ஜப்பான்-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி: பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னரே அமெரிக்கப் பயணம் ஒத்திவைப்பு

தமிழில்: விஜயன்

ஜப்பான்-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி: பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னரே அமெரிக்கப் பயணம் ஒத்திவைப்பு

வர்த்தக உடன்பாட்டில் நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, பிரதமர் மோடியின் வருகைக்குச் சற்று முன்னர் ஜப்பான் தனது அமெரிக்கப் பயணத்தை இரத்து செய்துள்ளது. ஜப்பானின் தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளரான ரியோசெய் அகசாவா, தாம் உத்தேசித்திருந்த அமெரிக்கப் பயணத்தை வியாழக்கிழமை அன்று இறுதி கட்டத்தில் இரத்து செய்தார். ஜப்பான் அமெரிக்காவிற்கு அளித்த 550 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் தொகுப்பின் இறுதி அங்கீகாரத்தை, இந்த இரத்து நடவடிக்கை தாமதப்படுத்தக்கூடும். ஜப்பானியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான சுங்க வரிகளைத் தளர்த்துவதற்கு அமெரிக்காவை இணங்க வைப்பதே இந்த முதலீட்டின் பிரதான இலக்காக இருந்தது.

முக்கியமாக, இரு தேசங்களுக்குமிடையே இலாபம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முதலீட்டுத் தொகுப்பின் மையமான விவரங்களை உறுதிசெய்வதற்காகவே அகசாவா அமெரிக்கா செல்லவிருந்தார். ஜப்பானின் இந்த முதலீடு குறித்து அமெரிக்கா இந்த வாரத்தில் ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் முன்னரே தெரிவித்திருந்தார்.

 “தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கு முன்னரே அமெரிக்க அதிகாரிகளுடன் மேலதிகமாக விவாதிக்க வேண்டிய சில சவால்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் காரணமாகவே, இந்தப் பயணம் இரத்து செய்யப்படுகிறது,” என்று ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளரான யோஷிமாசா ஹயாஷி இதைத் தெளிவுபடுத்தினார். அத்துடன், சுங்க வரிகள் தொடர்பான அதிபரின் ஆணையை விரைவாகச் சீரமைக்குமாறும், ஜப்பானிய வாகன உதிரி பாகங்கள் மற்றும் கார்கள் மீதான வரிகளைக் குறைக்குமாறும் யோஷிமாசா ஹயாஷி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு முன்னதாக, முதலீட்டு உறுதிமொழிக்கு ஈடாக, ஜப்பானிய இறக்குமதிக்கான வரிகளை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்க அமெரிக்காவும் ஜப்பானும் உடன்பாடு கண்டிருந்தன. இருப்பினும், டொனால்ட் ட்ரம்ப், "இந்த முதலீட்டுத் தொகுப்பு என்பது, எங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்துவதற்கான நிதி" என்று முழங்கியதுடன், இலாபத்தில் 90 சதவீதத்தை அமெரிக்காவே தக்க வைத்துக் கொள்ளும் என்றும் பிரகடனம் செய்தார். இரு தரப்பினரும் சரிசமமான நன்மையைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, ஜப்பானிய அதிகாரிகள் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

முதலீடு தொடர்பான எத்தகைய அதிகாரப்பூர்வ கூட்டறிக்கையிலும் கையெழுத்திடுவதற்கு முன்னர், மாட்டிறைச்சி போன்ற பொருட்கள் மீதான கூடுதல் வரிகளை நீக்குவதற்கான திருத்தப்பட்ட அதிபர் ஆணையை அமெரிக்கா வெளியிட வேண்டும் என்று ஜப்பானிய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர். வாகனங்களுக்கான சுங்க வரிகளை 27.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பதற்கான வேறொரு ஆணை பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தாலும், இது எப்போது செயல்வடிவம் பெறும் என்று குறிப்பிடவில்லை.

ஜூலை மாதத்தில் அமெரிக்காவிற்கான ஜப்பானின் ஏற்றுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், இந்த ஆண்டுக்கான தனது வளர்ச்சி மதிப்பீடுகளைக் குறைக்கும் சங்கடமான நிலைக்கு ஜப்பான் தள்ளப்பட்டுள்ளது; ஜப்பானின் வளர்ச்சி எதிர்பார்ப்பு 1.2 சதவீத வளர்ச்சியிலிருந்து வெறும் 0.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அகசாவா வாஷிங்டனுக்கான தமது பயணத்தை மீண்டும் திட்டமிடுவாரா என்பது இதுவரை முடிவாகவில்லை. இருப்பினும், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், அவர் அடுத்த வாரமே கூடப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பானுக்கு வருகை தருகிறார். இது 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு ஆகும். இதில் இரு தலைவர்களும் பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் போன்ற தங்களது கூட்டணியின் முக்கியத் அம்சங்கள் குறித்து ஆழமாக விவாதிப்பார்கள். இந்த வருகையின்போது விவாதத்திற்குரிய பிரதான அம்சங்களில் குவாட் கூட்டமைப்பும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.ndtv.com/world-news/ahead-of-pm-modis-visit-japan-scraps-us-trip-last-minute-over-trade-deal-9175748

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு