எலான்-டிரம்ப் கும்பலின் "அமெரிக்கா முதன்மை" எனும் பாசிசக் கொள்கையை எதிர்ப்போம்!!
சமரன் சிறப்புக் கட்டுரை

டிரம்பின் "அமெரிக்கா முதன்மை" கொள்கை
அமெரிக்காவில் தோன்றியுள்ள முதலாளித்துவ நெருக்கடி, தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் முன்னணியாக வளர்ந்துள்ள சீனாவை முறியடித்து உலகளாவிய தொழில்நுட்ப உற்பத்தி சந்தையைக் கைப்பற்ற வேண்டிய நிலை ஆகியவற்றின் காரணமாக உள்நாட்டில் DOGE பாசிச ஆட்சிமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது ட்ரம்ப் அரசு. சீனாவை பிரதான எதிரியாக வரையறுத்து அகண்ட அமெரிக்கா, வர்த்தகப் போர் ஆகியவற்றை உள்ளடக்கிய "அமெரிக்கா முதன்மை (America first)" எனும் பாசிசக் கொள்கையை செயல்படுத்தி வருகிறது ட்ரம்ப்-எலான் மஸ்க் கும்பல். உலக அளவில் அமெரிக்காவை மாபெரும் வல்லமை படைத்த சக்தியாக மீண்டும் மாற்றுவதற்கான திட்டத்தை (Make America Great Again - MAGA) முன்வைத்துள்ளது டிரம்ப் அரசு.
அமெரிக்காவின் இந்த கொள்கை மாற்றங்கள் உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் மாபெரும் தோல்வியை தழுவியுள்ளதையே எடுத்துக் காட்டுகின்றன.
2007ம் ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது ஷாங்காய் கூட்டமைப்பின் தோற்றத்திற்கு பிறகு சீன- ரஷ்ய ஏகாதிபத்திய முகாம் அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு அரசியல் - பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், உலகளாவிய கட்டமைப்பு மற்றும் இராணுவ வலிமையுடன் வளர்ந்துள்ளது. நிதிமூலதனத்தை ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளுக்கு தங்குத் தடையின்றி ஏற்றுமதி செய்து வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளையும், லத்தீன் அமெரிக்க நாடுகளையும், ஜார்ஜியா, பெலாரஸ், அஜர்பைஜான், செர்பியா, ஐஸ்லாந்து, டென்மார்க் போன்ற ஒரு சில ஐரோப்பிய நாடுகளையும் கூட தங்களது நிதிமூலதன செல்வாக்கில் இணைக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சீனாவின் செல்வாக்கு பரந்துவிரிந்து வருகிறது. இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாக வளர்ந்து வருகிறது.
சீனாவை கட்டுப்படுத்த இந்தோ-பசிபிக் திட்டம், புளூ டாட் நெட்வொர்க், பில்ட் பேக் பெட்டர் வேர்ல்டு, மாபெரும் மறுகட்டமைப்பு, குவாட், ஆக்கஸ், ஐஎம்.இ.சி. உள்ளிட்ட பல்வேறு பொருளாதார - இராணுவ திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது அமெரிக்கா. இவை அமெரிக்காவுக்கு குறிப்பிட்ட அளவில் பலன்களை தேடி தந்துள்ளது; இந்தியா போன்ற புதிய காலனிய நாடுகளை அமெரிக்காவின் நலன்களுக்கு சேவை செய்யும் வகையில் பிராந்திய அளவிலான துணை மேலாதிக்க சக்திகளாக மாற்றியுள்ளன. இருப்பினும் சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அவை செல்வாக்கு செலுத்தவில்லை. டிரம்ப் கும்பல் சென்ற ஆட்சியிலேயே தாராளமயக் கொள்கைகளை தமது நாட்டில் அமல்படுத்துவதை கைவிட்டு காப்புக் கொள்கைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்தது; தாரளமயக் கொள்கைகளை பிற நாடுகள் மீது திணித்தது.
முந்தைய பைடன் (ஜனநாயகக் கட்சி) ஆட்சி ஆயுத - இராணுவத் துறை கார்ப்பரேட்களின் நலன்களை முதன்மைப் படுத்தி கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியது. அக்கட்சிக்கு பின்புலமாக லாங் மார்ட்டின், ஃபோயிங் போன்ற இராணுவ கார்ப்பரேட்கள் இருந்தன. தற்போது டிரம்ப் (குடியரசுக் கட்சி) ஆட்சி தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத் துறை கார்ப்பரேட்களின் நலன்களை முதன்மைப் படுத்தி கொள்கைகளை வகுத்து செயல்படுத்துகிறது. எலான் மஸ்க், மார்க் ஷூபெர்க், பெஜோஸ் போன்ற தொழில்நுட்பத் துறை கார்ப்பரேட்கள் டிரம்ப் கட்சிக்கு பின்புலமாக உள்ளன. இதுவே சென்ற பைடன் ஆட்சிக்கும் இப்போதைய டிரம்ப் ஆட்சிக்கும் கொள்கை அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான அடிப்படை.
தேசிய பாதுகாப்பு கொள்கையில் ரஷ்யாவையும் சீனாவையும் (ஷாங்காய் கூட்டமைப்பை) பிரதான எதிரிகளாகவும், தனக்கு அடங்க மறுக்கிற அரபு மற்றும் இசுலாமிய நாடுகளை ரவுடி நாடுகளாக பட்டியலிட்டது அமெரிக்க பைடன் ஆட்சி. தற்போது சீனாவிலிருந்து ரஷ்யாவை பிரித்து கையாள்வது; சீனாவை பிரதான எதிரியாக வரையறுத்து கொள்கை வகுத்துள்ளது டிரம்ப் ஆட்சி. அதனால் ரஷ்யாவை சமரசமாக கையாண்டு சீனா - ரஷ்யா- ஈரான் என்ற வலுவான கூட்டணியை உடைத்து கையாள்வதை செயல்தந்திரமாக கொண்டு கொள்கை உருவாக்கியுள்ளது டிரம்ப் ஆட்சி. இதிலிருந்துதான், சீனாவை கட்டுப்படுத்தி அமெரிக்காவை உலக மேலாதிக்கத்தின் ஒரே சக்தியாக மாற்றும் நோக்கில்தான் தற்போது "அமெரிக்காவே முதன்மை" என்ற யுத்தத்தந்திரக் கொள்கையை அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் டிரம்ப் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்:
வெளியுறவுக் கொள்கைகளில்,
- உக்ரைனை ரஷ்யாவுடன் மட்டும் மறுபங்கீடு செய்து கூறுபோட்டுக்கொள்ள நடவடிக்கை; ஐரோப்பிய ஒன்றியத்தை கழட்டி விடுதல்
- காசா மறுவாழ்வு எனும் பெயரில் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை விரட்டியடித்து, காசாவை ரியல் எஸ்டேட் சந்தையாக மாற்றும் திட்டம்
- தைவானை மறுபங்கீடு செய்ய சீனாவுடன் போருக்குத் தயார் என்ற அறிவிப்பு
- அணு ஆயுத ஒப்பந்தங்களை திடப்படுத்துதல்
- உள்நாட்டிலும் உலக அளவிலும் செயற்கைகோள், நெட்வொர்க், ஏஐ, சிப் உள்ளிட்ட அதி நவீனத் தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்க கார்ப்பரேட்களின் ஏகபோகத்தை நிறுவ முயற்சிகள்
- எரிசக்திக் கொள்கையை, எண்ணெய் எரிவாயு மீதான தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் மாற்றியமைத்தல் - புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை ஊக்குவித்தல்
- அமெரிக்க காப்புக் கொள்கைகள்,
- வர்த்தகப் போர் - வளரும் நாடுகள் மீது வரிவிதிப்பை அதிகரித்தல்
கதவடைப்புக் கொள்கைகள்
- உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுதல்
- பிற நாடுகளுக்கு வழங்கும் நிதி உதவிகளை (USAID) நிறுத்தி வைத்தல்
- காலநிலை மாற்ற ஒப்பந்தங்களில் வெளியேறுதல் - பசுமைக் குடில் வாயுக்களை கட்டுப்படுத்தும் பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்ளல்
- இராணுவ செலவினங்களை குறைக்க பென்டகனுக்கு வலியுறுத்தல், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளை இராணுவ செலவினங்களை அதிகரிக்க வலியுறுத்தல்
அகண்ட அமெரிக்க திட்டம்,
- மெக்சிகோ, கிரீன்லாந்து, பனாமா, கொலாம்பியா, ஏன் கனடாவையே கூட அமெரிக்காவுடன் இணைத்து அகண்ட அமெரிக்கா உருவாக்கத் திட்டம்
- ஆர்க்டிக் பகுதிகளை ஆக்கிரமித்து கொள்ளையடிக்கத் திட்டம்
உள் நாட்டில்,
- அரசுத் திறன் மேம்பாட்டுத் துறை (Department of Government Efficiency) யை உருவாக்கி அதை எலான் மஸ்கிடம் ஒப்படைத்தது மற்றும் அரசு தொழிலாளர்கள் பணி நீக்கம்
- பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Diversity, Equity, Inclusion - DEI) என்ற கொள்கையை கைவிட்டு தகுதி, திறன், நுண்ணறிவுக்கு (Merit, Excellence and Intelligence) முன்னுரிமை தரும் வகையில் கொள்கையை மாற்றியமைத்தல்
- குடியுரிமையை பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரநிலை பிரகடனம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வந்தவர்களை கைது செய்து நாடுகடத்தல்
- ஆரிய இனவெறி -வெள்ளை நிறவெறி
போன்றவை டிரம்ப் ஆட்சி ஈடுபடும் நடவடிக்கைகளில் இன்று முக்கியமான அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
அமெரிக்காவின் இந்த கொள்கை மாற்றங்கள் உலக அளவில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்திருப்பதையும், பனிப்போர் தயாரிப்புகள் தீவிரமடைந்திருப்பதையுமே வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றன. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே இன்று முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த கொள்கை முடிவுகளால் ஐரோப்பிய யூனியன் தனி இராணுவக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. உக்ரைனை மையப்படுத்தி ஐரோப்பிய யூனியனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளன. அமெரிக்கா தலைமையில் ஒரு முகாமும் ரசியா-சீனா தலைமையிலான ஷாங்காய் கூட்டமைப்பு ஒரு முகாமாகவும் ஐரோப்பிய யூனியன் தலைமையில் ஒரு முகாமும் என மூன்று பிரதான முகாம்கள் உலக மேலாதிக்கம் மற்றும் மறுபங்கீடுப் போட்டியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதற்கான யுத்தக் கொள்கைகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன.
உக்ரைனை ஒப்பந்தம் மூலமாக மறுபங்கீடு செய்ய முயலும் அமெரிக்க - ரஷ்ய ஏகாதிபத்தியங்கள்
உக்ரைனில் அமெரிக்க-நேட்டோ மற்றும் ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் மறுபங்கீடுப் போர் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. டிரம்ப் மீண்டும் பதவி ஏற்பதற்கு முன்பு வரை, ரஷ்யா ஆக்கிரமிப்பாளன் என்றும், உக்ரைனின் இறையாண்மைக்கான போராட்டத்தில் அமெரிக்காவும் - நேட்டோவும் உறுதுணையாக இருப்பதாக பைடன் அரசு பேசி வந்தது. ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. டிரம்ப் பதவியேற்றவுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி எனவும் போரை முதலில் உக்ரைனே தொடங்கியது எனவும் குற்றஞ்சாட்ட ஆரம்பித்தார். ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாகவும் அதனுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்து போரை நிறுத்தி உலகில் அமைதியை நிலைநாட்டப் போவதாகவும் வெண்புறா(?!) வேடம் தரித்துள்ளார் டிரம்ப்.
உக்ரைன் போரில் அமெரிக்கா இதுவரை 350 பில்லியன் டாலர் வரை உக்ரைனுக்கு உதவி வழங்கியதாக ட்ரம்ப் கூறுகிறார். ஆனால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் அந்தளவுக்கு நிதியை வழங்கவில்லை என்று கூறுகிறார். அந்த நிதியுதவிக்கு ஈடாக கனிம வள ஒப்பந்தத்திலும் ரஷ்யாவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டுமென உக்ரைனை வலியுறுத்தி வருகிறார் டிரம்ப். புதினும் டிரம்பும் ஒரே குரலில் பேசி வருகின்றனர்; நாங்கள் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம்; நாங்கள் நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்த மாட்டோம் என முதலில் வீராவேசமாக பேசி வந்த ஜெலன்ஸ்கி, பின்பு சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை ஏற்றுக் கொண்டால் அமெரிக்காவுடன் 500 பில்லியன் டாலர் கனிமவள ஒப்பந்தம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக பேசினார்.
மறுபக்கம், பிப்ரவரி 18ல் சவுதி அரேபியாவில் வைத்து ட்ரம்ப், புதினுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். சவுதி அரேபியா மத்தியஸ்த நடவடிக்கையில் ஈடுபட்டது. அதில் இரு நாடுகளும் தூதர்களை நியமிப்பது; போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான பிரதிநிதிகளை நியமித்தல்; பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு போன்றவை உடன்பாடு எட்டப்பட்டன. இந்த பேச்சு வார்த்தையில் உக்ரைன் பங்கெடுக்கவில்லை - தாங்கள் பங்கெடுக்க வேண்டுமானால் ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், துருக்கி ஆகிய நாடுகளும் பங்கெடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது, அதை அமெரிக்கா ஏற்க மறுத்ததால் அதில் உக்ரைன் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து மார்ச் 25ல் ஐ.நா.வில் நடைபெற்ற உக்ரைன் தொடர்பான தீர்மானங்களில் அமெரிக்கா ரஷ்யாவை ஆதரித்து நின்றது.
இதையொட்டி அமெரிக்காவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் போர்நிறுத்தம் என்பது தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இருக்க வேண்டும்; ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை உக்ரைனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்டவற்றை முன்வைத்து பேசியபோது, அது சாத்தியமில்லை என அமெரிக்கா தரப்பு பதிலளித்தது. ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை நீங்கள் மறந்துவிடுங்கள் என்கிறார் ட்ரம்ப். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பேசிய ஜெலன்ஸ்கி, போரினால் பாதிக்கப்படுவது நாங்கள்தான் அதிபரே, நீங்கள் கடலுக்கு அப்பால் பாதுகாப்பாக உள்ளீர்கள்; நாளை நீங்களும் இந்த நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று பேசினார். இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப், நிபந்தனை விதிக்கும் இடத்தில் முதலில் நீங்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் அமைதியை நிலைநாட்ட பேசி வருகிறேன்; நீங்கள் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச்செல்வதை நோக்கமாக கொண்டிருக்கிறீர்கள்; எங்கள் உதவி இல்லை என்றால் உங்களால் ஒருவார காலம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று டிரம்ப் பகிரங்கமாக மிரட்டினார். ரஷ்யாவும் இவ்வாறுதான் கூறியது; நாங்கள் போர் தொடுத்தே வருகிறோம். நாங்கள் இல்லாமல் ரஷ்யாவுடன் நீங்கள் பேசி எடுத்த முடிவுகளை எங்களால் ஏற்க முடியாது என்று ஜெலன்ஸ்கி பேசினார். ஆகையால், அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் பேச்சுவார்த்தையில் அன்றைக்கு உடன்பாடு எட்டப்படவில்லை. ஜெலன்ஸ்கியுடன் வந்த உக்ரைனிய அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில்தான், போர்நிறுத்தத்திற்கு ரஷ்யாவும் சில நிபந்தனைகளை முன்வைத்தது.
- உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்பில் சேர்க்க கூடாது
- உக்ரைனுக்கு வெளியில் இருந்து இராணுவ வீரர்களை இறக்குமதி செய்யக் கூடாது; உளவுத்துறை மற்றும் இராணுவ உதவிகளை செய்யக் கூடாது
- கிரீமியா, டொனெட்ஸ்க், லூஹான்ஸ்க், கெர்சான், ஜெப்போரிசியா ஆகிய 5 மாகாணங்களை ரஷ்யா தன் ஆட்சி பரப்பிற்குள் இணைத்துள்ளது. அதற்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டும்.
- ரஷ்யா மீதான அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.
- அவை முடக்கி வைத்திருக்கும் ரஷ்ய உடைமைகளை திருப்பி அளிக்க வேண்டும்.
போன்றவற்றை முன்வைத்து ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த 5 மாகாணங்களில் 2014ம் ஆண்டிலேயே கிரீமியா, டொனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகிய 3 மாகாணங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது ரஷ்யா. மற்ற இரு மாகாணங்களான கெர்சான் (Kherson), ஜெப்போரிசியா (Zaporizhzhia) ஆகியவற்றில் தான் கடுமையான போர் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வருகிறது.
ரஷ்யா உக்ரைனில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது மட்டும் 30 நாட்களுக்கு போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளது. மற்றப் பகுதிகளில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டே வருகிறது. ரஷ்யா போர்நிறுத்தத்திற்கு உடன்படவில்லையென்றால் பொருளாதாரத் தடைகளை மேலும் அதிகரிக்கப் போவதாக முதலில் எச்சரித்த டிரம்ப் அரசு, ரஷ்யா ஆக்கிரமித்துள்ள 5 மாகாணங்களில் நிறைந்துள்ள கனிம வளங்களை அமெரிக்காவுடன் பங்கிட்டுக் கொள்ள ரஷ்யா முன்வந்தவுடன் தடை எச்சரிக்கையை கைவிட்டு ரஷ்யாவுடன் சமரச ஒப்பந்தத்தில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்யாவின் கிழக்கு ஐரோப்பிய மேலாதிக்கத்தை அங்கீகரித்து வருகிறது.
உக்ரைன் மறுபங்கீட்டில் முத்தரப்பு ஏகாதிபத்தியங்களும் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டுகின்றன?
- உக்ரைனில் எண்ணெய் எரிவாயு வளங்களை தாண்டி இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்குத் தேவையான கனிம வளங்களும், அரிய வகை தனிமங்களும் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன என்பதே அடிப்படை காரணம்.
- ஸ்காண்டியம், இத்ரியம், லாந்தனம், சீரியம், ப்ராசியோடியம், நியோடிமியம், புரோமெத்தியம், சாமரியம், யுரோப்பியம், கேடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஹோல்மியம், எர்பியம், துலியம், இத்தர்பியம், லுத்தேட்டியம் உள்ளிட்ட 21 கனிம வளங்கள் உக்ரைனில் உள்ளன.
- குறிப்பாக உலகின் இருப்பில் 5% சதவிகிதம் (உக்ரைன் கனிம வள இருப்பில் 70% சதவிகிதத்திற்கும் அதிகமான) அரிய வகை தனிமங்கள் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரீமியா, டொனெட்ஸ்க், லூஹான்ஸ்க் மாகாணங்களில் குவிந்துள்ளதாக அறியப்படுகின்றது. அவை எளிதாக பிரித்தெடுக்கும் வடிவில் தூய வடிவில் கிடைப்பதே மற்ற நாடுகளில் இல்லாத சிறப்பியல்பு. பொருளாதார ரீதியாக மிகை லாபத்தை அளிக்கக்கூடியதாக இவை விளங்குகின்றன.
- 4.5லட்சம் டன் லித்தியம் இருப்பும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள 5 மாகாணங்களில் உள்ளன
- உக்ரைனுக்கு 20% சதவிகிதம் மின்சாரத்தை வழங்கும் ஜெப்போரிசியா அணு உலை - இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்
- நிப்ரோ ஆறு, ஓஸ்கில் ஆறு மற்றும் நோவா காக்கோவ்கா அணை உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பியாவின் முக்கிய நீராதாரமாக விளங்கும் நீர்நிலைகள் மற்றும் அதை சுற்றியுள்ள கட்டமைப்புகள்
இவற்றை கைப்பற்றதான் அமெரிக்க - நேட்டோ முகாம் ரஷ்யாவுடன் தீவிர போட்டியில் ஈடுபட்டன. ஆனால் இன்று நிலை மாறி அமெரிக்கா ஐரோப்பா இல்லாமல் ரஷ்யாவுடன் மட்டும் சமரச ஒப்பந்தத்தின் மூலம் மறுபங்கீடு செய்து கொள்ள முன்வந்துள்ளது. இதனால் அமெரிக்கா துரோகமிழைத்துவிட்டதாக கூறி ஐரோப்பா தன்னுடைய இராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தி தனித்து போட்டியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் இருந்துதான் இவை உக்ரைன் போரை அணுகி வருகின்றன. ஜெலன்ஸ்கி தரகு கும்பல் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாக நின்று ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. அமெரிக்கா இல்லாமல் தனித்து போர் நடத்த முடியாது என்று காரணத்தால் தனது நாட்டு கனிமவளங்களை அமெரிக்காவுக்கு தாரைவார்க்கவும் தயாராகி விட்டது.
அமெரிக்கா துரோகமிழைத்துவிட்டதாக கூறி உலக மறுபங்கீட்டுப் போட்டிக்கு தனித்து தயாராகி வரும் ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தாங்கள் ஒப்புக் கொண்ட படி இராணுவ செலவினங்களை அதிகரிக்கவில்லை. அமெரிக்கா கிட்டத்தட்ட 7% சதவிகிதம் இராணுவத்திற்கு செலவழிக்கிறது என்றால் நேட்டோவில் உள்ள மற்ற நாடுகள் 2% சதவிகிதத்திற்கும் குறைவாக செலவழிக்கின்றன. இது அமெரிக்காவுக்கு நெருக்கடியை கொடுத்துவிட்டு நேட்டோ நாடுகள் தங்களது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார் டிரம்ப். எனவே நேட்டோ கூட்டமைப்பில் உள்ள மற்ற நாடுகள் தங்களது இராணுவ செலவினங்களை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது டிரம்ப் அரசு.
அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த எஃப் 35 போர்விமான சப்ளை உள்ளிட்ட இராணுவ உதவிகள் மற்றும் உளவுத்துறை உதவிகளை உடனடியாக நிறுத்தி வைத்தது. உக்ரைன் போரில் அமெரிக்கா மட்டுமே 40% சதவிகிதம் இராணுவ உதவி செய்து வந்துள்ளது. இதனால், ஐரோப்பிய யூனியனும் உக்ரைனும் மட்டும் சேர்ந்து அமெரிக்கா உதவியின்றி ரஷ்யாவை எதிர்கொள்வது ஐரோப்பிய யூனியன் மற்றும் உக்ரைனுக்கு பலத்த பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் என்பதாலும் அமெரிக்க இராணுவ உதவி இல்லாமலும் போரை தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் அவை சற்று பின்வாங்கி உள்ளதை பார்க்க முடிகிறது. இந்நிலையில்தான் ஐரோப்பிய யூனியன் மார்ச் 6ல் நடத்திய அவசர மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
- நேட்டோ நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதலை அமெரிக்கா தனது மீதான தாக்குதலாக கருதும் என்ற வாக்குறுதியை மீறியுள்ளது. அமெரிக்கா ஐரோப்பிய யூனியனுக்கு துரோகமிழைத்துள்ளது.
- இனி அமெரிக்காவை மட்டும் நம்பி பலனில்லை; ஐரோப்பிய யூனியனுக்கான தனி இராணுவ - தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற புதிய வரலாற்றுக்கடமை நம்மீது சுமத்தப்பட்டுள்ளது.
- 2030க்குள் இராணுவ - தொழில்நுட்ப கட்டமைப்பை பலப்படுத்தும் இத்திட்டத்திற்கு "ஐரோப்பிய யூனியன் ஆர்மி ரெடினெஸ் 2030 (EU Army Readiness 2030)" என பெயரிட்டுள்ளது.
- இத்திட்டத்தில், வான் மற்றும் ஏவுகனை தடுப்பு அமைப்புகள், பீரங்கிகள், ஆயுதங்கள், ஏவுகனைகள், டிரோன்கள் மற்றும் டிரோன் தடுப்பு அமைப்புகள், இராணுவ ஆட்சேர்ப்பு, ஏஐ, குவாண்டம், சைபர் மற்றும் எல்க்ட்ரானிக் போர் தயார்நிலை, போர் விமானத் தளம், எரிபொருள் நிரப்பும் தளம், கடல்சார் மற்றும் விண்வெளி தளங்களில் யுத்தத்தந்திர உதவி மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
- பிரிட்டனை ஐரோப்பிய யூனியனில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல்; துருக்கி போன்ற ஐரோப்பிய யூனியனுக்கு வெளியில் உள்ள நாடுகளையும் ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக் கொள்ளுதல்
- இத்திட்டம் வட அட்லாண்டிக் பகுதி தாண்டி உலகளாவிய பாதுகாப்பையும் நோக்கமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும். மிகவும் பலமான, புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய, போட்டிப் போடும் திறன் மிகு கட்டமைப்பாக இது உருவாக்கப்படும் என்கிறது.
- இத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனை இராணுவமயமாக்குதல் (Re-Arm Europe) எனும் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. இதற்கு 800 பில்லியன் யூரோக்களை (866 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது. முதல்கட்டமாக 150பில்லியன் யூரோக்களை திரட்டி இராணுவ பொருளாதார கட்டமைப்புப் பணிகளை துவங்கி விட்டது. லித்துவேனியாவில் ரஷ்யாவுக்கு எதிராக முதல் இராணுவத் தளத்தை நிறுவி விட்டது. இதனால், ஐரோப்பிய பாதுகாப்புத்துறை கார்ப்பரேட்களின் பங்குச்சந்தை உயர்வை கண்டு வருகிறது. ஜெர்மனியின் ரைன்மெட்டல், இத்தாலியின் லியோனார்டோ, பிரான்சின் தேல்ஸ் மற்றும் ஸ்வீடனின் சாப் போன்ற நிறுவனங்களின் பங்குவிலைகள் உயர்ந்துள்ளன.
இவ்வாறு ஐரோப்பிய முகாம் அமெரிக்க சார்பின்றி தனித்த போட்டி முகாமாக 2030க்குள் உருவாகும் இலக்கை முன்வைத்து அதை நடைமுறைப்படுத்த துவங்கிவிட்டது. ரஷ்யாவை முதன்மை இலக்காக வைத்து உருவாகும் இந்த முகாம் சீனாவின் ஆதரவுக்கும் ஒரு பக்கம் தூது விட்டு பார்க்கிறது. ஐரோப்பிய முகாமின் தூதுக்கு சீனா இதுவரை முகம் கொடுக்கவில்லை என்பதையும் காண முடிகிறது. ஷாங்காய் கூட்டமைப்புக்குள் உள்ள முரண்பாடுகள் இதுவரை தீவிரமடையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் சீனாவின் மேலாதிக்கத்தை முறியடித்து தனது மேலாதிக்கத்தை நிறுவ துடிக்கும் டிரம்ப்
அமெரிக்காவின் முந்தைய யுத்தத்தந்திர நடவடிக்கைகளான இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்பு, அரபு வசந்தம் போன்றவற்றினால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் சீனாவின் நிதிமூலதன ஆதிக்கத்திற்குள் நுழைந்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளின் கல்ஃப் கோ-ஆப்பரேசன் கவுன்சில் (Gulf co-operation council) சீனாவை யுத்தத்தந்திரக் கூட்டாளியாக அறிவித்து சீனாவின் மூலதன இறக்குமதிக்கு மத்திய கிழக்கை அகல திறந்துவிட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளுடனான சீனாவின் அரசியல் பொருளாதார உறவுகள் பலமடைந்துள்ளன.
- ஸ்மார்ட் சிட்டி, 5ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் புதிய பட்டுச்சாலை திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளன.
- சுமார் 250 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக உறவுகள் அதிகரித்துள்ளன. கடந்து 10 ஆண்டுகளில் மட்டும் இது 100 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது.
- சவுதி அரேபியா - சீனாவுடன் டிஜிட்டல் யுவானில் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
- டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில், எம் -பிரிட்ஜ் (M-bridge) எனப்படும் பல்வேறு மத்திய வங்கிகளின் டிஜிட்டல் நாணய இணைப்பு பாலம் (Multiple Central bank digital currency Bridge) எனப்படும் டிஜிட்டல் நாணய பரிவத்தனை அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது சீனா.
- பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மேற்கொண்டுள்ளது சீனா.
- பாலஸ்தீன பகுதிகளிலும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. ஃபதா -ஹாமாஸ் அமைப்புகளுடன் நன்மதிப்பை பெறும் வகையில் சமாதான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
- இஸ்ரேலுடன் ஏஐ, ஐடி, கிளவுட் கம்ப்யூட்டிங், உள்கட்டமைப்பு உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பத்துறைகளில் 500 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. 20பில்லியன் டாலர் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
- சீனா, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது.
இவை மத்திய கிழக்கில் சீனாவின் மேலாதிக்கம் அதிகரித்து வருவதற்கான சில எடுத்துக்காட்டுகள். இந்த நிலை அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சவாலாக மாறியுள்ளது. எனவே தான் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டு அமெரிக்கா அரசியல் - பொருளாதார கூட்டமைப்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
- ஈரானை அணு ஆயுத ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் மேற்கொள்ள வலியுறுத்தத் துவங்கியுள்ளது. ஐ.நாவில் ஒப்புதல் பெறாமல் அணு ஆயுத உற்பத்தியில் ஈரான் ஈடுபடுக் கூடாது. மீறினால் சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி வருகிறது அமெரிக்கா. உக்ரைனில் ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டதை அடுத்து ஈரானில் தலையிட்டு அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொடுக்க ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ரஷ்யாவும் அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஆதரவளித்துள்ளது; அத நிறைவேற்றிக் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் ஈரான் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. அமெரிக்காவே ஐ.நாவின் ஒப்புதல் இன்றி அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. நாங்கள் செய்வது குற்றமென்றால் அமெரிக்க செய்வதும் சர்வதேச குற்றம்தான் - நாங்கள் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சர்வதேச மன்றத்தில் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம் என்று பதிலளித்துள்ளது. இதை ஒட்டி ஈரான் மீது நேரடி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளது அமெரிக்கா.
- துருக்கியை வைத்து சிரியாவை கட்டுப்படுத்த முயன்றது அமெரிக்கா; துருக்கி ஐரோப்பிய யூனியன் ஆதரவு நிலை எடுத்ததால், தற்போது ரஷ்யாவை வைத்து சிரியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இதற்கு கைமாறாக மத்தியகிழக்கில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார் ட்ரம்ப். இதன் காரணமாகவே சிரியாவில் ரஷ்யா அமைத்துள்ள இராணுவதளத்தை வரவேற்றுள்ளது; தனது இராணுவத்தை வடகிழக்கு சிரியா பகுதியில் பின்வாங்கி கொள்ள முடிவெடுத்துள்ளது அமெரிக்கா.
- டிரம்பின் முந்தைய ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்ட ஐ2யூ2 (I2U2) திட்டத்தை அதாவது இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளடக்கிய அரசியல்-பொருளாதார பாசிச கூட்டமைப்பை மத்திய கிழக்கு பிராந்திய மேலாதிக்க நலன்களிலிருந்து வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக எரிசக்தி துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இவை இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.
- பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் படைகளை எதிர்த்து சண்டையிடும் ஏமனைச் சார்ந்த ஹவுதி படைகள் மீது ஏவுகணை தாக்குதலைத் தொடுத்து வருகிறது. அதன் மூலம் ஈரானையும் மிரட்டி வருகிறது.
இவற்றோடு மட்டுமல்லாமல், "காசா மறுவாழ்வு" எனும் பெயரில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் நேரடியாகவே அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. காசாவில் வாழும் 20லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை விரட்டியடிப்பதற்கானத் திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. வெடிகுண்டுகளால் உருக்குலைந்துப் போன காசா பகுதியில் இருந்து அம்மக்கள் வெளியேறி வசதியான வீடுகளில் வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று ஏகாதிபத்தியவாத ஓநாய் டிரம்ப் ஊளையிடுகிறது. எகிப்து மற்றும் ஜோர்டானில் அவர்களுக்கு வீடுகட்டி தருவதாக பேசி வருகிறார். மறுபக்கம் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசா மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்தே வருகிறது இரத்த வெறி பிடித்த நெதன்யாகு அரசு; அதை பற்றி வாய் திறக்காத டிரம்ப் காசா மறுவாழ்வு என வேசம் போடுகிறார்.
காசா என்ணெய் வளம் நிறைந்த பகுதியாக மட்டுமில்லாமல், கடற்கரை சார்ந்த பகுதியாக இருப்பதால் புவிசார் அரசியலுக்கு முக்கிய தளமாகவும், மிக உயர்ந்த தரத்திலான ரியல் எஸ்டேட் வர்த்தகத்திற்கு ஏற்ற இடமாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. அதை முழுமையாக ஆக்கிரமித்து "அகண்ட இஸ்ரேல்" திட்டம் மூலம் காசாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்க டிரம்ப் கும்பல் துடிக்கிறது. காசாவில் வானுயர்ந்த கட்டிங்கள், ஆடம்பர உல்லாச விடுதிகளால் நிரம்பியிருக்க டிரம்பும் நெதன்யாகுவும் நீச்சல் குளத்தின் அருகே ஓய்வெடுப்பது போன்ற ஏ.ஐ.யால் உருவாக்கப்பட்ட காணொளியை டிரம்ப் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். அதில் காசா மக்களின் சுவடே இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது. டிரம்பின் காசாவை மாற்றியமைக்கும் திட்டத்தை புரட்சிகரமானது என்று புகழ்ந்து வரவேற்றுள்ளது இரத்தவெறி பிடித்த நெதன்யாகு கும்பல். சவுதி அரேபியா மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதை சரிகட்டுவதற்குதான் உக்ரைன் விசயத்தில் ரஷ்யாவுடன் மத்தியஸ்தம் பேசும் நிகழ்ச்சியில் சவுதி அரேபியாவையும் இணைத்துள்ளது டிரம்ப் கும்பல். பாலஸ்தீன விசயத்தில் இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்குமான முரண்பாட்டை போக்கும் வகையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் சவுதியையும் பங்குதாரராக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது டிரம்ப் அரசு. இவ்வாறு காசா மக்களின் பிணங்களின் மீது உல்லாச கோட்டைகளை கட்டியெழுப்ப சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன இந்த கொள்ளைக் கூட்டம். ஆனால் காசா மக்கள், "டிரம்ப் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளட்டும். எம்மக்களை எங்களது சொந்த பூமியில் இருந்து விரட்டியடித்துவிட முடியாது. பாலஸ்தீனியர்கள் மறைந்துபோகவோ, மாண்டுபோகவோ மாட்டார்கள், தங்கள் தேசத்தை பாதுகாப்பார்கள்" என்று உறுதியுடன் களத்தில் நிற்கிறார்கள்.
இவ்வாறு மத்திய கிழக்கில் சீனாவின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்தி எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தனது மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கில் அங்கு ஒப்பந்த முறைகளிலும் நேரடி இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ரஷ்யாவுடன் ஒப்பந்த முறைகளில் மறுபங்கீட்டில் ஈடுபடுகிறது. மத்திய கிழக்கில் சீனாவின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்த ஒப்பந்த முறைகளில் ஈடுபட வாய்ப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி மறுபங்கீட்டில் ஈடுபடுகிறது. தைவானில் சீனாவுடன் இராணுவ நடவடிக்கைக்குத் தயார் என அறிவித்துள்ளது டிரம்ப் அரசு.
காப்புக் கொள்கைகளை முன்வைத்து அமெரிக்காவை முதன்மைப்படுத்துதல்
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி குறைக்கும் வகையில் 2015ம் ஆண்டு போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாகவும் காலநிலை மாற்றம் குறித்த தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்வதாகவும் டிரம்ப் ஆட்சி அறிவித்துள்ளது. கடந்த நவம்பரில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் (United Nations Climate Change conference - COP 29) கூட புதைபடிவ எரிபொருள்களை பயன்படுத்துவதை குறைப்பது தொடர்பான அம்சத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. எண்ணெய் எரிவாயுவில் ஏகபோகத்தை நிறுவத் துடிக்கும் கார்ப்பரேட்களின் ஆதிக்கம் இந்த மாநாட்டிலும் ஓங்கி இருந்ததை பார்க்க முடிந்தது. தற்போதைய டிரம்பின் இந்த அறிவிப்பு அதை வெளிப்படையாக்கி உள்ளது. கரிய அமில வாயுக்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் பொறுப்பை மற்ற ஏகாதிபத்தியங்கள் மீதும் புதிய காலனிய நாடுகள் மீதும் திணித்து விட்டு அமெரிக்கா அதிலிருந்து விலகி கொண்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான மின் வாகன பயன்பாடு உள்ளிட்ட பசுமை ஆற்றல் திட்டங்கள் பெரும்பாலும் சீனாவின் வர்த்தகத்திற்கும் சீனாவின் ஏகபோகத்திற்கும் வழிவகுத்துள்ளது. அதற்கு தேவையான லித்தியம், தோரியம் உள்ளிட்ட கனிம வளங்களை சீனா கையகப்படுத்தி வைத்திருப்பது அமெரிக்காவிற்கு நெருக்கடியாக உள்ளது. அமெரிக்கா இந்த கனிம வளத் தேவைகளுக்கு இன்றும் சீனாவையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அது மட்டுமில்லாமல் மின் வாகனங்களை பெருமளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்தும் வருகிறது. அமெரிக்கா இந்த துறைகளில் சீனாவுக்கு சவால் விடும் அளவுக்கு உற்பத்தியையும் சந்தையையும் உடனடியாக கைப்பற்ற முடியவில்லை. அதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், கனிமவளங்களை கைப்பற்றவும் அமெரிக்காவுக்கு நீண்ட காலம் எடுக்கலாம். அதே நேரத்தில் புதைபடிவ எரிபொருளின் பயன்பாட்டில் இயங்கும் வாகன உற்பத்தியை முற்றிலும் கைவிடுவது அமெரிக்காவுக்கு இழப்பாக அமையும். எனவே அமெரிக்க எண்ணெய் வளத்துறை கார்ப்பரேட்களுக்கு சாதகமான எண்ணெய்-எரிவாயு துறைகளிலும் அதன் பயன்பாட்டில் இயங்கும் வாகன உற்பத்தியிலும் கோலோச்ச முடியும் என்பதிலிருந்து இந்த நிலையை எடுத்துள்ளது. அதனால்தான் அமெரிக்காவிலும் கூட எரிபொருள் வாகன எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலிருந்து வாகன நெரிசல் கட்டணத்தையும் கூட ரத்து செய்துள்ளது என்பதை பார்க்க முடிகிறது.
கொரோனா கால கட்டத்தில் உலக சுகாதார நிறுவனம் (WHO) சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய டிரம்ப் அரசு, தற்போது அதிலிருந்து வெளியேறுவதற்கான ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடிய சுரண்டாலால் உண்டாகும் கொள்ளை நோய்களுக்கு இனி அமெரிக்கா எவ்விதத்திலும் பொறுப்பேற்காத நிலை உருவாக உள்ளது. நோய்த் தடுப்பு மருந்துகளை ஏற்கெனவே காப்புரிமை பெற்று வைத்துள்ள அமெரிக்கா, இனி அவற்றை கொள்ளை லாப விலைக்கே ஏற்றுமதி செய்யும். உலக மக்கள் கொடிய நோயில் மாண்டாலும், ஏகாதிபத்திய கொள்ளை போர்களினால் செத்து மடிந்தாலோ அவற்றிலிருந்து உயிர் காக்க உலக நாடுகள் உதவி கோரினாலோ அல்லது உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டினாலோ அதை அமெரிக்கா மதிக்காது. நோயை டாலராக்கும் கொள்ளைகார கூட்டமாக மாற உள்ளது.
உலக நாடுகளில் தங்களது நலன்களுக்கு சேவை செய்யும் வகையில் தொண்டுநிறுவனங்களை உருவாக்கி அவற்றுக்கு நிதி உதவி செய்து பிரச்சாரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தது அமெரிக்கா. அந்த இடத்தை நேரடியாகவே எலான் மஸ்க் கும்பலின் ஸ்டார்லிங் சேட்டிலைட் சேவையும், மார்க் ஷூபெர்க் -ன் மெட்டா நிறுவனம் உள்ளிட்ட கும்பல் கைப்பற்றியுள்ளது. ஏகபோக லாபத்துடன் தங்களுக்கு சாதகமான கருத்துகளை தாங்களே உருவாக்கி பிரச்சாரம் செய்து விட முடியும் என்ற நிலை எடுத்துள்ளது. தேவையெனில் இதன் மூலமே ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து பொம்மை ஆட்சியை நிறுவ முடியும். எனவே நற்பணி என்ற பெயரில் தொண்டு நிறுவனங்களுக்கென்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கடமையை அமெரிக்க மாகாண அரசுகளின் தலையில் கட்டியுள்ளது. அமெரிக்க உதவி (USAID) என்ற அமைப்பு மூலம் வழங்கப்பட்டு வந்த நிதிகளை நிறுத்தி வைத்துள்ளது டிரம்ப் ஆட்சி. ஒரு கையில் துப்பாக்கி ஒரு கையில் ரொட்டித் துண்டு எனும் யுத்தக் கொள்கைகளில், ரொட்டித் துண்டுகளுக்கான நிதியை குறைத்து அதை அமெரிக்க மாகாண அரசுகள் மற்றும் காலனிய நாடுகளின் தலையிலேயே சுமத்தியுள்ளது டிரம்ப் -மஸ்க் கும்பல்.
வர்த்தகப் போர்
டிரம்பின் பொருளாதாரத் திட்டங்களில் வரிகள் ஒரு மையப் பகுதியாக மாறியுள்ளது. வரி வருவாயை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கலாம் மற்ற நாடுகளை பேரம் பேசி அடிபணிய வைக்கலாம் என்ற கனவு காண்கிறார் டிரம்ப். பெரும்பாலான நாடுகள் மீது துவங்கப்பட்ட இந்த வர்த்தகப் போர் தற்போது சீனாவை மையப்படுத்தி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோ: இவ்விரு நாடுகளின் பொருட்களுக்கு குறிப்பாக கார் உற்பத்தி பாகங்கள், எஃகு மற்றும் அலுமினியம் ஆகிவற்றுக்கு 25% சதவிகித கூடுதல் வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. இவை முதலில் பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கவிருந்தன. கனடாவுடன் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களில் அமெரிக்கா ஈடுபட முயன்றது அது நிறைவேறாததால் ஒருமாதம் கழித்து மார்ச் 12 முதல் வரிவிதிப்புகள் தொடங்கப்பட்டன. மேலும், கனடாவின் எரிசக்தி இறக்குமதிகளுக்கும் 10% சதவிகித கூடுதல் வரியை விதித்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா அமெரிக்காவிலிருந்து வரும் 125 பில்லியன் கனடா டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதிக்க இருந்தது. அமெரிக்காவுக்கு மின்சாரம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்த உள்ளதாக தெரிவித்தது. அவற்றின் விலையை 25% சதவிகிதம் உயர்த்த உள்ளதாகவும் தெரிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் 3ல்1 பங்கு மாகாணங்களை மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு இட்டுச் செல்லும் என்றது. மேலும் அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு அமெரிக்காவுக்குதான் பாதகமாக அமையவுள்ளது அதன் எஃகு தளவாடங்கள், அலுமினியப் பொருட்கள், கார்கள் போன்றவை விலை உயரப் போகின்றன என்றது.
மெக்சிகோவை பொறுத்தவரை, அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடியாக போட்டி வரிவிதிப்பு செய்யாமல் தன் மீது விழுந்துள்ள ஃபெண்டனைல் போதை பொருள் ஊடுருவலை தடுக்க அமெரிக்காவுக்கு உதவுவதாக உத்திரவாதம் அளித்து 10,000 காவலர்களை எல்லைக்கு அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கும் வரிவிதிப்பிற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கீழ்படிந்துள்ளது மெக்சிகோ.
ஐரோப்பிய யூனியன்: "மிக விரைவில்" ஐரோப்பிய யூனியனின் பொருட்களுக்கு வரி உயர்வை அறிவிப்பேன் என்று டிரம்ப் கூறினார். கார்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் 25% சதவிகிதம் விதிக்க உள்ளதாக பேசினார், ஏனெனில் 2024ம் ஆண்டில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் 213 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா எதிர்கொண்டது ஒரு கொடுமையான விசயம் என டிரம்ப் கதையளந்தார்.
சீனா: 800 டாலருக்கும் அதிகமான மதிப்பில், சீனாவிலிருந்து வரும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% சதவிகிதம் முதல் 20% சதவிகிதம் வரை கூடுதல் வரி விதிப்பை பிப்ரவரி 4 முதலே நடைமுறைப்படுத்த துவங்கிவிட்டது அமெரிக்கா. குறிப்பாக சீனாவின் மின்சார வாகனங்களுக்கு மட்டும் 25% சதவிகித கூடுதல் வரி விதிப்பு செய்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு 15 சதவிகிதம் வரையிலான வரிகளை சீனா விதித்தது. பல்வேறு விமான போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை சார் அமெரிக்க நிறுவனங்களை "நம்பிக்கையில்லா நிறுவனங்களின் பட்டியலில்" சேர்த்து அவற்றுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும், "அமெரிக்கா... வரிப் போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போரையும் தொடர்ந்து நடத்தினால், சீனா இறுதிவரை அவர்களை எதிர்த்துப் போராடும். அமெரிக்கா வரிவிதிப்பை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனில், ஷாங்காய் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளின் வரிவிதிப்பிற்கும் அமெரிக்கா ஆளாக நேரிடும்" என்று சீனா எச்சரித்தது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவுக்குள் வரும் பெரும்பாலன நாடுகளின் இறக்குமதிகளுக்கு 10% சதவிகிதமும், இந்தியாவிலிருந்து வரும் இறக்குமதி பொருள்களுக்கு 26% சதவிகிதம், ஐரோப்பிய யூனினில் இருந்து வரும் பொருள்களுக்கு 24% சதவிகிதமும், வியட்நாமுக்கு 34% சதவிகிதமும், சீனாவுக்கு 54% சதவிகிதமும் என அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு சராசரியாக 27% சதவிகிதம் வரை வரலாறு காணாத வரி உயர்வை ஏப்ரல் 2 முதல் அமல்படுத்தியது டிரம்ப் அரசு. பதிலுக்கு ஐரோப்பிய யூனியன், சீனா போன்ற நாடுகள் அதே விகிதத்தில் வரிவிதிப்பை அதிகரித்தன. இதன் காரணமாக, அமெரிக்க டெக் துறை கார்ப்பரேட்களின் பங்குகள் கூட அதலபாதாளத்தில் வீழ்ந்தன. உலக அளவில் பங்குச் சந்தை மிகப் பெரும் சரிவை கண்டது.
இந்த வரிவிதிப்புகள் அனைத்தும் அமெரிக்க மக்களின் தினசரி வாங்கும் பொருட்களின் விலை 0.81% சதவிகிதம் முதல் 1.63% சதவிகிதம் வரை உயரக்கூடிய நிலை ஏற்பட்டது. இது அமெரிக்க மக்களின் வாங்கும் சக்தியை பாதித்து நெருக்கடியை தீவிரப்படுத்தவே செய்யும். அமெரிக்க பெரும் கார்ப்பரேட் கும்பல் நலனிலிருந்து அமெரிக்கா விதிக்கும் இந்த வரி உயர்வுகள் அமெரிக்கா மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து பணவீக்கத்தை அதிகரிக்கவே செய்யும். இதன் மூலம் தோன்றும் நெருக்கடிகளும் புதிய காலனிய நாடுகள் மீதே சுமத்தப்படும் நிலை ஏற்பட்டது.
அமெரிக்கா மற்ற பிற நாடுகளின் மீதான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த வரி விதிப்பு போர் இதனுடன் நிற்கவில்லை. அதை சீனாவை மையப்படுத்தி தற்போது முடுக்கி விட்டுள்ளது. சீனாவுக்கு வரலாறு காணாத அளவில் 104% சதவிகிதம் வரை வரியை உயர்த்தியுள்ளது. சீனாவும் அமெரிக்கா மீது 84% சதவிகிதம் வரியை பதிலுக்கு உயர்த்தியுள்ளது. இருப்பினும் தன் நாட்டு டெக் கார்ப்பரேட்களை காப்பாற்றும் நோக்கில் கணிணி தயாரிப்பு பொருட்கள், செமிகண்டக்டர் சிப்கள் போன்றவற்றிற்கு விலக்கு அளித்துள்ளது. இத்தகைய உற்பத்திப் பொருட்களுக்கு அமெரிக்கா சீனாவை பெருமளவில் நம்பி இருப்பதை இச்செயல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அமெரிக்காவின் டெக் கார்ப்பரேட்களின் உற்பத்திக்கு அத்தியாவசியமான சில பொருட்களை அமெரிக்காவுக்கு வழங்குவதை சீனாவும் நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்ந்தால் சீனா மீது 245% சதவிகிதம் வரை வரிவிதிப்பேன் என்றும் டிரம்ப் மிரட்டி வருகிறார். மேலும், ரஷ்யாவுக்கு இது வரை வரிவிதிப்பை அமெரிக்கா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவிலிருந்து ரஷ்யாவை பிரித்து கையாளும் சூழ்ச்சியை கடைபிடிக்கிறது என்பது இதிலிருந்தும் கூட தெளிவாகிறது.
அமெரிக்காவில் பாசிச ஆட்சியை நிறுவுதல்
2001 முதல் இன்றுவரை இராணுவ தளவாட உற்பத்தி சார்ந்த கார்ப்பரேட்களை முன்னிறுத்தி இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்பு எனும் பெயரில் இராணுவ பொருளாதாரத்தை கட்டியமைத்து சுமார் 10 லட்சம் கோடி டாலர்களை செலவழித்துள்ளது அமெரிக்கா. இது அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் நெருக்கடி உள்நாட்டில் பின்வருமாறு வெளிப்பட்டுள்ளது:
- இது வரை அமெரிக்கா வரலாற்றில் இல்லாத அளவுக்கு பண வீக்கம் 2% சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது; விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
- வேலைவாய்ப்பின்மை 5% சதவிகிதத்தையும் தாண்டியுள்ளது
- நடப்புக் கணக்கு பற்றாக்குறை 933 பில்லியன் டாலர்களாக மாறியுள்ளது; இது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 3% சதவிகிதமாகும். (பற்றாக்குறை என்பது "மைனஸ் / எதிர்மறை" என்பதை கணக்கில் கொள்ளவும்)
- அமெரிக்காவின் கடன் அதன் ஜிடிபியை விட 124% சதவிகிதம் கூடுதலாகியுள்ளது
- 60% சதவிகிதம் மக்கள் வாழ்நிலை சேமிப்பே இல்லாமல் அவர்களின் மொத்த சேமிப்பும் கரைந்து அவற்றை செலவழித்து வாழும் மோசமான நிலையை எட்டியுள்ளது
- 8.5 கோடி மக்களின் காப்பீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 8.5 லட்சம் மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்
- குழந்தைகள் வறுமையில் வாடும் நிலை ஐரோப்பாவை விட அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. 25% சதவிகிதம் முதியவர்கள் எவ்வித வாழ்நிலை உத்திரவாதமும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
மறுபக்கம், இராணுவ கார்ப்பரேட்களின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து மெட்டா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங், அமேசான் ஆகிய கார்ப்பரேட்களின் பங்குச் சந்தை 17% சதவிகிதம் அதிகரித்துள்ளது. சொத்து மதிப்பு அமெரிக்க 60% சதவிகித மக்களின் ஒட்டுமொத்த சொத்த மதிப்பை விட இந்த 3 கார்ப்பரேட்களின் அதாவது எலான் மஸ்க், பெஜோஸ், மார்க் ஆகியோரின் சொத்து மதிப்பு அதிகமாகும். இவ்வாறு அமெரிக்காவுக்குள்ளேயும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது.
மென்மேலும் நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தும் விதமாக பாசிச ஆட்சியை நிறுவி வருகிறது. அமெரிக்கா அரசு நிர்வாக இயந்திரம் முழுவதையுமே கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசுத் திறன் மேம்பாட்டுத் துறை (Depatment of Government Efficiency - DOGE) எனும் பெயரில் எலான் மஸ்க் என்ற பெரும் ஏகபோக முதலாளியிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
- அதற்கென தனி பட்ஜெட் போட்டுக் கொள்ளவும் திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் உரிமை வழங்கியுள்ளது.
- அமெரிக்காவின் நிதி மற்றும் நாணய கட்டமைப்புகளை கையாளும் உரிமைகளை வழங்கியுள்ளது.
- தனி மனித அந்தரங்க அடையாளங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்ட குடிமக்களின் டிஜிட்டல் தரவுகளை கையாளக் கூடிய உரிமையை தாரைவார்த்துள்ளது
- உள்துறை - பாதுகாப்புத் துறை, நீதித்துறை, வெளியுறவுத் துறை, விமானப் போக்குவரத்து ஆணையம், வருமான வரித் துறை, நுகர்வோர் நலத்துறை உள்ளிட்ட முக்கியமான ஃபெடரல் அரசாங்க நிர்வாகத் துறைகள் அனைத்தையும் எலான் மஸ்க் தலைமையிலான கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்துள்ளது. 20 கூட்டாட்சி அமைப்புகளை ஒழித்துக் கட்டியுள்ளது. இது நாள் வரை பணியாற்றி வந்த 65ஆயிரத்திற்கும் மேலான ஊழியர்களை ஒரே இரவில் பணி நீக்கம் செய்து விரட்டியடித்துவிட்டது. தகுதி, திறன், நுண்ணறிவு என பேசி அரசுப் பணிகளில் கொத்தடிமை முறைகளை உருவாக்கி அவர்களுக்கு இருந்த அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறித்துள்ளது.
- இராணுவ செலவினங்களை பென்டகன் குறைத்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளது. DOGE அமைப்பே தானாக போர் அறிவிப்புகளை வெளியிடும் அளவுக்கு உரிமைகளை வழங்கியுள்ளதை பார்க்க முடிகிறது. தைவான் விசயத்தில் சீனாவுக்கு எதிராக போர்தொடுப்போம் என எலான் மஸ்க் அறிவிக்கும் அளவுக்கு அதிகாரம் அத்துறைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க விண்வெளித் துறையான நாசாவிற்கு இருந்த சுயேச்சை அதிகாரத்தை பறித்து அதை மஸ்க்கிடம் ஒப்படைத்துள்ளது.
- அமெரிக்காவில் அமைந்துள்ள உலக அமைதிக்கான நிறுவனத்தின் (USIP) தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை துப்பாக்கி முனையில் குண்டுக்கட்டாக வெளியேற்றி அந்த நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் கையகப்படுத்தியுள்ளது DOGE மஸ்க் கும்பல்.
- அந்தந்த மாகாணங்களின் மொழிக்கொள்கை மற்றும் மொழி உரிமைகளை மறுத்து ஆங்கிலத்தை மட்டும் ஒரே ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக மாற்றியுள்ளது. ஸ்பானீஷ், சீனா, தைவான் மொழிகள் உள்ளிட்ட 8 அலுவல் மொழிகளை பயன்படுத்தி வந்த 20% சதவிகித மொழி சிறுபான்மையினரை ஒடுக்கி வருகிறது.
- விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு இனி பெடரல் (ஒன்றிய) அரசு நிதி ஒதுக்காது என அறிவித்து அந்த பொறுப்புகளை தட்டிக் கழித்துள்ளது. அந்த நிதி சுமைகள் அனைத்தையும் மாகாண அரசுகளின் தலையில் சுமத்தியுள்ளது.
- நீதிபதிகளை தாங்களே நியமிப்பது, தேர்தல் ஆணையத்தை கலைப்பது போன்ற பாசிச முயற்சிகளில் டிரம்ப் - எலான் மஸ்க் கும்பல் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு, அரசு செலவினத்தை குறைப்பது எனும்பெயரில் அரசாங்க நிர்வாகத்தையே அப்பட்டமாகவும் நேரடியாகவும் கார்ப்பரேட்டிடம் தாரை வார்த்துள்ளது டிரம்ப் ஆட்சி. இது அமெரிக்க பொருளாதாரத்தை ஒரு சில பெரும் கார்ப்பரேட் கும்பல்களின் கைகளில் மட்டும் கொண்டு சேர்க்கும் ஏற்பாடாகும். சமீபத்தில்
அசெஞ்சூவர் (Accenture), நைக் (Nike) போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் கூட மஸ்க் கும்பல் விழுங்கியுள்ளது.
32 மாகாணாங்களை கொண்ட அமெரிக்காவின் கூட்டாட்சி முறையை ஒழித்து ஒரு மையப்படுத்த பாசிச ஆட்சிக்கு வழிவகுத்துள்ளது. அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட தடை விதித்துள்ளது. இவற்றை எதிர்த்து அமெரிக்காவில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
சென்ற ஆட்சியில் மெக்சிகோ எல்லையில் அமெரிக்காவுக்குள் அனுமதி இல்லாமல் நுழைபவர்களை தடுக்கப் போவதாக கூறி தடுப்பு அரண் கட்டிய டிரம்ப் கும்பல், இம்முறை மெக்சிகோ உள்ளிட்ட அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்ததோடு அங்கு இராணுவத்தை குவித்துள்ளது. மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா செல்லும் மக்களை இனவெறி கொண்டு விரட்டியடிக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைகளுக்காக வந்து குடியமர்ந்துள்ளவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்களை கைது செய்து நாடு கடத்தி வருகிறது. அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை திருத்தி அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே என்று ஹிட்லரின் "ஆரிய இன" மேன்மை கோட்பாட்டிற்கு இணையான தூய இனவாதத்தை முன்வைத்து கறுப்பினத்தவர் மீதும் அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவரின் வாரிசுகள் மீதும் கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது டிரம்ப் அரசு. அமெரிக்க மக்களின் மீது நெருக்கடியின் சுமைகளை திணித்து, அந்த நெருக்கடிகளுக்கு காரணம் மெக்சிகர்களும் பிற இனத்தவரும் என்று வெறுப்பு பிரச்சாரத்தை கட்டியமைத்து அமெரிக்க மக்களிடையே உள்ள பிற்போக்கு சக்திகளை பாசிச ஆட்சிக்கு ஆதரவாக அணிதிரட்டி வருகிறது.
தற்போது வெளிநாட்டவர்கள் சிறப்பு உரிமையின் மூலம் கிரீன்கார்டு பெற்று அங்கு வாழலாம் என்ற நிலையை நீக்கியுள்ளது. இனி கிரீன்கார்டுகள் செல்லாது; கோல்டு கார்டுகளாக அவை மாற்றப்பட்டு விட்டன. புதிதாக கோல்டு கார்டு வாங்க வேண்டும். கிரீன் கார்டு மட்டும் வைத்துக்கொண்டு இந்த நாட்டில் இனி குடியிருக்கவோ தொழில் செய்யவோ முடியாது. கிரீன் வைத்துள்ளவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள் அல்லது கைது செய்யப்படுவீர்கள் என்று அமெரிக்காவில் வாழ்வதற்கு கடந்த காலங்களில் சிறப்புரிமைப் பெற்ற வெளிநாட்டில் இருந்து புலம்பெயர்ந்த சிறுகுறு முதலீட்டாளர்களையும் அமெரிக்காவை விட்டு விரட்டியடிக்கத் துவங்கியுள்ளது டிரம்ப் அரசு.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சேவைகளை நிறுத்தியுள்ளது. அதேபோல், ஆண் பெண் இருபாலர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமையாளர்கள் அவர்களுக்கு மட்டுமே உரிமைகள்; மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை ரத்து செய்து அவர்களை மனிதப் பிறப்பாகவே கருதும் நிலையிலிருந்து கீழிறிக்கியுள்ளது. இப்படி பெற்றோர் இல்லாத குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரை அமெரிக்காவில் வாழத் தகுதியற்றோராக அப்பட்டமாக அறிவித்துள்ளது இந்த கொடிய ஆட்சி.
அகண்ட அமெரிக்காவை உருவாக்கத் திட்டம்
மெக்சிகோ வளைகுடா நாட்டின் பெயர் "கல்ப் ஆஃப் மெக்சிகோ" என்று இருந்ததை மாற்றி "கல்ப் ஆஃப் அமெரிக்கா" என்று கூகுள் மேப் செயலியிலும் அமெரிக்க அரசு ஆவணங்களிலும் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் செய்தி ஊடகங்களும் மெக்சிகோவை "கல்ப் ஆஃப் அமெரிக்கா" என்று பயன்படுத்த கண்டிப்பு தெரிவித்து வருகிறது. அவ்வாறு பயன்படுத்தாத ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது. ஃபெண்டனைல் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சீனாவிலிருந்து மெக்சிகோ வழியாகத்தான் அமெரிக்காவுக்குள் நுழைவதாக கூறி அதை தடுப்பதற்கு வழி மெக்சிகோவை தனது ஆட்சி பரப்புக்குள் கொண்டுவருவதே என்கிறார் டிரம்ப். இது போதைப் பொருள் புழக்கத்தால் மக்கள் மடிவது பற்றிய அக்கறையல்ல, போதைப் பொருள் விநியோகத்தை அமெரிக்க கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே டிரம்புக்கு இருக்கும் கவலை. மெக்சிகோவை தனது எல்லை பரப்புக்குள் கொண்டு வந்து கள்ளத்தனமாக இல்லாமல், ராஜ மரியாதையோடு போதை சாம்ராஜ்ஜியத்தை அரங்கேற்றலாம் என்பதே இதன் பொருள்.
கனடாவும் அமெரிக்க அரசின் ஒரு மாகாணம் தான் அதற்கு அமெரிக்க அரசின் விதிகளை மீறி செயல்பட உரிமை இல்லை. முன்னாள் கனடா பிரதமர் ட்ரூடோவை, கனடா மாகாணத்தின் ஆளுநர் என்று பேசியதோடு அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடி பணிய கோரினார்.
பனாமா கால்வாயை சீனா பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதித்து வரும் நிலையில், பனாமா கால்வாய் அமெரிக்காவுக்கு சொந்தமானது. அதை சீனாவின் பயன்பாட்டுக்கு அனுமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பனாமாவை மீட்டு அமெரிக்காவுடன் இணைக்க உள்ளோம். அதற்கு கொலாம்பியா தடையாக இருந்தால் கொலாம்பியாவையும் அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவோம் என வாய்ச்சவடால் அடிக்கிறார் டிரம்ப்.
கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் டிரம்ப் தனது உரைகளில், "நாங்கள் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்" என்று பேசி வருகிறார். கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் அமெரிக்காவின் நவீன ஆதித்திரட்டல் ஆக்டோபஸ் கரங்களை ஆர்க்டிக் பகுதி வரை விரிவுபடுத்த உள்ளது டிரம்ப் கும்பல். சென்ற ஆட்சியின் போதே இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும் தற்போது அதற்கான தேவையும் நெருக்கடியும் டிரம்ப் அரசுக்கு அதிகரித்துள்ளது. கிரீன்லாந்தில் அருமண் தனிமங்கள் மட்டுமல்லாமல் யுரேனியம், டைட்டானியம், தங்கம், துத்தநாகம், தாமிரம், இரும்பு ஆகியவை ஏராளமாக புதைவைடிவில் கிடைக்கிறது. இவை அதிநவீன எலக்ட்ரானிக் சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களுக்கு அத்தியாவசியமானவை. மேலும் ஆர்டிக் பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, நிக்கல், லித்தியம், கோபால்ட், அருமண் தனிமங்கள் மற்றும் வைரங்கள் போன்ற கனிம வளங்கள் செறிந்து கிடக்கின்றன. ஆர்க்டிக் பகுதியில் பனி உருகினால் என்ன காலநிலை எக்கேடு கெட்டால் என்ன என்று அமெரிக்கா அப்பிராந்தியத்தை கைப்பற்றி "டிரில் பேபி டிரில் (drill baby drill)" என்ற செயலுக்தியை மேற்கொள்ள உள்ளது.
இவ்வாறு அமெரிக்காவின் கூட்டாட்சிக் கொள்கைகளையும் ஜனநாயக உரிமைகளையும் செல்லாக்காசாக்கி "அகண்ட அமெரிக்கா" என்ற விரிவாதிக்கக் கொள்கையோடு கொட்டமடிக்கிறது டிரம்ப் அரசு.
அமெரிக்காவுக்கு இந்த கனிமங்கள் ஏன் தேவைப்படுகிறது?
உக்ரைனில் மட்டுமல்லாது கிரீன்லாந்து உள்ளிட்ட ஆர்க்டிக் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுத் தளங்களாக மாற்ற டிரம்ப் அரசு துடிக்கிறது. ஆனால், ஆர்டிக் பகுதிகளுக்கு சற்றும் தொடர்பே இல்லாத ஒரு நாடாக உள்ள சீனா அப்பகுதியை கைப்பற்றி சுரண்டி வருவதுதான் ஆச்சரியமான விசயம்.
2013 இல் ஆர்க்டிக் கவுன்சிலில் பார்வையாளர் நிலையை (observer status) பெற்ற சீனா 2018ல் சீனாவின் ஆர்க்டிக் கொள்கை என்ற யுத்தத்தந்திரத்தை வெளியிட்டது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் "மனிதகுலத்திற்கான ஒரு பொதுவான எதிர்காலத்தை உருவாக்குவது" எனும் பெயரில் இத்திட்டத்தை வெளியிட்டது. ஆக்கிரமிப்பாளனை போல அல்லாது அமைதியான ஒத்துழைப்பை நாடும் நேர்மறையான பங்காளியாக தன்னை காட்டிக் கொண்டது; அப்பகுதியின் துயரத்தை துடைக்க வந்த மீட்பாளனாக வேசமிட்டது சீனா. ஆனால் ஆர்டிக் பகுதிகளின் இயற்கை வளங்களை சுரண்டுவதில் கவனத்தைக் குவித்தது. "துருவ அல்லது பனி பட்டுச் சாலை (Polar Silk Road or Ice Silk Road)" எனப்படும் திட்டத்தை முன் வைத்து செயல்படுத்தி வருகிறது. இது சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஆர்க்டிக் பிரதேசம் வழியாக ஒரு புதிய கடல்வழிப் பாதையை உருவாக்கும் சீனாவின் முன்மொழிவாகும். இது சீனாவின் கடல்சார் பட்டுப் பாதையின் (Maritime Silk Road) ஒரு பாதையாகும். மற்றொன்று சீனா-ஓசியானியா-தென் பசிபிக் பாதையாகும். இவை இரண்டும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
- பருவநிலை மாற்றத்தால் - ஆர்க்டிக் பனி உருகுவதால் உருவாகும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான "வரலாற்று வாய்ப்பை" பயன்படுத்திக் கொள்வதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் பாரம்பரிய தெற்கு கடல் வழியை விட 35% சதவிகிதம் குறைந்த தூரத்தைக் கொண்டுள்ள ஆர்க்டிக் வழியாக கப்பல் போக்குவரத்து பாதைகளை உருவாக்கி வருகிறது. இது பயண தூரத்தையும், எரிபொருள் செலவையும் குறைக்கும்
- ஆர்க்டிக் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
- மத்திய கிழக்கிலிருந்து வரும் எரிசக்தி விநியோகத்தை குறைத்து, தனது எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது
- கிரீன்லாந்து உட்பட பல ஆர்க்டிக் நாடுகளுடன் சீனா இருதரப்பு கனிமவள மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
- கிரீன்லாந்தில் இராணுவத் தளங்களையும் கூட நிறுவியுள்ளது சீனா
- சீனாவும் டென்மார்க்கும் இணைந்து சினோ -டானிஷ் பசுமை இணைப்புத் திட்டத்தை (Sino-Danish Green joint work programme) வெளியிட்டு கனிம வளங்கள், மீன் வளங்கள், தூய வடிவிலான எரிசக்தி வளங்கள், சுற்றுலாத்துறை உள்ளிட்டவற்றில் பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வருகின்றன.
- ஆர்க்டிக் கடல்வழிப் போக்குவரத்தில் துறைமுகங்களை பயன்படுத்துதல், பனிக்கட்டிகளை உடைக்கும் கப்பல்களை பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ரஷ்யாவும் தனது பங்கிற்கு ஒத்துழைப்பை அளித்து வருகிறது.
இவ்வாறு கிரீன்லாந்து உள்ளிட்ட ஆர்டிக் பகுதிகளில் சீனா ஏற்கெனவே தனது மேலாதிக்கத்தை சத்தமே இல்லாமல் நிறுவி உள்ளது. இதற்கு எதிர்வினையாற்றும் நோக்கில்தான் - தனது மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கில்தான் அப்பகுதியை உள்ளடக்கிய அகண்ட அமெரிக்காத் திட்டத்தை டிரம்ப் ஆட்சி முன் வைத்துள்ளது.
ஆர்டிக் பகுதிகளை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் உலகளாவிய அரிய கனிம வளங்களில் 70% சதவிகிதத்தை சீனா கொண்டுள்ளது. அவ்வகையான கனிமங்களை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தில் 90% சதவிகிதம் ஏகபோகத்தை சீனா பெற்றுள்ளது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை கிராஃபைட், டிஸ்ப்ரோசியம் விநியோகத்தில் 100% சதவிகிதமும், கோபால்ட் விநியோகத்தில் 70% சதவிகிதமும், மெருகேற்றப்பட்ட லித்தியம் மற்றும் மாங்கனீஸ் விநியோகத்தில் 60% சதவிகிதம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்க நாடுகளில் சுரங்கங்களின் உரிமையை வைத்திருக்கும் சீனா, அரிய தனிமங்கள் (Rare Earth Elements) மற்றும் முக்கிய உலோகங்களை உலகெங்கும் உற்பத்தி செய்து வழங்குவதில் தனி ராஜாங்கமே நடத்தி வருகிறது. இதில் அமெரிக்கா சீனாவையே சார்ந்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. மின்சார கார்கள் முதல் இராணுவத் தொழில்நுட்ப தேவைகள் வரையிலான உயர்தர அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு இந்த தாதுக்கள் அத்தியாவசியமானவையாக உள்ளன. இத்துறைகளே இன்று உலக வர்த்தகத்தையும் உலக மேலாதிக்கத்தையும் நிர்ணயிக்கும் முக்கியமானவையாக விளங்குகின்றன. எண்ணெய், எரிவாயுத் துறை மற்றும் இராணுவத் தளவாடத் துறையைத் தாண்டி இத்துறையில் அமெரிக்கா தனது கவனத்தை குவிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், டிரம்பின் குடியரசுக் கட்சி இயல்பாகவே தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத் துறை கார்ப்பரேட்களை முதன்மைப் படுத்துவதால் அதற்கு இத்துறைகளில் ஏகபோகமடைய வேண்டிய வேட்கை எழுந்துள்ளது. எனவே, இதில் அமெரிக்காவின் சீனா சார்பை குறைக்க; சீனாவுக்கு சவாலாக இத்துறையில் மேலாதிக்கம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் சீனா vs அமெரிக்கா
இன்றைய புதிய காலனியக் கட்டத்தில் முதலாளித்துவ நாடுகள் கூட ஏகாதிபத்தியங்களின் செல்வாக்கு மண்டலமாக மாற்றப்பட்டு வருவதை உக்ரைன், தைவான் ஆகிய நாடுகளில் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
தைவான் விசயத்தை பொறுத்தவரை, அது எங்கள் நாட்டின் நண்பன். உக்ரைன் விசயத்தில் ரஷ்யாவுடன் சமரசம் செய்துகொண்டது போல, தைவான் விசயத்தில் சீனாவுடன் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை. தைவானுக்கு பிரச்சினை என்றால் அமெரிக்கா முன் வரிசையில் வந்து நிற்கும் என்கிறார் டிரம்ப். இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் அனைத்துக்கும் செமிகண்டக்டர் சிப்களின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. அத்தைகைய செமிகண்டக்டர் சிப்களின் சர்வதேச ஹப் (குவிமையம்)-ஆக தைவான் விளங்குகிறது. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தைவானின் சிப் உற்பத்தியை ஆக்கிரமித்து ஏகபோகத்தை நிறுவி வருகின்றன. தைவானை வற்புறுத்தி 100 பில்லியன் டாலர் செமிகண்டக்டர் ஒப்பந்தம் உள்ளிட்ட 7 ஒப்பந்தங்களை பெற்றுள்ளது டிரம்ப் அரசு. இதனால் தைவானில் சீனா மறுபங்கீட்டுப் போட்டியில் ஈடுபட முயற்சித்தால் தாங்கள் போருக்குத் தயாராக இருப்பதாக டிரம்ப் -மஸ்க் கும்பல் பேசி வருகின்றன.
தெற்காசிய நேட்டோ என்றழைக்கப்படும் குவாட் கூட்டமைப்பில் பங்கெடுத்துள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் சம அளவில் நிதி பங்களிப்பினை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது அமெரிக்கா. இப்பகுதியிலும் சீனாவை சுற்றி வளைப்பதை மையமாகக் கொண்ட திட்டங்களை இன்னும் கைவிடாமல் அந்த சுமைகளை அப்பிராந்தியத்தில் உள்ள தனது அடிவருடி நாடுகள் மீது திணித்து வருகிறது.
டிரம்பின் அனைத்து அரட்டல்களுக்கும் அடிபணிந்த மோடி அரசு
அமெரிக்காவிற்கு தொழிலாளர்களாகவும், சிறு குறு முதலீட்டாளர்களாகவும் சென்ற இந்தியர்களை அவர்களின் வாழ்வுரிமையை பறித்து அடிமைகளை இழுத்து செல்வது போல, அவர்களின் கை கால்களை விலங்கிட்டு இந்தியாவிற்கு விரட்டியடித்தது. அவர்களுக்கு உணவு, குடிநீர் கூட வழங்காமல் அவசர கடன்களை கூட கழிக்கவிடாமல் 100க்கும் மேற்பட்டோரை கட்டிப்போட்டு விமானத்தில் அனுப்பியது. இதை எவ்வித சூடு சொரணையும் இன்றி மௌனித்து வேடிக்கைப் பார்த்தது மோடி கும்பல். டிரம்ப் இந்திய மக்களை இவ்வளவு இழிவு செய்த பின்னும் டிரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வருகிறது மோடி அரசு. ஆனால் இச்சம்பவத்தை கார்ட்டூனாக வரைந்து தனது கருத்தை வெளிப்படுத்திய விகடன் இணையதளத்தை முடக்கி மீசையை முறுக்கிக் கொண்டது இந்த சூரப்புலி அரசு. அமெரிக்காவின் குடியேறிகள் தொடர்பான திருத்தச் சட்டத்தையும் கருத்துக்களையும் இயற்கையான கூட்டாளியாக ஏற்றுக் கொண்டுள்ளது மோடி கும்பல். அதை இந்தியாவிலும் தற்போது மறுபதிப்பு செய்து வருகிறது - புதிய குடியேற்ற மசோதா 2025 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அமெரிக்கா இனவெறி பாசிசத்தை கட்டியமைக்கிறது என்றால், மோடி கும்பல் இந்தியாவில் இந்துத்துவ பாசிசத்தை கட்டியமைக்கிறது. அமெரிக்காவின் இனவெறி பாசிசமும் இந்தியாவின் இந்துத்துவ பாசிசமும் கூட்டாக செயல்படுகின்றன.
இந்தியாவுடனான ஏற்றுமதி இறக்குமதியில் அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அதற்கு இந்தியாவின் வரிகளே காரணம் எனக் கூறி இந்தியா வரிகளை குறைக்க வேண்டும் இல்லையெனில் கூடுதல் வரிவிதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டியது. இதனால் அலறியடித்த மோடி அரசு தன்னுடைய அமெரிக்க பயணத்துக்கு முன்பாகவே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு வரியை மூன்றில் ஒரு பங்காக குறைத்துவிட்டது. இத்தனைக்கும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 75% சதவிகிதத்திற்கும் அதிகமான பொருட்களுக்கு 5% சதவிகிதத்திற்கும் குறைவான வரியை இந்திய அரசு விதித்து வருகிறது. இன்னும் சில பொருட்கள் வரியே இல்லாமல் இந்திய சந்தையில் கொட்டி குவிக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், இங்கிருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் அமெரிக்கா நலன்களிலிருந்து குறைவான கூலி, இங்கிருக்கும் இயற்கை வளங்களை சுரண்டி அதன் பொருளாதார திட்டங்களில் இருந்தும் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களில் இருந்துமே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுபவை; அவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டியது இந்தியாவின் கட்டாய பணியாகி உள்ளது. அதாவது மேக் இன் இந்தியா ஃபார் அமெரிக்கா. இந்த பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம், வர்த்தகப் பற்றாக்குறைச் சுமைகளை இந்தியா மீது சுமத்தி அமெரிக்க கார்ப்பரேட்கள் கொழுக்க வழிசெய்துள்ளது அமெரிக்கா. ஏற்கெனவே அமேசான், ஒபென் ஏ.ஐ., மெட்டா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சந்தை முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை அமெரிக்கா சந்தைக்கான கதவை இந்தியா அகல திறந்து வைத்திருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியையும் பாதித்து பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரமாக்கும்.
பாஜக கட்சிக்கு தேர்தல் உள்ளிட்ட கருத்துருவாக்க பிரச்சார செலவினங்களுக்காக ஆண்டுக்கு 185 கோடி அளவுக்கு நேரடியாக நிதியை வழங்கி வந்துள்ளது அமெரிக்க அரசு. அதை USAID திட்டத்தின் மூலமே வழங்கி வந்துள்ளது. தற்போது அதை மொத்தமாக நிறுத்தி வைத்துள்ளது டிரம்ப் அரசு. இவ்வாறிருக்கையில், டிரம்பின் அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவுக்கு நன்மைப் பயக்கும் என பேசி வருகிறார் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். ஏனெனில், அமெரிக்காவும் ரஷ்யாவும் சமரச நடவடிக்கைகளில் ஈடுபடுவதானது, அதானி - அம்பானி நலன்களிலிருந்து ரஷ்யாவுடன் எண்ணெய் உள்ளிட்ட வர்த்தக உறவுகளில் ஈடுபடுவது; பங்குச்சந்தை ஊழல் குறித்த ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு, குஜராத் கலவரம் பற்றிய குற்றச்சாட்டுகளில் இருந்து அதானி-மோடி கும்பல் காப்பாற்றப்படுவது போன்ற நன்மைகள் பயக்கும் என்ற நிலையில் இருந்து அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை வரவேற்கிறது மோடி கும்பல். அமெரிக்காவின் முதலீடுகள் எங்களுக்கு வேண்டும் என்று மன்றாடுகிறது மோடி அரசு.
அமெரிக்க நிர்பந்தத்தின் பெயரில் அணுசக்தி இழப்பீடுச் சட்டத்தில் (Nuclear Liability Act) திருத்தம் செய்யும் முடிவை அறிவித்துள்ளது. அமெரிக்க கார்ப்பரேட்கள் இங்கு தனியார் அணு உலைகளை அமைக்க; விபத்து ஏற்பட்டால் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள வழி வகுத்துள்ளது. மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை இந்திய அரசே ஏற்றுக்கொள்வது போன்ற நாசகர ஏற்பாடுகளை செய்துள்ளது மோடி அரசு. இதைத் தொடர்ந்து புதிய புதிய தனியார் அணு உலைகளை நிறுவவும் ஒப்பந்தம் செய்துள்ளது இந்திய அரசு.
ஏற்கெனவே பைடன் ஆட்சியிலேயே அமெரிக்க கார்ப்பரேட் எலான் மஸ்க்கின் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் வகையில் முக்கிய கனிமங்கள் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது மோடி அரசு. மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஆர்.ஓ வும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனமும் இணைந்து விண்வெளி நிலையத்தை (Space Station) நிறுவுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. மெட்டா நிறுவனம் உள்ளிட்ட இந்திய ஊடக கார்ப்பரேட்களுக்கு உகந்த வகையில் ஒளிபரப்பு சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தது. தற்போது மஸ்க்கின் ஏகபோக நிறுவனமான ஸ்டார்லிங்கிடம் இந்திய தொலைத் தொடர்புத்துறையை முழுவதும் ஒப்படைக்கும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சென்ற பைடன் ஆட்சியிலேயே வலியுறுத்தப்பட்டு வந்த அம்சத்தை டிரம்ப் பதவியேற்றவுடன் நிர்ப்பந்தத்தின் கீழ் செய்துள்ளது. மிட்டலின் ஏர்டெல் நிறுவனமும், அம்பானியின் ஜியோ நிறுவனமும் இனி மஸ்க்கின் ஸ்டார்லிங் சேட்டிலைட் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும். இனி, இந்திய பாதுகாப்புத்துறை, ஏஐ, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ், 5ஜி, 6ஜி உள்ளிட்ட அனைத்து அதிநவீன தொழில்நுட்ப சேவைகளும் அமெரிக்க நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் இயங்கும். அதற்கு தேவையான அனைத்து சிப் உற்பத்திகளின் - டேட்டா சென்டர்களின் ஹப்பாக ஏற்கெனவே தமிழ்நாடு மாற்றப்பட்டு வருவது; டெஸ்லா நிறுவனத்தின் ஏஐ மூலம் இயங்கும் மின் வாகன திட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி அளித்துள்ளது போன்றவை திமுக அரசு மோடி அரசுடன் கள்ளக் கூட்டு வைத்து அமெரிக்க சேவையை செய்து வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமெரிக்காவின் அனைத்து ஆணைகளையும் டிரம்பின் பாதந்தாங்கி சிரமேற்று நடத்தி வருகிறது மோடி கும்பல். அந்த நெருக்கடிகள் அனைத்தையும் இந்திய உழைக்கும் மக்கள் மீது மேலும் சுமத்தி நாட்டின் மீதான புதியகாலனிய பிடியை இன்னும் இறுக்குகிறது இந்த அரசு.
தொகுப்பாக
டிரம்ப் முன்வைத்துள்ள "அமெரிக்காவே முதன்மை" என்ற இக்கொள்கை சீனாவை பிராதான எதிரியாக முன்னிறுத்துகிறது; மறுபங்கீட்டுப் போட்டியில் ரஷ்யாவை சீனாவிடமிருந்து பிரித்துக் கையாளும் சூழ்ச்சிகளை கடைபிடிக்க உள்ளது. ரஷ்யாவுடன் சமரசப் போக்கை கடைபிடிக்கிறது; ஐரோப்பிய நாடுகளுடனான முந்தைய பிணைப்பை குறைத்துக் கொண்டுள்ளது அமெரிக்கா. ஐரோப்பா தனி ஒரு முகாமாக தன்னை திடப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது; வரி மற்றும் வர்த்தகப் போரை பிற நாடுகள் தீவிரமாக தொடுக்கிறது; அகண்ட அமெரிக்கா திட்டத்தை முன்வைக்கிறது; தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத் துறை கார்ப்பரேட்களின் நலன்களிலிருந்து DOGE - TECHNO பாசிச ஆட்சியை கட்டியமைக்கிறது. இவ்வாறு உள்நாட்டிலும் வெளியுறவிலும் ஒரு தீவிரமான வலதுசாரி பாசிசக் கொள்கையாக இந்த "அமெரிக்காவே முதன்மை" கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது உலக மயக் கொள்கைகளின் தோல்வியையே காட்டுகிறது. டிரம்பின் இந்த கொள்கையும் நெருக்கடிகளை தீர்க்கப் போவதில்லை; அதை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.
சீனாவை முந்திச் செல்ல காப்புக் கொள்கைகளை தான் மட்டும் கடைபிடித்து தாராளமயக் கொள்கைகளை உலக நாடுகள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கிறது அமெரிக்கா. அமெரிக்கா தனது தகர்ந்துபோன உலக மேலாதிக்க கனவை மீட்டெடுக்க சீனாவுக்கு எதிரான பனிப்போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மூன்று முகாம்களும் அதாவது அமெரிக்கா, ஷாங்காய் மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று முகாம்களும் மறுபங்கீட்டுப் போரில் தீவிரமாக இறங்கியுள்ளன.
எனவே ஒடுக்கப்படும் நாட்டு உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்த ஏகாதிபத்திய கொள்ளை உலகை வேரோடு சாய்க்க வேண்டிய கடமை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னிலைக்கு வந்துள்ளது. உலக முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகளை புதியகாலனிய நாடுகள் மீதும் உழைக்கும் மக்கள் மீதும் சுமத்துவதை எதிர்த்த மக்கள் போராட்டங்களை கட்டியெழுப்ப வேண்டும். இந்த கொள்ளைக் கூட்டத்திற்கு சவக்குழி வெட்ட வேண்டும். அதன் திசை வழியில், இந்தியாவை உலக வர்த்தக கழகம் உள்ளிட்ட புதிய காலனிய நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து வெளியேறவும், அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கவும், ஒடுக்கப்பட்ட நாடுகள் ஓன்று சேர்ந்து போராடவும் வலியுறுத்தி முழங்க வேண்டும்.
- சமரன்
(ஏப்ரல் - மே 2025 இதழில்)