நெருக்கடியின் தறுவாயில் நேபாளம்
இலங்கை பாகிஸ்தானை போன்று நேபாளமும் அமெரிக்க-சீன ஏகாதிபத்தியங்களின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான யுத்த வெறிக்கும், நிதி ஆதிக்க கும்பல்களின் புதிய காலனி ஆதிக்கத்திற்கும் பலியிடப்பட்டு வருகிறது என்பது கண்கூடு
படிக்க: இலங்கையை தொடர்ந்து நெருக்கடியின் தறுவாயில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம்
இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இக்கட்டுரையில் நேபாளத்தின் நெருக்கடி குறித்து காணலாம்.
அமெரிக்க - சீன ஏகாதிபத்தியங்களின் நிதி மூலதன ஆதிக்கத்தால் நேபாளத்தின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டு வந்த நிலையில், கோவிட் பொது முடக்கத்தால் அந்நாட்டின் நெருக்கடி மேலும் ஆழப்பட்டது. உக்ரைன் போருக்குப் பிறகு உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை பன்மடங்கு உயர்ந்ததன் விளைவாக பெரும் பொருளாதார நெருக்கடியில் நேபாளம் சிக்கியுள்ளது. இலங்கையை போன்றே நேபாளமும் தனது எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவையை இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்து வருகிறது. மேலும் நேபாளத்தின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்தைப் போன்றே சுற்றுலாவைச் சார்ந்தும், வெளிநாடுகளிலிருந்து நேபாளிகள் அனுப்பும் பணத்தை சார்ந்துமே (Remittances) பெருமளவு இயங்குகிறது. அந்நியக் கடனை கட்டமுடியாத நிலையில் உள்ளதாக இலங்கை அறிவித்ததைப் போல் நேபாளம் இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் நேபாள நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஷ்டிர வங்கி (Nepal Rastra Bank) "நாட்டின் பொருளாதார நெருக்கடி இதே நிலையில் தொடருமானால் அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும்" என்று அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம்(2022) 2-வது வாரத்தில், காட்மண்டுவில் (Kathmandu) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர்களான யுப ராஜ் கதிவடா, சுரேந்திர பாண்டே மற்றும் பிரசாத் பௌடெல் ஆகிய மூவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் இலங்கையின் அழிவுப்பாதையில் நேபாளமும் செல்வது தவிக்க முடியாதது" என்று கூறினர். மிகமுக்கியமான பொருளாதார அளவீடுகளான பணவீக்கம், அந்நியச் செலாவணி கையிருப்பு, வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் வரவு - செலவு பற்றாக்குறை போன்றவை மிகவும் கவலை அளிக்கும் நிலையில் உள்ளது" என்று பௌடெல் (Paudel) கூறினார். நாடு அபாயத்தில் உள்ளது என்பதை அரசு இன்னும் உணரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போது நிதி அமைச்சராக உள்ள ஜனார்தன் சர்மா முன்னாள் நிதி அமைச்சர்களின் குற்றச்சாட்டை மறுக்கிறார். இலங்கையின் நிலைமையைப் போன்று நேபாளத்தில் இல்லை என்றும், இந்த ஒப்பீடே தவறு என்றும் கூறி பொருளாதார நெருக்கடியை மூடி மறைக்கப் பார்க்கிறார். இதைத்தான் இலங்கை ஆளும் வர்க்க கட்சிகளும் துவக்கத்தில் சொல்லி வந்தன. தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் கடனை ஒப்பிடும்போது நேபாளத்தின் கடன் தொகை குறைவுதான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் யதார்த்தம் அவ்வாறு இல்லை. பிப்ரவரி இறுதி வாக்கிலேயே நேபாளத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பு 9.75 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வற்றிவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கி இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அயல்நாடு வாழ் நேபாளிகளின் ரெமிட்டன்ஸ் மூலம் கிடைக்கும் வருவாய் 6 சதமாக குறைந்துவிட்டது. நேபாளத்தின் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 40.1% சதமாக இந்தாண்டு உயர்ந்துவிட்டது என்றும்; 2016 மற்றும் 2019 ஆண்டிற்கிடையில் இது 25.1% சதமாக இருந்தது என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஏப்ரல் மாதம் அறிவித்தது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியதே கடன் அதிகரித்ததற்கான காரணம் என நேபாள அரசு (வழக்கம் போல் எல்லா அரசுகளும் கூறியது போன்று) கூறி பழியை கோவிட் மீது போடுகிறது. கடந்த ஆண்டு 8% இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit) இந்த நிதியாண்டில் 9.7% உயரும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் மானியங்கள் மற்றும் கடன்கள் வழங்குவது உள்நாட்டில் பெருமளவு குறைந்துள்ளது.
நேபாள இராஷ்ட்ரா வங்கியின் கவர்னராக இருந்த மஹா பிரசாத் அதிகாரி கடந்த ஏப்ரல் மாதத்தில் (2022) முக்கியமான தகவல்களை கசியவிட்டதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். துணை கவர்னராக இருந்தவர் கவர்னர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை வாங்குவதை கட்டுப்படுத்த நேபாள இராஷ்ட்ரா வங்கி (NRB) வட்டி விகிதத்தை உயர்த்தியது மட்டுமின்றி கார், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் நேபாள அரசு தடை விதித்தது.
மஹா பிரசாத் அதிகாரியை பதவிநீக்கம் செய்த நேபாள அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அவர் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மாவால் நியமனம் செய்யப்பட்டவர் ஆவார். தற்போதைய கூட்டணி ஆட்சியானது நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவரான ஷேர் பகதூர் தியூபா (Sher Bahadur Deuba) வால் தலைமை தாங்கப்பட்டு வருகிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (CPN-UML) மூத்த தலைவரான சுரேந்திர பாண்டே (முன்னாள் நிதி அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்) அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டது தவறான முடிவு எனவும், அவர் நன்றாகவே பணிபுரிந்து வந்தார் எனவும் கூறியுள்ளார். நேபாளத்தின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான பிஸ்வாம்பெர் பியகுரெல் (Bisswamber Pyakurel) "நாட்டின் பொருளாதார நிலைப்புத்தன்மை சரிவுற்றிருக்கும் இந்த நிலைமையில் கவர்னரை பதவி நீக்கம் செய்தது தவறான நடவடிக்கை" என்று கூறியுள்ளார். அமெரிக்க, சீன ஏகாதிபத்திய நாடுகளின் அந்நிய நிதி மூலதன ஆதிக்கமே நெருக்கடிக்கு காரணம் என்பதை அனைத்து பாராளுமன்ற கட்சிகளும் மூடிமறைத்து இவ்வாறு பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
முந்தைய பிரதமராக பதவி வகித்த கே.பி.சர்மா ஒலியின் ஆட்சி எதேச்சதிகார ஆட்சியாக உள்ளது என்று கூறி நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை (CPN-UML) சார்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் கலகம் செய்து ஆதரவை விலக்கிக் கொண்டதையடுத்து அவரது ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. ஆனாலும் அவர் பதவி விலக மறுத்தார். உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை பதவி விலக வைத்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் (2021) தியூபா புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆட்சி மாற்றம் பாகிஸ்தானில் நடந்த ஆட்சி மாற்றத்துடன் பல அம்சங்களில் ஒத்துப்போகிறது. நேபாள அரசியலில் பெரும்பாலான பிரதமர்கள் உட்கட்சி கலகங்களால் பதவியை இழந்துள்ளனர். கே.பி.சர்மா, பிரசந்தா மற்றும் மாதவ் குமார் நேபாள் போன்ற தனது கட்சியினருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாக தந்த வாக்குறுதியை மீறினார். ஆகவேதான் பிரசந்தாவும், மாதவ் குமாரும் சேர்ந்து உட்கட்சி கலகத்தைத் துவங்கி அவரை பதவியிலிருந்து நீக்கினர். தியூபாவின் கூட்டணி ஆட்சியிலும் கூட அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. அதில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான புஷ்ப கமல் தஹல் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) மற்றும் ஜனதா சமாஜ்பாடி கட்சிகளில் கோஷ்டி வாதம் மோசமான நிலையில் உள்ளது. அவரது அரசும் பாராளுமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் கவிழக்கூடிய அளவில்தான் நிலையற்ற பெரும்பான்மையை மட்டுமே பெற்றுள்ளது. பொருளாதார நெருக்கடி தொடரும் பட்சத்தில் மீண்டும் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. இந்த ஆட்சி மாற்றங்களின் பின்புலத்தில் அமெரிக்க - சீன ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் சூதாட்டங்கள் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை. குறிப்பாக தியூபா ஆட்சிக்கு வந்ததன் பின்னணியில் அமெரிக்காவின் சதி உள்ளது. மாவோயிஸ்ட்டுகள், இடதுசாரிகள் போர்வையில் உள்ள ஆளும் வர்க்க கட்சிகள் சீன ஆதரவு நிலைபாட்டில் உள்ளன.
அமெரிக்காவின் தலையீடு
இவ்வாண்டு பிப்ரவரி மாதம், தியூபா அரசு அமெரிக்காவின் மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேசன் (Millenium Challenge Corporation - எம்சிசி) எனப்படும் கார்ப்பரேட் நிதி குழுமத்திடமிருந்து நிதியுதவி பெறுவதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து வெற்றி பெற்றுள்ளார். 2017ம் ஆண்டு அமெரிக்காவிடமிருந்து 500 மில்லியன் டாலர் உதவித்தொகையை கடனாகப் பெறுவதற்கு நேபாள அரசு ஒத்துக்கொண்டதும் குறிப்படத்தக்கது. இது நேபாள நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக பெறப்படுவதாக கூறப்பட்டது.
அமெரிக்கா சீன எதிர்ப்பு நிலைபாட்டிலிருந்து தெற்காசியாவில் குவாட் கூட்டமைப்பு - இந்தோ - பசிபிக் யுத்தத் தந்திரத்தை (IPS) தீவிரமாக செயல்படுத்தத் துவங்கியதிலிருந்தே நேபாள மாவோயிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் சீன ஆதரவு நிலைபாட்டிலிருந்து அமெரிக்காவின் தலையீட்டை எதிர்க்கத் துவங்கினர். குறிப்பாக டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் இந்தப் போக்கு ஆளும் வர்க்க கட்சிகளிடையே முரண்பாட்டை தீவிரப்படுத்தியது. டேவிட் ஜே,ரான்ஸ் (David J.Ranz) (தெற்காசியாவிற்கான முன்னாள் துணை செயலர்) என்ற அமெரிக்க அதிகாரியும், முன்னாள் அரசு துணை செயலராக இருந்த அலைஸ் வெல்ஸ் (Alice wells) என்ற அமெரிக்க அதிகாரியும் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் நேபாளத்தை அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் யுத்தத் தந்திரத்தில் இணைக்க முயற்சி மேற்கொண்டனர். அதற்கு நேபாளத்தின் திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் 'மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேசன்' குழுமத்தின் நிதி உதவியையும் ஆட்சேபித்தன. இந்த நிதி உதவியும் அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் யுத்தத் தந்திரத்திற்கு சேவை செய்யவே எனவும் கூறின. அந்த குழுமத்தின் தலைவர் அமெரிக்காவின் அரசு செயலாளராக உள்ளார் என்றும், துணைத் தலைவர் கருவூலச் செயலாளராக உள்ளார் என்றும் கூறி ஆட்சேபித்தன. இந்த முரண்பாடு தான் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலும் (CPN-UML) எதிரொலித்தது. கே.பி.சர்மா, ஓலி, தியூபாவுடன் கைகோர்த்துக்கொண்டு அமெரிக்காவின் நிதி உதவியை ஆதரித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அக்கட்சியில் உட்கட்சி போராட்டம் வெடித்தது. பிரசந்தாவும் மாதவ் குமாரும் சர்மாவிற்கு எதிராக கலகம் செய்து அவரை பதவியிலிருந்து இறக்கினர். முன்னதாக பாராளுமன்றத்தில் எம்சிசி யின் நிதி உதவியை அனுமதிப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, காட்மண்டுவில் அதற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்தப் போராட்டம் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு பாராளுமன்றத்திற்குள் நுழையவும் கூட முயற்சித்தது. இப் போராட்டமும் ஆளும் வர்க்க கட்சிகளிடையே முரண்பாடு தீவிரம் பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நேபாளத்திற்குள் அமெரிக்க மூலதனம் கூடாது என்று பேசிய திருத்தல்வாத கலைப்புவாத கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக தெற்காசிய மேலாதிக்கத்தின் ஒரு பகுதியாக நேபாளத்தில் சீனா செலுத்தி வரும் அரசியல் பொருளாதார ராணுவ ஆதிக்கம் பற்றி வாய் திறக்க தயார் இல்லை. இதற்கு எதிர் நிலையில் காங்கிரஸ் கட்சி (நேபாளம்) அமெரிக்காவின் எடுபிடியாக செயல்பட்டு வருகிறது. வாஷிங்டனுக்கான நேபாள தூதுவர் சுரேஷ் சாலீஸ் (Suresh Chalise) அமெரிக்காவின் நம்பிக்கையை நேபாளம் இழக்க விரும்பவில்லை எனவும் அமெரிக்காவின் ஆதரவு நேபாளத்திற்கு தேவை எனவும் இந்திய-சீன முரண்பாட்டில் நேபாளம் சிக்கி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
எம்சிசி நிதி மூலதனத்தை அனுமதிப்பது தொடர்பான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பெரும்பான்மையை பெறுவதற்கு தியூபா தனது கூட்டணி கட்சித் தலைவர்களை தனித்தனியே சந்தித்து டாலர் ஆசை காட்டி சம்மதம் பெற்றார். எலும்புத் துண்டுகளைப் பெற்றுக் கொண்டு ஐந்து கூட்டணிக் கட்சிகளில் நான்கு கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். முக்கிய எதிர்க்கட்சியான (CPN-UML) கட்சி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் புறக்கணித்தது. ஜோ பைடன், தீர்மானம் விரைவாக நிறைவேற்றப்படவில்லை எனில் எம்சிசி திட்டத்தை ரத்து செய்து விடுவதாக கூறி ஏற்கனவே மிரட்டி இருந்தார். தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் அரசு துணைச் செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) "நேபாள நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிப்ரவரி 28க்கு முன்பு எம்சிசி திட்டத்தை அனுமதிப்பதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்காவிடில் அமெரிக்கா - நேபாளத்துடனான உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்" என வெளிப்படையாகவே மிரட்டினார். நேபாளம் அமெரிக்கா இடையிலான அரசியல் பொருளாதார உறவுகள் பின்னடையும் பட்சத்தில் நாட்டின் நெருக்கடி தீவிரம் பெறும் என்று அச்சம் ஊட்டியும் லஞ்சம் கொடுத்தும் தியூபா அரசு தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
டொனால்ட் லூ பிரதமர், முன்னாள் பிரதமர் சர்மா ஓலி, மற்றும் பிரசந்தா ஆகியோரிடம் தனித்தனியே தொலைப்பேசியில் அழைத்து மேற்கூறிய அமெரிக்க நிலைப்பாட்டை எச்சரிக்கை கலந்த மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். எம்சிசி திட்டம் மீதான தீர்மானத்தை ஆதரிக்காவிடில் நேபாளம் அமெரிக்காவிடமிருந்து பெற்று வரும் நிதி நிறுவன உதவிகள் மற்றும் தனியார் முதலீடுகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் இழக்க நேரிடும் என்றும் ஜோ பைடன் சார்பாக பேசி உள்ளார். மேலும் எம்சிசி திட்டத்தை முடக்கும் செயலில் சீனா இறங்கியுள்ளதை சுட்டிக்காட்டியும் நேபாள தலைவர்களிடம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இதன் பிறகு சீனாவின் அயலுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நேபாளத்தில் அமெரிக்காவின் தலையீடு என்பது மேலாதிக்க நோக்கம் கொண்டது என்றும், தனது சுயநலம் மிக்க மேலாதிக்க நோக்கத்திற்காக நேபாளத்தின் இறையாண்மையையும், நலன்களையும் பலி கொடுக்க பார்க்கிறது என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவைப் போல் சீனா அரசியல் நிபந்தனைகள் ஏதுமின்றியே நேபாளத்திற்கு உதவி செய்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார். ஏகாதிபத்திய சீனாவிற்கு நேபாளத்தின் இறையாண்மை மீதுதான் எவ்வளவு அக்கறை? தனது உலக மேலாதிக்க திட்டத்திற்கான "ஒரு இணைப்பு ஒரு சாலை" திட்டத்தில் நேபாளத்தையும் சீனா இணைத்துள்ளது நாம் அறிந்ததே.
நேபாளம் - இந்திய உறவுகள்:
தியூபா ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவுடன் நேபாளத்தின் உறவுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியுள்ளது. நேபாள காங்கிரஸ் கட்சி பாரம்பரியமாக இந்திய அரசியல் தலைமையுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்துள்ளது. சீன ஆதரவு சர்மா ஒலி ஆட்சியின் போது இந்திய நேபாள உறவுகள் சுமுகமாக இல்லை. இந்தியா - நேபாளத்திற்கு இடையில் எல்லை பிரச்சனைகள் முற்றின. போலி சுதந்திரத்திலிருந்து இந்திய அரசியல் சட்டத்தின்படி தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளாக காலாபாணி (Kalapani), லிம்பியாதுரா (Limpiyadhra), லிப்புலேக் (Lipulakh) போன்ற பகுதிகளை இந்திய அரசு கட்டுப்படுத்தி வருகிறது. கே.பி சர்மா இப்பகுதிகளை நேபாளத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் இணைக்கும் படியான சட்டத்தினை கொண்டு வந்தார். பிறகு ஷர்மா அமெரிக்காவின் எம்சிசி திட்டத்தை ஆதரித்ததும், பிரசந்தா மற்றும் மாதவ்குமார் இருவரும் உட்கட்சி பிரச்சனையை கிளப்பி அவரை பதவி நீக்கம் செய்தனர் எனவும் முன்பே பார்த்தோம்.
தியூபா பிரதமர் ஆனதும் இந்தியாவிற்கு தான் முதலில் விஜயம் செய்தார். வரலாற்று ரீதியாகவும் நேபாளத்தின் பிரதமர்கள் பதவியேற்றதும் முதலில் விஜயம் செய்வதும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் முடக்கம் காரணமாக தியூபா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் இந்தியாவிற்கு வருகை தந்தார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து நான்கு ஆண்டுகளில் அவரது முதல் வருகையும் இதுவே. இந்தியாவுடனான எல்லை பிரச்சனைகள் குறித்து நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் தியூபா. ஷர்மா ஆட்சியின் போது நேபாளம் இந்தியாவிற்கு இடையிலான பிரச்சனைகள் பற்றி ஆராய எட்டு பேர் அடங்கிய குழு (EPG – Eminent Persons Group) ஒன்று 2016 இல் உருவாக்கப்பட்டது. இக்குழுவில் நான்கு பேர் நேபாளத்திலிருந்தும் 4 பேர் இந்தியாவிலிருந்தும் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு தனது அறிக்கையை 2018ல் சமர்ப்பித்தது. இதே அறிக்கையை இந்திய அரசு ஏற்கவில்லை.
நீண்ட காலமாக நேபாள அரசுகள் இந்தியாவுடனான 1950 அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி வருகின்றன. ஆனால் தற்போதுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த ஒப்பந்தம் சமனற்ற ஒப்பந்தம் என்று கூறி வருகின்றன. மோடியுடனான சந்திப்பின்போது இது பற்றி தியூபா எதுவும் பேசவில்லை. இதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தியூபா அரசு இந்தியாவின் பக்கம் சாய்ந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளன.
இந்தியா வந்திருந்தபோது பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த முதல் பிரதமர் என்று அவப்பெயரையும் தியூபா பெற்றுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு செல்லவில்லை என்பது குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. நேபாள மக்களின் புனித ஸ்தலமாக விளங்கும் வாரணாசிக்கு (உ.பி) சென்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தையம் தியூபா சந்தித்தார். வாரணாசி மோடியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். நேபாளத்தில் பிற்போக்கான இந்து மதவெறி பாசிசத்தை தியூபா அரசு கட்டியமைத்து வருவதுடன் இந்நிகழ்வு போக்குகளை இணைத்து புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நேபாள நாட்டை இந்து நாடாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் இந்துராஷ்டிர அகண்ட பாரதத்தின் செயல் திட்டங்களில் ஒன்று என்பதும் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கையில் நெருக்கடிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்த பிறகு தியூபா அரசு சீனாவின் கடன் திட்டங்களை (BRI) மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளதாகவும் சீனாவின் நிதி உதவி தேவை இல்லை எனவும் அறிவித்தது. இலங்கை பாகிஸ்தானை போன்று நேபாளமும் அமெரிக்க-சீன ஏகாதிபத்தியங்களின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான யுத்த வெறிக்கும், நிதி ஆதிக்க கும்பல்களின் புதிய காலனி ஆதிக்கத்திற்கும் பலியிடப்பட்டு வருகிறது என்பது கண்கூடு.
சமரன்
(செப்டம்பர் – அக்டோபர் 2022 மாத இதழிலிருந்து)