நிஜ்ஜார் கொலை: இந்தியா – கனடா இடையே தீவிரமடைந்த முரண்பாடுகள்
செந்தளம் செய்திப்பரிவு
நிஜ்ஜார் கொலை
2023 ஜூன் 18ல், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் முகமூடி அணிந்த நபர்களால் பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள குருநானக் சீக்கிய குருத்தவாராவின் பார்க்கிங்கில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கடனாவின் குடியுரிமை பெற்ற பஞ்சாபி; குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும், சீக்கியர்களுக்கு தனிநாடு கோரிக்கையை எழுப்பி வரும் காலிஸ்தான் புலிப்படைக் குழுவின் தலைவராகவும் இருந்தவர். இந்தியாவின் உளவுப் பிரிவு ரா (R&AW) இவரை கொலைக் குற்ற வழக்குகளில் இணைத்தது, தேசிய புலனாய்வு முகமை இந்தியாவில் உள்ள இவரின் சொத்துக்களை கைப்பற்றியது. இவரை, மோடி அரசு ஊபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவித்ததோடு, இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகையும் அறிவித்தது. இந்நிலையில்தான் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கனடாவில் வைத்து திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
கொலை குற்றச்சாட்டுகள்
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், இக்கொலையில் இந்திய அரசுக்கு பங்கிருப்பதாக குற்றஞ்சாட்டினார். அம்மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்றபோது பிரதமர் மோடியின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றதோடு, கொலை விசாரணையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், இக்கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் இருக்கிறது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அப்போதே, இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது; கனடாவிடம் அதற்கான ஆதாரத்தை வழங்குமாறு கேட்டது. காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் பதில் குற்றச்சாட்டு வைத்தது. இது இவ்விரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகளை உண்டாக்கியது.
அதைத் தொடர்ந்து 2023 செப்-18ல் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை நாட்டைவிட்டு வெளியேற்ற கனடா முயற்சி எடுத்தது. பதிலுக்கு மோடி அரசு இங்குள்ள கனடாவின் உளவுத்துறை அலுவலகத் தலைவரான ஒலிவியர் சில்வெஸ்டரை செப்-19 ல் வெளியேற்றியது. செப்-21ல் இருந்து கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது மோடி அரசு.
கனடாவின் உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சியான ஆர்.சி,எம்,பி (Royal Canadian Mounted Police)யின் கொலை விசாரணைக் குழுவின் மூலம் நிஜாரின் கொலை தொடர்பாக புலன் விசாரணை செய்து வந்தது.
தீவிரமடைந்த முரண்பாடுகள்
ஓராண்டுகளை தாண்டிய நிலையில் தற்போது இந்த பிரச்சினை மீண்டும் பூதாகரமாகியுள்ளது. அக்டோபர் 14 அன்று ஆர்.எம்.பி. மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்திய தூதரக அதிகாரிகள் இங்கு உளவாளிகளை போல் செயல்படுகின்றனர். அவர்கள் இங்குள்ள குடிமக்களை குறிவைத்து கண்காணித்து மோடி அரசுக்கு தகவல் திரட்டி தந்துள்ளது ஆதாரத்துடன் கிடைத்துள்ளது என அவ்வறிக்கை தெரிவிக்கிறது. எனவே இந்திய தூதரக அதிகாரிகளை விசாரணை வளையத்தில் உள்ள நபர்களாக (person of intrest) அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இதுவரை கனடா எவ்வித ஆதாரமும் கொடுக்காமலேயே குற்றச்சாட்டுகளுக்கு மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்கிறது. ட்ரூடோ அரசியல் ஆதாயத்துக்காக இத்தகைய அவதூறுகளை தொடர்ச்சியாக பரப்பி வருவதாக தெரிவித்தது. அதாவது அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கும் வேளையில், 17லட்சம் சீக்கியர்களின் ஆதரவை பெறுவதற்காக இவ்வாறு பிரச்சாரம் செய்கிறார் என்கிறது. இந்திய தூதரக அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த மறுத்தது. அவர்களை கனடாவில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது. அதேபோல் இந்தியாவில் உள்ள கனடா நாட்டின் தூதரக அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர். ட்ரூடோ, மோடி அரசுகளிடையே முரண்பாடுகள் கூர்மையடந்து இரு நாடுகளின் ராஜ்ஜிய உறவில் விரிசல் விழுந்தது. கனடா –இந்தியா இடையே வர்த்தக உறவு 8 பில்லியன் டாலர் அளவுதான் இருந்தது. இது இவ்விரு நாடுகளின் ஜிடிபியுடன் ஒப்பிடும் போது மிகமிகச் சொற்பமே. எனவே இந்த விரிசல் வர்த்தக உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போவதில்லை. சென்ற ஆண்டு ஜி-20 மாநாட்டின் போதும் கூட மோடி அரசின் முன்னிலையில் அறிவிக்கப்பட்ட பயோ எரிப்பொருள் கூட்டமைப்பில் (Bio-fuel alliance) பங்கேற்காமல் தவிர்த்தது கனடா அரசு. அப்போதே வர்த்தக உறவிலும் முரண்பாடுகள் தோன்றிவிட்டன.
அதேபோல், கனடாவின் சீக்கிய தலைவர் மற்றும் புதிய ஜனநாயக் கட்சியின் தலைவருமான ஜக்மீத் சிங் ஜஸ்டின் வெளியிட்ட அறிக்கையில், கனடா அரசியலில் தலையிடும் இந்திய தூதர்கள் மீது கடுமையான தடைகளை கொண்டு வர வேண்டும். இந்தியாவை தளமாகக் கொண்டு, கனடாவிலும் பிற நாடுகளிலும் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஆர்,எஸ்.எஸ். ஐ வெளியேற்ற வேண்டும். கனேடியர்களின் பாதுகாப்பை முதன்மையாக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து மோடி அரசை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நிலை
கனடா அமெரிக்காவின் நிரந்தர கூட்டாளியாக உள்ளது. இரு நாடுகளின் சர்வதேச நிலைபாடு பெரும்பாலான அம்சங்களில் நெருக்கமாகவே உள்ளன. சிறியசிறிய முரண்பாடுகள் இருந்தாலும், நேட்டோவில் ஓரணியில் இருப்பது முதல் ரஷ்ய-சீன எதிர்ப்பு வரை ஒன்றுபட்டே நிற்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராஜ தந்திர ரீதியாக நம்பகமான கூட்டாளியாக விளங்குகிறது. அப்பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போடுவதற்கு இந்தியாவை பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா.
உக்ரைன் போரில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா கொண்டு வந்த போது அதை மீறி மோடி அரசு அம்பானி-அதானி நலன்களிலிருந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் வர்த்தகத்தை மேற்கொண்டது; சீன எதிர்ப்பு நிலைபாட்டில் மோடி அரசுக்கு இருக்கும் ஊசலாட்டம் என இவை அமெரிக்காவிற்கு எரிச்சலூட்டன. இதன் காரணமாக மோடி அரசை சர்வதேச அரங்கில் தட்டி வைக்க முயற்சிகள் மேற்கொண்டது பைடன் அரசு. குஜராத் படுகொலை பற்றிய ஆவணப்படம், ஹிண்டன்பர்க் அறிக்கை, ஊழல் எதிர்ப்பு தொடர் தாக்குதலை தொடுத்தது அமெரிக்கா. வழக்கம்போல் ஜனநாயக வேடம் பூண்டது அமெரிக்கா. இந்தியாவில ஜனநாயகத்தை நிலைநாட்ட காவலனாக வேடமிட்டது. இப்போது அந்த நாடகத்தை கனடாவை முன்வைத்து நடத்துவதாக தெரிகிறது.
மோடி அரசு திட்டமிட்டே நிஜ்ஜாரை கொலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதை நாம் மறுக்கவில்லை. ஏனெனில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் உந்துதல் உள்ளது என்று மோடி அரசு பொய்ப்பிரச்சாரம் செய்ததோடு, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை எனும் பெயரில் பல ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்தக் கொலையை இவ்வளவு பூதாகரமாக பெரிதாக்கி - முரண்பாடுகளை தீவிரமாக்குவதன் நோக்கத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக முதன்முதலில் உளவுத் தகவல் அளித்தது - அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் உருவாக்கி வைத்துள்ள - ஐந்து கண்கள் உளவுக் கூட்டமைப்பு (Five Eyes Intelligence Alliance – FVEY)தான். அதன் பிறகு சில வாரங்கள் கழித்து அமெரிக்க குடிமகன் குர்பத்வந்த் சிங் பண்ணுவை கொலை செய்ய முயன்றதாகவும் இந்திய அதிகாரிகள் மீது குற்றச் சாட்டுகளை அமெரிக்க பெடரல் நீதிமன்றம் வைத்தது. இந்திய அதிகாரிகளுக்கு எதிராக சில சிவில் வழக்குகளைத் தொடுத்ததாலேயே இவரைக் கொல்லத் திட்டமிட்டதாக கூறியது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெயரையும் இந்த கொலை சதியில் இணைத்தது அமெரிக்கா. இந்திய அரசின் மீதும் இந்தியா வெளிநாடுகளில் இத்தகைய செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியது. இவ்வாறு பைடன் அரசு மோடி அரசை மிரட்டி அடிபணிய வைக்கிறது. இதற்காக இப்பிரச்சினைகளை ஊதிப்பெருக்கி பிரச்சாரம் செய்கிறது; சீக்கிய மத உணர்வுகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.. தன்னை ஜனநாயக – நீதியின் காவலனாகக் காட்டிக் கொண்டு வேடமிடுகிறது அந்த ஏகாதிபத்திய வல்லூறு.
ஈராக் ஆக்கிரமிப்பின் போதும் கூட அந்நாட்டின் மீது இது போன்ற பல வழக்குகளை திட்டமிட்டு ஜோடித்தது அமெரிக்கா. அமெரிக்காவின் இத்தகைய தந்திரங்களை ஓநாய்த்தனமான தந்திரம் (Wolf warrior diplomacy) என்று குற்றம் சாட்டுகிறது சீனா. ஆனால், ஷாங்காய் கூட்டமைப்பு இசுலாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் பேரில் அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாத செயல்பாடுகளை மறைமுகமாக ஆதரித்தது.
எனவே, வெவ்வேறு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை மட்டுமல்லாமல், ஒரே அணியில் உள்ள நாடுகளுக்கும் இடையே கூட முரண்பாடுகள் தீவிரமடைந்து வருவதை தெரிந்துக் கொள்ள பயன்படும். இவை குறித்த விரிவான ஆய்வுக்கு இந்த செய்தித் தகவல் பயன்படும்.
- செந்தளம் செய்திப் பிரிவு