இஸ்ரேலும் ஈரானும் அடுத்த போருக்கான களத்தை அமைத்துவிட்டன

தமிழில்: விஜயன்

இஸ்ரேலும் ஈரானும் அடுத்த போருக்கான களத்தை அமைத்துவிட்டன

நெடுங்காலமாகவே, ஈரான் இஸ்ரேலுடனான தனது மோதலைக் குறிப்பாக தனது எதிர்வினைகள் சில தெளிவான எல்லைகளுக்குள்ளேயே இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் இஸ்ரேலுடனான மோதலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று உறுதியாக நம்பி வந்தது. ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையில் மட்டுமே எதிர்வினையாற்றுவதன் மூலம், நிலைமை கைமீறிச் செல்லாது என ஈரான் எண்ணியது. ஆனால், இஸ்ரேல் ஒரு எதிர்பாராத முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டபோது, இனி எப்போதும் இஸ்ரேல் கணிக்கக்கூடிய வழிகளில் செயல்படாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியது. இதன் மூலம், இஸ்ரேல் போரின் வழக்கமான விதிகளையே மாற்றியமைத்துவிட்டது.

ஜூன் 5 அன்று, ஈரான் எல்லைக்கு சுமார் 200 மைல் தொலைவில் அமைந்துள்ள அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தலைமையகத்திற்கு அருகேயுள்ள ஓர் அமெரிக்க விமானத் தளத்தில், ஏறத்தாழ நாற்பது விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் பிடித்துக் காட்டியது. இராணுவ இலக்குகள், இராணுவம் அல்லாத இலக்குகள் என்ற பேதமின்றி இரண்டின் மீதும் திடீர் தாக்குதலைத் தொடுத்து ஈரானுடன் போரை ஆரம்பித்து சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு, ஜூன் 20 அன்று அல் உதைது (Al Udeid) விமானத் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம், மூன்று ஜெட் விமானங்கள் மட்டுமே அமெரிக்க விமானத் தளத்தில் எஞ்சியிருந்ததைக் காட்டியது. இந்தக் காட்சிகள், அமெரிக்கா தனது பெரும்பாலான இராணுவ விமானங்களை பாரசீக வளைகுடா பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகின்றன; இது சமீப ஆண்டுகளில் காணப்படாத ஒரு நகர்வு ஆகும். பெரும்பாலும், அந்த விமானங்கள் 2,500 மைல்களுக்கும் அப்பால், இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா-பிரிட்டன் கூட்டு விமான தளமான டியாகோ கார்சியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். 1980களில் நடந்த ஈராக்-ஈரான் போருக்குப் பிறகு தொடர்ச்சியாக அதிகரித்து வரும் ஈரானின் இராணுவ வலிமையால் எழுந்த அச்சுறுத்தல் காரணமாக இந்த நகர்வு, அமைந்திருக்கலாம்; ஈரானின் இராணுவ வலிமை தற்போது அப்பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கும், அமெரிக்காவின் நலன்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

இராணுவ நிலைமை

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈரான் கட்டி வளர்த்து வந்த ஒரு வலிமைமிக்க ஏவுகணைப் படையை இஸ்ரேல்  தாக்குதலுக்கு பதிலடி வழங்கிய தருணத்தில்தான் உலகிற்கு வெளிப்படுத்தியது. ஈரானின் மத்திய தூர ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டவையாகும். ஆயினும், பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்காகக் கொண்ட, மிகவும் பிரமாண்டமான, துல்லியமான குறுகிய தூர ஏவுகணைகளின் தொகுப்பையும் ஈரான் உருவாக்கி வைத்துள்ளது. இந்தத் தளங்களின் மீது திடீரெனத் தாக்குதல் தொடுப்பது, குறிப்பாக அவை படை வீரர்களால் நிரம்பியிருக்கும் வேளையில், திடீர் தாக்குதல் தொடுப்பதே ஈரானின் பிரதான திட்டமாகும். இதுவே ஈரானின் “பேரழிவு நாள் திட்டம்” (Doomsday Plan) என்றழைக்கப்படுகிறது; நீண்டகாலமாக தொடரும் அமெரிக்க ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை தடுப்பதற்காகவும், அணு ஆயுதங்களை உருவாக்க முடியாத சூழல் ஏற்படுகிறபட்சத்தில் மாற்றுத் திட்டமாக ஈரான் இந்த பேரழிவுநாள் திட்டத்தை உருவாக்கியுள்ளது. 1979 ஆம் ஆண்டில் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரான் அரசுடன் தொடர்ச்சியாக விரோதமான போக்கையே அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது. மேலும், 1980 ஆம் ஆண்டில் ஈரான் மீதான சதாம் ஹுசைனின்(ஈராக்கின் முன்னாள் அதிபர்) தாக்குதலின் போது, அவருக்கு ஆயுதங்களையும் முக்கிய உளவுத் தகவல்களையும் அமெரிக்கா வழங்கி உதவியது.

போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் தனது இராணுவ வலிமையை அமெரிக்காவோ இஸ்ரேலோ இனிமேலும் புறக்கணிக்க முடியாத அளவிற்குப் பெருமளவு மேம்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, இந்த மோதல் மேலும் அபாயகரமானதாகவும், கணிக்க முடியாததாகவும் உருவெடுத்துள்ளது. ஈரான் மட்டுமல்லாது அதன் எதிரிகளும் தங்கள் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னரே அடிக்கடி முன்கூட்டியே அறிவிப்புகளையும் வெளியிட்டன. இரு தரப்பினரும் ஒரே எண்ணிக்கையிலான ஏவுகணைகளைப் பயன்படுத்தியதால், நிலைமையில் எவ்வித குறிப்பிடத்தக்க மாறுதலையும் விளைவிக்காத ஒரு வரையறுக்கப்பட்ட சேதம் மட்டுமே ஏற்பட்டது. அமெரிக்காவும் ஈரானும் போரை மேலும் விரிவாக்குவதைத் தவிர்க்கவே விரும்பியதாகத் தெரிந்தது. ஆனால், அதேவேளையில், தாங்கள் பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளதை தங்கள் உள்நாட்டு ஆதரவாளர்களுக்குக் காட்டவும் விரும்பின. முழு அளவிலான ஒரு போரை இஸ்ரேல் மட்டுமே உள்ளுக்குள் பெரிதும் விரும்பியது போல் தோன்றியது.

பெஞ்சமின் நெதன்யாகு காசா மீது நடத்தி வரும் 'போருடன்' ஒப்பிடும் போது, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பன்னிரண்டு நாள் போர் என்பது, பலராலும் இனப்படுகொலை என விவரிக்கப்படும் காசாவில் நடந்துவரும் மோதலை விட, மிகவும் சிக்கலானதாகவும், ஊகிக்க முடியாததாகவும் அமைந்துள்ளது. இஸ்ரேலில் இருந்து ஆயிரம் மைல்களுக்கும் மேலான தொலைவில் ஈரான் அமைந்துள்ளது. ஆயினும், கடந்த பத்தாண்டுகளில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை(Arrow 3) (Arrow 2) எவ்வாறு ஊடுருவிச் செல்ல வேண்டும் என்பதை ஈரான் கற்றுத் தேர்ந்துள்ளது. தற்போது, ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்குக்கும் மேலான அதிவேகத்தில் பயணிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவும் வல்லமை ஈரானுக்குக் கைவரப்பெற்றுள்ளது.  இந்த ஏவுகணைகள் தற்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்களை ஊடுருவிச் சென்று, மின் உற்பத்தி நிலையங்கள், இராணுவத் தளங்கள் அல்லது தகவல் தொடர்பு மையங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஆற்றல் கொண்டவையாகவும் விளங்குகின்றன.

அண்மையில் ஈரான் தனது புதிய ஏவுகணைகளில் மேம்பட்ட சிறப்பம்சங்களை இணைத்துள்ளது. இந்த ஏவுகணைகள், வானில் அதிவேகமாக இயங்கி, எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் ஆற்றல் கொண்டவையாக விளங்குகின்றன. மேலும், இலக்குகளைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்கு, ஜி.பி.எஸ். (GPS) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மாறாக, கேமரா அடிப்படையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இஸ்ரேலால் தூண்டப்பட்ட, ஜூன் 13 அன்று தொடங்கிய 12 நாள் மோதலில், இப்புதிய அம்சங்கள் கொண்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.

அம்மோதலின் போது, ஈரான் ஹைஃபாவில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றிலுமாக தாக்கி அழித்தது; டெல் அவிவ்வின்(இஸ்ரேல் தலைநகர்) முக்கிய வணிகப் பகுதி மீது தாக்குதல் தொடுத்தது; மேலும் இஸ்ரேலின் பல இராணுவ மற்றும் உளவுத்துறை கட்டமைப்புகளுக்குப் பெருத்த சேதத்தை விளைவித்தது. இந்த மோதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, ஈரான் தொலைக்காட்சியில் ஒரு புதிய ஏவுகணையை உருவாக்கியிருப்பதாக அறிமுகப்படுத்தியிருந்தது. அந்த ஏவுகணை 'காசெம் பஸீர்' என்று அழைக்கப்பட்டது, இதன் பொருள் 'தீர்க்கதரிசி காசெம்' என்பதாகும். டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் 2020 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தலைவர் காசெம் சுலைமானியின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு, ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அமெரிக்காவை ஈரான் வெளிப்படையாகத் தாக்கிய முதல் நிகழ்வு இதுவே ஆகும். அந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் அலை பாதிப்புகளால் 109 அமெரிக்க வீரர்களுக்குக் கடுமையான மூளைக் காயங்களை ஏற்ப்பட்டது.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) நிறுவனத்தில் பணியாற்றிய தியோடர் போஸ்டல் என்ற அமெரிக்க நிபுணர், ஈரானின் சமீபத்திய ஏவுகணை தயாரிப்புகள் ரஷ்யா மற்றும் சீனாவின் துணையுடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள, இஸ்ரேல் ஒவ்வொரு இரவும் சுமார் 287 மில்லியன் டாலர்களைச் செலவழிக்க நேர்ந்தது. ஆனால், ஈரான் பயன்படுத்திய ஏவகணைகள் மிகவும் மலிவானவை — குறிப்பாக, காசிம் பஸீர் ஏவுகணையைவிட பத்து நூறு மடங்கு மலிவானவை. இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு வந்த வேளையில், அதன் ஏவுகணை அஸ்திரங்கள் (Arrow missiles) தீர்ந்துபோய்விட்டதாக சில செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டின.

இப்போர் இஸ்ரேலில் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்தது. பலர் நாட்டை விட்டு வெளியேற முற்பட்டனர். சுமார் 90,000 இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள்ளேயே தங்கள் இருப்பிடங்களைத் விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், ஈரானும், ஹிஸ்புல்லா அமைப்பும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் தொடுத்ததால் விமானப் போக்குவரத்துப் பாதைகள் மாற்றியமைக்கப்பட வேண்டியிருந்தது; இதனால், சைப்ரஸ் போன்ற அண்டை நாடுகளில் மேலும் 50,000 இஸ்ரேலியர்கள் நிற்கதியாக நின்றனர்.

நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் பொழுது, அமெரிக்காவிடமிருந்து —பணம், ஆயுதங்கள், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆதரவு உள்ளிட்ட— உதவிகள் கிடைத்தாலும் கூட, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இஸ்ரேல் இந்த போரில் வெற்றி பெறுவது மிகவும் சவால் மிகுந்ததாக இருக்கும். இஸ்ரேலை விட 75 மடங்கு அதிக பரப்பளவு கொண்ட நாடாக இருப்பதுடன், மக்கள்தொகையோ பத்து மடங்கிற்கும் அதிகமாக இருப்பதும் இதற்கொரு காரணமாக சொல்லப்படுகிறது. ஈரானின் மிகச்சிறிய மாகாணங்களில் ஒன்றான டெஹ்ரான் மாகாணம்கூட, இஸ்ரேல் நாட்டின் மொத்த பரப்பளவை ஒத்திருக்கிறது. ஆகவே, இஸ்ரேல் சில துறைகளில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்தாலும், ஈரான் நிலப்பரப்பிலும் மக்கள்தொகையிலும் மிகப் பெரிய அனுகூலத்தைக் கொண்டுள்ளது.

போர்த்திட்ட முடிவுகளில் நிதானத்தை கடைப்பிடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஈரான்

ஈரான் தலைநகரான தெஹ்ரானில், இராணுவ மற்றும் அரசியல் போர்த்தந்திரங்களை வகுக்கும் தலைவர்கள் பொதுவாக இரு வேறுபட்ட அணுகுமுறைகளைப் பின்பற்றுகின்றனர். அதில் ஒரு பிரிவினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், அளப்பரிய பொறுமையுடனும் செயலாற்ற விரும்புகின்றனர். பகைவர்களைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அவர்களைத் தவறுகள் இழைக்கத் தூண்டும் விதமாக, காலம் தாழ்த்திய, நீடித்த போர்களை நடத்துவதே சிறப்பு என்று அவர்கள் நம்புகிறார்கள். இக்குழுவினர் வன்முறையின் வீச்சு கட்டுப்படுத்தப்பட்டதாகவும், வரம்பு மீறாததாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இதன் மூலம், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் போன்ற வலிமையான எதிரிகளுடன் ஒரு பெரும் போருக்கு செல்வதை ஈரான் தவிர்க்க இயலும். அதே சமயம், தேவை எழும்போது தங்கள் பகைவர்களைத் திகைப்படையச் செய்யவும், அச்சுறுத்தவும் போதிய பலத்தை வெளிப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை.

இந்த அணுகுமுறை ஈரானின் நட்பு அமைப்பான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவால் பின்பற்றப்பட்டது. இருப்பினும், அது அங்கு பேரழிவுகரமான தோல்வியை எதிர்கொண்டது. ஏனெனில், இஸ்ரேல் எவரும் எதிர்பாராத அளவிற்கு, அளவுகடந்த வலிமையுடன் பதிலடி கொடுத்தது. அப்பகுதியின் மரபுவழிப் போர் நியதிகளையே தலைகீழாக மாற்றும் அளவிற்கு இஸ்ரேலில் தாக்குதல் அமைந்திருந்தது. பெய்ரூட்டில் நான்கு உயரமான கட்டிடங்களை அழிக்கும் வகையில், எண்பது சக்திவாய்ந்த "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தி ஒரு மிகவும் கடுமையான வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. இந்தக் குண்டுகள் பதுங்கு குழித் தங்குமிடங்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இது 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை ஆக்கிரமித்தபோது அமெரிக்கா பயன்படுத்திய மொத்த குண்டுகளின் எண்ணிக்கையை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமானதாகும்.

இந்தத் தாக்குதல் ஈரானின் இராணுவ வியூக வகுப்பாளர்களை நிலைகுலையச் செய்தது. ஏனெனில், இது அப்பகுதியில் மோதல்கள் கையாளப்படும் விதம் குறித்த நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த எழுதப்படாத மரபுகளை மீறியது. ஈரான், அதன் ஷியா கூட்டாளிகளான ஹிஸ்புல்லா, மற்றும் அவர்களின் எதிரிகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையே பல ஆண்டுகளாக நேரடியான அல்லது மறைமுகப் புரிதல்கள் மூலம் இந்த முறைசாரா போர் மரபுகள் பின்பற்றப்பட்டு வந்தன.

