உக்ரைனில் ஐரோப்பிய ஒன்றியப் படைகள் நிலைநிறுத்தப்படுவதற்கும், ஸெலென்ஸ்கியுடன் உடனடிச் சந்திப்பு நடத்துவதற்கும் ரஷ்யா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது
தமிழில்: விஜயன்

ஆகஸ்ட் 27, 2025, புதன்கிழமை அன்று, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு அமைதி காக்கும் படையினரை அனுப்புவதையும், அத்துடன் அதிபர்கள் விளாடிமிர் புடின் மற்றும் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இடையேயான ஒரு விரைவான சந்திப்பை நடத்துவதற்கும் கிரெம்ளின் திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தத்தின் அங்கமாக அமையக்கூடிய ஐரோப்பிய அமைதி காக்கும் படை குறித்து ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, "இதுபோன்ற விவாதங்களை நாங்கள் எதிர்மறையாகவே காண்கிறோம்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
2022 பிப்ரவரியில் போரைத் தொடங்குவதற்கான ரஷ்யாவின் முக்கிய காரணங்களுள் ஒன்று, நேட்டோ படைகள் உக்ரைனிய மண்ணில் நிலைபெறுவதைத் தடுப்பதே என்று அவர் சுட்டிக்காட்டினார். உக்ரைன், தனது பங்கிற்கு, மேற்கத்திய நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உறுதிமொழிகளை கோருகிறது. ரஷ்யா மீண்டும் தங்கள் மீது தாக்குதல் தொடுக்காது என்பதற்கான உறுதியை அது எதிர்பார்க்கிறது. ஆனால், கிழக்கு உக்ரைனில் உள்ள மேலும் பல நிலப்பரப்புகளை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. உக்ரைன் எதிர்நோக்கும் இந்த பாதுகாப்பு உத்திரவாதங்கள், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் "மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று" என்று பெஸ்கோவ் எடுத்துரைத்தார்; இருப்பினும், அவற்றின் துல்லியமான விவரங்களை மாஸ்கோ பொதுவெளியில் வெளியிடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதின் மற்றும் ஸெலென்ஸ்கி இடையிலான சந்திப்பு வெகுவிரைவில் நிகழும் என்ற எண்ணத்தையும் கிரெம்ளின் நிராகரித்தது. "தலைவர்களுக்கு இடையேயான எந்தவொரு உயர்மட்ட சந்திப்பும் வெற்றியடைய வேண்டுமெனில், அது மிக நுட்பமாகத் தயார்ப்படுத்தப்பட வேண்டும்" என்று பெஸ்கோவ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ரஷ்ய மற்றும் உக்ரைனிய பேச்சுவார்த்தைக் குழுக்களின் தலைவர்கள் இப்போதும்கூட "தொடர்பில்" உள்ளனர்; ஆயினும், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
- விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு