மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி -1

அ.கா.ஈஸ்வரன்

மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி -1

மார்க்சியம் என்றால் என்ன?

லெனின்:- “மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல, இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது, சமூக வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிடுப்பென  நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாய் மார்க்சியம் பிரதிபலித்துக்காட்டவே செய்யும்.  ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும், பல வகைப்பட்ட ஊசலாட்டங்களிலும், சுருங்கச் சொன்னால் மார்க்சியத்துக்கு உள்ளேயே ஒரு மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்த மாறுதல்  பிரதிபலித்துக் காட்டப்பட்டது. இந்தச் சிதைவை எதிர்த்து மூர்தண்ணியமாகப் போராட வேண்டிய தேவை, மார்க்சியத்தின் அடிப்படைகளுக்காக மூர்தண்ணிமான, விடாப்பிடியான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது”

1) மார்க்சியம் என்றால் என்ன? 

காரல் மார்க்ஸ் தமது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதிய கருத்துக்கள் முழுமையும் மார்க்சியம் ஆகும். இவர் தமது கோட்பாட்டைத் தனது நண்பரான எங்கெல்சுடன் இணைந்து படைத்தார். 

2) எங்கெல்சின் பங்களிப்பு மார்க்சியத்தில் இருந்தும் அவர் பெயர் ஏன் இடம் பெறவில்லை? 

இதற்கு எங்கெல்ஸ் தமது காலத்திலேயே பதில் அளித்துவிட்டார். மார்க்சியக் கோட்பாட்டை உருவாக்குவதிலும் குறிப்பாக அக்கோட்பாட்டை விரித்துரைப்பதிலும் தமக்குப் பங்கு உண்டு என்றாலும் இதனை மார்க்சியம் என்று அழைப்பதே பொருத்தமானது என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார். மேலும் கூறுகிறார், ஏன் என்றால் சிறப்பாகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத் துறைகளில் மிகப் பெரும்பகுதியும், அனைத்துக்கும் மேலாக, அவற்றின் முடிவான, துல்லியமான வரையறுப்பும் மார்க்சின் பங்களிப்பாகும் என்கிறார். எல்லோரைக் காட்டிலும் மார்க்ஸ் உயர்ந்து நின்றார், அவர் ஒரு மேதையாக விளங்கினார், தம்மைப் போன்றோர்கள் திறமைசாலிகளே என்று எங்கெல்ஸ் தன்னடக்கத்துடன் விளக்கம் அளித்துள்ளார். எங்கெல்சே முடித்து வைத்த விவாதத்தை முடித்துக் கொள்வோம்.

3) மார்க்சியம் எதனை உள்ளடக்கி இருக்கிறது?

தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்ற மூன்று உள்ளடக்கத்தை மார்க்சியம் கொண்டுள்ளது. மூன்று உட்பிரிவுகளும் தம்முள் உள்ளிணைப்புக் கொண்டவை ஆகும். மனிதகுலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் விடை காணாத கேள்விகளுக்கு மார்க்சியம் விடை கண்டது என்பதில் தான் இதன் சிறப்பு அடங்கி இருக்கிறது. ஜெர்மானியத் தத்துவம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் ஆகியவற்றின் தொடர்ச்சியே மார்க்சியம். இதன் அடிப்படையில் லெனின், மார்க்சின் போதனை மெய்யானது, அது எல்லாம்வல்ல தன்மை பெற்றுள்ளது, ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது, எந்தவித மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ மார்க்சிய உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது என்று உறுதிபடக் கூறுயுள்ளார்.

4) கம்யூனிசமும் மார்க்சியமும் ஒன்றா? 

ஒன்று தான். மார்க்சியத்தின் சோஷலிசம் கம்யூனிசமாகும். ஏன் இவ்வாறு கூற வேண்டிவருகிறது என்றால், பல வகையான சோஷலிசம்  இருக்கிறது. குட்டி முதலாளித்துவச் சோஷலிசம், நிலப்பிரபுத்துவச் சோஷலிசம், முதலாளித்துவச் சோஷலிசம் எனப் பல வகைகள் இருப்பதால் மார்க்சியத்தின் சோஷலிசத்தை, விஞ்ஞானச் சோஷலிசம் அல்லது விஞ்ஞானக் கம்யூனிசம் என்று அழைக்கப்படுகிறது. 

குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக மற்றொன்றையும் இங்கே அறிந்து கொள்ள வேண்டும். கம்யூனிச சமூகத்தை இரண்டு கட்டங்களாக மார்க்ஸ் வகுத்துள்ளார் அதில் முதல் கட்டம் சோஷலிச சமூகம் இரண்டாவது கட்டம் கம்யூனிச சமூகம் ஆகும். முதலாளித்துவச் சமூகத்தில் இருந்து கம்யூனிச சமூகத்திற்குச் செல்வதற்கான இடைக்கட்டமே சோஷலிசக் கட்டம். மார்க்சியத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் கம்யுனிஸ்டுகள். இக் கம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கத்தைப் புரிந்து செயற்படுபவர்களாவர்.

5) மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கங்கள் எவை? அவை எதனை விளக்குகிறது? 

தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்ற மூன்றும் மார்க்சியத்தின் உள்ளடக்கமாகும்.

தத்துவம் என்பது இயற்கை, சமூகம், சிந்தனை பற்றிய அறிதலின் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானமாகும். 

அரசியல் பொருளாதாரம் என்பது மனித சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாதச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், சமூகத்தில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள், மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது. 

விஞ்ஞானக் கம்யூனிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவச் சமூக நிலைமைகளையும், முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சோஷலிச புரட்சியினை எட்டும் நியதிகளையும் வெளிப்படுத்துகிறது. 

6) இந்த மூன்றில் எது முதன்மையானது? 

அப்படிப் பிரிப்பது சரியல்ல, இருந்தாலும் கேட்டதற்காகச் சொல்வது என்றால். மூன்றாவதான விஞ்ஞானக் கம்யூனிசத்தைச் சொல்லலாம். ஏன் என்றால் இதனையே நாம் நடைமுறை படுத்துகிறோம். அதாவது கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயற்பாடு இதில் தான் அடங்கியிருக்கிறது. 

7) அப்படி என்றால் தத்துவமும், அரசியல் பொருளாதாரமும் அவ்வளவு முதன்மையானது கிடையாதா? 

கம்யூனிஸ்டுகளின் அரசியல், விஞ்ஞானத் தன்மை பெறுவது அரசியல் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவம் இரண்டின் அடிப்படையில் தான். அதனால் மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கத்தில் முதன்மையானது என்று தனித்துப் பார்ப்பது சரியல்ல என்று முதலிலேயே கூறப்பட்டது. மூன்றும் தம்முள் உள்ளிணக்கம் கொண்டது. அதனால் கம்யூனிஸ்டுகள் இந்த மூன்றிலும் திறம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

8) மார்க்சியத்தில் அனைத்தும் உள்ளடங்கி இருக்கிறதா? 

இந்தக் கேள்வி, மார்க்சியம் என்பது சர்வரோக நிவாரணியா? என்று கேட்பது போல் உள்ளது. மார்க்சியம் சர்வரோக நிவாரணியாகப் புரிந்து கொள்வது தவறானது. அனைத்துப் புதுப்புது பிரச்சினைகளுக்கும் தீர்வை தயாராக மார்க்சியம் கையில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. மாறிக் கொண்டே இருக்கும் உலகின் நிலைமைகளைப் பார்த்து அலசி ஆராய்ந்து தீர்வை நோக்கி செயற்படுவதற்கு ஒரு வழிகாட்டியே மார்க்சியம். இப்படிக் கூறுவதனால் மார்க்சியம் எதுபற்றியும் முழுமையாகக் கூறவில்லை என்று பொருள் கொள்ளக் கூடாது. மார்க்சியம் பலவற்றை முழுமையாக அணுகியிருக்கிறது. குறிப்பாகப் பருப்பொருள், அரசு, சமூகம், மதம், தத்துவம், பொருளாதாரம் போன்றவற்றை முழுமையாக அணுகப்பட்டு முடிவுகளை வழங்கியிருக்கிறது. இதனை இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தால் அணுகப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது புதிய போக்குகள் அல்லது கண்டிபிடிப்புகள் இதனைச் செழுமைப்படுத்தவே செய்யும். இதன் பொருட்டே மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல என்று கூறப்பட்டிருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பருப்பொருளைப் பற்றிய புதுவிளக்கம் லெனினால் கொடுக்கப்பட்டுள்ளது. அது மார்க்சின் கருத்தை செழுமைப்படுத்தியது.

9) இதுதான் லெனினியமா?

ஆம் இதுவும் லெனினியத்தில் அடங்கும்.

10) லெனினியம் என்றால் என்ன?

மார்க்சியத்தின் அடிப்படைகளைத் திருத்தல்வாதத்திலிருந்து மீட்டெடுத்ததும், முதலாளித்துவத்தின் புதிய நிலைமைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்தினுடைய போராட்டத்தைப் புதிய நிலைமைக்கு ஏற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்ததும் லெனினியத்தின் பங்களிப்பாகும். சுருக்கமாகச் சொல்வது என்றால் ஏகாதிபத்திய காலத்தின் மார்க்சியமே லெனினியம். மார்க்சியத்தின் படைப்பாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு லெனினியம் திகழ்கிறது.

11. மார்க்சியத்தை அறிவதற்குப் படிக்க வேண்டிய தொடக்க நூல்கள் யாவை?

மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய நூல்கள், கம்யூனிசத்தின் கோட்பாடுகள், கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை. லெனின் எழுதிய நூல்கள், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும், காரல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றி விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்), பிரெடெரிக் எங்கெல்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம், மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள், மார்க்சியமும் திருத்தல்வாதமும், மார்க்சியமும் சீர்திருத்தவாதமும். ஸ்டாலின் எழுதிய நூல்கள், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், அராஜகவாதமா? சோசலிசமா?. 

- அ.கா.ஈஸ்வரன்

தொடரும்...

அடுத்த பகுதி: மார்க்சியம் என்றால் என்ன? - பகுதி -2

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரை தோழர். அ.கா.ஈஸ்வரன் எழுதிய ’மார்க்சியம் என்றால் என்ன?’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது. மார்க்சியத்தின் ஆரம்ப அடிப்படை கல்விக்கு மிகவும் பயனளிக்கும் விதத்தில் கேள்வி பதில் வடிவில் மிக எளிமையாக கொடுத்துள்ளார். இது ஆரம்பநிலை மார்க்சியம் பயில்வோருக்கு மிகவும் பயனளிக்கும் என்ற விதத்தில் இந்த தளத்தில் வெளியிடுகிறோம். இப்புத்தகத்தில் உள்ள மற்ற கட்டுரைகளும் தொடராக வெளியிட உள்ளோம். – செந்தளம் செய்திப் பிரிவு