பெய்ரூட்டில்(லெபனான் தலைநகர்) நடந்த நிகழ்வுகளைக் கண்டபின், ஈரானியச் சிந்தனையாளர்களில் இரண்டாவது பிரிவினர் தங்கள் கருத்துக்களை மிகவும் வெளிப்படையாகப் பகிரத் தொடங்கியுள்ளனர். ஈரானின் வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களில், இந்த இரண்டாவது பிரிவினர் சில சமயங்களில் “ஜாய்திகள்” என்று அழைக்கப்படுகின்றனர். இது யேமனில் உள்ள ஷியா முஸ்லிம்களின் ஒரு பிரிவைக்(ஐவர் மரபு) குறிக்கிறது. அவர்கள், கி.பி. 740 இல் உமையாத் வம்சத்திற்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்த ஐந்தாவது மதகுருவான ஜாய்தின் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர். அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க முயன்றதற்காக ஜாய்த் சிலுவையில் அறையப்பட்டார். பொறுமையுடன் இருந்து போரைத் தவிர்ப்பதென்ற பாதையைத் தேர்ந்தெடுத்த பாகிரின் இளைய சகோதரரே ஜாய்த் ஆவார். பெரும்பாலான ஈரானிய ஷியாக்கள் “பன்னிருவர்” மரபை அதாவது ஷியா பாரம்பரியத்தின் ஒரு பகுதியான பாகிரின் வழிமுறையைப் பின்பற்றுகின்றனர். ஆனால், ஈரானில் உள்ள இந்த இரண்டாவது பிரிவினர், ஜாய்தைப் போன்ற ஒரு தீவிரமான, செயல் நோக்குடைய அணுகுமுறையை ஆதரிக்கின்றனர்.

ஈரானில், 'ஜாயிதிகள்' என அழைக்கப்படும் குழு ஒன்று, இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு —இதில் வான்வழித் தாக்குதல்கள், மறைமுக நாசவேலைகள் மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிகள் அடங்கும்— யேமன் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறதோ அல்லது இஸ்ரேல் தானே எவ்வாறு நடந்துகொள்கிறதோ அதேபோலவே, கடுமையானதும் உடனடியுமான வன்முறைத் தாக்குதலுடன் பதிலடி கொடுப்பதே உகந்த வழிமுறை என உறுதியாகக் கருதுகிறது. அமெரிக்கா இனி ஈரானுக்கு அஞ்சும் நிலைமை இல்லை என்பதே இந்த ஈரானிய ஜாயிதிகளின் வாதமாக இருக்கிறது. தற்போது, அமெரிக்கா தனது படைகளை வளைகுடாப் பிராந்தியத் தளங்களிலிருந்து மீளப் பெறத் தயாராக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது அமெரிக்காவை அச்சுறுத்தும் அல்லது தடுக்கும் ஈரானின் வல்லமை குன்றியிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது என்கிறார்கள். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை வழக்கமாக எதிர்த்து வரும் ஓர் ஈரானிய அரசியல் பிரிவைச் சேர்ந்தவரும், 'கொள்கைப் பற்றுடையோர் அணி'யின் (principlist camp) உறுப்பினருமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தனிப்பட்ட உரையாடலில் இவ்வாறு குறிப்பிட்டார்: "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு நாம் இன்னும் கடுமையாகவும் விரைவாகவும் பதிலடி கொடுக்க வேண்டும். ஈரான் ஒரு அணு குண்டை கட்டாயமாக உருவாக்கியே தீர வேண்டும்; அடுத்து நாம் தாக்கப்படும் வேளையில், இஸ்ரேல் செய்வது போலவே—நாம் முன்முயற்சி எடுத்து, போரின் விதிகளை நாமே மாற்றி அமைக்க வேண்டும்."

மறுபுறம், ஈரானிய அரசியலில் 'சீர்திருத்தவாத'ப் போக்கை ஆதரிக்கும் ஒரு பத்திரிகையாளர் எள்ளல் தொனியுடன் ஒரு கருத்தைத் தெரிவித்தார். ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனியை உயிருடன் வைத்திருக்கவே இஸ்ரேல் உண்மையில் விரும்புகிறது என்று அவர் கேலியாகக் குறிப்பிட்டார், ஏனெனில் அவர் ஒரு "நல்ல எதிரி"—மிக எளிதாக அவரை கணித்துவிடமுடியும், எப்பொழுதும் பின்விளைவுகளை யோசித்தே செயலாற்றுபவர், மேலும் தமது உத்திகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ளத் துணியாதவர்,” என்றும் கேலி செய்தார். 

தற்போதைய நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளிடையே எந்தவிதமான உடன்பாடும் சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது, குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு இருவருமே ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ள இந்நேரத்தில் இனி உடன்பாட்டிற்கு சாந்தியமேயில்லை என்பது தெளிவு.

எனினும், யதார்த்தமான நிலை தெளிவற்றதாகவே உள்ளது, ஏனெனில் இரு தரப்பினரும் பிரச்சார உத்திகளைக் கையாள்கின்றனர். ஈரான் தனது அணுசக்தி திட்டம் "கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது" என்று குறிப்பிடுகிறது, ஆனால் இது தந்திரமாகவும் இருக்கலாம். மறைமுகமாக அணு குண்டை உருவாக்கும் தனது உண்மையான திட்டத்தை மறைக்கும் நோக்கத்துடன், உண்மையில் உள்ளதை விட சேதம் மிக மோசமாக இருப்பதாக ஈரான் பாசாங்கு செய்கிறது. கசிந்துள்ள சில அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் —அவை அரசியல் சாயம் பூசப்பட்டவை என்றபோதிலும்— அணுசக்தி திட்டம் இன்னமும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிடுகின்றன. ஆனால் பென்டகன் (அமெரிக்கப் பாதுகாப்புத் துறை) இதற்கு முற்றிலும் முரணாகக் கூறி வருகிறது.

அறுபது மீட்டர் ஊடுருவல் எல்லையையும் தாண்டி, மிக ஆழமான இலக்குகளைத் தகர்க்கும் முப்பதாயிரம் பவுண்டு எடையுள்ள GBU-57 குண்டின் திறன் குறித்து, வல்லுநர்களிடையே இன்றும் விரிவான விவாதம் நடந்து வருகிறது. ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையங்கள் எண்பது மீட்டர் ஆழத்தில், நிலத்தடிக்குக் கீழ் அமைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மையங்கள், வானிலிருந்து வீசப்படும் குண்டுகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், பற்பல உறுதியான கான்கிரீட் மற்றும் எஃகு அடுக்குகளால் மிகவும் வலிமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் குறிப்பிட்டபடி, ஈரான் இன்னமும் 400 கிலோகிராம் அளவிலான, 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தன்வசமே வைத்துள்ளது. இந்த யுரேனியம் நிலத்தடியில் எங்கோ பதுக்கி வைக்கப்பட்டு, இதுவரை எவ்வித பாதிப்பும் அடையாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) ஒத்துழைப்பதை நிறுத்திக்கொண்டதால், இந்த யுரேனியம் எங்கு சேமிக்கப்பட்டுள்ளது என்பதை அந்நிறுவனத்தால் உறுதியாகக் கூற இயலவில்லை. மேலும், IAEA இயக்குநர் ரஃபேல் மரியானோ க்ரோசி இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக ஈரான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானின் அனைத்து மையவிலக்குக் கருவிகளையும் ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கண்காணிப்பது கிடையாது. இக்கருவிகள், அணு குண்டு தயாரிப்புக்குத் தேவையான யூரேனியத்தை தற்போதுள்ள 60 சதவீதத்திலிருந்து, 90 சதவீதமாக மேலும் செறிவூட்டப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டம் வெளி உலகத்தினரின் பார்வைக்குத் தென்படாத ஒன்றாகவே உள்ளது. ஈரானின் உச்ச தலைவர் கமேனி, இஸ்லாமிய சட்டம் பொதுமக்களைப் பெருமளவில் கொல்லுவதைத் தடை செய்வதால், அணு ஆயுதங்கள் தயாரிப்பதை விலக்கும் மதக் கட்டளையை (ஃபத்வா) பிறப்பித்துள்ளார். ஆயினும், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் கட்டாயம் வலுவடைந்து வருவதற்கான காரணிகள் பெருகி வருகின்றன.

ஈரானுன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரும் ஸ்பெயின் நாட்டு வெளியுறவுச் செயலருமான என்ரிக் மோரா, லண்டனைச் சேர்ந்த ஈரானிய செய்தி நிறுவனமான அம்வாஜ்ஜின் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதாவது: அமெரிக்கா சமீபத்தில் நடத்திய கடுமையான தாக்குதல், அணுசக்தி ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் தலைமைப் பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து எளிதில் மாற்றியமைக்கப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ கூடும் என்பதை ஈரானியத் தலைவர்களுக்கு இது இரண்டாவது முறையாக உணர்த்திவிட்டது. அவர் மேலும் எச்சரித்ததாவது, “மூன்றாம் வாய்ப்பு என ஒன்று இருக்காது,” அதாவது அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஆர்வம் ட்ரம்புக்கு இருக்கலாம். இருப்பினும், ஈரானிய ஆட்சியைக் கவிழ்ப்பதோடு ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை எதிர்ப்பது என்ற தனது நீண்டகால இலக்குகளில் எந்த மாற்றத்தையும் செய்திருப்பதாக இஸ்ரேல் வெளிக்காட்டவில்லை. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் வாலி நாஸ்ர், அண்மைய பேட்டி ஒன்றில், மத்திய கிழக்கில் அமெரிக்கா ஈரானை ஒரு இயல்பான நாடாக ஏற்றுக்கொண்டு, அதனுடன் நல்லுறவுகளைப் பேணி, ஈரானுக்குப் பிராந்தியத்தில் அதிக சுதந்திரத்தையும் செல்வாக்கையும் அனுமதிக்கும் நிலையை இஸ்ரேல் விரும்பவில்லை என்று விளக்கினார். நாஸ்ரின் கூற்றுப்படி, இஸ்ரேலின் பிரதானமான சிக்கல் ஈரானின் அணுசக்தி திட்டம் மட்டுமல்ல, ஈரான் ஒரு பரந்த, சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க நாடாக இருப்பதுதான்.

ட்ரம்பைச் சுற்றியுள்ள பல ஆலோசகர்கள், குறிப்பாக அடாவடியான வெளிநாட்டுக் கொள்கைகளை ஆதரிக்கும் நபர்கள், ஈரானிய ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், ஈரானில் அரசியல் போக்கு மிக ஆழமான தேசியவாதத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் ஈரானின் பல்வேறு அரசியல் குழுக்களையும் ஒன்றிணைத்து, அரசாங்கத்திற்கு ஆதரவாக மாற்றியுள்ளன. அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில், ஈரானின் உச்ச தலைவர் காமெனி, "ஈரான்" என்ற சொல்லையும் "தேசம்" என்ற சொல்லையும் பன்னிரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தியுள்ளார் என்று அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அலி அஹமத்னியா குறிப்பிட்டிருக்கிறார். பொதுவாக, காமெனி "இஸ்லாமிய தேசம்" என்றே பெரும்பாலும் குறிப்பிடுவார். இது, மக்கள் தங்கள் நாட்டிற்காக ஒன்றுபடும்போது, இஸ்லாமிய அரசாங்கமும் மக்களுக்கான தங்களின் ஆதரவை ஒருசேர வெளிப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது; இதில் அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துப் போகாதவர்களும் பலர் அடங்குவர்.

ஈரானில் வலுவான மாற்றுத் தலைமை என்பதே இல்லை. தற்போதைய ஆட்சி வீழ்ச்சியடைந்தால், பல ஈரானியர்கள் தங்கள் நாடு பதினைந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா போலவோ, அல்லது இன்னமும் உள்நாட்டுப் போரில் உழலும் லிபியா போலவோ ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். மக்கள் முன்னுள்ள தெரிவு இரண்டேதான்: ஒன்று, தற்போதைய நிலையைத் தக்கவைத்துக்கொள்வது; அல்லது, நாடு சிறு சிறு போராளிக் குழுக்களாகப் பிளவுபடுவதைச் சந்திப்பது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் ஆதரவுடன் பல்வேறு குழுக்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் இத்தகைய ‘கட்டுப்படுத்தப்பட்ட சீர்குலைவு வேலைகளை (managed chaos), அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அந்நிய சக்திகளின் தூண்டுதலால் ஈரானியர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் நிலை ஏற்படும்.

(ஆரான் ரெசா மெராட்)

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://jacobin.com/2025/06/israel-iran-war-air-strikes

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு