குவாட்: 2020 க்குப் பின் நாற்கரக் கூட்டணி-இலக்குகளும் சவால்களும்

சு.அழகேஸ்வரன்

குவாட்: 2020 க்குப் பின் நாற்கரக் கூட்டணி-இலக்குகளும் சவால்களும்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றப் பின்னர் நாற்கரக் கூட்டணி தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற கூட்டங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட விவரங்களும் அவற்றின் விளைவுகளும்.

 

இதுவரை நடைபெற்ற மூன்று கூட்டங்களில் முதலாவது கூட்டம் வாஷிங்டனில் 2021, செப்டம்பர் 21-ஆம் தேதியும், இரண்டாவது கூட்டம் 2022, மே 24-இல் டோக்கியோவிலும், மூன்றாவது கூட்டம் 2023, மே 20-இல் ஹிரோஷிமாவிலும் நடடைபெற்றது. இந்த மூன்று கூட்டங்களிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்து கொண்டார்கள். ஆஸ்திரேலியாவின் சார்பாக முதல் கூட்டத்தில் பிரதமர் ஸ்காட் மோரிசனும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கூட்டத்தில் பிரதமர் அந்தோணி அல்பானிசும் கலந்து கொண்டார்கள். ஜப்பான் சார்பில் பிரதமர் யோசின்ஷெக் சுகா முதல் கூட்டத்திலும், இரண்டு மற்றும் மூன்றாவது கூட்டங்களில் பிரதமர் புமியோ கிஷிடாவும் கலந்து கொண்டார்கள்.

பொதுவாக நான்கு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நாற்கரக் கூட்டணி செயல்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது.

அவை

1. உக்ரேன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிற்கு எதிராக குவாட் நாடுகளின் ஆதரவை திரட்டுவது மற்றும் தைவானை சீனாவுடன் இணைய விடாமல் தடுப்பது.

 

2 கிழக்கு மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் கட்டுப்பாடுகளை அகற்றுவது.

3. இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளில் முதலீடுகளை செய்வதன் மூலம் அந்த நாடுகளை தனக்கு ஆதரவாக மாற்றிவரும் சீனாவின் முயற்சிகளை தடுப்பது. உலக நாடுகள் சிக்கலான தொழில்நுட்பங்களுக்கு சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்றுவது.

உக்ரேன் மீதான ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்காக குவாட் நாடுகளை அணி திரட்டி  நிர்ப்பந்தம் கொடுக்கும் முயற்சிகளில் அமெரிக்கா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஓரணியில் நிற்கும் நிலையில், துவக்கம் முதலே இந்தியா, ரஷ்யாவை கண்டிக்க மறுத்து வருகிறது. இந்தியாவின் இந்த நிலைபாட்டை மாற்றுவதற்கான முயற்சிகளை குவாட் மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் கூட்டத்திற்குப் பின்னர் உக்ரேன் பிரச்சினையைத் தவிர்த்த பொது அறிக்கையும், அதை உள்ளடக்கிய தனி அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் 2027-ஆம் ஆண்டில் தைவானை, சீனா இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதை தடுக்க குவாட் நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளிலும் சுதந்திர திறந்த, விதிகள் அடிப்படையான “சுதந்திர கடற்படை பயணம் மற்றும் விமானப் பறப்பு”, கிழக்கு மற்றும் தென் சீனக் கடலில் சர்வதேச விதிகளை அடிப்படையாகக் கொண்ட “கடல்சார் ஒழுங்கிற்கான சவால்கள்” என்ற வாக்கியங்கள் தவறாது இடம்பெறும். இவை அனைத்தும் கிழக்கு மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் கட்டுப்பாட்டை அகற்றும் ஆவலை வெளிப்படுத்துபவைகளாகும்.

மேலும் டோக்கியோ கூட்டத்தில் “இந்தோ-பசிபிக் கடல்சார் விழிப்புணர்வு ஒத்துழைப்பு” என்ற புதிய முன்முயிற்சியை துவக்குவதென அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிக்கை ஒன்றையும் வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதில் கடல்சார் தகவல்களை நட்பு நாடுகளுக்கு உடனுக்குடன் கிடைக்க வகை செய்யப்படும். மேலும் இந்தோ-பசிபிக்கின் மூன்று பிராந்தியங்களான இந்தோ பசிபிக் தீவுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் மண்டலத்திற்கு விரிவுபடுத்தப்படும். டார்க் ஷிப்பிங் என்று சொல்லக்கூடிய தானியங்கி நோக்குமுறையில் கப்பல்கள் செயல்படுத்தப்படும். அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் காலச் செயல்பாடுகளை கூட்டாக மேற்கொண்டு பிராந்தியத்தைப் பாதுகாப்பது முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் நாடுகளில் முதலீடு செய்வது குறித்து முதலாவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து சீனாவின் “ஒரே பாதை ஒரே மண்டலம்” என்ற திட்டத்திற்கு மாற்றாக, தனியார் ஆதரவுடன் புளு-டாட் நெட்வொர்க் வழியாக முதலீடுகளை செய்து வருகிறது. அதைத்தொடர்ந்து முன்னெடுப்பது மட்டுமல்லாமல் முதலீடுகளை அதிகப்படுத்த புதிய அமைப்பு ஒன்றை துவக்குவதென முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது கூட்டத்தில் அடுத்த ஐந்தாண்டு பணிகளுக்காக 50 மில்லியன் டாலர்கள் கூடுதலாக ஒதுக்குவதென முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்றாவது கூட்டத்தில் குவாட் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் மூலமாக இந்த புதிய முன்முயற்சியை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 1800-க்கும் மேலான முன்னோடிகளை வடிவமைப்பு, தயாரிப்பு, உள்கட்டமைப்பு பணிகளை அவரவர் நாடுகளில் உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது.

மேலும் கேபிள் இணைப்பு மற்றும் நெகிழ்திறன் கட்டமைப்பு புதிதாக உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது கடலுக்கு அடியில் செல்லும் தற்போதைய கேபிள் வலைபின்னலை சீனா சேதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு பாதுகாப்பான நெட்வொர்க்கை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும். முன்னதாக, தைவானை சேர்ந்த மாட்சு  தீவுக்கான கேபிள் வலைபின்னல்களை சீனா சேதப்படுத்தியதாக சந்தேகப்பட்டதின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக, 2021, மார்ச் மாதம் காணொளி காட்சியின் வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் சிக்கலான தொழில்நுட்பங்களை உருவாக்க பணிக்குழு அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அதற்கான விதிமுறை ஆவணம் வெளியிடப்பட்டது. நவீன தகவல் தொடர்பு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் கூட்டாக பணியாற்ற தொடர்பு குழுக்களை உருவாக்குவது, குறைக்கடத்திகளை தயாரிப்பது, 5 ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தை வளர்ப்பது, பாதுகாப்பான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது. மூன்றாவது கூட்டத்தில் அதற்கான விதிகள் தனித்தனியாக வெளியிடப்பட்டது. அத்துடன் இத்துறைகளில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக குவாட் முதலீட்டாளர்கள் நெட்வொர்க் என்ற அமைப்பை துவக்குவதென முடிவு செய்யப்பட்டது.

கோவிட் தடுப்பூசிகள்: 

1.2 பில்லியன் கோவிட் தடுப்பூசிகளை தயாரிப்பது. இந்த இலக்கில் 1 பில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்க தனியாக தயாரிக்கும். இந்தியாவில் 2022-ஆம் ஆண்டிற்குள் 1 பில்லியன் தடுப்பூசிகளை தயாரிப்பதெனவும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஹைதராபாத் பயாலாஜிக்கல்-இ லிமிடெட் நிறுவனத்தில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன உதவியுடன் தடுப்பூசிகள் தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. எனவே இப்புதிய முயற்சிகளை ஊக்குவிக்க ஜப்பானும், அமெரிக்காவும் நிதி உதவி செய்ய, தடுப்பூசிகளை பிராந்திய நாடுகளுக்கு விநியோகிக்கும் பணிகளில்  ஆஸ்திரேலியா ஈடுபடும் என்றும் மூன்றாவது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லாத நாடுகளுக்கு தடுப்பூசிகள் தயாரித்து அனுப்புவது என்ற திட்டத்தை சீனா வகுத்தது. அதன்படி 1.9 பில்லியன் தடுப்பூசிகளை இந்தோ-பசிபிக் நாடுகள் உட்பட 118 நாடுகளுக்கு விநியோகித்தது. மேலும் 246 மில்லியன் தடுப்பூசிகளை இலவசமாக உலக நாடுகளுக்கு விநியோகித்துள்ளது. சீனாவின் இந்த முயற்சிகளை “தடுப்பூசி ராஜதந்திரம்” என்று வகைப்படுத்தி அதற்கு போட்டியாகவே குவாட் தடுப்பூசி செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. மேலும் இந்தோ-பசிபிக் நாடுகளில் பாதுகாப்பான சுகாதாரத்தை வளர்ப்பதற்காக ஏற்கனவே செயல்பட்டுவரும் குவாட் தடுப்பூசி கூட்டமைப்பை, சுகாதார பாதுகாப்பு கூட்டணியாக விரிவுபடுத்துவதென மூன்றாவது கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

2022 கூட்டத்தில் இந்த பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள காலநிலை மாற்றம் ஏற்பு மற்றும் தணிக்கும் விதிமுறைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. 2023-ஆம் ஆண்டு கூட்டத்தில், தூய்மையான எரிசக்தி, விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்காக தூய்மையான எரிசக்தி விநியோகச் சங்கிலி முன்முயற்சி என்ற திட்டத்தை அறிவித்தது. அத்துடன் மென்பொருள் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் சிக்கலான உள்கட்டமைப்புகளுக்கான கூட்டு விதிகளையும் அறிவித்தது.

இதற்கு எதிர் விளைவாக இந்த குவாட் அமைப்பு துவக்கப்பட்டது முதல் இதை ஆசியாவின் நேட்டோ என்று சீனா விமர்சித்து வருகிறது. அத்துடன் ஹிரோஷிமா கூட்டம் நடைபெற்ற போது அதற்கு அருகே ரஷ்யாவும், சீனாவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தியது.

இது ஒருபுறம் இருக்க, குவாட் அமைப்பு முன்னெடுத்துள்ள தொழில்நுட்பங்கள் குறித்த திட்டங்கள் இந்தியாவில் ஏற்படுத்த போகும் தாக்கங்கள் ஆய்வுக்குரியதே.

ஏனெனில் அமெரிக்கா மற்றும் வளரும் நாடுகள் பூமியின் வடக்கு பகுதியைச் சேர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. ரஷ்ய ஆதரவுடன் செயல்படும் சீனாவின் மண்டலம் மற்றும் சாலை அமைப்பைச் சேர்ந்தவையும், பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளும் பூமியின் தெற்கு பகுதியைச் சேர்ந்த நாடுகள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவோ குவாட் அமைப்பிலும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் இடம் பெற்றுள்ளது. தற்போது குவாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளென்பது சீனாவின் தொழில்நுட்ப தரநிலைக்கு மாற்றாக உருவாகும் நோக்கம் கொண்டதாகும். இது சர்வதேச அளவில் இரண்டு வகையான தரநிலை தொழில்நுட்பங்கள் உருவாக வழி வகுக்கும். இந்தியாவானது குவாட்டுக்குட்பட்ட முடிவின்படி அமெரிக்க தலைமையிலான தரநிலைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே இந்தியா, சீனாவின் தரவரிசை தொழில்நுட்பத்தை பயன்படுத்திவரும் அண்டை நாடுகளுடன் ஒத்திசைந்து போக முடியாது. இதன் காரணமாக 2030 இல் அண்டை நாடுகளிலிருந்து இந்தியா தனிமைப்படும்.

- சு. அழகேஸ்வரன், முன்னாள் பாதுகாப்புத்துறை ஊழியர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு