ஈரான் : ஹிஜாப்புக்கு எதிரான பெண்களின் போராட்டம் வெல்லட்டும்

ஒரு பெண் ஹிஜாப் அணிய வேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது அப்பெண்ணே. அது அவளுடைய மத நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட மத உரிமை சம்பந்தப்பட்டது. அதில் ஆதிக்கம் செலுத்த மதவாத அரசுகளுக்கு எவ்வித உரிமையுமில்லை.

ஈரான் : ஹிஜாப்புக்கு எதிரான பெண்களின் போராட்டம் வெல்லட்டும்

கடந்த செப்டம்பர் மாதத்தில் மாசா அமினி என்ற இளம்பெண் "காஷ்த் இ ஆஷாப் Gasht –e-Ashab)" எனும் அறநெறி போலீசாரால் (Morality Police) கைது செய்யப்பட்டு காவல் நிலைய சித்திரவதையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாசா அமினி குர்திஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் வாழும் குர்திஷ் தேசிய இனத்தைச் சார்ந்தவர். செப்டம்பர் 13 அன்று அவர் தலைநகர் தெஹ்ரானுக்கு வந்திருந்தபோது ஹிஜாப் சரியாக அணியவில்லை - இறுக்கமான பேண்ட் அணிந்திருந்தார் என்ற காரணங்களை கூறி  அவரை கைது செய்திருக்கின்றனர். பின்னர் காவல் நிலையத்தில் பலமாக தாக்கப்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து செப்டம்பர்  16 அன்று உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவமே ஈரான் முழுவதும் ஹிஜாப்புக்கு எதிரான பெருந்திரளான மக்கள் போராட்டமாக மாறியது.

இப்போராட்டம் தொடர் போராட்டமாக 2 மாதங்களாக ஈரானின் பல்வேறு நகரங்களில் உள்ள மாணவர்களையும் இணைத்துக் கொண்டு தீயாக பரவியது. பெண்கள் தங்களின் ஹிஜாப்பை கழற்றி தீயிலிட்டும், தங்களின் தலை முடியை வெட்டியெறிந்தும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மக்களின் - மாணவர்களின் இப்போராட்டத்தை ஒடுக்க போலீசும் பாஸ்ஜி எனும் துணை இராணுவமும் சேர்ந்து நடத்திய வன்முறை தாக்குதலில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். 15000பேர் வரை கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளனர். ஈரானில் அரசுக்கு எதிராக போராடினாலே வழக்கு எனும் கொடுங்கோலாட்சி நடைபெற்று வரும் நிலையில் மக்களின் இப்போராட்டங்களை தீவிரமாக நசுக்கி வருகிறது இப்ராஹிம் ரைசி அரசு. பல உயிர் தியாகங்களுக்கும், கைதுகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் பின்னும் மக்களின் - மாணவர்களின் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் போராடுபவர்களுக்கு ஆதரவு குரல்கள் பெருகி வருகின்றன.

இந்த நிலையில்தான் டிசம்பர் 5 ம் தேதியன்று அறநெறி காவல் எனும் அராஜக காவல்துறை கலைக்கப்பட்டுள்ளது. இது ஈரானிய மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த சிறிய வெற்றியே. ஆனால் கட்டாய ஹிஜாப் சட்டம் இன்னும் அமலிலே உள்ளது.

கட்டாய ஹிஜாப் வரலாறு

1979ல் இசுலாமியக் குடியரசு நிறுவப்பட்ட பின் அதுவரையிலிருந்த அடக்குமுறைகளிலிருந்து சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை, எழுத்தறிவு திட்டம், பெண்களும் உற்பத்தியில் பங்கேற்கும் உரிமை போன்றவை அமல்படுத்தப்பட்டன. அதனோடு கூடவே 1983ம் ஆண்டு கட்டாய ஹிஜாப் எனும் ஆணாதிக்கச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமும் சீர்திருத்தங்களும் அதுவரை வீட்டில் திரைக்குப் பின்னால் முடக்கப்பட்டிருந்த பெண்களை வீட்டிற்கு வெளியில் நடமாட அனுமதித்தது. அவர்கள் கல்வியிலும் பொருளாதார சுயேட்சைத் தன்மை வளர்வதற்கும் உதவின. எழுத்தறிவு இயக்கமானது சுமார் 82% சதவிகித பெண்கள் கல்வியறிவடைய வழிவகுத்தது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலைகளுக்கு செல்லவும் உற்பத்தியில் ஈடுபடவும் முன்னேற்றியது. இச்சீர்திருத்த இயக்கங்களுக்கு அடித்தளமாக இருந்தது உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றமும் உலகு தழுவிய வளர்ச்சியுமேயாகும். எவ்வாறு இருப்பினும் கட்டாய ஹிஜாப் என்பது ஆணாதிக்க - மதவாத பிற்போக்குத் தன்மை கொண்டதே. வீட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் இந்த ஆணாதிக்க -மதவாத பிற்போக்குத்தனங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும்.

சமூகரீதியாக ஏற்பட்டுள்ள பெண்களின் வளர்ச்சியை கணக்கில் கொள்ளாமல் அவர்கள் மீது அன்றைய நிலையிலிருந்தே மேலும் மதவாத - ஆணாதிக்க பிற்போக்குத் தனங்களை திணிப்பது எதிர்க்கப்பட வேண்டிய விசயமாகும். பெண்கள் மதநம்பிக்கைகளை பின்பற்ற வேண்டுமா இல்லையா - ஹிஜாப் அணிய வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தானேயொழிய எந்த மதவாத அரசுமல்ல.

 

"காஷ்த் இ ஆஷாப்" எனும் அறநெறி போலீசின் அராஜகம்

1983லிருந்து கட்டாய ஹிஜாப் சட்டம் அமலில் இருந்து வந்தாலும் சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தானில் இருப்பது போல் மிக கடுமையாக அவை ஈரானில் அமல்படுத்தப்பட்டு வந்ததில்லை. பெண்கள் எவ்வாறு எந்த முறைகளில் ஹிஜாப் அணிய வேண்டும் - ஆடை அணிய வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக எதுவும் ஈரானில் வரையறுக்கப்படவில்லை.

2006ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடிகளை திசைத்திருப்ப இசுலாமிய பிற்போக்கு அரசால் மக்கள் உடை அணிவதை கண்காணிக்க இந்த "காஷ்த் இ ஆஷாப்" - அறநெறி போலீஸ் படை உருவாக்கப்பட்டது. இந்த அராஜக காவல்துறை பிரத்தியேகமாக இதுசம்பந்தப்பட்ட வழக்குகளை மட்டும் கையாண்டு வருகிறது. ஹிஜாப் பற்றிய வரையறை இல்லாததால் ஆணாதிக்க கண்ணோட்டத்திலிருந்து இந்த பிரச்சனைகளை இவை பெரும்பாலும் அணுகின. எந்நேரமும் சாலைகளிலும், தெருக்களிலும் ரோந்து சென்று உடைகளை பரிசோதிப்பது; பெண்களை அவ்விடத்திலேயே உடையை மாற்றிக் கொண்ட பின்னே விடுவிப்பது; கட்டாயமாக இழுத்துச் சென்று அவர்களை மதபோதனை அரங்குகளில் கலந்து கொள்ள செய்வது போன்ற அராஜக - அடாவடித் தனங்களில் ஈடுபட்டு வந்தன. இந்த அராஜக அடக்குமுறைகளெல்லாம் ஏழை எளிய - நடுத்தர வர்க்க பெண்கள் மீது மட்டும்தான். அவர்கள் அப்பகுதிகளில் மட்டுமே ரோந்து செல்கின்றனர். அப்பெண்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தாக்குகின்றனர். ஆனால் இவர்கள் மேட்டுக்குடிகள் வாழும் பகுதியில் நுழைவது கூட கிடையாது. மேட்டுக்குடி இசுலாமிய பெண்களுக்கு ஹிஜாப் கட்டுப்பாடு பின்பற்றப்படுவதில்லை. அறநெறி-ஒழுக்கம் என்பதெல்லாம் எளிய உழைக்கும் வர்க்க பெண்கள் தலையில்தான் ஈரான் அரசாலும் சுமத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஹிஜாப் அடக்குமுறைகள் தீவிரமடைவதற்கு காரணமென்ன?

உலக முதலாளித்துவ பொது நெருக்கடியின் சுமைகளை ஏகாதிபத்தியங்கள் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் மீதும் சுமத்தப்படுவதினால் அவையும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு வருகின்றன. ஈரானும் தனது நாட்டின் ஆளும் வர்க்கங்களை பாதுகாத்துக் கொண்டு நெருக்கடியின் சுமைகளை முழுவதுமாக அந்நாட்டு உழைக்கும் வர்க்கங்கள் மீதே திணித்து வருகிறது. ஈரானில் பெட்ரோல், எரிவாயுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பெருட்கள் பன்மடங்கு விலையுயர்ந்து வருவதும், வேலையின்மை வறுமை பெருகியும் வருகிறது. இந்நெருக்கடியின் சுமைகளுக்கெதிராக மக்கள் அணிதிரண்டு போராடி வருகின்றனர். அரசின் இத்தோல்வியை மூடிமறைக்கவே ஈரான் மதவாத பிற்போக்கு இப்ராஹிம் ரைசி அரசும் பண்பாட்டு ரீதியான ஒடுக்குமுறைகளையும் மதவாத மற்றும் தேசிய இனப் பிரச்சனைகளையும் தூண்டிவிட்டு குளிர்காய்கின்றன. இப்போக்குகளை முன்பிருந்த அரசை விட ரைசி அரசு தீவிரமாக்கியுள்ளது. அதன் விளைவாகவே தற்போது மாசா அமினையை படுகொலை செய்துள்ளது. 300 உயிர்களை காவு வாங்கியுள்ளது.

இப்ராஹிம் ரைசி ஆட்சிக்கெதிரான போராட்டமும் - தனி குர்திஸ்தான் கோரிக்கையும்

ஆரம்ப கட்டத்தில், மாசா அமினி கொலைக்கு நீதி கேட்டும், அறநெறி போலீசாருக்கு எதிராகவும், கட்டாய ஹிஜாப் சட்டத்தை நீக்கவும் தொடங்கப்பட்ட இப்போராட்டம் மெல்ல மெல்ல நடப்பிலிருக்கும் இப்ராஹிம் ஆட்சியை கவிழ்ப்பதை நோக்கமாகவும், தனி குர்திஸ்தான் கோரிக்கையாகவும் மாறியுள்ளது. படுகொலைச் செய்யப்பட்ட பெண் மாசா அமினி குர்திஷ் தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோமாலா (Komala) எனும் குர்திஷ் இடதுசாரி அமைப்பும், PKK எனும் குர்திஷ் தொழிலாளர் கட்சியும் தங்களின் நீண்டநாள் கோரிக்கையான தனி குர்திஸ்தான் முழக்கத்தை வலுப்படுத்தியுள்ளன. இப்போராட்டத்தை குர்திஷ் இனப் போராட்டமாகவும், ரைசி ஆட்சிக்கெதிரான போராட்டமாகவும் மாற்றி வருகின்றன.

மறுபுறம் அரசுக்கு ஆதரவான கட்சிகள் மக்களை திரட்டி ஹிஜாப் சட்டத்திற்கு ஆதரவாகவும் குர்திஷ் தேசிய இனத்திற்கு எதிராகவும் குரலெழுப்பி வருகின்றன. குர்திஷ் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத மதவாத பிற்போக்கு அரசு மக்களை மதவாத அடிப்படையிலும் இனவாத அடிப்படையிலும் பிளவுபடுத்தி அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது. நெருக்கடியின் சுமைகளுக்கு சொந்த நாட்டு மக்களை பலிகடாவாக்கி வருகிறது. போராடும் கட்சிகளை பயங்கரவாதக் குழுக்கள் என அறிவித்து IRGC (Islamic Revolutionary Guards Cops) எனும் காவல்படை மூலம் கோமாலா குழுக்களின் தளங்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. அவர்களின் அரசுக்கெதிரான போராட்டங்களை முடக்கி வருகிறது. ஹிஜாப் மற்றும் அறநெறி போலீசுக்கெதிரான முழக்கங்களை விட தனி குர்திஸ்தான் கோரிக்கையையும் ஆட்சிக்கெதிரான முழக்கங்களையும் கண்டுதான் ரைசி அரசு ஆத்திரமடைந்து கொலைவெறி தாக்குதல்களை அதிகரித்துள்ளது. தொடர் மக்களின் போராட்டங்களை தாக்குபிடிக்க முடியாமல்தான் தனது ஆட்சியை தக்கவைக்க தற்காலிக தீர்வாக அது அறநெறி போலீஸ் படையை கலைத்துள்ளதாக தெரிகிறது.

போராட்டத்தில் கொல்லப்பட்ட மக்களின் பிணங்கள் மீது வட்டமடிக்கும் ஏகாதிபத்திய வல்லூறுகள்

'அரபு வசந்தம்' என்ற பெயரில் பல வண்ணப் புரட்சிகள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளிலும், அரபு நாடுகளிலும் கலகங்களை தூண்டி தனது பொம்மை ஆட்சியை நிறுவியது அமெரிக்க ஏகாதிபத்தியம். அடிபணியாத ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் அரசுகளின் மீது நேரடி யுத்தத்தை தொடுத்தது. சதாம் உசேன் ஆட்சியை வீழ்த்திய பிறகு ஈராக்கிலும் தனது பொம்மை ஆட்சியை உருவாக்கியது. அவ்வகையில் ஈரானில் தற்போது நடைபெற்று வரும் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்களையும் தனக்குச் சாதகமாக மாற்றத் துடிக்கிறது.

ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்தி 290 பயணிகளை கொன்றது; இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈரானின் IRGC படையின் தலைவர் சுலைமானியை படுகொலை செய்தது; 2015ஆம் ஆண்டு தெஹ்ரான் அணு ஆயுத ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறியது; ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது என பல இன்னல்களை ஏற்படுத்தி ஈரானை தனிமைப்படுத்தி அடிபணிய வைக்கும் அமெரிக்காவின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவின. ஈரான் அரசு தொடர்ச்சியாக ரஷ்ய-சீன முகாமுடன் உறவைப் பேணி வருவது அமெரிக்காவிற்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. அந்நாட்டின் எண்ணெய் - எரிவாயு வளங்களில் தனது மேலாதிக்கத்தை நிறுவவும் சீன-ரஷ்ய முகாமின் மேலாதிக்கத்தை வீழ்த்தவும் அது தொடர்ந்து முயற்சித்தே வருகிறது.

அதனடிப்படையிலேயே, ஈரான் மக்களின் கட்டாய ஹிஜாப் சட்டதிற்கெதிரான இப்போராட்டத்தையும், தனி குர்திஸ்தான் கோரிக்கையை வைக்கும் அமைப்புகளுக்கு சிஐஏ (CIA) மூலம் ஆதரவளித்து வருகிறது. ஐ.நா.வில் பேசிய பைடன் "ஈரானின் துணிச்சலான குடிமக்களுடனும் பெண்களுடனும் தானும் ஒன்றிணைந்து நிற்பதாக" பேசினார். ஈரானை விட மிக மோசமான பிற்போக்குத்தனங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் தன் பொம்மை அரசாளும் சவுதி அரேபியாவின் போக்குகளை துளியும் கண்டித்திராத அமெரிக்கா, ஈரானில் மட்டும் அது ஜனநாயக கோரிக்கை என ஊளையிடுகிறது. ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு என்ற பெயரில் ஈரானில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தி தனது பொம்மை அரசை நிறுவ முயல்கிறது.

ஈரான் ரைசி அரசு போராட்டக்காரர்களுக்கு இணைய சேவையை முடக்கியிருந்தது. அப்போது அமெரிக்க பைடன் அரசு, அமெரிக்க பில்லியனர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்டார் லிங் (Star link) மூலம் இணைய சேவையை வழங்கியுள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு சட்டங்களை காலில் போட்டு மிதித்துள்ளதோடு ஈரானின் இறையாண்மையை மீறும் வகையில் இச்செயலில் ஈடுபட்டுள்ளது.

தெஹ்ரான் அணுஆயுத ஒப்பந்தத்தில் தனது நலன்களையும் ஆதிக்கத்தையும் அதிகரிக்க ஈரான் அரசை அடிபணிய வைக்கும் முயற்சியிலேயே அமெரிக்கா தற்போது ஈடுபட்டு வருகிறது. அதனால்தான் ஈரானின் அந்த ஒப்பந்த முயற்சிகளுக்கு பிடிகொடுக்க மறுக்கிறது. ஈரான் மீது பொருளாதார தடை விதித்து அம்மக்களை நெருக்கடியில் ஆழ்த்தி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்சமயம் சில தடைகளை மக்களின் நலன்களுக்காக தளர்த்துவதாக நாடகமாடுகிறது. ஈரானிய மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது பைடன் அரசு.  

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த சில ஏகாதிபத்திய என்.ஜி.ஓ (NGO) நிறுவனங்களும், இஸ்ரேல் அமைப்புகளும் ஈரானில் கலகங்களை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களின் பிராந்தியங்களில் உள்ள ஈரானிய தூதரகங்களின் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்ய - சீன ஏகாதிபத்தியங்கள் தங்களின் அடிமை அரசான ரைசி அரசை பாதுகாப்பதற்காக ஈரானில் நடைபெற்று வரும் படுகொலைகளை பற்றி வாய்திறக்க மறுக்கின்றன. ரஷ்யா உக்ரைனில் நடத்தி வரும் படுகொலைகளையும் ஈரான் அரசு கண்டிக்கவில்லை. இவர்களுக்குள் பரஸ்பரம் அமைதி காக்கின்றன. ஈரான் ஆளும் வர்க்க நலன்கள் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுடன் வலைபின்னனில் இணைக்கப்பட்டுள்ளதாலேயே ஈரானின் இந்த பிற்போக்கு மதவாத அரசு இந்த ஏகாதிபத்திய முகாமால் பாதுகாக்கப்படுகிறது.

ஏகாதிபத்தியங்களின் இந்த தலையீடுகளால்தான் ஈரானிய ஹிஜாப் போராட்டம் சர்வதேச பார்வையை எட்டியுள்ளது. இப்போராட்டத்தை தனக்கு சாதகமாக்கி இரத்தம் குடிக்க அலைகின்றன இந்த பிணம்திண்ணி வல்லூறுகள்.

ஈரானின் போராடும் மக்களுக்கு

தற்போது  ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கெதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் அந்நாட்டு உழைக்கும் வர்க்க மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். ஈரானின் ரைசி அரசின் மதவாத ஆட்சிக்கு எதிராகப்  போராடும் இவ்வேளையில் அப்போராட்டம் அவ்வரசின் எஜமானனாக விளங்கும் ரஷ்ய-சீன ஏகாதிபத்திய ஆதிக்கங்களையும் எதிர்த்த போராட்டங்களாக வடிவம் பெற வேண்டும். அதேசமயத்தில் இப்போராட்டங்களை பயன்படுத்தி ரைசி அரசை விழ்த்தி தனது பொம்மை அரசை நிறுவ முயலும் அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முயற்சிகளுக்கு பலியாகிவிடாமல் உள்நாட்டு யுத்தக் கொள்கையை உயர்த்திப் பிடித்து  இதை நீதி யுத்தமாக மாற்றும் வகையில் முன்னேற வேண்டும்.

ஈரான் உழைக்கும் மக்கள் தங்களுக்கான சுதந்திர அரசை அமைக்கும்போதுதான் மதவாத- ஆணாதிக்க பிற்போக்குத் தனங்களிலிருந்து முழுமையாக விடுதலையடைய முடியும். எவ்வாறாயினும் ஈரான் பெண்களின் இந்த உணர்ச்சிமிக்க போராட்டங்கள் நம்நாடு மக்களுக்கு ஒருபடிப்பினையே. அவர்களிடமிருந்து போராட்ட உணர்வை கற்றுக் கொள்ள வேண்டும்.

படிக்க : ஹிஜாப் தடை: பகுதி-1 இசுலாமியப் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் இந்துத்துவப் பாசிசம்

ஹிஜாப் தடை: பகுதி-2

ஈரானில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான நிலைபாடும் - இந்தியாவில் ஹிஜாப் தடைக்கு எதிராக் போராடும் இசுலாமியர்களுக்கு ஆதரவான நிலைபாடும் வெவ்வேறல்ல ஒன்றே!

அனைத்து மதங்களும் அதன் நம்பிக்கைகளும் பிற்போக்கனவையே. அனைத்து மதங்களும் ஒழிக்கப்படவேண்டியவை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் ஒருவர் எந்த மதத்தை பின்பற்றி ஒழுகவும், அல்லது மத நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றாமல் இருப்பதற்கும் அவர்களை அனுமதிப்பதென்பது குறைந்தபட்ச ஜனநாயக கடமையேயாகும். அதேபோல்தான் மத அடையாளமாக இருக்கும் ஹிஜாப்பை அணிவதும் அணிய வேண்டாம் என முடிவெடுப்பதும் பெண்களின் தனி விருப்பம். ஈரானில் மதத்தின் பெயரால் ஹிஜாப்பைக் கட்டாயப்படுத்தி திணிப்பதும், இந்தியாவில் சிறுபான்மை இசுலாமியர்களை ஒடுக்க அவர்களின் மத நம்பிக்கைகளை பறிக்க ஹிஜாப் தடையை அமல்படுத்துவதும் இசுலாமிய பெண்களின் மீதான வன்முறையே. எனவேதான் இந்த இரண்டு அரசு பயங்கரவாத தாக்குதல்களையும் நாம் கண்டிக்கிறோம். ஈரானில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராடும் பெண்களையும் மக்களையும் ஆதரிக்கிறோம்; ரைசி அரசை எதிர்க்கிறோம், அதேவேளையில் இந்தியாவில் ஹிஜாப் தடைக்கெதிராக போராடும் இசுலாமியர்களை ஆதரிக்கிறோம்; பாஜக அரசை எதிர்க்கிறோம். இரண்டிலும் ஏகாதிபத்தியங்களுக்கெதிராக அணிதிரள அழைக்கிறோம்.   

- சமரன்

(ஜனவரி 2023 இதழிலிருந்து)