இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியும், அருமண் தனிமங்களுக்கான போட்டியும்: இந்தியா கற்றுத்தேற வேண்டிய சீன உத்தி
தி வயர்

உலக அரங்கில் மின்சார வாகனத் துறையில் இந்தியா தலைமை ஏற்க விழைகிறதென்றால், அருமண் தனிமங்களுக்கான போட்டியில் வெறும் பார்வையாளராய் ஒதுங்கி நிற்க இயலாது.
இந்தியாவின் மின்சார வாகனத் திட்டங்களுக்குள், இதுவரை பெரும்பாலும் கவனிக்கப்படாததொரு மிகப் பெரிய சவால் ஒளிந்துள்ளது. அதாவது, மின்வாகனங்களின் மின்கலன்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான கடும் போட்டியை இந்தியா எதிர்கொள்ள நேரிடுகிறது.
மின்சார வாகனங்களின் மோட்டார்கள், மின்கலன்கள், மற்றும் மின்னணுப் பகுதிகளைத் தயாரிக்க, லித்தியம், நியோடைமியம், டிஸ்ப்ரோசியம், பிரசியோடைமியம் போன்ற அருமண் தனிமங்கள் இன்றியமையாதவை. ஆனால், இந்த அத்தியாவசிய மூலப்பொருட்கள் அனைத்தையும் இந்தியா கிட்டத்தட்ட ஒரேயொரு தேசத்திடமிருந்து –சீனாவிலிருந்துதான் – கொள்முதல் செய்கிறது என்பதே இங்குள்ள முக்கியமான சிக்கல்.
2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சீனா எந்தவித முன்னறிவிப்புமின்றி, "தேசியப் பாதுகாப்பு" எனக் கூறி, இந்த அரிய தனிமங்களின் ஏற்றுமதி மீதான தனது கட்டுப்பாடுகளை மிகக் கடுமையாக இறுக்கியது. சுற்றுச்சூழலை பாதிக்காத தூய்மையான தொழில்நுட்பத்திற்கான இந்த உலகளாவிய போட்டியில், உண்மையான அதிகாரம் எவர் கரங்களில் குவிந்துள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்திய ஒரு சக்திவாய்ந்த பேரலையாகவே இந்த நடவடிக்கை எழுந்தது. சிந்தித்துப் பாருங்கள்: உலகளாவிய அருமண் தனிமங்கள் உற்பத்தியில் 70%க்கும் மேலேயும், அதன் சுத்திகரிப்பில் சுமார் 90% வரையிலும் சீனாவின் பிடியில்தான் உள்ளன. சீனாவின் இப்புதிய கட்டுப்பாடுகளால், 240 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் வாகனத் தொழில், கண் இமைக்கும் நேரத்தில் பெரும் அபாயகரமானதொரு சூழலுக்குத் தள்ளப்பட்டது.
இந்தியக் கார் உற்பத்தியாளர்கள் இச்சூழ்நிலையின் தீவிரத்தை முன்கூட்டியே உணர்ந்து, நடப்பாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூடுதல் காந்தங்களை அவசரம் அவசரமாக வாங்கிக் குவித்தனர். கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் அவர்களின் கொள்முதல் 20% அதிகரித்ததோடு, ஏப்ரல் மாதத்தில் அது அதிர்ச்சியூட்டும் வகையில் 87% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இப்படியான அவசரக் கையிருப்பு நீண்ட கால நோக்கில் பார்க்கும் பொழுது ஒருபோதும் போதுமானதாக இருக்காது.
நிலைமைகள் தானாகவே சீரடையும் என்று நம்பிக்கொண்டிருக்க வேண்டிய காலம் இதுவல்ல. இந்தியா உண்மையிலேயே மின்சார வாகனப் புரட்சியில் முழுமையாய்ப் பங்கேற்று, தூய்மையான தொழில்நுட்பத்தில் முழுமையான சுதந்திரம் அடைய விரும்பினால், இந்தச் சந்தையில் சீனா எவ்வாறு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது என்பதைப் பற்றி அவசரமாகவும், ஆழமாகவும், நுணுக்கமாகவும் ஆராய்ந்து அறிய வேண்டும்.
அருமண் தனிமங்கள் இறக்குமதியில் அமெரிக்கா பயன்படுத்திய உத்திகள்: அதன் விளைவு என்ன?
சீனா விதித்த நேரடி ஏற்றுமதித் தடைக்குப் பிறகு, அமெரிக்கா ஒரு புதியதொரு வியூகத்தை வகுத்தது: அத்தியாவசியப் பொருட்களைப் பிற நாடுகள் வாயிலாக இறக்குமதி செய்வதென்று தீர்மானித்தது. அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் விநியோகச் சங்கிலிகளை, குறிப்பாக தாய்லாந்து மற்றும் மெக்சிகோ போன்ற பிற தேசங்களின் ஊடாக வழிமாற்றிப் பெறத் தொடங்கின. அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் இவ்வியூகத்தின் கூர்மையான விளைவுகளைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. டிசம்பர் 2024 முதல் ஏப்ரல் 2025 வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில், தாய்லாந்து மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆண்டிமனி ஆக்ஸைடுகள் (ஓர் அருமண் தனிமம்) சுமார் 3,834 மெட்ரிக் டன்களை எட்டியது. இந்த ஒற்றை ஐந்து மாத கால இறக்குமதி அளவு என்பது, அதற்கு முந்தைய மூன்று ஆண்டு கால மொத்த இறக்குமதியையும் விஞ்சிவிட்டது.
அதிகாரப்பூர்வ இறக்குமதி ஆவணங்களின்படி, இப்பொருட்கள் எதுவும் சீனாவிலிருந்து நேரடியாகப் பெறப்படவில்லை. இருப்பினும், இது வெறும் கணக்களவில் மட்டுமே நிலவிய ஒரு பிம்பம். நடைமுறையில், இந்தச் செயல்பாடு முற்றிலும் வேறொரு பாதையில் நிகழ்ந்துள்ளது. பொருட்கள் முதலில் சீனாவிலிருந்து இந்த இடைநிலை நாடுகளுக்குக் கப்பல் வழியாக அனுப்பப்பட்டன. அங்கோ, அவற்றுக்கு புதிய முத்திரைகள் வழங்கப்பட்டு, பின்னர் அமெரிக்காவிற்கு மறு ஏற்றுமதி செய்யப்பட்டன. கண்டறிதலிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, இந்த ஏற்றுமதிகள் பெரும்பாலும் துத்தநாகம், இரும்பு அல்லது கலைப்பொருட்கள் போன்ற வேறு பொருட்களாகவே கணக்குக் காட்டப்பட்டன. ஏற்றுமதிகளுக்குத் தேவையான உரிமங்கள் பெற்றிருந்தால், அமெரிக்க விதிமுறைகளின் கீழ், இடைநிலை நாடுகள் வழியாக கொண்டு வரப்படும் இந்த வழிமாற்று முறை முழுமையாகச் சட்டபூர்வமானது. இதன் காரணமாக, இதைத் தடுக்க முனையும் சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளும் எதிர்பார்த்த அளவிற்கு பலன்தரவில்லை.
டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில், சீன நிறுவனமான யங்சன் கெமிக்கல்ஸுக்குச் சொந்தமான தாய்லாந்தில் உள்ள யூனிபெட் இண்டஸ்ட்ரீஸுக்கு அனுப்பப்பட்ட, 3,366 டன்களுக்கும் அதிகமான ஆண்டிமனிப் பொருட்கள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது. இச்சரக்குகளை ஏற்றிவந்த கப்பல் ஆவணங்கள் எதிலும், மூல உற்பத்தி நாடான சீனாவின் பெயர் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. சீனாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய நேரடி சுங்கச் சோதனைகளைத் தவிர்ப்பது இதன்மூலம் அவர்களுக்குச் சாத்தியமானதாக இருந்தது.
ஆயினும், பிற நாடுகளை நம்பி அமெரிக்கா வகுத்த வியூகம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. சீனா, தனது ஏற்றுமதி விதிமுறைகளை மேலும் இறுக்கமாக்கிப் பதிலடி கொடுத்தது. இது மாற்று விநியோகப் பாதைகளை முற்றிலுமாக அடைத்ததோடு, அமெரிக்காவுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவதைப் பெரும் சவாலாக மாற்றியது. 2025ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி, இந்தக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சட்டவிரோதமாக வேறு வழிகளில் அனுப்புவதைத் தடுக்க, சீனா புதியதோர் இயக்கத்தைத் தொடங்கியது. சீன அதிகாரிகள் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியதோடு, அமெரிக்காவுக்குத் துணை நின்ற, சீனாவுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ செயல்பட்ட எந்தவொரு நிறுவனங்களுக்கும் எதிராகக் சட்டபூர்வமான நடவடிக்கைகளைத் துவங்கினர்.
சீனாவின் கெடுபிடியான அணுகுமுறை கைகூடியது. அமெரிக்கா தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது, அதன் விளைவாக ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் ஷி இடையே ஒரு முக்கியத் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. அந்த உரையாடலின் பயனாக, புதியதோர் ஒப்பந்தம் உருவானது. அமெரிக்காவுக்கு அருமண் தனிமங்கள் ஏற்றுமதி மீதான தனது கட்டுப்பாடுகளை நீக்க சீனா சம்மதித்தது. அதற்குப் பிரதிபலனாக, அமெரிக்கா "பரஸ்பரம் இருநாட்டு பிரச்சனைகளையும் மதிக்க வேண்டும்" என்றும், "சீனாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட எதிர்மறையான நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்" என்றும் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார். "அதிபர் ஷி மற்றும் எனது இறுதி ஒப்புதலுக்கு உட்பட்டு சீனாவுடன் உடன்பாடு காணப்பட்டுள்ளது," என்று கூறி, ஒப்பந்தம் உறுதிபடுத்தப்பட்டதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார்.
அப்படியெனில், இரு தரப்பினருக்கும் என்ன கிடைத்தது? தனக்குத் தேவையான அருமண் தனிமங்களைப் பெறுவதற்காக, சீனாவுடன் நிறைய சமரசங்களை அமெரிக்கா செய்ய வேண்டியிருந்தது. சீனாவுக்கு சிப் வடிவமைப்பு மென்பொருள் மட்டுமல்லாது ஈத்தேன் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டிருந்த தடையையும் அமெரிக்கா நீக்கியது. இது சீனாவிற்கு ஒரு மகத்தான வெற்றியாகப் அமைந்தது. பைடன் ஆட்சிக் காலத்தில் இருந்த வரி விதிப்பு நிலைகளுக்கே அவை மீண்டும் குறைக்கப்பட்டன. அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஃபென்டானில்(fentanyl) எனும் போதைப் பொருள் ஏற்றுமதி செய்ததாகக் கண்டறியப்பட்ட நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட 20% சிறப்பு வரி விதிப்பு மட்டுமே ஒரே விதிவிலக்காக மாற்றமின்றி தொடர்ந்தது.
சீனாவின் வர்த்தக உத்தி: அழுத்தத்தை எதிர்கொள்ளும் நுண்மையான நகர்வுகள்
வர்த்தகப் பாதுகாப்புவாதத்தைக் கையாளும் உத்திகளில் சீனா நன்கு கைதேர்ந்துள்ளது. குறிப்பாக 2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பின்னர், அமெரிக்காவின் கடுமையான வர்த்தக வரிகளைச் சந்தித்த சீனா, தனது உற்பத்தி நடவடிக்கைகளை வெளிநாடுகளுக்கு, அதாவது அந்நிய மண்ணுக்கு நகர்த்தத் தொடங்கியது. இது வெறும் பின்வாங்கல் அல்ல; மாறாக, தனது வர்த்தகப் பாதையை போரத்தந்திர ரீதியில் மாற்றியமைக்கும் ஒரு அபாரமான நகர்வாகும். தென்கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா மட்மல்லாது ஆப்பிரிக்கா போன்ற குறைந்த உற்பத்திச் செலவினம் கொண்ட பிராந்தியங்களுக்கு தொழிற்சாலைகளை இடம்பெயர்த்துவதே இந்த உத்தியின் முக்கிய அம்சமாக அமைந்தது. இது சீனப் பொருட்கள் உலகச் சந்தையில் குறைந்த விலையில் நிலைத்திருக்க வழிவகுத்ததுடன், நிறுவனங்கள் நேரடி வர்த்தக மோதல்களைத் தவிர்ப்பதற்கும் துணைபுரிந்தது.
தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்ததன் பின்னணியில் இருந்த மற்றொரு முக்கிய நோக்கம், அமெரிக்காவின் வர்த்தக வரிகளின் நேரடித் தாக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபடுவதாகும். இந்த வியூகம் மெக்சிகோ விவகாரத்தில் கண்கூடாகத் தெரிந்தது. ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி, வர்த்தக விதிகளை மீறி, மெக்சிகோ வழியாக எஃகுப் பொருட்களை சீனா அனுப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார். வர்த்தகத் தரவுகள் ஒரு திட்டவட்டமான மாற்றத்தை வெளிப்படுத்தின: 2023 இல், மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவின் இறக்குமதிகள் கணிசமாக அதிகரித்தன, அதே வேளையில், சீனாவிலிருந்து நேரடி இறக்குமதிகள் பெருமளவில் குறைந்தன. இதே காலகட்டத்தில், மெக்சிகோவில் சீன முதலீடுகள் அளவுக்கு மீறி அதிகரித்தன, BYD மற்றும் Chery போன்ற பகாசுர மின்சார வாகன உற்பத்தியிலும் ஈடுபடும் கார்ப்பரேட்டுகள் மெக்சிகோவில் தொழிற்சாலைகளை அமைத்தன. 2024 இல், சீனாவிலிருந்து மெக்சிகோவுக்கான கப்பல் போக்குவரத்து ஒரேயடியாக உயர்ந்தது. போர்த்தந்திர ரீதியிலான நகர்வுகள் மூலம், சீனா தனது வர்த்தகப் பாதைகளைத் திறம்பட மாற்றி, உலக அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக நிலைபெற்றது.
தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல், சீனா மற்ற நாடுகளில் செய்த முதலீடுகளைப் பயன்படுத்தி, தனது சொந்த எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்திக் கொண்டது. உதாரணமாக, சீன நிறுவனங்கள் மியான்மரில் மின் நிலையங்களை அமைத்ததோடு, வியட்நாமில் உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்தன. இதன் விளைவாக, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் வியக்கத்தக்க அளவில் வளர்ச்சியடைந்தன; 2018 முதல் 2024 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20% அதிகரித்தன. அவ்வகையில், சீனாவைப் பொறுத்தவரை, அந்நிய நாடுகளில் முதலீடு செய்வதென்பது வெறும் வளங்களைப் பெறுவதற்கான ஒரு வழிமுறை மட்டுமல்ல. இது உலகப் பொருளாதாரத்தில் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் பெருக்கி, தன் வலிமையை நிலைநாட்டும் ஒரு மகத்தான கருவியாகும்.
இது இந்தியாவிற்கான தருணம்
இந்தியா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை?
முதல் படி: மாற்று விநியோக வழிகளை உறுதிப்படுத்துதல். இந்தியா நட்பு நாடுகளுடன் கைகோர்க்க வேண்டும். இந்த நட்பு நாடுகள், அருமண் உலோகங்களை வழங்குவதில் நடுநிலையான சக்திகளாகச் செயல்பட இயலும். இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நிலையான உறவுகளைக் கொண்ட தேசங்களை மாற்று வழிகளாகத் தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய வியூகம் இந்தியாவிற்கு மேலும் கால அவகாசத்தை ஈட்டித் தரும். எனினும், இத்தீர்வு தற்காலிகமானதே அன்றி நிரந்தரமானதல்ல.
இரண்டாம் படி: வெளிநாடுகளில் முதலீடுகளைப் பெருக்குதல். ஆப்பிரிக்கக் கண்டத்தில் லித்தியம், கோபால்ட், தாமிரம் ஆகிய வளங்கள் பெரிய அளவில் புதைந்து கிடக்கின்றன. இவ்வளங்கள் இன்னும் முழுமையாகப் சுரண்டியெடுக்கப்படவில்லை. ஜாம்பியா, காங்கோ, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள சுரங்கத் திட்டங்களில் இந்தியா ஏற்கனவே முதலீடு செய்யக் கருதியுள்ளதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இம்முயற்சியை விரைந்த வேகத்தில் முன்னெடுக்க வேண்டியது கட்டாயம். உலகிலேயே அருமண் தனிமங்களின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக ஆஸ்திரேலியா திகழ்வதால், அது இந்தியாவிற்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக மாற்ற வேண்டும்.
மூன்றாம் படி: உள்நாட்டுத் திறன்களை வளர்த்தல். இப்பணிக்காக நாட்டிற்குள்ளேயே பலமுனைப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய நிறுவனங்கள் சுரங்கத் தொழிலைத் தொடங்க அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டும். அருமண் உலோகங்களைப் பதப்படுத்தும் வசதிகளைக் கட்டமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாற்றுப் பொருட்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிப் பணிக்கான வசதி வாய்ப்புகளையும் அரசு உருவாக்க வேண்டும். இந்திய அரசாங்கம் "ஆத்மநிர்பார் பாரத்" (Atmanirbhar Bharat) எனும் கொள்கையை முன்னெடுத்துள்ளது. இக்கொள்கையில் "உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்கள்" செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, இத்திட்டங்கள் மின்சார வாகனங்களை அசெம்பிள் செய்வதற்கு ஆதரவு நல்குகின்றன. இந்த ஆதரவு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். PLI திட்டங்கள் அருமண் விநியோகச் சங்கிலி முழுவதையும், அதன் மூலத்திலிருந்தே, அதாவது ஆரம்ப கட்டத்திலிருந்தே ஆதரவு வழங்க வேண்டும்.
அருமண் (rare earth) பொருட்களைப் பெறுவதற்கான மாற்று வழிகளைக் கண்டறியும் தனது முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும். உதாரணமாக, இந்தியாவிடம் நியோடைமியம் தாதுப் பொருள்கள் பெருவாரியாக உள்ளன. முறையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்கும்போது இந்தத் தனிமத்தை மிகவும் பயனுள்ள காந்தப் பொருளாக உருவாக்க முடியும். அத்துடன், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற கூட்டாளி நாடுகளுடனான தனது ஒத்துழைப்பை இந்தியா மேலும் வலுப்படுத்த வேண்டும். இந்தக் கூட்டணி, மூலப்பொருட்களைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், தொழில்நுட்ப மற்றும் ஆய்வு ரீதியான ஆதரவைப் பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். அருமண் தொழில்நுட்பத்தில் இன்று சீனா முன்னணியில் இருந்தாலும், இந்த இடைவெளியைக் கடப்பது முடியாத காரியமல்ல.
நான்காவது மூலோபாய நடவடிக்கை என்னவென்றால், சீன முதலீடுகள் குறித்த இந்தியாவின் அணுகுமுறையை மாற்றியமைப்பதாகும். இந்தக் கொள்கையானது சீனாவிலிருந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகளை (FDI) மேலும் தாராளமாக அனுமதிக்கலாம்; ஆனால் ஒரெயொரு கடும் நிபந்தனை விதிக்கப்பட வேண்டும்: எந்தவொரு முதலீடும், சீன நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குப் பரிமாற்ற வேண்டும் என்ற கட்டாயத் தேவையை உள்ளடக்கியிருக்க வேண்டும். உண்மையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கைகூட இந்த அணுகுமுறைக்கு ஆதரவாகவே வாதிட்டது. அதாவது, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் சீனாவிடமிருந்து அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா நாட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
இறுதியாக, உலகம் முழுவதும் மின்சார வாகனங்களை நோக்கிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், இதில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க விரும்பினால், அருமண் தனிமங்களுக்கான போட்டியில் அது செயலற்று இருந்துவிட இயலாது. தேவையான பொருட்கள் பிற தேசங்களில் அமைந்திருக்கலாம், ஆனால் அவற்றைப் பெறுவதற்கான உத்தி என்பது இந்தியாவிற்குள்தான் வகுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, எவ்வளவு மேம்பட்ட வாகனமாக இருந்தாலும், அதை இயங்கச் செய்யும் அத்தியாவசிய அருமண் தனிமங்கள் கிடைக்கவில்லை என்றால் பயனற்றுப் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு