ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான ட்ரம்பின் தடைகள் - அமெரிக்க இலக்கை எட்டுமா? இந்தியா மற்றும் சீனாவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? - செய்தி தொகுப்புகள்

வெண்பா (தமிழில்)

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான ட்ரம்பின் தடைகள் - அமெரிக்க இலக்கை எட்டுமா? இந்தியா மற்றும் சீனாவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? - செய்தி தொகுப்புகள்

1

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான ட்ரம்பின் தடைகள் - அமெரிக்க இலக்கை எட்டுமா? இந்தியா மற்றும் சீனாவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான - ரோஸ்னெஃப்ட் (Rosneft) மற்றும் லூக்கோயில் (Lukoil) - மீது விதித்த தடைகள், இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயைக் குறைக்க அல்லது முற்றிலும் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம்.

டிரம்ப் அரசு, ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தும்படி இந்தியா, சீனா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியா ஏற்கனவே 50% அமெரிக்க வரிகளை எதிர்கொள்கிறது, அதில் 25% அபராத வரிகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக விதிக்கப்பட்டவை ஆகும்.

ரஷ்ய எண்ணெயை இந்தியா முற்றிலும் குறைத்துவிட்டது –டிரம்ப் 

புள்ளிவிவரத் தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் சீனாவிற்கான ரஷ்ய எண்ணெயின் இறக்குமதி தினசரி 2 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது, அதேசமயம் இந்தியா தினசரி தோராயமாக 1.6 மில்லியன் பீப்பாய்களைப் பெற்றுக் கொண்டிருந்தது.

அமெரிக்க அரசு நவம்பர் 21-ஐ இந்த நடவடிக்கைகளை முடிப்பதற்கான காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது, இதன் மூலம் ரோஸ்னெஃப்ட் மற்றும் லூக்கோயில் நிறுவனங்களுடனான தற்போதைய ஒப்பந்தங்களை இறுதி செய்ய அல்லது முடித்துக்கொள்ள நிறுவனங்களுக்கு தோராயமாக ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ராபிடன் எனர்ஜி குழுமத்தின் தலைவரான பாப் மெக்நாலி (Bob McNally), CNBC-யிடம் கூறுகையில், இந்த அணுகுமுறை ரஷ்யாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் அதே வேளையில் எண்ணெய் சந்தையின் சமநிலையை பேணுவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.

2022-இல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யா உலகில் அதிகபட்சத் தடைகளை எதிர்கொள்ளும் நாடாக மாறியது. டிரம்ப் அரசின் சமீபத்திய தடைகளும் அந்த நீண்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அப்படியானால், இந்தியா மீதான 25% கூடுதல் வரிகளால் கூட சாதிக்க முடியாத ஒன்றை ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்கத் தடைகள் எவ்வாறு சாதிக்கும்?

அடிப்படையில், தடைகள் என்பவை வரிகளைக் காட்டிலும் மிகவும் சக்திவாய்ந்த கருவிகள் ஆகும்.

வரிகள் என்பவை, பொதுவாக உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்கும் நோக்குடன், ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் மீது பொருட்களின் விலையை உயர்த்தும். ஆனால் தடைகள் வர்த்தகத்தைத் தொடர்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகின்றன. வரிகளைப் பொறுத்தவரை, அதிக செலவில் இருந்தாலும் வர்த்தகம் தொடரலாம். ஆனால், தடைகள் ஒரு நாடு அல்லது நிறுவனத்துடன் நிதி பரிவர்த்தனைகளைத் தடுப்பதை உள்ளடக்கியவை ஆகும். தடை விதிக்கப்பட்ட தரப்புடன் தொடர்ந்து வணிகம் செய்யும் எந்தவொரு நாடு அல்லது நிறுவனத்திற்கும் சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட பிற நிதி தாக்கங்களை ஏற்படுத்துவதும் அடங்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்குப் பிறகும் ரஷ்யாவின் எரிபொருட்களை வாங்கியது யார்?

தடைகள் காரணமாக, வாங்குபவர்கள் மாற்றுப் போக்குவரத்து மற்றும் கட்டண முறைகளை நாட வேண்டியிருக்கும், இது கூடுதல் செலவுகள் மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று மெக்நாலி விளக்குகிறார். இது ஏற்றுமதியை முழுவதுமாக நிறுத்தாமல், ரஷ்யாவின் வருவாயைக் குறைப்பதற்கான அமெரிக்க நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது.

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்கத் தடைகளின் நோக்கம் என்ன?

அமெரிக்க கருவூலத் துறையின் (US Treasury Department) பத்திரிகை வெளியீட்டின்படி, ரோஸ்னெஃப்ட் மற்றும் லூக்கோயில் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் ஆகியவை இந்தத் தடைகளின் கீழ் வரும். அந்த வெளியீடு கூறுவதாவது:

"தடை விதிக்கப்பட்ட அல்லது முடக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான, அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துச் சொத்துக்கள் மீதான உரிமைகளும் முடக்கப்படுகின்றன, மேலும் இவை OFAC-க்கு (Office of Foreign Assets Control - வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம்) தெரிவிக்கப்பட வேண்டும்.

கூடுதலாக, முடக்கப்பட்ட நபர்களால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் உரிமைபெற்ற எந்தவொரு நிறுவனங்களும் முடக்கப்படும். OFAC வெளியிட்டுள்ள பொதுவான அல்லது குறிப்பிட்ட உரிமத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டாலோ அல்லது விலக்கு அளிக்கப்பட்டாலோ தவிர, முடக்கப்பட்ட நபர்களுக்குச் சொந்தமான எந்தவொரு சொத்து அல்லது சொத்துரிமைகள் சம்பந்தப்பட்ட அமெரிக்கர்களால் அல்லது அமெரிக்காவிற்குள் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் OFAC-ன் விதிமுறைகள் பொதுவாகத் தடை செய்கின்றன.

அமெரிக்கத் தடைகளை மீறுபவர் மீது பொது (civil) அல்லது குற்றவியல் (criminal) தண்டனைகள் விதிக்கப்படும்.

தடைகளை மீறியதற்காக OFAC, கடுமையான நடவடிக்கையின் கீழ் சிவில் அபராதங்களை விதிக்கலாம். OFAC-ன் பொருளாதாரத் தடைகளை அமலாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் (Economic Sanctions Enforcement Guidelines), அமெரிக்க பொருளாதாரத் தடைகளை OFAC எவ்வாறு அமல்படுத்துகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது. மேலும், முடக்கப்பட்ட நிறுவனங்களுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களும் தடைகளுக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்ளலாம்.

மேலும், குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீதும் துணைத் தடைகள் (secondary sanctions) விதிக்கப்படும்”.

ட்ரம்பின் தடைகள் இந்தியா மற்றும் சீனாவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

அமெரிக்கத் தடைகளின்படி, ஒப்பந்தம் செய்யப்பட்ட விநியோகங்கள் நவம்பர் 21 வரை அனுமதிக்கப்படுகின்றன. தற்போதைய தடைகள் முந்தைய நடவடிக்கைகளிலிருந்து வேறுபடுகின்றன, ஏனெனில் அவை ஒரு பீப்பாய்க்கு 60 டாலர் விலையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, நிறுவனங்களை (companies) குறிவைக்கின்றன. இது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு அவர்களின் எண்ணெய் விநியோகங்களை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது.

இந்தியக் கண்ணோட்டத்தில், இதன் பொருள் என்னவென்றால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்—அரசு மற்றும் தனியார் இரண்டும்—ரஷ்ய எண்ணெயைச் சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும். உலகளாவிய விலைகள் உயர்ந்த போதிலும், சந்தையில் நிலவும் விலையில் மாற்று விநியோகங்களைப் பெறுவதற்கான கூடுதல் செலவுகளை அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பாளர்கள் தாங்களே ஏற்றுக்கொள்வதால், தற்போது உள்நாட்டு எரிபொருள் விலைகள் நிலையாக உள்ளன என்று TOI அறிக்கை தெரிவிக்கிறது.

சுத்திகரிப்பு ஆலைகள் தற்போது OFAC அறிவிப்பை, குறிப்பாகக் கட்டண முறைகள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகள் குறித்து மதிப்பிட்டு வருகின்றன. மேலும், நவம்பர் 21 காலக்கெடுவுக்குப் பிறகு ரஷ்ய கச்சா எண்ணெய் இல்லாமல் செயல்படுவதற்குரிய வசதிகளைத் தயார் செய்து வருகின்றன.

தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் கூட்டாக தினசரி 3-4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. உலகளாவிய தினசரி விநியோகத்தில் 3%–4% சந்தையிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பானது பங்குச்சந்தையைப் பாதித்ததால், எண்ணெய் விலைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்தன. 23.10.2025 அன்று 5% அதிகரிப்பைத் தொடர்ந்து, (அளவுகோல் எண்ணெயான) பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent crude) வெள்ளிக்கிழமை 66 டாலரை தாண்டியது.

2023 முதல் ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையர் ஆகும்.

இந்த ஆண்டு இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைகளில் 34% ரஷ்யா வழங்கியுள்ளது, இதில் ரோஸ்னெஃப்ட் மற்றும் லூக்கோயில் ஆகியவை தோராயமாக 60% பங்களித்துள்ளன.

இந்த ஆண்டு ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries), அமெரிக்கத் தடைகளுக்கு இணங்குவதற்காகச் செயல்பாட்டு மாற்றங்களைச் செய்யும் என்று 24.10.2025 அன்று அறிவித்தது.

ரோஸ்னெஃப்ட் மீதான கட்டுப்பாடுகள், ரஷ்யாவுக்குச் சொந்தமான நயாரா எனர்ஜிக்கு (Nayara Energy) குறிப்பிடத்தக்க செயல்பாட்டு சவால்களை உருவாக்கியுள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தடைகளில் இருந்தே சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

குஜராத்தில் உள்ள அதன் 20 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட வடினார் (Vadinar) ஆலையில் இருந்து தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவது கணிசமான சிரமங்களை ஏற்படுத்தும் என்று தொழில் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஷ்ய எண்ணெயை வாங்கும் அரசுக்குச் சொந்தமான முக்கிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், இந்த விநியோகங்கள் தங்கள் கச்சா கொள்முதலில் 15-18% ஆகும் என்று குறிப்பிட்டார்.

அவர் TOI-யிடம் கூறுகையில், "இது மிகவும் முன்கூட்டியது. நாங்கள் சிறிய விவரங்களைப் படித்து வருகிறோம். ஆனால் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது அமெரிக்காவிலிருந்து மாற்று விநியோகங்களை ஏற்பாடு செய்வது மிகவும் கடினமாக இருக்காது. ஆனால் மற்றவர்களும் அந்தச் சந்தைகளில் திரள்வார்கள், இது அளவுகோல் விலைகளையும் (benchmark prices) மற்ற கச்சா எண்ணெய்க்கான பிரீமியத்தையும் அதிகரிக்கும். இது லாப வரம்புகளைப் (margins) பாதிக்கும். இருப்பினும், கடந்த காலத்தில் நாம் பார்த்தது போல, ரஷ்ய எண்ணெய் எப்படியாவது சந்தைக்குள் நுழையும்... இருந்தாலும் வங்கிச் சிக்கல்கள் எழலாம்".

"நல்ல விஷயம் என்னவென்றால், விலைகள் 60 டாலர்களில் உள்ளன. அவை 70 டாலராக உயர்ந்தாலும், அதைக் கையாள முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

Kpler-ன் உலகளாவிய ஆய்வாளர் சுமித் ரிடோலியா (Sumit Ritolia), ரோஸ்னெஃப்ட் ஒப்பந்தம் "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு (RIL) சில குறுகிய கால பாதிப்பை உருவாக்கலாம்" என்று சுட்டிக்காட்டினார். அந்த நிறுவனம் OFAC கட்டுப்பாடுகளுக்கு உள்ளாவதைத் தவிர்க்க விரும்புவது இயற்கையானது, மேலும் அது தனது ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்பான உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

ரோஸ்னெஃப்ட், லூக்கோயில் ஆகியவை இந்தியாவின் முக்கிய ரஷ்ய கச்சா எண்ணெய் சப்ளையர்கள் ஆகும்.

அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு ஆலைகளைப் பொறுத்தவரை, அவற்றின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்கள் மூன்றாம் தரப்பு வர்த்தகர்கள் மூலம் டெண்டர் செயல்முறைகள் வாயிலாக நடப்பதால், நேரடித் தாக்கம் "வரையறுக்கப்பட்டதாக இருக்கக் கூடும்" என்று அவர் TOI-யிடம் கூறினார்.

"இருப்பினும், சரக்கு போக்குவரத்து (logistics) மற்றும் நிதி தொடர்பான துணைத் தடைகள் மறைமுகமான சவால்களை ஏற்படுத்தலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

ICRA-ன் மதிப்பீட்டின்படி, தற்போதைய சந்தை விலையில் மாற்று விநியோகங்களைப் பெறுவது எண்ணெய் இறக்குமதி செலவுகளை 2% அதிகரிக்கும்.

GTRI ஒரு குறிப்பில், இந்தியா ஒரு முக்கியமான இக்கட்டான நிலையை (pivotal dilemma) எதிர்கொள்கிறது என்று சுட்டிக்காட்டுகிறது: ரோஸ்னெஃப்ட் மற்றும் லூக்கோயிலில் இருந்து வாங்குவதை நிறுத்தினால், 25% வரி நீக்கப்படுமா — அல்லது நிவாரணம் பெற இந்தியா அனைத்து ரஷ்ய எண்ணெயையும் கைவிட வேண்டுமா?

"இந்த வேறுபாடு தீர்க்கமானது. முதல் அம்சம் இந்தியாவை அமெரிக்கத் தடைகளின் விதிமுறைகளுடன் சீரமைக்கிறது; இரண்டாவது அம்சமோ ரஷ்யாவின் எரிசக்தி சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து முழுமையான தொடர்பைத் துண்டிக்கக்  கோருகிறது — இது தனது கச்சா எண்ணெயில் 85% இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாட்டிற்குச் சாத்தியமில்லாத நடவடிக்கையாகும்," என்று GTRI கூறுகிறது.

இதற்கிடையில், ராய்ட்டர்ஸ் (Reuters) அறிக்கையின்படி, சீன அரசுக்குச் சொந்தமான பெட்ரோலியக் கூட்டு நிறுவனங்கள் கடலின் வழியே கொண்டு வரப்படும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டன. தேசிய எண்ணெய் நிறுவனங்களான பெட்ரோசைனா (PetroChina), சினோபெக் (Sinopec), சிஎன்ஓஓசி (CNOOC) மற்றும் ஜென்ஹுவா ஆயில் (Zhenhua Oil) ஆகியவை தடைகள் குறித்த அச்சத்தைக் காரணம் காட்டி, சீக்கிரத்தில் ரஷ்ய கடல்வழி எண்ணெய் தொடர்பான பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது என்று முடிவு செய்துள்ளன என ராய்ட்டர்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவின் கடல்வழி ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தினசரி தோராயமாக 1.4 மில்லியன் பீப்பாய்கள் ஆகும். இதில் டீபாட்ஸ் (teapots) என்று குறிப்பிடப்படும் சிறிய ஆப்பரேட்டர்கள் உட்பட தனியார் சுத்திகரிப்பு ஆலைகள், இந்தக் கொள்முதல்களில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளன. இருப்பினும், அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு ஆலைகளால் கொள்முதல் செய்யப்படும் அளவு குறித்த மதிப்பீடுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

ரஷ்ய கச்சா எண்ணெய் உலக எண்ணெய் சந்தையில் இருந்து முற்றிலும் மறைந்துவிடுமா?

சந்தையில் ரஷ்ய எண்ணெயின் தொடர்ச்சியான இருப்பு குறித்து சுத்திகரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ரஷ்யாவின் தனிப்பட்ட டேங்கர் கப்பல் தொகுதியை ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள் பாதித்த போதிலும், கணிசமான எண்ணெய் அளவு இன்னும் சந்தையை அடைய முடிகிறது.

ரஷ்ய அதிகாரிகள் புதிய இடைத்தரகர்கள் (intermediaries) மற்றும் சரக்கு மாற்றம் செய்யும் வசதிகளுடன் (transhipment facilities) மாற்று ஏற்பாடுகளை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரோஸ்னெஃப்ட் மற்றும் லூக்கோயிலில் இருந்து வரும் விநியோகங்களைப் பிரித்து, விநியோக இடையூறுகளைக் குறைத்து விலைகளை நிலைநிறுத்த உதவும் என்று TOI அறிக்கை கூறியது.

அமலாக்கம் தொடர்ந்து முக்கிய சவாலாக உள்ளது. CNN தெரிவித்தபடி, எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர ரஷ்யா மறைமுக டேங்கர்கள் (shadow tankers), இடைத்தரகர்கள், அதிகம் அறியப்படாத நிதி நிறுவனங்களின் மறைமுக வலையமைப்பை உருவாக்கியுள்ளது.

"நீடித்த தாக்கம், அந்த மாற்று வழிகளைக் கையாள்வதற்கான அமெரிக்காவின் முனைப்பைப் பொறுத்தது," என்று எனர்ஜி ஆஸ்பெக்ட்ஸ் (Energy Aspects) நிறுவனத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்ஸ் (Richard Bronze) CNN-னிடம் கூறினார்.

ட்ரம்பின் தடைகளின் இறுதி விளைவானது, தடைகளை அமல்படுத்துவதில் அமெரிக்க கருவூலத்தின் உறுதித்தன்மையைப் பொறுத்துள்ளது.

https://timesofindia.indiatimes.com/business/india-business/trump-hits-bullss-eye-with-us-sanctions-why-india-china-may-stop-buying-russian-oil-explained/articleshow/124808104.cms

==========================================================================

2

'இந்தியா முழுவதுமாகக் குறைக்கிறது': ரஷ்ய எண்ணெய் குறித்த தனது கூற்றை டிரம்ப் மீண்டும் வலியுறுத்துகிறார்; சீனாவுடன் 'முழுமையான ஒப்பந்தம்' ஏற்பட நம்பிக்கை

ரஷ்யாவின் எண்ணெய் ஜாம்பவான்களான ரோஸ்னெஃப்ட் (Rosneft), லுகோயில் (Lukoil) ஆகிய நிறுவனங்களை இலக்காகக் கொண்ட தடைகளை டிரம்ப் 25.10.2025 அன்று அறிவித்தபோது, இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாகக் குறைக்கவிட்டதாக மீண்டும் கூறினார். தென் கொரியாவில் ஜின்பிங்குடன் நடைபெறவிருக்கும் சந்திப்பிற்கு முன்னதாக, இவை "முழுமையான ஒப்பந்தத்தை" உருவாக்கும் என்று நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார் என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. ஜின்பிங் சந்திப்பிற்கு முன்னதாகவே, ரஷ்ய எண்ணெயை இந்தியா முழுமையாகக் குறைத்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார்.

வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருள் கட்டுப்பாடுகள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் போரை நிறுத்தி வைக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை எட்ட இரு நாடுகளுக்கும் உள்ள அழுத்தத்தை இது மேலும் கூட்டுகிறது. ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து சீனப் பிரதமரிடம் விவாதிப்பீரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நான் அதைப் பற்றி விவாதிக்கலாம், ஆனால் உங்களுக்குத் தெரியும் சீனாவும் — நீங்கள் இன்று பார்த்திருக்கலாம் — ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை சீனா மிகக் கணிசமாகக் குறைத்துக் கொண்டிருக்கிறது, மேலும் இந்தியா முழுவதுமாகக் குறைத்துக் கொண்டிருக்கிறது, நாங்களும் தடைகளை விதித்துள்ளோம்” என்றார்.

இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் என்ற டிரம்பின் கூற்றுகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. "தேசிய நலன்களைப் பாதுகாப்பதே" முன்னுரிமையாக உள்ளது என்று இந்தியா கூறியது. நடந்துகொண்டிருக்கும் விவாதங்கள் குறித்து டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். விவசாய வர்த்தகம் மற்றும் ஃபெண்டானில் (fentanyl) உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கூறுகளை ஏற்றுமதி செய்வதில் சீனாவின் பங்கு பற்றியும் பேசுவேன் என்று அவர் கூறினார். "எங்கள் விவசாயிகள் கவனிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவரும் சில விஷயங்களை விரும்புகிறார். நாங்கள் ஃபெண்டானில் பற்றிப் பேசப் போகிறோம். அது பலரைக் கொல்கிறது, அது சீனாவிலிருந்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

இது முதல் கூற்று அல்ல. இதற்கு முன்னரும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா ஆண்டின் இறுதிக்குள் குறைத்துவிடும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இது ஒரு படிப்படியான செயல்முறை என்றும் அவர் குறிப்பிட்டார். "உங்களுக்குத் தெரியும், இந்தியா என்னிடம் அவர்கள் நிறுத்தி விடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்... இது ஒரு செயல்முறை. நீங்கள் உடனடியாக நிறுத்த முடியாது (ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை). ஆண்டின் இறுதிக்குள், கிட்டத்தட்ட 40 சதவிகித எண்ணெய் பூஜ்ஜியத்திற்குக் குறைந்துவிடும்" என்று அவர் கூறினார்.

https://timesofindia.indiatimes.com/world/us/india-cutting-back-completely-trump-reiterates-russian-oil-claim-hopes-for-complete-deal-with-china/articleshow/124821009.cms

=============================================================

3

தடைகளுக்குப் பிறகு ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா கடுமையாகக் குறைக்கத் தயாராகிறது

அமெரிக்காவின் புதிய தடைகளுக்கு இணங்கி, ரஷ்யாவின் இரண்டு முன்னணி உற்பத்தியாளர்களிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் 23.10.2025 அன்று தெரிவித்தன. இதனால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கான தடைகளை நீக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்கான தண்டனையாக விதிக்கப்பட்ட 50% வரிகளை இந்தியா எதிர்கொண்டதால், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைப்பதற்கு ஈடாக, வரிகளைக் குறைப்பது வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாட்டுக்கு வருவது ஆகியவற்றில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ரஷ்யா, 2022 இல் உக்ரைன் மீது படையெடுப்பை நடத்தியதைத் தொடர்ந்து, தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முக்கிய நாடாக இந்தியா மாறியது. இந்த ஆண்டில் செப்டம்பர் வரை, நாளொன்றுக்கு சுமார் 1.7 மில்லியன் பீப்பாய்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்கத் தடைகள் ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான லூக்கோயில் (Lukoil) மற்றும் ரோஸ்னெஃப்ட் (Rosneft) ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க திட்டமிட்டுள்ளது என்று இதுகுறித்து அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ரோஸ்னெஃப்ட்டுடனான நீண்ட கால ஒப்பந்தத்தின் கீழான கொள்முதல்களும் அடங்கும்.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரிலையன்ஸ் அதிகாரி ஒருவர், "ரஷ்ய எண்ணெய் இறக்குமதியின் மறுசீரமைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் ரிலையன்ஸ் இந்திய அரசின் (GOI) வழிகாட்டுதல்களுடன் முழுமையாக இணங்கி செயல்படும்," என்று கூறினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corp), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Bharat Petroleum Corp), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Hindustan Petroleum Corp) உள்ளிட்ட இந்திய அரசின் சுத்திகரிப்பு நிறுவனங்களும், ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் குறித்து மீளாய்வு செய்து வருகின்றன. அமெரிக்கா இந்த எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதித்த பிறகு, ரோஸ்னெஃப்ட் மற்றும் லூக்கோயில் ஆகியவற்றிலிருந்து நேரடியாக எந்த விநியோகமும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்த ஆய்வுகள் செய்யப்படுவதாகவும் ஆதாரம் ஒன்று கூறுகிறது.

இந்தியாவின் எண்ணெய் அமைச்சகம் மற்றும் அரசின் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கருத்து கோரிய விண்ணப்பங்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. "மிகப் பெரிய குறைப்பு இருக்கும். இடைத்தரகர்கள் மூலம் சந்தைக்குள் சில பீப்பாய்கள் வரும் என்பதால், உடனடியாக அது பூஜ்ஜியத்தை அடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்று ஒரு சுத்திகரிப்பு வட்டாரத்தின் ஆதாரம் தெரிவித்தது. ஊடகங்களிடம் பேச அதிகாரம் இல்லாததால், அவர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ரோஸ்னெஃப்ட் மற்றும் லூக்கோயில் இரண்டும் சேர்ந்து, இந்தியா வாங்கிய ரஷ்ய எண்ணெயில் சுமார் 60% வழங்கின என்று மூடிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ லிமிடெட்டின் (ICRA Ltd) துணைத் தலைவர் பிரசாந்த் வசிஷ்ட் (Prashant Vashisth) கூறினார்.

"ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை, மத்திய கிழக்கு மற்றும் பிற பிராந்தியங்களின் விநியோகஸ்தர்களுடன் இந்தியா பதிலீடு செய்ய முடியும் என்றாலும், கச்சா எண்ணெய்க்கான இறக்குமதி செலவு அதிகரிக்கும். சந்தை விலையிடப்பட்ட கச்சா எண்ணெயின் பதிலீடு, இறக்குமதி செலவை 2% வரை அதிகரிக்கும்," என்றும் அவர் கூறினார்.

'கொள்முதல் முழுவதும் வங்கிகளைப் பொறுத்தது'

உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தொடர்பாக ரஷ்யாவை இலக்காகக் கொண்ட, டிரம்ப்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் விதிக்கப்பட்ட முதல் தடைகள் இவை. புடின் (Vladimir Putin) மீதான அவரது அதிருப்தி அதிகரித்து வரும் நேரத்தில் இந்தத் தடைகள் வந்துள்ளன.

"டிரம்ப் அரசு இத்தடைகளை செயல்படுத்தினால், அமெரிக்க மூலதனத்தை தக்கவைக்க விரும்பும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய பீப்பாய்களைத் தவிர்ப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று ஆர்.பி.சி கேபிடல் (RBC Capital) ஆய்வாளர் ஹெலிமா க்ராஃப்ட் (Helima Croft) ஒரு குறிப்பில் எழுதினார். 22.10.2025 தடைகள் குறித்த வெளியீட்டின்படி, ரஷ்ய எண்ணெய் உற்பத்தியாளர்களுடனான தங்கள் பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்வதற்கு நிறுவனங்களுக்கு அமெரிக்க கருவூலம் நவம்பர் 21 வரை காலக்கெடுவை வழங்கியுள்ளது. "அது முழுவதும் வங்கிகளைப் பொறுத்தது," என்று மற்றொரு இந்திய சுத்திகரிப்பு அதிகாரி கூறினார். "வங்கிகள் பணம் செலுத்துவதை அனுமதித்தால், நாங்கள் வாங்குவோம். இல்லையென்றால் எமது கொள்முதல் பூஜ்ஜியமாகிவிடும்," என்றும் அவர் கூறினார்.

முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ், குஜராத் மாநிலத்தின் மேற்கில் உள்ள ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகத்தை இயக்குகிறது. ரஷ்யாவின் ரோஸ்னெஃப்ட்டிடம் இருந்து நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 500,000 பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான நீண்ட கால ஒப்பந்தம் ரிலையன்ஸிடம் உள்ளது. இது இடைத்தரகர்களிடமிருந்தும் கூட ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. சமீபத்தில், ரிலையன்ஸ் மத்திய கிழக்கு மற்றும் பிரேசிலில் இருந்து கச்சா சரக்குகளை வாங்கியுள்ளது, இது ரஷ்ய விநியோகங்களை பகுதியளவில் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். 

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு முன்பு, ரிலையன்ஸ் அதன் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட ஒரு நிலையத்திற்கான ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வந்தது என்று தகவல்கள் தெரிவித்தன. ஏனெனில் ரஷ்ய எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வருகிறது. ரோஸ்னெஃப்ட்டின் இந்திய பிராண்டான நயாரா எனர்ஜி (Nayara Energy)-யும் ரஷ்ய அரசு நிறுவனத்திடம் இருந்து எண்ணெயை வாங்குகிறது. கருத்து கோரிய விண்ணப்பத்திற்கு நயாரா உடனடியாக பதிலளிக்கவில்லை. இந்திய அரசின் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரோஸ்னெஃப்ட் மற்றும் லூக்கோயில் ஆகியவற்றிடம் இருந்து நேரடியாக ரஷ்ய எண்ணெயை வாங்குவது அரிது. ஏனெனில் அவற்றின் கொள்முதல்கள் பொதுவாக இடைத்தரகர்கள் மூலம் செய்யப்படுகின்றன என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.

ப்ரெண்ட் கச்சா பங்குகள் 23.10.2025 அன்று மதியம் 4.92% அதிகரித்து லாபத்தை ஈட்டியது.

https://www.reuters.com/business/energy/indian-refiners-review-russian-oil-contracts-after-us-sanctions-source-says-2025-10-23/

==========================================================

4

ட்ரம்பின் கூற்று: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்கிறது

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா 60% குறைக்கும் என்று டிரம்ப் உறுதிபட கூறுகிறார்

இந்தியா விரைவில் ரஷ்யாவுடனான தனது எண்ணெய் வர்த்தக உறவுகளைத் துண்டித்துக்கொள்ளும் என்ற தனது கூற்றிலிருந்து டிரம்ப் பின்வாங்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது. 23.10.2025 அன்று இந்தக் கூற்றை மீண்டும் வலியுறுத்திய அவர், இந்த முறை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையையும் சேர்த்துக் கூறினார்: “இந்த ஆண்டு இறுதிக்குள், அவை (ரஷ்ய எண்ணெய்) கிட்டத்தட்ட இல்லாமல் போகும் அல்லது சுமார் 40 சதவிகிதம் மட்டுமே இருக்கும்”.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை தான் தான் பேசி முடித்ததாக அவர் கூறிய கூற்றைப் போலவே, இந்தியா ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்று டிரம்ப் எத்தனை முறை கூறியுள்ளார் என்பதைக் குறித்து மக்கள் எண்ணுவதை விரைவில் நிறுத்திவிடுவார்கள்.

வெள்ளை மாளிகையில் இருந்து தனது புதிய கருத்துக்களைத் தெரிவித்த டிரம்ப், ஒரு நாள் முன்னதாக மோடியுடன் தான் பேசியதையும் நினைவு கூர்ந்தார். "உங்களுக்குத் தெரியும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை அவர்கள் நிறுத்தப் போவதாக கூறியுள்ளனர்... இது ஒரு செயல்முறை, உடனடியாக நிறுத்திவிட முடியாது," என்று டிரம்ப் கூறினார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒப்பீடுகளை வரைந்த டிரம்ப், இந்தியா "முற்றிலும் சிறப்பானது" என்று கூறிய அதே வேளையில், சீனாவின் நிலை வேறுபட்டது என்றும் கூறினார். "அவர்களுக்கு ரஷ்யாவுடன் சற்றே மாறுபட்ட உறவு உள்ளது. அது ஒருபோதும் நன்றாக இருந்ததில்லை, ஆனால் பைடன் மற்றும் ஒபாமா காரணமாக அவர்கள் ஒன்றாகச் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் ஒருபோதும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது... அவர்கள் (சீனா-ரஷ்யா) நட்பாக இருக்க முடியாது... அவர்கள் நட்பாக இருக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன், ஆனால் அவர்களால் முடியாது...," என்று டிரம்ப் கூறினார்.

இந்தியா மீதான அமெரிக்க சுங்க வரிகள் 50%இல் இருந்து விரைவில் 15-16% ஆகக் குறைக்கப்படலாம் என 'மின்ட்' (Mint) நாளிதழ் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து டிரம்ப் தனது புதிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தனது எண்ணெய் கொள்முதலை படிப்படியாகக் குறைக்கும் என்றும் பரிந்துரைத்திருந்தது.

ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தியா மீது டிரம்ப் மிகப்பெரிய வரிகளை விதித்தார், அந்த வரிகளில் 25% ரஷ்யாவுடனான இந்தியாவின் எரிசக்தி உறவுகளுக்கான கூடுதல் அபராதமாக விதிக்கப்பட்டது.

கடந்த வாரம், மோடி “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று” தனக்கு “உறுதியளித்ததாக” டிரம்ப் முதன்முதலில் இந்தியாவுடனான ரஷ்ய எண்ணெய் வர்த்தகத் திட்டங்கள் குறித்து கூறினார்.

தனது "நெருங்கிய நண்பர்" மோடி தன்னிடம் கூறியதை மேற்கோள் காட்டி, டிரம்ப் செய்தியாளர்களிடம்: “ஆம், நிச்சயமாக. அவர் எனது நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு உள்ளது... இந்தியா எண்ணெய் வாங்குவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று அவர் எனக்கு இன்று உறுதியளித்தார். அது பெரிய நடவடிக்கை" என்று கூறினார்.

சீனாவிற்கு அடுத்தபடியாக, ரஷ்ய எரிசக்தியை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.

இருப்பினும், டிரம்ப் முதன்முதலில் அந்தக் கூற்றை வெளியிட்ட பின்னர், பிரதமர் மோடிக்கும் தனக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடந்ததை இந்தியா மறுத்தது. "பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே உரையாடலோ அல்லது தொலைபேசி அழைப்போ இருந்ததா என்ற கேள்விக்கு, நேற்று இரு தலைவர்களுக்கும் இடையே எந்தவொரு உரையாடல் நடந்ததாகவும் எனக்குத் தெரியவில்லை," என்று வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

https://www.hindustantimes.com/india-news/india-will-cut-russian-oil-imports-by-end-of-year-donald-trump-firms-sanctions-tariffs-101761183042840.html

வெண்பா (தமிழில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு