விழிஞ்சம் துறைமுக ஊழலில் சிபிஎம் - பாஜக கூட்டு

தருமர் திருப்பூர்

விழிஞ்சம் துறைமுக ஊழலில் சிபிஎம் - பாஜக கூட்டு

கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உம்மன் சாண்டியின் தலைமையிலான அரசு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியில் சுமார் ரூ.7525 கோடி மதிப்பீட்டில் சர்வதேச துறைமுகத்தை அமைக்கும் பணியை தொடங்கியது.

கேரள அரசின் இத்திட்டமானது அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு (Public Private Partnership – PPP) என்ற அடிப்படையில் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த துறைமுக திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.7525 கோடியில் அதானி நிறுவனமானது வெறும் ரூ.2454 கோடி மட்டுமே முதலீடு செய்யும் என்றும், மீதமுள்ள தொகையானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பாக இருக்கும் என்றும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு (Public Private Partnership – PPP) திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அதே வேளையில் மீனவ மக்களை தங்களின் வாழ்விடங்களிலிருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விரட்டியடித்து வருகிறது.

விழிஞ்சம் துறைமுகம் என்பது இந்தியாவின் முதல் மெகா டிரான்ஸ்ஷிப்மென்ட் கொள்கலன் முனையமாக (Mega Transshipment Container Terminal) இருக்கும். ரூ.7,525 கோடி செலவில் கட்டப்படும் இது இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ள ஆழ்கடல் துறைமுகம் என்கிறது அதானி போர்ட்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் இணையதளம்.

₹7525/- கோடி என ஆரம்பித்து தற்போது கேரள அரசு ₹8867/- கோடி எனவும்,ஒன்றிய பாஜகஅரசு ₹18,000/- கோடி எனவும் மாற்றி மாற்றி செலவு கணக்கு சொல்கிறார்கள்.

தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கையோ, “சலுகை ஒப்பந்த காலம் முடிவடையும்போது திட்டத்தின் கட்டுமானத்தால் ரூ.5,608 கோடி வரை கேரள அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த ஒப்பந்த முறை கேரள அரசுக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக அதானி குழுமத்திற்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டுள்ளது” என்று எச்சரித்துள்ளது.

இதற்குப் பின்னரும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல வீராப்பாக விளம்பரம் கொடுக்கிறாகள்.பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து வாழ்வாரத்திற்கு உத்திரவாதம் கொடுப்பதாகச் சொன்ன வாக்குறுதி அதே விழிஞ்சியம் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு விட்டது.

இந்திய ஜனநாயகம் என்பது உழைக்கும் மக்களுக்கானது அல்ல 10% பெரும் பணக்காரர்களுக்கானது தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

- தருமர் திருப்பூர்

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02Y8grfyLzCrgv4e8mrWBzZFaFAGCTf4inBEfSegT2SAX9yGPRgRjDE2wDcSwfeDmUl&id=100004355291753&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு