முதலீடு செய்வதென்பது குறிப்பிடத்தக்க அளவு அதிகம் செலவு பிடிக்கக்கூடிய விசயமாக மாறிவிடும்.” என்று சாக்ரோமென்டோ பெருநகர முதலாளிகள் சம்மேளனத்தின்(Sacramento Metropolitan Chamber of Commerce) உறுப்பினர்கள் முன்னிலையில் யெல்லன் கூறினார்.

கடன் வாங்குவதற்கான உச்ச வரம்பை அதிகரிக்கவில்லையென்றால், கடன் சந்தையில் அமெரிக்க முதலாளிகள் கடன் பெறுவது சிக்கலுக்குரிய விசயமாக மாறிவிடும். மேலும், இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படும்; சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நம்பியிருக்கக்கூடிய முதியோர்களுக்கான உதவிகள் நிறுத்தப்படுவதற்கான நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.

“கடன் உச்சவரம்பை அதிகரிக்கப்பதற்கான சட்டமியற்றப்பட வேண்டும். அதை எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்ற வேண்டும். நெருக்கடி நிலை முற்றும் வரை காத்திருக்காமல் உடனடியாக இதை செய்ய வேண்டும்”

கடன் வாங்குவதற்கான உச்சவரம்பு கடந்த ஜனவரி மாதத்தின் போதே நிறைவடைந்துவிட்டதால் அதுவரை வாங்கிய கடனிற்கான வட்டியை ஜீன் மாதத்தின் துவக்கம் வரை மட்டும் செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் நிதியுள்ளது என்று கடந்த ஜனவரியில் யெல்லன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூறியிருந்தார்.

பிற வளர்ந்த நாடுகளைப் போலல்லமால், கடன் வாங்குவதற்கான உச்ச வரம்பு அமெரிக்காவில் கடுமையாக வரையறுக்கப்பட்டதாக உள்ளது. அரசாங்கத்தின் வருவாயை விட செலவு அதிகமாக இருப்பதால், நாடாளுமன்றம் கடன் வாங்குவதற்கான உச்சவரம்பை அவ்வப்போது உயர்த்துவதென்பது அவசியமாகிறது.

அரசாங்கத்தின் செலவை 4.5 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு குறைப்பதோடு, கடன் வாங்குவதற்கான உச்ச வரம்பை 1.5 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரிப்பதன் மூலம் வரும் வாரங்களில் ஆரோக்கியமான விவாதங்களை துவங்குவதற்கு இது ஒரு நல்ல அடித்தளமாக அமையும் என்பதன் அடிப்படையில் அமெரிக்காவின் மக்களவையில் பெரும்பான்மை வகிக்கக்கூடிய குடியரசுக் கட்சியின் தலைவர் கெவின் மெக்கார்த்தி கடந்த வாரம் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார்.

கடன் உச்ச வரம்பு விசயத்தோடு, செலவினக் குறைப்பை இணைக்கக் கூடாது என்று பைடன் அரசு கூறியுள்ளது. மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் பெரும்பான்மை வகிக்கக்கூடிய ஜனநாயகக் கட்சியினர் இந்த முன்மொழிவை நிராகரிப்பதற்கே அதிகம் வாய்ப்புள்ளது.

பைடன் அரசிற்கும், எதிர்கட்சிக்கும் இடையில் நிலவும் இழுபறியால் நிதிச் சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளது எனலாம். பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு வழங்கிய கடனை இழந்துவிடாமல் இருப்பதற்கு வாங்கப்படும் காப்பீடு திட்டத்திற்கான செலவு என்பது அதன் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் கடன் செலுத்த முடியாமல் கடன் நெருக்கடியில் சிக்குவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது என்று  நிதி விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து வரும் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

- விஜயன் 

(தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.reuters.com/markets/us/us-default-debt-would-trigger-an-economic-catastrophe-yellen-2023-04-25/