‘பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்’ என்ற நூலுக்கும் இப்புகைப்படத்துக்கும் உள்ள தொடர்பு
கே. என். சிவராமன்
பிடித்த புகைப்படங்களில் ஒன்று இது. லெனின் செஸ் விளையாடுகிறார். எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி ஆட்டத்தை ரசிக்கிறார். அதனால்தானா?
இல்லை. லெனினின் புகழ் மகுடத்தில் பதிந்த வைரங்களில் ஒன்றாகத் திகழும் ‘பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்’ என்ற நூலுக்கும் இப்புகைப்படத்துக்கும் தொடர்பு இருக்கிறதே... அதுதான் இப்புகைப்படம் பிடிக்கக் காரணம்.
ஏனெனில் லெனினுடன் செஸ் விளையாடுபவர் வேறு யாருமல்ல போக்டனோவ்தான்.
சற்று விளக்கமாக சொன்னால்தான் இப்புகைப்படம் ஏன் பிடித்திருக்கிறது... ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரியும்.
1907ம் ஆண்டு ரஷ்யாவில் தலைமறைவாக லெனின் வாழ்ந்து வந்தார். ‘ஜெர்னோ’ என்ற புத்தக வெளியீட்டாளர், அதுவரை லெனின் எழுதிய படைப்புகளை தொகுத்து புத்தகமாக கொண்டு வர முடிவு செய்தார். ‘பனிரெண்டு ஆண்டுகள்’ என்பது தலைப்பு. அதாவது 1895 - 1907 காலத்தில் லெனின் எழுதிய படைப்புகள்.
இதன் அடிப்படையில் 1907 நவம்பரில் முதல் பாகம் வெளிவந்தது. ஜாராட்சியின் காவல்துறை இப்புத்தகத்தை பறிமுதல் செய்தது. தப்பிப் பிழைத்த பிரதிகள் ரஷ்யா எங்கும் தொழிலாளர்கள் மத்தியில் கந்தலாகி கசங்கிய நிலையிலும் படிக்கப்பட்டது.
இரண்டாம் பாகம், விவசாயிகள் தொடர்பாக லெனின் எழுதியவைகளின் தொகுப்பு. ஜாராட்சியை ஏமாற்ற சட்டப்பூர்வமாக ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த படைப்புகளை முதல் தொகுதியாகவும் (2ம் பாகத்தின் முதல் தொகுதி), சட்டப்பூர்வமற்றதை இரண்டாம் தொகுதியாகவும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதல் தொகுதி ‘விவசாயப் பிரச்னை’ என்ற தலைப்பில் 1908ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்தது.
இரண்டாம் தொகுதிக்கு லெனின் வைத்திருந்த பெயர், ‘1905 - 1907 ரஷ்ய புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் விவசாயக் கொள்கை’.
இந்த இரண்டாம் தொகுதி அச்சாகிக் கொண்டிருந்த நேரத்தில் ஜாராட்சியின் காவல்துறை பிரஸ்ஸுக்குள் புகுந்து பிரிண்ட் ஆன அனைத்தையும் பறிமுதல் செய்தது.
ஒரேயொரு பிரதி மட்டும் ஒரு தோழரால் எப்படியோ காப்பாற்றப்பட்டது. அதிலும் கடைசியில் பல பக்கங்கள் இல்லை. இப்படிக் காப்பாற்றப்பட்ட பிரதி 1917ம் ஆண்டு லெனினுக்கு கிடைத்தது. கடைசிப் பகுதியை மீண்டும் எழுதி சேர்த்து புத்தகமாக கொண்டு வந்தார்.
1903ம் ஆண்டு ‘கிராமப்புற ஏழைகளுக்கு’ என எளிமையான ஒரு பிரசுரத்தை - நூலை - லெனின் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சி என ‘1905 - 1907 ரஷ்ய புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் விவசாயக் கொள்கை’ புத்தகத்தை சொல்லலாம்.
ஆனால், கட்சி அணிகளுக்கு மேலும் நுணுக்கமான ஆய்வாக இந்நூல் திகழ்ந்தது.
இதுதான் லெனின்.
அவர் எழுதிய எந்தப் படைப்பையும் - புத்தகத்தையும், பிரசுரத்தையும் - தனித்து பார்க்கவே முடியாது. ஏனெனில் லெனினின் எழுத்துக்கள் அணிகள் / குழுக்கள் / கட்சியை மனதில் கொண்டு எழுதப்பட்டவை. ஓர் இயக்கத்தை நடைமுறை ரீதியில் வழிநடத்த தேவையான சித்தாந்தங்களை கொண்டவை.
அதுவும் ஒவ்வொரு கட்டத்துக்கும் - இடைக்கட்டத்துக்கும்; ஒவ்வொரு அளவு மாற்றத்துக்கும்; ஒவ்வொரு பண்பு மாற்றத்துக்கும்; அந்தப் பண்பு மீண்டும் அளவு மாற்றத்துக்கு ஆளாகும் தருணத்துக்கும்... என குழு / கட்சிக்கான மிகச்சிறந்த வழிகாட்டியாகத் திகழ்பவை.
அதனால்தான் கட்சியினர் மத்தியில் லெனினின் எழுத்துக்கள் உலகெங்கும் பலமான தாக்கத்தை இன்றும் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.
குழு / அணி / கட்சியில் ஒரு பிரச்னையா... போர்த்தந்திரத்துக்கு ஏற்ற செயல்தந்திரம் வகுப்பதில் குழப்பமா... உடனே அதற்கான வழிகாட்டலை லெனினின் படைப்புகளில் தேடலாம்; கண்டறியலாம்.
தேவையான tool kit நிச்சயம் லெனின் படைப்புகளில் இருக்கும்; இருக்கின்றன. அதைக்கொண்டு பிரச்னை - முரண்பாட்டை தீர்க்கலாம்; செயல்தந்திரத்தை வகுக்கலாம்.
இதனால்தான் குழு / கட்சி சாராத, அதேநேரம் தங்களை ‘கட்சிசாரா’ மார்க்சியவாதிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் லெனின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ்... ஆகியோரைச் சுற்றியே தங்கள் படைப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழில் இதற்கு மிகச் சிறந்த உதாரணம் எஸ்.வி.ராஜதுரை. விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் லெனின் குறித்து எழுதியிருக்கிறார். அதுவே மார்க்ஸ் குறித்து 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறார்.
புகைப்படத்தைக் குறித்து பேச வந்து தொடர்பே இல்லாமல் எங்கெங்கோ சுற்றுவதாக கோபம் / எரிச்சலுடன் சட்டையைப் பிடிக்காதீர்கள். விஷயத்தை விளக்க இந்த முன்குறிப்புகள் தேவை.
ரைட். இதற்கு மேலும் ரஷ்யாவில் தலைமறைவாக வாழ முடியாது என்ற நிலையில் ஜாராட்சியின் காவலர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஸ்வீடனில் உள்ள ஸ்டாக் ஹோம் நகருக்கு போய்ச் சேர்ந்தார்.
அதுவும் ரஷ்ய உளவாளியிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து பனியில் குதித்து, வென்பனிப் புயலில் உறைந்த கடலில் நள்ளிரவில் நடந்து... தொலைவில் இருந்த தீவை அடைந்து... அங்கிருந்து கப்பலில் ஸ்டாக் ஹோம் சென்றார்.
குரூப்ஸ்காயா அங்கு வந்து சேர்ந்ததும் இருவரும் 1908ம் ஆண்டு ஜனவரி 7 அன்று ஜெனீவா வந்து சேர்ந்தார்கள்.
போல்ஷ்விக் மையம் எடுத்த முடிவின்படி ஜெனீவாவில் இருந்து ‘பாட்டாளி’ பத்திரிகையை கொண்டு வருவதற்கான வேலையில் இறங்கினார். பத்திரிகையில் இலக்கிய பக்கமும் இடம்பெற வேண்டும் என்பதற்காக பிப்ரவரி மாதம் மாக்சிம் கார்க்கிக்கு கடிதம் எழுதினார்.
லெனின், போக்டனோவ், டூப்ரோவின்ஸ்கி ஆகிய மூவர் கொண்ட ஆசிரியர் குழுவினரின் தலைமையில் திட்டமிட்டபடி ‘பாட்டாளி’ ஜெனீவாவில் இருந்து வெளிவரத் தொடங்கியது.
ஆமாம் போக்டனோவ்தான். புகைப்படத்தில் லெனினுடன் செஸ் விளையாடுகிறாரே... அவரேதான்.
போக்டனோவ் (Alexander Bogdanov) மருத்துவம் படித்தவர். தத்துவத்தில் நாட்டமுடையவர். ‘இயற்கை பற்றிய சரித்திர நோக்கு’ என்ற புத்தகத்தை 1900களின் தொடக்கத்திலும், ‘அனுபவ - ஒருமைவாதம்’ என்ற நூலை 1904ம் ஆண்டும் எழுதியிருந்தார்.
இவை மார்க்சியத்தில் இருந்து விலகியவை என கடுமையாக விமர்சித்திருந்தார் பிளெகானவ்.
இச்சூழலில்தான் 1905 - 1907ம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி அரங்கேறி தோல்வி கண்டது.
இந்தத் தோல்வி ‘மார்க்சிய அறிவுஜீவிகள்’ மத்தியில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.
இப்படித் தடுமாறியவர்களில் போக்டனோவ்வும் அடக்கம். கவனிக்க ‘பாட்டாளி’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த மூவரில் ஒருவர் தடுமாற்றத்தில் இருந்தார்!
மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் உருவாக்கியிருந்த ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம்’ என்னும் விஞ்ஞானத்தை கைவிட வேண்டும் என்ற நிலைக்கு போக்டனோவ் வந்தார். அந்த இடத்தில் எர்னஸ்ட் மேக் (1838 - 1916) மற்றும் ரிச்சர்ட் அவனாரியஸ் (1843 - 1896) ஆகிய ஜெர்மன் தத்துவ கருத்துமுதல்வாதிகளின் ஆத்திக சிந்தனையை பொருத்தப் பார்த்தார்.
1905 - 1907ம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சியின் தோல்வியை அடுத்து இந்தக் கருத்துப் போக்குக்கு ஆதரவு அதிகரித்தது. 1908ம் ஆண்டு போக்டனோவ் உள்ளிட்ட எழுவர் எழுதிய ‘மார்க்சிய தத்துவத்தில் ஆய்வுகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது.
இப்புத்தகத்தை லெனின் படித்து முடிக்கவும், ‘பாட்டாளி’ இதழுக்கு மாக்சிம் கார்க்கியின் கட்டுரை ஒன்று தபாலில் வந்து சேரவும் சரியாக இருந்தது.
இக்கட்டுரையின் ஒரு பகுதி, போக்டனோவ்வின் கருத்தை தாங்கியிருந்தது. ‘பாட்டாளி’ ஆசிரியர் குழுவில் போக்டனோவும் இருந்தார்.
இந்நிலையில் மாக்சிம் கார்க்கிக்கு எழுதிய கடிதத்தில் லெனின் -
‘‘உங்களது கட்டுரையை ஒருமுறைக்கு இருமுறை படித்த பிறகு நான் போக்டனோவ்விடம் இதை வெளியிடக் கூடாது என்று கூறினேன். அவரது முகம் இடி இடிக்கத் தயாராக இருக்கும் மேகமாக கருத்தது...
... உங்களது கட்டுரையை பொறுத்தவரை விஷயத்தை தள்ளி போடுவது என்றும், ஆசிரியர் குழுவை சேர்ந்த மூவரும் உங்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதுவது என்றும் தீர்மானமானது...’’
- என குறிப்பிட்டார். அத்துடன் 1908 ஏப்ரலில் இத்தாலி நாட்டிலுள்ள காப்ரி என்னும் தீவுக்கு லெனின் சென்றார்.
அங்குதான் மாக்சிம் கார்க்கி வசித்து வந்தார். லெனின் செஸ் விளையாடியது அங்குதான். அதுவும் போக்டனோவ்வுடன்!
செஸ் ஆடியபடியே போக்டனோவிடம் தத்துவரீதியாக, தான் வேறுபடுவதை லெனின் எடுத்துரைத்தார். அவரது தத்துவத்தில் இருக்கும் பலவீனங்களை பட்டியலிட்டார்.
இது குறித்து மாக்சிம் கார்க்கி பதிவு செய்திருக்கிறார்.
‘‘‘தெளிவாகச் சிந்திப்பவன் தெளிவாக விளக்குவான் என்கிறார் ஷோப்பென்ஹார். இதைவிட சிறந்தது எதையும் அவர் சொல்லவில்லை என்று நான் நினைக்கிறேன்.
தோழர் போக்டனோவ்... நீங்கள் தெளிவின்றி பேசுகிறீர்கள். உங்களுடைய மாற்றுக் கொள்கை தொழிலாளி வர்க்கத்துக்கு என்ன தருகிறது என்பதையும், ஏன் மேக்கியவாதம் மார்க்சியத்தை விட புரட்சிகரமானது என்பதையும் இரண்டு, மூன்று வாக்கியங்களில் எனக்கு விளக்குங்கள்...’ என்றார் லெனின்.
போக்டனோவ் விளக்க முற்பட்டார். ஆனால், அவர் மெய்யாகவே தெளிவில்லாமல் வளவளவென்று பேசினார்.
‘சரி விடுங்கள்! யாரோ ஒருவர் யுவாரெஸ் என்று நினைக்கிறேன். சொன்னார். உண்மை பேசுவது அமைச்சராக இருப்பதை விட மேல் என்று. மேக்கியவாதியாக இருப்பதை விட என்பதையும் நான் சேர்த்திருப்பேன்’ என்றார் லெனின்.
இதன் பின் அவர் போக்டனோவ்வுடன் உற்சாகமாக சதுரங்கம் ஆடினார்...’’ என மாக்சிம் கார்க்கி பதிவு செய்திருக்கிறார்.
கவனிக்க... எதிரிகளிடம் மோதுவது போல் சக தோழரிடம் லெனின் மோதவில்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இத்தனைக்கும் கட்சிப் பத்திரிகையான ‘பாட்டாளி’யின் ஆசிரியர் குழுவில் இருப்பவர்தான் போக்டனோவ்.
அவர் மீது முரண்பாடு எழுந்தபோதும் அதை தோழமையுடன் அமர்ந்து தீர்க்கவே லெனின் முயன்றிருக்கிறார்.
மட்டுமல்ல... நல்ல தோழர்களை முதலாளித்துவ கருத்தியல்கள் எப்படியெல்லாம் சிதைக்கின்றன என மாக்சிம் கார்க்கியிடம் கவலையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதையும் கார்க்கி பதிவு செய்திருக்கிறார்.
‘‘போக்டனோவ், லூனாச்சார்ஸ்கி (இன்னொரு தோழர்) ஆகியோர் அறிவாளிகள். திறமையுள்ளவர்கள். ஆனால், நம்முடன் வரமாட்டார்கள். இவர்களால் வர முடியாது. இம்மாதிரி பலநூறு தோழர்களை முதலாளித்துவம் சிதைக்கிறது...
... லூனாச்சார்ஸ்கி கட்சிக்கு திரும்பி விடுவார். இதரர்களை விட குறைந்த ஆணவம் கொண்டவர். அரிய இயற்கைத்திறன் வாய்ந்தவர். எனக்கு அவர் விஷயத்தில் ஒரு பலவீனம் உண்டு. சீ... என்ன அறிவற்ற சொற்கள். நான் அவரை நேசிக்கிறேன். சிறந்த தோழர் அவர்...’’
மாக்சிம் கார்க்கியிடம் லெனின் பகிர்ந்து கொண்டபடியேதான் பிற்காலத்தில் நடந்தது.
ஆனால், லூனாச்சார்ஸ்கி போன்ற நல்ல தோழர்கள் கட்சியில் உறுதியுடன் நிலைக்க வேண்டுமென்றால், மாக்சிம் கார்க்கி போன்ற எழுத்தாளர் தடம் புரளாமல் இருக்க வேண்டுமென்றால் -
வெறும் பேச்சும், கடிதங்களும் மட்டும் போதாது... எதிர்த் தத்துவங்களின் பொய்மையை அடையாளம் காட்டுவதே இதற்கான ஒரே வழி...
முடிவுக்கு வந்ததும் தத்துவம் சார்ந்த நூல் தயாரிப்பில் லெனின் இறங்கினார். ஜெனீவாவில் இருந்த ‘சொசைட்டி டி லெக்சர்’ நூலகத்தில் இருந்த தத்துவ புத்தகங்கள் அனைத்தையும் படித்து குறிப்புகளை எடுத்தார்.
ஏங்கல்ஸின் புகழ்பெற்ற ‘டூரிங்குக்கு மறுப்பு’ புத்தகம் லெனினுக்கு மிகவும் பயன்பட்டது.
அத்துடன் தத்துவ நூலை எழுதுவதற்காகவே 1908ம் ஆண்டு மே மாதம் லண்டன் சென்று ‘பிரிட்டிஷ் மியூசிய நூலக’த்தில் இருந்த தத்துவ, அறிவியல் நூல்களைப் படித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டார்.
இப்படி பெரும் புத்தக வேட்டையாடி தனது தத்துவ நூலை அதே ஆண்டு - 1908 - அக்டோபர் மாதம் எழுதி முடித்தார் லெனின்.
அதன் பெயர்: ‘பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சன வாதமும் - ஒரு பிற்போக்கு தத்துவத்தின் மீதான விமர்சனப் பூர்வ கருத்துகள்’.
லெனினின் தமக்கை அன்னாவின் உதவியோடு 1909ம் ஆண்டு மே மாதம் இப்புத்தகம் வெளிவந்தது.
லெனின் எழுதிய முதலும் கடைசியுமான தத்துவ நூல் இதுவே.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல் முதல்முறையாக தமிழில் வெளிவந்திருக்கிறது. மூத்த தோழரான எஸ்.தோதாத்ரியும், மணியமும் இணைந்து தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். நூலின் உள்ளடக்கத்தை கவனத்தில் கொண்டு அழகிய முறையில் ‘அலைகள்’ பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.
பொருத்தமான நேரத்தில்தான் தமிழில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது.
சர்வதேச, தேசிய, தமிழக அளவில் மார்க்சிய லெனினிய அமைப்புகள் - குழுக்கள் - கட்சிகள் பிளவுகளை சந்தித்து வரும் நேரம் இது.
இந்தநேரத்தில் தத்துவ தளத்தில் ஒவ்வொருவரும் எப்படி வலுவாக நிற்க வேண்டும் என்பதை ‘பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் - ஒரு பிற்போக்கு தத்துவத்தின் மீதான விமர்சன ஆய்வு’ புத்தகம் கற்றுத் தருகிறது; தடுமாற்றத்தை எதிர்கொள்ள ஓர் ஆயுதமாக கிடைத்திருக்கிறது.
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தில் ஏற்படும் தடுமாற்றம் சர்வநிச்சயமாக வரலாற்று பொருள்முதல்வாத கருத்தில் எதிரொலிக்கும். அது குழு / அமைப்பு / கட்சியின் செயல்தந்திரத்தை செயல்படாத தந்திரமாக முடக்கிவிடும்.
லெனின் இதைத்தான் உணர்த்துகிறார்.
அதனாலேயே இந்தப் புகைப்படம் பிடிக்கும்.
எதிரியை கையாள்வதுபோல் சக தோழர்களை அணுகக் கூடாது... அமைப்பு / குழு / கட்சிக்குள் எழும் முரண்பாடுகளை தோழமையுடன் பரிசீலிக்க வேண்டும்... கட்சிப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் கூட முதலாளித்துவ தடுமாற்றங்களுக்கு ஆட்படுவார்கள்... எனவே சீர்குலைக்கும் கருத்தியல்களை எதிர்த்து ஒவ்வொரு அமைப்பு / குழு / கட்சித் தோழரும் தொடர்ந்து போராடியபடியே இருக்க வேண்டும்...
இப்புகைப்படமும் இந்தப் புத்தகமும் இதைத்தான் சர்வதேச அளவில் பாட்டாளிகளுக்கு அறிவுறுத்தியபடியே இருக்கிறது...
பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் - ஒரு பிற்போக்கு தத்துவத்தின் மீதான விமர்சன ஆய்வு
அலைகள் பதிப்பகம்
விலை: ரூ.500/-
தொடர்புக்கு: 9841775112
- கே. என். சிவராமன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு