சுலைமானி படுகொலை: அமெரிக்காவின் போர் வெறியும், கூர்மையடையும் ஏகாதிபத்திய முரண்பாடுகளும்

சமரன்

சுலைமானி படுகொலை: அமெரிக்காவின் போர் வெறியும், கூர்மையடையும் ஏகாதிபத்திய முரண்பாடுகளும்

கடந்த மாதம் ஜனவரி 3ஆம் தேதி ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஈரானின் இசுலாமிய பாதுகாப்பு புரட்சிப் படையின் (IRGC - Islamic Revolutionary Guard Corps) தலைவர் காசோம் சுலைமானி  (Qasam Suloeimani) மற்றும் பாபுலர் மொபிலிசேஷன் குரூப்பின் (PMG - Popular Mobilization Group) ஒரு பகுதியான கடாய்ப் ஹிஜிபுல்லாஹ் அமைப்பின் (Kataib Hijbolloh) நிறுவனரும், ஈராக்கின் முக்கிய படைத் தளபதியுமான அல்முஹந்திஸ் (Al.Muhandis) இருவரும் போர் வெறி பிடித்த இனவெறி பாசிஸ்ட் டிரம்ப் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணான அமெரிக்க ஏகாதிபத்தியம் நிகழ்த்திய இந்த படுகொலைகள் மிகவும் வன்மையான கண்டனங்களுக்கு உரியதாகும்.

இதற்குப் பதிலடியாக ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மூளையில்  படுகாயம் அடைந்த 52 அமெரிக்க இராணுவ வீரர்களும் மரணப் படுக்கையில் உள்ளனர். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிகாவின் இராணுவ தளங்கள் மீது நடத்தப்படும் முதல் நேரடித் தாக்குதல் ஆகும்.இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் ஈரானில் 52 புராதன சமயச் சின்னங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். ஈரானும் "290 எண்ணிக்கையை (முன்பு ஈரானின் பயணிகள் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதால் இறந்து போன ஈரானியர்களின் எண்ணிக்கை) மறந்துவிட வேண்டாம்" என எச்சரித்துள்ளது. இந்த நிகழ்வுகள் இப்பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

இப்படுகொலைகளை ஈரான் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகவே ஈரான், ஈராக் நாடுகளும் சர்வதேசச் சமூகமும் பார்க்கிறது. ஆனால் இப்படுகொலைகளை நேரடியாக இசுரேலும், மறைமுகமாக நேட்டோ (NATO) முகாமும் ஆதரித்துள்ளன. இரசியா, சீனா, துருக்கி போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் உத்தரவின் பேரில் மோடி கும்பல் வாய்மூடிக் கிடக்கிறது ; படுகொலைகள் குறித்து கண்டனம் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரிக்கின்றது. ஐ.நா.வோ கண்களை மூடிக்கொண்டது.

இப்படுகொலைகள் குறித்து ஈரானின் உயர்மட்டத் தலைவர் காமேனிய் (Khamenei) கூறுவதாவது: "சுலைமானியை களத்தில் சந்திக்க முடியாததால் அவரை கோழைத் தனமாக அமெரிக்கா கொன்றுள்ளது" என்று கூறியுள்ளார்; மேலும் "ஈரான் தக்க பதிலடி தரும்" என்றும் கூறியுள்ளார். சுலைமானி கொல்லப்பட்ட இரண்டு நாட்களிலேயே ஈராக்கில் அமைந்துள்ள இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அவர் "அமெரிக்கா ஒரு "உலக வல்லரசு" என்ற பிம்பத்திற்கு ஈரான் தந்துள்ள மிகப்பெரிய பதிலடி இது" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் "சுலைமானியின் கடந்த கால தீவிரவாத நடவடிக்கைகளுக்காகவே தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்" என்று அப்பட்டமாகப் போர் வெறியைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

சுலைமானி மற்றும் அல்முஹந்திஸ் இருவரின் இறுதி ஊர்வலத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர். ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என ஈராக் மக்கள் முழங்கினர். ஈரான் மக்களின் முழக்கமும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே இருந்தது. ஊர்வலத்தில் அமெரிக்க எதிர்ப்பு முழக்கங்கள் மட்டுமின்றி அந்நாடுகளில் 30 ஆண்டுகளாக தலைவிரித்தாடும் வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை எதிர்த்த முழக்கங்களும் இடம் பெற்றிருந்தன. அந்நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்து நெருக்கடியைத் தீவிரப்படுத்தியதே அமெரிக்கா தான். அவ்வாறான ஒரு நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு டிரம்ப் "மக்கள் அந்த நாடுகளின் சிக்கன நடவடிக்கைகளால் தான் வீதியில் வந்து போராடுகின்றனர்" என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். பேரழிவு தரக்கூடிய பொருளாதாரத் தடையை ஈரான் மீது  விதித்து விட்டு தற்போது அந்நாட்டு மக்களுக்காக கவலைப்படுவது போன்று நாடகமாடுகிறது 'பிணந்திண்ணி' டிரம்ப் கும்பல்.

இது போன்ற முதலாளித்துவ நீதி பரிபாலணைகளுக்கு அப்பாற்பட்ட-சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை அரங்கேற்றுவது அமெரிக்காவிற்கு புதியது ஒன்றுமல்ல; அதற்கு நீண்ட நெடியதொரு வரலாறு உண்டு. எனினும் இதை சட்ட பூர்வமாக்கியது ஒபாமாவே ஆகும். முந்தய ஒபாமா ஆட்சியில்தான் இதற்கான அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையிலேயே தற்போது "அதிபரின் உத்தரவின் பேரில்" (Ordered by the president) இருவரும் சட்டரீதியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். "இது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானப் படுகொலை என்று ஐ.நா விற்கான சட்ட விரோதப் படுகொலைகளுக்கான சிறப்பு நல்லுறவு அதிகாரியான அக்னஸ் காலாமார்ட் (Agnes Callamard) கூறியுள்ளார்.

சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்ன?

1)         சிரியாவில் அமெரிக்க ஆதரவு ஜிஹாதிக்கள் (Jihadish Forces) மற்றும் ஐ.எஸ் (I.S.) தீவிரவாத அமைப்புகளையும் தோற்கடித்ததில் சுலைமானி முக்கிய பங்கு வகித்தார். மேலும் சிரியாவில் அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு தடையாக இருந்தார்.

2)         லெபனானில் (2006இல்) ஹிஜ்புல்லாஹ் இராணுவப் படைக்கு பயிற்சி அளித்து, லெபனான் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்பு முயற்சியை (இசுரேல் அமெரிக்காவின் எடுபிடியாக விளங்குகிறது) தடுத்தார்.

3)         பாலஸ்தீனம் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு எதிராக போராடுவதற்கு ஹமாஸ் (Hamas) அமைப்பிற்கு உதவி செய்தார்.

4)         ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் (IS – Islamic State) அமைப்பை வீழ்த்துவதற்கு அந்நாட்டு இராணுவத்திற்குப் பயிற்சி அளித்தார்.

5)         ஈராக்கின் கடாய்ப் ஹிஜ்புல்லாஹ் துணை இராணுவப் படைக்கு பயிற்சி அளித்தார்; அங்கு ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராகப் போராட அந்நாட்டிற்கு உதவி செய்தார்.

6)         ஈராக்-ஈரான் நாடுகளில் அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கு தடையாக இருந்தார்.

7)         மிக முக்கியமாக, அமெரிக்கா-நேட்டோ முகாமிற்கு எதிராக சிரியா-ஈரான்-ஈராக் -லெபனான் கூட்டணியை இரசிய-சீன ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன் உருவாக்கினார்.

மேற்கூறியவை சுலைமானி படுகொலைக்கு நீண்டகால காரணங்களாக விளங்குகின்றன, அது மட்டுமின்றி இவை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரசிய-சீன மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் வகையில் ஒரு துணை மேலாதிக்க சக்தியாக ஈரான் வளர்ந்துள்ளதையும் குறிக்கின்றன. 

ஈராக்கில் நடந்த பின்வரும் நிகழ்வுகள் சுலைமானி படுகொலைக்கு உடனடி காரணங்களாக விளங்குகின்றன.

படுகொலைக்கு முன்பு, டிசம்பர் இறுதியில் அமெரிக்க இராணுவம் ஈராக்கின் கடாய்ப் ஹிஜ்புல்லாஹ் துணை இராணுவப் படை மீது தாக்குதல் நடத்தியது. அதில் மூத்த கமாண்டர்கள், படை வீரர்கள் உள்ளிட்டு 25 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவரை கொன்றுவிட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து, ஈராக்கின் 3 இராணுவத் தளங்கள் மற்றும் ஈராக்- சிரியா எல்லையிலுள்ள அதன் 2 இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈராக்-சிரியா எல்லை வழியாக லெபனானுக்கு ஈரான் ஆயுதங்கள் எடுத்துச் செல்வதை தடுப்பதும் அமெரிக்காவின் மற்றுமொரு நோக்கமாக இருந்தது. கூடுதலாக இசுரேல் இராணுவமும் அமெரிக்காவின் உதவியுடன் இந்த இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஈராக்கிற்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறைந்து முரண்பாடுகள் கூர்மையடையத் துவங்கின.

25 ஈராக்கியர்களின் படுகொலைக்கு அமெரிக்காவிற்கு தக்க பாடம் புகட்டுவோம் என அல் முஹந்திஸ் அறிவித்தார். இதன் பிறகு அமெரிக்கத் துருப்புகளும், இராணுவத் தளங்களும் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத் துவங்கியது. ஈராக் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் "அமெரிக்கா வெளியேற வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈராக் பாராளுமன்றத்தில் அமெரிக்க ஆதரவு உறுப்பினர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். முன்னதாக ஐ.எஸ்., அல்கய்தா போன்ற அமைப்புகளை வீழ்த்த அமெரிக்காவின் உதவியை வேண்டி ஈராக் மற்றும் ஒபாமா அரசுக்கு இடையிலான 2014 ஒப்பந்தமும் பாராளுமன்றத்தில் இரத்து செய்யப்பட்டது.

ஈராக்கில் மக்கள் போராட்டங்கள் வெடித்தன; ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மக்கள் சிறைப்பிடித்தனர். தூதரகத்தின் பிற கட்டிடங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இதற்கு ஈரான்தான் காரணம் எனவும், ஈரான் இதற்கென மிகப்பெரும் விலை தரவேண்டியிருக்கும் எனவும் டிரம்ப் அறிவித்தார். இந்த நிகழ்வின் மூளையாக சுலைமானி செயல்பட்டதாக டிரம்ப் கும்பல் முடிவு செய்து அவரையும், அவரது உதவியில் இயங்கிய அல் முஹந்திஸ்சையும் படுகொலை செய்தது. அல் முஹந்திசையும் கொலை செய்தால் சுலைமானியால்தான் அவரும் கொல்லப்பட்டார் என நினைத்து  ஈராக்கியர்கள் ஈரானுக்கு எதிராக திரும்புவர் என எதிர்பார்த்த டிரம்பின் கனவு பொய்த்துப் போனது. ஆனால் எதார்த்தத்தில் ஈரான்-ஈராக் இடையிலான பழுதுபட்டுப்போன உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஈரான் எதிர்ப்புக் கோஷங்கள் கூட இப்படுகொலைகளுக்குப் பிறகு குறைந்து அமெரிக்க எதிர்ப்புக் கோஷங்களாக மாறியுள்ளன.

ஈராக்குடனான சவுதி அரேபியாவின் இணக்கமற்ற போக்கைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈராக் பிரதமரின் அழைப்பின் பேரிலேயே சுலைமானி ஈராக்கிற்கு பயணம் செய்தார். அதுவும் வெளிப்படையாக பாஸ்போர்ட் மூலம் பாக்தாத் விமான நிலையத்திற்கு பயணம் செய்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்ததாகவும் ஈராக் பிரதமர் அடில் அப்துல் மஹதி பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். டிரம்ப் சொன்னதை நம்பியே சுலைமானி ஈராக்கிற்கு செல்ல அவரை வரவேற்க அல் முஹந்திஸ் சென்றுள்ளார். அதாவது இந்த சந்திப்பு  அமெரிக்காவிற்கு தெரிந்தே நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் மரண அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளபோதும் நிகழ்ந்த இந்த சந்திப்பானது ஏகாதிபத்தியம் பற்றிய அவர்களது குறை மதிப்பீட்டையும் தம்மைப் பற்றிய மிகை மதிப்பீட்டையுமே எடுத்துக்காட்டுகிறது. அது மட்டுமின்றி ஈராக்கின் மோசூல் (Mosul) நகரை ஐ.எஸ். அமைப்பிடமிருந்து விடுவிக்க ஈராக்கும் ஈரானும் முன்பு அமெரிக்காவின் உதவியை நாடியது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்விரு படுகொலைகள் பற்றி யுத்த எதிர்ப்பு செயற்பாட்டாளரான சோனாலி கோல்ஹட்கர் (Sonali Kolhatkar) கூறுவதாவது:

"அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கத்தை மீட்க விரும்பியும், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்குமே டிரம்ப் சுலைமானியை படுகொலை செய்துள்ளார்" என்கிறார்.

அமெரிக்காவின் அரசுச் செயலாளர் (state secretary) மைக் போம்பியோவின் (mike pompeo) கூற்று வருமாறு:

"சீனா, இரசியா போன்ற அமெரிக்காவின் எதிராளிகளை பலவீனப்படுத்தும் போர்த்தந்திரத்தின் ஓர் அம்சமாக சுலைமானி படுகொலை செய்யப்பட்டார்" என்கிறார்.

மேற்கூறிய இரண்டு கூற்றுகள் சுலைமானியின் படுகொலைக்கான குறிப்பான அரசியல்-பொருளாதார காரணங்களை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகின்றன. அதாவது சுலைமானி மற்றும் அல் முஹந்திஸ் இருவரின் படுகொலையானது, மத்திய கிழக்கில் அமெரிக்க-நேட்டோ முகாமின் மேலாதிக்கம் பலவீனமடைந்து வருவதையும், இரசிய-சீன முகாம் பலமடைந்து வருவதையும், இவ்விரு முகாம்களுக்கு இடையிலான பனிப்போரையும்  குறிக்கின்றன. அது மட்டுமின்றி சுலைமானி படுகொலை செய்யப்பட்டதற்காகக் கூறப்பட்டுள்ள காரணங்கள் இப்பிராந்தியத்தில் ஈரானின் துணை மேலாதிக்கம் வளர்ந்து வருவதையும் குறிக்கின்றன.

மத்திய கிழக்கில் பலவீனமடையும் அமெரிக்க-நேட்டோ மேலாதிக்கம்; பலமடையும் சீன-இரசிய மேலாதிக்கம்

"அரபு நேட்டோ (Arab NATO) என்று அமெரிக்காவால் அழைக்கப்படும் "வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்" (GCC -Gulf Co-operation Council) பிளவுண்டு போனதுதான் மத்திய கிழக்கில் அமெரிக்க - நேட்டோ ஆதிக்கம் வீழ்ந்து போனதற்கு முக்கிய காரணமாகும். இந்தக் கவுன்சிலில் குவைத், ஏமன், கத்தார், எகிப்து, சவுதி அரேபியா, அரபு எமிரகம், பஹ்ரெய்ன், ஜோர்டன் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தன. தற்போது இவற்றில் சவுதி அரேபியா, அரபு எமிரகம், பஹ்ரெய்ன், ஜோர்டன் போன்ற நாடுகள் அமெரிக்க முகாமிற்குள் நீடிக்கின்றன; ஆனால் கத்தார், எகிப்து, ஏமன், குவைத் போன்ற நாடுகள் சீன-இரசிய முகாமில் இணைந்து விட்டன.

கத்தார் (Qatar) நாட்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய முக்கியமன ராணுவத் தளமான யு.எஸ். சென்ட்காம் (US CENT COM) இயங்கி வருகிறது. இனி இந்த இராணுவத் தளத்தை அமெரிக்காவால்  இயக்க முடியாது.

1950களிலிருந்து துருக்கியில் அமெரிக்காவின் இருபெரும் விமானத் தளங்களான இன்சிர்லிக் (Incirlik) மற்றும் குரேசிக் (Kurecik) போன்றவை இயங்கி வருகின்றன. தற்போது இந்த விமான தளங்களை இயக்குவதற்கு துருக்கியின் ஆதரவு அமெரிக்காவிற்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் துருக்கி நேட்டோ முகாமிலிருந்து வெளியேறி இரசிய முகாமில் இணைந்துவிட்டது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு பேருதவி புரிந்த துருக்கியும், கத்தாரும் இரசிய-சீன ஏகாதிபத்திய முகாமில் இணைந்து விட்ட நிகழ்வானது மத்திய கிழக்கில் அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய முகாம் பலவீனமடைந்து வருவதையும், இரசிய-சீன முகாம் பலமடைந்து வருவதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இரசிய-சீன ஏகாதிபத்திய உதவியுடனே ஈரானும் அப்பிராந்தியத்தில் ஓர் துணை மேலாதிக்கச் சக்தியாக வளர்ந்துள்ளது.

அமெரிக்கா கடுமையான முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதிலிருந்து மீள  'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற காப்புக்கொள்கைகளைக் கடைபிடித்து வருகின்றது. தமது காலனிய ஒடுக்கப்பட்ட அடிமை நாடுகள் மீது மட்டுமின்றி துருக்கி, கத்தார்  போன்ற தனது அணியில் இருந்த நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார நெருக்கடிகளைச் சுமத்தியது. அதன் அந்நிய நிதி முதலீடுகளும் குறைந்து போய்விட்டன. இதன் காரணமாகவே அமெரிக்க அணியிலிருந்து வெளியேறி இரசிய-சீன அணிக்கு இவை மாறிவிட்டன.

டெஹ்ரான் (Tehran) அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தம் 2015லிருந்து அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தன்னிச்சையாக வெளியேறியது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டியே ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக்கொண்டது. இதன் பிறகு 'உச்சக்கட்ட அழுத்தம்' (Maximum Pressure) எனும் பெயரில் ஈரானுடனான ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட அனைத்து வர்த்தகதிற்கும் முட்டுக்கட்டை போட்டது அமெரிக்கா. மோடி கும்பல் கூட ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யக்கூடாது என்ற முடிவை அமெரிக்காவின் உத்தரவின் பேரில் எடுத்தது. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் 2019இல் 9.5சதம் வீழ்ந்தது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது. ஆனாலும் ரசியாவின் உதவியுடன் ஈரான் யுரேனியத்தை 20% செறிவூட்டி (சுலைமானி படுகொலைக்குப் பிறகு ரசியாவுடன் ஈரான் ஓர் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது) அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி 2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து 2017இல் வெளியேறியது அமெரிக்கா; மட்டுமின்றி 2018இல் ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானைத் தனிமைப்படுத்தி பணிய வைப்பது; அல்லது ஈரான் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சிக்கவிழ்ப்பு நடத்துவதே அமெரிக்காவின் திட்டமாகும். ஆனால் அமெரிக்காவின் திட்டம் பலிக்கவில்லை. வெனிசுலா, சிரியா, ஏமனில் இந்த செயல் தந்திரத்தைப் பின்பற்றியே அமெரிக்கா தோல்வி அடைந்தது. காரணம்  அந்த  நாடுகள் அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து மீள்வது எனும் பெயரில் இரசிய-சீன ஆதிக்க வலைக்குள் வீழ்ந்தன. இரசிய-சீன ஏகாதிபத்திய நாடுகளின் உதவியும் அமெரிக்க-நேட்டோ உதவியைப் போன்றதே; இரண்டுமே நம்பக்கூடிய ஒன்றல்ல. இரசிய-சீன நிதி மூலதன ஆதிக்கத்தால் வெனிசுலா, சிரியா போன்ற நாட்டு மக்களின் வறுமை நிலை மாறவில்லை; அவற்றின் ஆளும் வர்க்கங்கள் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளன. நிதி மூலதனம் ஆதிக்கத்தையே விரும்பும்; சுதந்திரத்தை அல்ல.  இது ஈரானுக்கும் பொருந்தும்.

ஈராக்கின் பெட்ரோ-கெமிக்கல் (Petro chemical) உள்கட்டமைப்பு திட்டத்திற்கு சீனா 400 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் புதிய பட்டுச்சாலை-ஒரு இணைப்பு ஒரு சாலை (NSR-OBOR) திட்டத்தில் ஈரான் இணைந்துள்ளது. இத்திட்டம் சீனாவின் உலக மேலாதிக்கத்திற்கான திட்டமாகும். சைனோபெக் (sinopec) மற்றும் சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம் (CNPC- China National Petroleum Company) போன்ற சீனாவின் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளின் பெருமளவிலான பங்குகளை (Stakes) கைப்பற்றியுள்ளன. ஈரானை நெருக்கடியிலிருந்து மீட்பது என்ற பெயரில் அந்நாட்டின் ஆற்றல் துறைகளில் (Energy Sectors) சீனா முதலீடு செய்துவருகிறது.

2017ஆம் ஆண்டில் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல்களில் (Gas fields) பிரான்சு தனது முதலீட்டை விலக்கிய பிறகு, 30% சத பங்கை (Stake) கைப்பற்றியிருந்த சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனத்திற்கு 100% சத பங்கையும் தாரை வார்த்துவிட்டது ஈரான். சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம் (CNPC) வடக்கு ஆஜாதிகான் மற்றும் மஸ்ஜித்-ஐ-சுலேமான் எரிவாயு வயல்களில் முதலீடு செய்து வருகிறது. மேலும் சைனோபெக் (Sinopec) நிறுவனம், யாதாவரன் எண்ணெய் வயலில் ஒரு நாளைக்கு 1,80,000 பேரல்கள் எடுப்பதற்காக 2 பில்லியன் டாலர்களுடன் கூடுதலாக 3 பில்லியன் டாலர்களை  முதலீடு செய்துள்ளது. மேலும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மாதம் ஒன்றிற்கு 1.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு அதிகப்படுத்தியுள்ளது. சீனாவின் குன்லுன் (Bank of Kunlun) வங்கியுடன் ஈரானின் மத்திய வங்கி (Central Bank of Iran) நேரடியாக பரிவர்த்தனை செய்துவருகிறது.

இது மட்டுமின்றி, சீனா பாலிஸ்டிக் ஏவுகணைப் (Ballistic Missiles) பொருட்கள் மற்றும் பாரம்பரிய  ஏவுகணைகளை (Conventional Missiles) ஈரானுக்கு வழங்கி வருகிறது. முக்கியமாக ஈரான் சீனாவுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் சரக்கு மற்றும் சேவைத் துறைகளிலும் சீனா முதலீடு செய்யவுள்ளது.

ஈரான் இரசியாவுடன் 1990களிலிருந்தே வலுவானதொரு தொடர்பை பேணி வருகிறது. ஈரானின் துறைமுகம் மற்றும் இரயில்வே போன்ற உள்கட்டமைப்பு துறைகளில் இரசியா முதலீடு செய்துள்ளது. டெஹ்ரான் அணு ஒப்பந்த முறிவிற்குப் பிறகு இரசியாவே ஈரானின்  அணுசக்தி துறையில் முதலீடு செய்து வருகிறது. ஈரானின் புஷ்ஹேர் (Bushehr) அணு உலையை இரசியா நிறுவியுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் 50 பில்லியன் டாலர் அளவிற்கு இரசியா முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ரோஸ்நெப்ட் (Roseneft) மற்றும் கேஜ்புரோம் (Gazprom) போன்ற இரசியாவைச் சேர்ந்த பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இத்துறைகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஜாருபெழ்நெப்ட் (Zarubezhneft) என்ற இரசிய கார்ப்பரேட் நிறுவனம் இரண்டு பிரௌன்ஃபீல்ட்ஸ் (Brown fields) எண்ணெய் வயல்களில் 4 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈரானிடமிருந்து ஒரு நாளைக்கு 1,00,000 பேரல்களை இறக்குமதி செய்யவும் இரசியா ஒப்புதல் தந்துள்ளது. ஈரானின் சிவில் விமானத்துறையில் (Civil Aviation Sector) இரசியா முதலீடு செய்துள்ளது. போயிங் (Boeing) மற்றும் ஏர்பஸ் (Airbus) போன்ற சிவில் விமான வகைகளுக்குப் பிறகு ஈரானுக்கு ஏர் கிராஃப்டுகளை (Aircrafts) சப்ளை செய்ய இரசியா அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் பாதுகாப்புத் துறைக்கு SA-20C SAM வகைகளை இரசியா சப்ளை செய்துள்ளது.

இவ்வாறு இரசியா-சீனாவுடன் பல்வேறு அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்கள் மூலமாக அவற்றின் புதிய காலனிய நாடாக ஈரான்,ஈராக், போன்ற நாடுகள் மாற்றப்பட்டுள்ளன. ஈரான், ஈராக் போன்ற வளைகுடா நாடுகள் எண்ணெய் மூலம் கிடைத்த இலாபத்தை மக்கள் நலனுக்கு பயன்படுத்தாமல் இரசியா-சீனாவிடம் இருந்து ஆயுதம் வாங்குவதில்தான் ஈடுபட்டனர். ஆகவேதான் அந்த நாட்டு மக்கள் வறுமை, வேலை வாய்ப்பின்மையால் வாடுகின்றனர்.

ஏகாதிபத்தியங்களுக்கிடையில் கூர்மையடையும் முரண்பாடுகள்

மேற்கண்ட நிகழ்வுகள் அமெரிக்க-நேட்டோ முகாமிற்கும் சீன-இரசிய முகாமிற்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் புதிய காலனிய மறுபங்கீட்டிற்கான பனிப்போர் தீவிரம் பெற்று வருவதை குறிக்கின்றன. ஈரானும் ஈராக்கும் பனிப்போரின் யுத்தகளங்களாக மாற்றப்பட்டுள்ளன.

காலனிய, அரைக் காலனிய, ஒடுக்கப்பட்ட நாடுகளிலுள்ள மூலப்பொருட்கள், இயற்கை வளங்களைச் சூறையாடவும், எதிராளியைப் போட்டியிலிருந்து அகற்றவும் ஏகாதிபத்திய நாடுகள் பிரயத்தனப்படுகின்றன. தமது நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்வதற்கு காலனியாதிக்கமே அவற்றிற்கு உகந்த ஒரே வழியாகும்.

சவுதி அரேபியாவில் உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் 25 சதமும், ஈராக்கில் 11 சதமும், ஈரானில் 10 சதமும் உள்ளன. அத்துடன் நைஜீரியா, அல்ஜீரியா, சூடான், எகிப்து, ஏமன், கத்தார் இந்தோனேசியா, மலேசியா, புரூனோ உட்பட அனைத்து முஸ்லிம் நாடுகளில் உள்ளதையும் சேர்த்தால் உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 66லிருந்து 76 சதவீதம் வரை இந்நாடுகளில் கொட்டிக் கிடக்கிறது. இந்த மொத்த எண்ணெய் வளத்தையும் கைப்பற்றுவதுதான் இவ்விரு முகாம்களின் குறிக்கோளாகும்.

ஏகாதிபத்தியம் பற்றி லெனின் கூறும்போது மூலவளங்களைக் கைப்பற்றுவதற்கு காலனியாதிக்கம் தான் உகந்தது என்று பின்வருமாறு கூறுகிறார்:

"முதலாளித்துவத்தின் நவீனக் கட்டத்தினுடைய தலையாய அம்சம், மிகப் பெரிய தொழில் அதிபர்களது ஏகபோக ஆதிக்கமாகும். மூலப்பொருட்களுக்கான ஆதாரங்கள் அனைத்தும் ஒரு கூட்டினால் கைப்பற்றப்பட்டுவிடும்போது இந்த ஏகபோகங்கள் உறுதியாக நிலை பெற்று விடுகின்றன. போட்டியிடுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் எதிராளிகளிடமிருந்து பறிப்பதற்காக, உதாரணமாக இரும்புக் கனிம பிரதேசங்கள், எண்ணெய் வளங்கள் முதலியவற்றை வாங்கிக்கொண்டு விடுவதற்காக சர்வதேச முதலாளித்துவக் கூட்டுகள் எவ்வாறு ஆவேசமாகப் போராடுகின்றன என்பதைப் பார்த்தோம்.

போட்டியாளர்களுக்கு எதிரானப் போராட்டத்தில் எழக்கூடிய எல்லா சந்தர்ப்பங்களிலும், அரசு ஏகபோகம் ஒன்றை ஏற்படுத்தும் சட்டத்தின் மூலமாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் சந்தர்ப்பம் அடங்கலாய் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏகபோகத்திற்கு முழு உத்திரவாதம் அளிக்கக் கூடியது காலனிய உடைமைகள் மட்டுமேதான்.

முதலாளித்துவ வளர்ச்சி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, மூலப் பொருட்களின் பற்றாக்குறை எவ்வளவுக்கெவ்வளவு அதிகக் கடுமையாக உணரப்படுகிறதோ, உலகெங்கிலும் மூலப்பொருள் ஆதாரங்களுக்கான போட்டியும் வேட்டையும் எவ்வளவுக்கெவ்வளவு அதிக உக்கிரமடைகின்றனவோ காலனிகளைப் பெறுவதற்கானப் போராட்டமும் அவ்வளவுக்கவ்வளவு மூர்க்கத்தனமாகிவிடுகிறது"

[ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்-லெனின்]

அன்று லெனின் கூறியது இன்றும் மிகப் பொருத்தமாக உள்ளது. மத்திய-கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு புறம் ஆக்கிரமிப்பு முயற்சிகள் மூலம் பொம்மை ஆட்சியை உருவாக்கி மூலப்பொருட்களைக் கைப்பற்றுவதும்; மறுபுறம் அமைதியான வழியில் ஒப்பந்தங்கள் மூலம் மூலப்பொருட்களைக் கைப்பற்றுவதும் என புதிய காலனிய வடிவிலான மறுபங்கீட்டிற்கான யுத்தமும், முரண்பாடுகளும் ஏகாதிபத்திய நடுகளுக்கு இடையே நீடித்து வருகின்றன.

ஈரான்-ஈராக்கின் ஆளும் தரகு வர்க்கங்கள், சிரியா-வெனிசுலா போன்ற ஆளும் தரகு வர்க்கங்களைப் போலவே ஏகாதிபத்திய முரண்பாடுகளைக் கையாள்வது சரி எனவும், அவர்களது இரசிய-சீன ஆதரவு நிலைபாடு சரி எனவும் திருத்தல்வாதிகள் பேசுகின்றனர்.

ஏகாதிபத்திய முரண்பாடுகளைக் கையாள்வது குறித்து ஏ.எம்.கே

ஏகாதிபத்திய காலனியத்திற்கு உட்பட்ட நாடுகள் ஏகாதிபத்திய முரண்களைக் கையாள்வது பற்றிய சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரம் குறித்து தோழர் ஏ.எம்.கே தனது "பெரும்பான்மை ஆவணத்தில்" கூறியுள்ளார். அதில் "சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரம்" எனும் தலைப்பில் அவர் கூறுவதாவது:

"மறைமுக சேமிப்புச் சக்தியாக அமைவது பொதுவாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான முரண்பாடுகளும், குறிப்பாக (அ) இரு வல்லரசுகளுக்கு இடையிலுள்ள முரண்பாடு (அ) ஒருபுறம் ஏதாவது ஒரு வல்லரசுக்கும் மறுபுறம் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு (அ) அரைக்காலனி, நவீன காலனி நாட்டில் ஒரு வல்லரசுக்கு விசுவாசமான ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவினருக்கும், மற்றொரு வல்லரசு, பிற ஏகாகிபத்திய சக்திகள், நாட்டின் உள்ளேயே உள்ள அவற்றின் ஏஜெண்டுகள் ஆகியோருக்கும் இடையிலுள்ள முரண்பாடும் ஆகும்" என்கிறார் ஏ.எம்.கே.

[இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரமும் ப-44]

அதாவது, ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகள் என்பது மறைமுக சேமிப்பு சக்திகள் எனவும், அவற்றைக் கையாள்வது என்பது போர்த்தந்திரமே எனவும் ஏ.எம்.கே கூறுகிறார். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகளை (தரகர்கள்) எப்போது, எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி அவர் பின் வருமாறு கூறுகிறார்:

"தன்மையில் தரகர்களாக உள்ள பெரும் முதலாளிய வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாக சேவைப் புரிகிற அதனால் வளர்க்கப்படுகிற ஒரு வர்க்கமாகும். எனவே தரகுப் பெரும் முதலாளிய வர்க்கத்திற்குள்ளேயே வேறுபட்ட கும்பல்கள் வேறுபட்ட ஏகாதிபத்தியச் சக்திகளால் (குறிப்பாக இரண்டு வல்லரசுகள்) ஆதரிக்கப்படுகின்றன. எனவே, இந்த வல்லரசுகளுக்கு இடையிலான முரண்படுகள் கூர்மையடையும்போது ஒரு குறிப்பிட்ட சக்திக்கு எதிராகப் புரட்சியின் முனை முக்கியமாக திருப்பப்படும்போது, பிற சக்திகளைச் சார்ந்த பெரும் முதலாளிய வர்க்க கும்பல்கள் அந்தக் குறிப்பிட்ட ஏகாதிபத்திய சக்திக்கு எதிரானப் போராட்டத்தில் சில குறிப்பிட்ட எல்லை வரை சில குறிப்பிட்ட காலத்திற்குச் சேரலாம். அப்படிப்பட்ட நேரங்களில் பாட்டாளி வர்க்கமானது எதிரியைப் பலவீனப்படுத்தும் பொருட்டு இந்த பிரிவினருடன் ஒரு ஐக்கிய முன்னணியை அது புரட்சிக்கு சாதகமாக இருக்குமானால் உருவாக்கலாம்". என்கிறார் ஏ.எம்.கே.

(அதே நூல்...பக்கம் 110)

அதாவது புரட்சிகர எழுச்சிக் கட்டத்தில் புரட்சியின் முனை குறிப்பிட்ட ஒரு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் திருப்பப்படும்போது மற்றொரு ஏகாதிபத்தியம் மற்றும் அதன் தரகர்களுடன் புரட்சிக்கு சாதகமாக இருக்குமானால் ஐக்கிய முன்னணி அமைக்கலாம் என்கிறார். மேலும் அவை ஐக்கிய முன்னணியில் நீடித்தாலும் மிகப் பிற்போக்கானதாகவே நீடிக்கும் எனவும், ஐக்கிய முன்னணியைப் பிளவுபடுத்த ஓயாமல் முயற்சி செய்யும் எனும் எச்சரிக்கையோடு அமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஆனால் திருத்தல்வாதிகள் அவர்களை நேர்முக சேமிப்பு சக்திகளாகக் கருதி நிரந்தர கூட்டணி அமைத்து ஐக்கிய முன்னணியில் பாட்டாளி வர்க்க தலைமையை மறுத்து, தரகு வர்க்க தலைமையின் கீழ் நாம் அழிவதற்கு வழி காட்டுகின்றனர்.

மேலும் "ஒரு வல்லரசு ஏதாவது, ஒரு அரைக்காலனி, புதிய காலனி நாட்டுக்கு எதிராக ஆக்கிரமிப்பைத் தொடுக்கும்போது , பாட்டாளி வர்க்க கட்சியின் செயல் தந்திரமானது அந்த ஆக்கிரமைப்பை முறியடிப்பதற்காக நாட்டிலுள்ள எல்லா சக்திகளுடனும் ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்  ஏ.எம்.கே.

(அதே நூல் பக்கம் 46)

அதாவது, ஆக்கிரமிப்பு யுத்தத்தை முறியடிக்க நாட்டிலுள்ள எல்லா சக்திகளுடனும் ஒரு ஐக்கிய முன்னணி அமைப்பது பற்றி ஏ.எம்.கே பேசுகிறார். ஆக்கிரமிப்பு யுத்ததை முறியடிக்கும் வரையில் அமைக்கப்படும் இந்த தற்காலிக ஐக்கிய முன்னணியில் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

முதல் உலகப் போரில் லெனினும்,  இரண்டாம் உலகப் போரில்  ஸ்டாலின்-மாவோவும், இரண்டாம் உலகப் போருக்கு பிந்தய புதிய காலனிய கட்டத்தில் ஏ.எம்.கேவும் முன்வைத்துள்ள செயல்தந்திரமே நமது பாதையாகும்.

நேபாள நாட்டில் பிரசண்டா ஐக்கிய முன்னணி எனும் பெயரில் விடுதலைப் பிராந்தியங்களிலும், கட்சியிலும் ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களை அனுமதித்து கட்சியை முதலாளியக் கட்சியாக மாற்றினார்.  ஐ.நா விடம் ஆயுதங்களை ஒப்படைத்தார். விடுதலைப் பிராந்தியங்களைக் கலைத்தார். புரட்சிக்கு துரோகம் இழைத்தார். வெனிசுலா, சிரியா,ஈரான் போன்ற ஆளும் வர்க்கங்கள் தமது நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பின் பேரில் இரசிய-சீன நிதிமூலதன ஆதிக்கத்தை அனுமதிக்கின்றன. அவை திருத்தல்வாத மற்றும் கலைப்புவாத பாதையாகும்; காவுத்ஸ்கிய-டிராட்ஸ்கிய பாதையாகும்.

ஐக்கிய முன்னணியில் பாட்டாளி வர்க்கத் தலைமையை நிறுவ வேண்டும். இல்லையெனில் தரகு வர்க்கத் தலைமையின் கீழ் சென்று  (நேபாளத்து மாவோயிஸ்ட் கட்சி போல)  கட்சி அழிந்துவிடும்.

இது குறித்த சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரத்தை (ப.45-46 இல்) பின்வருமாறு ஏ.எம்.கே வகுத்துத் தந்துள்ளார்:

"ஒப்பீட்டளவில், அமைதியான காலங்களில், அதாவது உலக யுத்தம் இல்லாத வேளையில், சர்வேதேசியப் பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது அரைக்காலனிகள், நவீன காலனிகளில் தேசிய ஜனநாயகப் புரட்சிகளையும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளையும் மேலும் கொண்டு செல்வதும், அதே சமயத்தில் இரு வல்லரசுகள் உலகத்தின் ஏனையப் பகுதிகளிலுள்ள அவற்றின் ஏஜெண்டுகள் ஆகியோரின் யுத்தக் கொள்கைகளை (பொருளாதாரத்தை இராணுவமயமாக்குதல், யுத்தக் கடன்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள், கட்டாய இராணுவச் சேவை போன்றவை) அம்பலப்படுத்தி, அவற்றை எதிர்த்துப் போராடுவதுமாகும்".

ஏ.எம்.கே தொடர்கிறார்:

"ஒரு உலக யுத்தத்தின் போது சர்வதேசியப் பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது அந்த யுத்தத்தை ஒரு உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதாக இருக்க வேண்டும். யுத்தம் பற்றிய பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரமானது யுத்தத்தின் வர்க்கத் தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது. உலக யுத்தத்தின்போது ஜக்கிய முன்னணிக் கொள்கையை மேற்கொள்வதா? அல்லது உள்நாட்டு யுத்தக் கொள்கையை மேற்கொள்வதா? என்பது யுத்தத்தின் வர்க்கத் தன்மையைப் பொறுத்திருக்கிறது. யுத்தத்தின் வர்க்கத் தன்மையானது லெனின் கூறியது போல, "எந்த வரலாற்றுச் சூழ்நிலைகள் யுத்தத்திற்கு வழிவகுத்துள்ளன, எந்த வர்க்கங்கள் அதைத் தொடுத்து இருக்கின்றன, எந்த இறுதி நோக்கங்களுக்காகத் தொடங்கியிருக்கின்றன" [யுத்தமும் புரட்சியும் லெனின் தொகுப்பு நூல்கள் தொகுதி 24,ப.398] என்பதால் தீர்மானிக்கப்படுகிறது.

அது ஒரு ஏகாதிபத்திய யுத்தமாக இருக்குமேயானால், அதாவது மோதுகின்ற இரு பக்கங்களுமே ஏகாதிபத்தியவாதிகளாக இருந்தார்கள் என்றால் [2ம் உலக யுத்தத்தின் முதல் கட்டத்தில் இருந்தது போல்] அப்போது செயல்தந்திரமானது யுத்தத்தை எதிர்ப்பதாகவும், அந்த யுத்தத்தை ஒரு உள்நாட்டு யுத்தமாக மாற்றுவதாக அமையும். ஆனால் யுத்தத்தின் வர்க்கத் தன்மை மாறினால்- எடுத்துக்காட்டாக, மோதுகிற சக்திகளில் ஒரு பக்கம் ஒரு சோசலிச நாடு இருப்பதாக வைத்துக்கொண்டால் [2ம் உலக யுத்தத்தின் பின் பகுதியில் இருந்தது போல்] யுத்தத்தின் வர்க்கத் தன்மை மக்கள் யுத்தமாக மாறுகிறது; சர்வதேசிய பாட்டாளி வர்க்கத்தின் செயல் தந்திரமானது யுத்தத்தில் அந்த சோசலிச நாட்டை ஆதரிக்கின்ற எல்லா சக்திகளுடன் ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதன் மூலம் அந்த மக்கள் யுத்தத்தில் பங்கு கொள்வதாக அமையும்" என்கிறார் ஏ.எம்.கே.

எனவே, தற்போது பனிப்போர் கட்டம் நிலவுவதாலும், சோசலிச முகாம் இல்லாத காரணத்தாலும், உலகப்போரை உள்நாட்டுப் போராக மாற்றுவதே நமது செயல் தந்திரமாக இருக்க வேண்டும். சோசலிச முகாம் இருந்தாலும் மோதுகிற சக்திகளில் ஒரு பக்கம் சோசலிச நாடு இருந்தால்தான் யுத்தத்தின் வர்க்கத்தன்மை மாறுகிறது. அதுவரை யுத்தத்தின் வர்க்கத்தன்மை மாறுவதில்லை; அது ஒரு ஏகாதிபத்திய யுத்தமாகவே நீடிக்கும். அப்போது உலகப் போரை உள் நாட்டுப் போராக மாற்றுவது நமது செயல் தந்திரமாக இருக்கவேண்டும். சோசலிச நாட்டின் மீது ஏகாதிபத்தியம் யுத்தம் தொடுக்குமானால் சோசலிசத் தாயகத்தை காக்கும் பொருட்டு ஐக்கிய முன்னணி அமைப்பது  நமது செயல் தந்திரமாக இருக்கவேண்டும். ஏகாதிபத்திய நாடுகளுடன்  ஐக்கிய முன்னணி என்பது ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தை நாட்டிற்குள் அனுமதித்து தேச நலன்களை காவு கொடுப்பதல்ல.

சமாதானக் காலங்களில் கூட ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவற்றின் ஏஜெண்டுகளின் கொள்கைகளை அம்பலப்படுத்துவதே நமது செயல் தந்திரமே ஒழிய ஏகாதிபத்தியங்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதல்ல; ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தை நாட்டிற்குள் அனுமதிப்பதும் அல்ல.

இவற்றிலிருந்தே 1991ஆம் ஆண்டு சதாம் ஆதரவு நிலைபாடு எடுத்தார் ஏ.எம்.கே.

அவர் கூறுவதாவது:

"எனினும் இப்பிரதேசத்தின் (மத்திய கிழக்கில்) மீது புதிய காலனித்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஏகாதிபத்தியவாதிகள் நடத்தும் கூட்டுத் தாக்குதலை அது (ஈராக்) எதிர்த்துப்  போரிடுகிறது. இதுவரை எந்த ஒரு ஏகாதிபத்திய நிர்பந்தத்திற்கும் பணியாமலும் ஏதாவது ஒரு ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேராமலும் தனித்து நின்று இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிடுகிறது. எனவே அதன் போர் நடவடிக்கைகள் புறநிலையில் புதிய காலனி ஆதிக்கத்தை ஓரளவு பலவீனப்படுத்தக் கூடியதாக இருக்கிறது".

(சமரன் 1991 ஜனவரி ப-8)

மேலும் அவர் கூறுகிறார்:

"ஈராக் இப்போரில் ஏகாதிபத்தியவாதிகளுடன் விடாப்பிடியாக தொடர்ந்து போரிடும் வகையில், அது அனைத்து நாடுகளின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இன்று வளைகுடாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் ஈராக்கை ஆதரிப்பது தகும்".

என்கிறார் ஏ.எம்.கே.

எந்தவொரு ஏகாதிபத்தியத்துடனும் சதாம் ஹுசைன் கூட்டு சேராமல் இருந்தார் என்பதாலும், குவைத் ஆக்கிரமிப்பைக் கைவிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், ஈராக்கின் போர் அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தை பலவீனப்படுத்தும் என்பதாலும் நாம் சதாமை ஆதரித்தோம். 1991லும் சரி, அவர் தூக்கிலிடப்பட்ட 2006ஆம் ஆண்டிலும் சரி இதன் அடிப்படையிலேயே நாம் சதாமை ஆதரித்தோம். மேலும் இவ்விரு கட்டங்களும் உலக யுத்தம் இல்லாத சூழலாகும்; அவை அமெரிக்காவின் உலக மேலாதிக்க முயற்சிகள் நிலவிய சூழலாகும்; அதாவது போட்டி ஏகாதிபத்திய முகாம் யுத்தக்களத்தில் இல்லாத சூழல் (அ) ஏகாதிபத்திய முரண்பாடுகள் யுத்த வடிவம் எடுக்காத சூழலாகும். ஆனால் தற்போதைய சூழல் 2வது பனிப்போர் சூழலாகும்.

எனவே, சுலைமானி மற்றும் அல் முஹந்திஸ் இருவரின் படுகொலைகளை நாம் கண்டிக்கும் அதே வேளையில் அவர்களின் இரசிய-சீன ஆதரவு நடவடிக்கைகளை விமர்சனப்படுத்துவது நமது கடமையாகும். பனிப்போர் இல்லாத சமாதான காலங்களிலும் கூட இன்னொரு ஏகாதிபத்திய முகாமின் நிதி மூலதனத்தை நாட்டிற்குள் அனுமதித்து தேச நலன்களை காவு கொடுப்பதை  ஏற்க இயலாது. அப்போதும் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் தரகர்களின் கொள்கைகளை அம்பலப்படுத்த வேண்டுமே ஒழிய அவர்களுடன்  கூட்டணி அமைப்பது அழிவுப் பாதையாகும்.

ஆகவே, ஈரான், ஈராக் போன்ற நாடுகளின் ஆளும் தரகு வர்க்கங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து மீள்வதன் பெயரில் இரசிய-சீன ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திற்கு தமது நாடுகளை திறந்துவிடுவது என்பதை நாம் ஏற்க முடியாது. எந்தவொரு ஏகாதிபத்திய ஆதிக்கத்தாலும் அந்நாடுகளின் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் வறுமையைப் போக்கி விட முடியாது; போக்கி விடவும் இல்லை. எந்தவொரு ஏகாதிபத்திய ஆதரவும் நிரந்தரமானது அல்ல; நம்பத் தகுந்ததும் அல்ல என்பது அமெரிக்காவின் உதவிகளும், துரோகங்களும் நேரடி உதாரணமாகும். இதுகுறித்து ஏ.எம்.கே கூறுவதாவது:

"சர்வதேச ரீதியில், ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க இயக்கங்களும், அரைக் காலனி, நவீன காலனி நாடுகளில் உள்ள தேசிய விடுதலை இயக்கங்கள் மட்டுமே உறுதியான கூட்டாளியாகும். எந்தவொரு குறிப்பிட்ட வல்லரசு சக்தியும் தற்காலிகமாக உதவி செய்யலாம். [ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான முரண்பாடுகளின் காரணமாக]. ஆனால் இது மிகவும் நம்பத்தகாதது".

(இந்திய புரட்சியின் போர்த் தந்திரமும் செயல் தந்திரமும் ப-111)

எனவே, எந்தவொரு புதிய காலனிய, அரைக் காலனிய, ஒடுக்கப்பட்ட நாடும் ஒரு ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்ப்பது எனும் பெயரில் இன்னொரு ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு ஆட்படுவது என்பதை பாட்டாளி வர்க்க இயக்கம் ஒருபோதும் ஏற்காது. எல்லா ஏகாதிபத்திய ஆதிக்கங்களை எதிர்த்தும் மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட புதிய காலனிய நாடுகள் அனைத்தும் தமக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு போராடுவது அவசியமாகும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலைமைகள் நீடிப்பதால் அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களையும் மற்றும் அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களையும் எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராடுவது தான் அவர்களின் விடுதலைக்கு ஒரே வழியாகும்.

சுலைமானி, அல் முஹந்திஸ் இருவரின் படுகொலை என்பது மத்திய கிழக்கில் அமெரிக்க-நேட்டோ முகாமின்  மேலாதிக்கம் சரிந்து வருவதால் ஏற்படும் போர் வெறியையும், இரசிய-சீன முகாமின் மேலாதிக்கம் வளர்ந்து வருவதையும் குறிக்கின்றன. ஈரானும், ஈராக்கும் இவ்விரு முகாம்களுக்கு இடையிலான பனிப்போரின் யுத்த களங்களாக மாற்றப்பட்டுள்ளதைக் குறிக்கின்றது. அவர்களின் மரணம் பனிப்போருக்கு தரப்பட்ட "விலை" என்பதைக் குறிக்கிறது. அவர்களின் அமெரிக்க எதிர்ப்பு என்பது இரசிய-சீனத்தின் பின்புலத்தில் இருந்தே எழுகிறது. ஆகவேதான் இருவரின் படுகொலைக்கு காரணமான அமெரிக்காவை கண்டிப்பதும், அவர்களின் இரசிய-சீன ஏகாதிபத்திய சார்பு தரகுத்தன்மையை விமர்சிப்பதும் அவசியமாகிறது.

அதே சமயத்தில் இருவரின் படுகொலையைக் கண்டும் காணாமல் இருக்கும்,  அமெரிக்காவின் இனவெறிப் பாசிசத்திற்கு சேவை செய்யும் இந்துத்துவப்  பாசிச மோடி கும்பலின் கள்ள மௌனத்தின் மீது  கல்லெறிவது ஜனநாயக சக்திகளின் கடமையாகிறது.

- சமரன் 

(பிப்ரவரி, 2020)