திரைக்கவர்ச்சியை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வதை துவக்கி வைத்தது திமுக.

வாசுகி பாஸ்கர்

திரைக்கவர்ச்சியை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வதை துவக்கி வைத்தது திமுக.

த.வெ.க துவங்கப்பட்டதில் இருந்து அதன் தொண்டர்கள் இன்னும் ரசிகர்கள் என்கிற மனநிலையிலிருந்து விடுபடாமல் இருப்பதை, முதல் மாநாடு துவங்கி கரூர் வரை விவாதிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் மட்டும் ஏன் இந்த நிலை நீடிக்கிறது என்பது நீண்ட விவாதம்.  

தமிழகத்தில் தியாகராஜ பாகவதருக்கு இருந்த ரசிகர்கள், குறிப்பாக பெண் ரசிகர்கள் இதுவரை வேறு எந்த நடிகருக்கும் சாத்தியப்படவில்லை என்று சொல்வார்கள். இந்த வரிசையில் இந்த திரை கவர்ச்சியை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வதை துவக்கி வைத்தது திமுக. 

நாடோடி மன்னன் வெற்றி பெற்ற பிறகு மதுரையில் பிரம்மாண்ட கூட்டமும் ஊர்வலமும் நடந்தது.  நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் எம்ஜிஆர் அமரவைக்கப்பட்டு இருக்கிறார். தாமரை மீது சூரியன் எழுவது போன்ற பின்னணி கொண்ட தேர். யானைகள் எம்ஜிஆருக்கு மாலையிட்டது. மலர் குவியலுக்கு நடுவே இருந்தார் எம்ஜிஆர். அண்ணா தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் அண்ணா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உரையாற்றினார்கள். 

கற்பனை செய்து பார்க்க முடியாத பெரிய மாலைகள் எம்ஜிஆருக்குச் சூட்டப்பட்டன. குறைந்தது பத்தாயிரம் ரோஜாக்களால், பத்து பேர் எட்டு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே செய்யக்கூடிய ரோஜா மாலை அது. பின் இவை 'எம்ஜிஆர் மாலைகள்' என்றே பெயரிடப்பட்டது. 

முப்பதில் இருந்து அறுபது அடி உயரத்தில் மின்விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட கட் - அவுட்டுகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பொதுவெளியிலையே எம்ஜிஆரின் காலில் விழுவது இங்கு தான் தொடங்கியிருக்கிறது. அதற்குப்பிறகு இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதை திமுக தனது வாடிக்கையாகவே கொண்டு விட்டது என குறிப்பிடுகிறார் எம்.எஸ். பாண்டியன். எம்.ஜி.ஆர் தன்னலமற்ற வள்ளல் என்கிற கருத்து நிலைபெற்றதில் அண்ணாதுரையின் பங்கு முக்கியமென்கிறார். இத்தகைய கூட்டங்களில் கலந்து பேசிய அண்ணாவின் வார்த்தைகளையே மேற்கோளிடுகிறார். 

'பெரு மழையாலோ, புயலாலோ அழிவு ஏற்பட்டால் எம்ஜிஆரின் உதவும் கரங்களை ஒருவர் பார்க்கலாம். கொடுப்பவன் தன்னைத்தேடி வருபவர்களின் கண்ணீரைத் துடைப்பவன்...எம்ஜிஆர் வேறுபட்டவர். அவர் துன்பப்படும் மக்களைத் தேடிச்சென்று அவர்களை கண்ணீரைத் துடைப்பவர், வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல் அவர்'

இவையெல்லாமே எம்ஜிஆர் என்கிற திரை பிம்பம் திமுகவின் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வதற்காக என்னெவெல்லாம் செய்தது என்பதற்கான ஆவணங்கள். எம்.எஸ்.பாண்டியன் திராவிட ஆதரவாளர், எம்ஜிஆர் தன்னை எப்படி பிம்பமாக கட்டமைத்துக்கொண்டார் என்பதனை ஆய்வு செய்யும் போது, திமுகவை குறிப்பிடாமல் அவரால் இருக்க முடியாது. அதனால் சில பகுதிகளில் மட்டும் திமுக எப்படி எம்ஜிஆரை பயன்படுத்திக்கொண்டது என்பதை மேற்கோளிட்டு, எம்ஜிஆர் என்கிற தனி பிம்பம் எப்படி ஆட்சி அமைத்தது என்பதை நோக்கி நகர்ந்து விடுகிறார். 'பிம்பம்' என்பதை மட்டுமே தனி கருப்பொருளாக வைத்து ஆய்வு செய்தால், இன்னும் முக்கியமான பார்வைகள் நமக்கு கிடைக்கும். அதை இன்றைய அரசியல் வரை பொருத்திப் பார்க்கவும் முடியும்.  

திமுகவின் முதல்நிலை தலைவரான ஈ.வெ.கி. சம்பத் கட்சியை விட்டு விலகிய போது, திமுகவில் சினிமா காரர்களுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை முக்கிய காரணமாக சொன்னார். 

எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை துவங்காமல், திமுக காரராகவே வாழ்ந்து கரைந்து இருந்திருப்பாரேயானால், இப்படியொரு ஆய்வை எம்.எஸ்.பாண்டியன் செய்திருப்பாரா என்பதும் கேள்விக்குறி தான்.   

நடிகர் விஜய்யின் வருகைக்கு பின்னாலான இந்த கலாச்சாரமும், அரசியலற்ற கூட்டமும் என கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விமர்சித்து வரும் திமுக சார்பாளர்களின் விமர்சனமென்பது உண்மையில் இந்த கூட்டத்தின் மீதான கரிசனம் அல்ல. அந்த கூட்டம் திமுகவுக்கு பயன்படவில்லையே என்பது மட்டும் தான். விஜய் கடும் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்து இது நிகழ்ந்திருந்தால், இதற்கு இவர்கள் உருவாக்கும் பேசுபொருளே வேறாக இருந்திருக்கும்.'பாட்டாளிவர்க்க மக்களின் முரட்டுத்தனமான இந்த அன்பை கொச்சைப்படுத்துவது பார்ப்பனீயம்' என்று கூட திராவிட அறிஞர்கள் எழுதியிருப்பர். 

இதுவே இங்குள்ள அரசியல் கலாச்சாரமாக இருக்கும் போது, அவை தேவை கருதி ஊக்குவிக்கப்படுவதும், பயன்படுத்திக் கொள்வதுமாக இருக்கும் போது, இந்த விவாகரத்தை தத்துவார்த்தமாக அணுகி,  ஆய்வுக்குட்படுத்தி, உண்மைத்தன்மையோடு பேசும் சூழல் எப்படி இருக்கும்? அதற்கான காலம் வர வேண்டும்.

வாசுகி பாஸ்கர்

https://www.facebook.com/share/p/1C2MRc6EF7/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு