வெனிசுலா: இராணுவத் தலையீடு மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான செயல் திட்டம்

வெண்பா (தமிழில்)

வெனிசுலா: இராணுவத் தலையீடு மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான செயல் திட்டம்

கரீபியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஏனெனில் அமெரிக்கா தனது இராணுவ அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்துகிறது. “போதைப் பொருட்களுக்கு எதிரான போர்” என்ற முகமூடியின் கீழ், வெனிசுலாவில் இராணுவத் தலையீட்டிற்கான ஒரு செயல் திட்டத்தை (Blueprint) அமெரிக்கா தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இது பலிகளை உண்டாக்கும் மோசமான அச்சுறுத்தல் என சட்ட நிறுவனங்களாலும் பிராந்தியத் தலைவர்களாலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு சட்ட அமலாக்க நடவடிக்கை அல்ல; அது சட்டத்தையே மறுப்பதாகும், இது மன்றோ கோட்பாட்டின் (Monroe Doctrine) புதிய காலனித்துவ மறுமலர்ச்சியாகும். இதன் நோக்கம் வெனிசுலாவின் இறையாண்மையைப் பிளவுபடுத்துவது, உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது, மற்றும் தனக்குக் கீழ்ப்படியும் ஒரு ஆட்சியை நிறுவுவது ஆகும்.

அரசு பயங்கரவாத கொலையின் முன்னுதாரணம்

சட்டத்திற்குப் புறம்பான வன்முறையை (extrajudicial violence) அச்சுறுத்தும் வகையில் கையாள்வது தற்போதைய தீவிரப் போக்காக உள்ளது. போதைப்பொருள் கடத்தலை நிறுத்த வேண்டும் என்ற கூற்றுடன், வெனிசுலா கடற்கரைக்கு அருகிலுள்ள தனியார் கப்பல்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் ஒருதலைப்பட்சமான இராணுவத் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களைத் தொடுக்க, அமெரிக்க இராணுவம் போர்க் கப்பல்கள், ஆளில்லா விமானங்கள் (drones) மற்றும் சிறப்புப் படைகளைக் கொண்ட கடற்படையையே குவித்துள்ளது.

சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர். கரீபியனில் நடந்த இத்தாக்குதல் மேலும் 6 பேரின் கொலைக்கு வழிவகுத்தது. இது சட்ட அமலாக்கம் அல்ல; இது சட்டத்திற்குப் புறம்பான கொலை (extrajudicial murder) மற்றும் வெனிசுலாவுக்கு எதிரான போர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பாதிக்கப்பட்டவர்களை, நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாமல், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் “பயங்கரவாதிகள்” என்று வர்ணித்துள்ளது அமெரிக்கா. அப்படியே இந்தக் கூற்று உண்மையாக இருந்தாலும் கூட, அதை முடிவெடுத்து கொலை செய்ய சட்டப்பூர்வ அதிகாரம் டிரம்ப்புக்கு அளிக்கப்படவில்லை.

திட்டமிட்ட கொலைகளால், சட்ட அமலாக்க நடைமுறைகளை மாற்றும் இந்த ஆபத்தான கொள்கையைச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்துள்ளன. சர்வதேச சட்ட நெறிமுறைகளில் முக்கிய குரலாக இருக்கும் நியூயார்க் நகர வழக்கறிஞர் சங்கம் (NYCBA) இந்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளது. NYCBA வெளிப்படையாகக் கூறியது என்னவென்றால், “வெனிசுலா கப்பல்கள் மற்றும் அவற்றின் ஊழியர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் அமெரிக்க சட்டத்தால் அங்கீகரிக்கப்படாததாலும், பிணைப்புக்குரிய சர்வதேச சட்டத்தை மீறியதாலும், அவை சட்டவிரோத கொலைகள் ஆகும்”. மேலும், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights) கீழ், “எவரும் தன்னிச்சையாக ஒருவரது வாழ்க்கையை முடிக்கக் கூடாது” என்ற அடிப்படை சர்வதேசக் கொள்கையை இந்த நடவடிக்கைகள் மீறுவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.

போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல்களைத் தடுத்து நிறுத்தித் தேடவும், அதன் பிறகு முறையான சட்ட நடைமுறைகளின் (due process requirements) படி அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடரவும் கடலோரக் காவல்படைக்கு (Coast Guard) போதுமான சட்டப்பூர்வ அதிகாரம் அமெரிக்க அரசாங்கத்திடம் உள்ளது. இருப்பினும், வெனிசுலா கப்பல்களின் விஷயத்தில், கடலோரக் காவல்படையின் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட காவல்துறைக் கடமை புறக்கணிக்கப்பட்டது; அதற்குப் பதிலாக, பணியாளர்கள் அதிகப்படியான இராணுவ பலத்தால் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ உட்பட பிராந்தியத் தலைவர்கள், சட்டத்திற்குப் புறம்பான இந்தக் கொலைகளைக் கண்டித்துள்ளனர். போதைப்பொருள் எதிர்ப்பு முகமூடியின் கீழ், ஒருதலைப்பட்சமான அமெரிக்க இராணுவ நடவடிக்கை மீண்டும் திரும்புவது குறித்து லத்தீன் அமெரிக்கா முழுவதும் நிலவும் ஆழ்ந்த கவலைகளையும் அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

B-52கள் மற்றும் போர் அச்சுறுத்தல்

மரணத்தை விளைவிக்கும் தாக்குதல்களுக்கு அப்பால், அமெரிக்க அரசாங்கம் வெனிசுலாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் இராணுவ நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அமெரிக்க B-52 குண்டுவீச்சு விமானங்கள் (bombers) வெனிசுலா வான்வெளியில், தாள் உயரத்தில் பறப்பது ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாகும். இந்த நடவடிக்கைக்கும் “போதைப் பொருட்களுக்கு எதிரான போர்” என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக வெனிசுலாவின் எண்ணெயைக் கொள்ளையடிக்க ஆட்சியை மாற்றுவதுடன் மட்டுமே தொடர்புடையது. இந்த பொறுப்பற்ற போருக்கான தயாரிப்பு சர்வதேச ஆக்கிரமிப்பின் ஒரு குற்றச் செயலாகும்.

கரீபியனில் ட்ரம்ப் அரசின் ஒருதலைப்பட்ச ஆளில்லா விமானத் தாக்குதல்கள், வெனிசுலாவுடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் வெள்ளை மாளிகை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் இணைத்து பார்த்தால், முழு அளவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கான முன்னோட்டமாகத் தெரிகிறது. இது ஒரு முக்கியமான தருணம். நாம் அபாய ஒலி எழுப்ப வேண்டும்: இந்தப் பிராந்தியத்தில் புதிய பேரழிவு மோதலுக்கான ஆபத்து உள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் சொந்த அதிகாரிகளே போர்வெறி கொண்ட பேச்சுகள் - நடவடிக்கைகளின் மூலம் நெருக்கடியைத் தொடர்ந்து தீவிரப்படுத்துகின்றனர். ஆட்சி மாற்றக் கொள்கையின் முக்கிய வடிவமைப்பாளரான வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இராணுவ வழிமுறையை ஆதரித்து வருகிறார். அவர், மதுரோ ஆட்சி “பிராந்தியத்திற்கும், அமெரிக்காவிற்கும் கூட அச்சுறுத்தலாக” மாறியுள்ளது என்று வலியுறுத்துகிறார்.

வெனிசுலாவின் நோக்கமோ அதன் இறையாண்மையின் கொள்கை ரீதியான பாதுகாப்பாக இருந்து வருகிறது. ஐ.நாவுக்கான தூதுவர் சாமுவேல் மொன்கடா உலக அரங்கில் மீண்டும் மீண்டும் அபாய ஒலியை எழுப்பியுள்ளார். கரீபியனில் உள்ள அமெரிக்க இராணுவக் குவிப்பானது பெரிய பிரச்சார நடவடிக்கையாகும் என்றும், இது நாட்டின் எண்ணெய் வளத்தைப் பறிக்க “மோதலை உருவாக்க சாக்குப்போக்குகளைத்” தேடுகிறது என்றும் அவர் வாதிடுகிறார். மொன்கடா உறுதிப்படுத்தியதாவது, “அமெரிக்கா கரீபியன் தனக்குச் சொந்தமானது என்று நம்புகிறது, ஏனெனில் அது 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு மன்றோ கோட்பாட்டைப் பயன்படுத்தி வருகிறது, இது காலனித்துவத்தின் எச்சத்தை தவிர வேறில்லை”.

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ வாஷிங்டனை மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். “எங்கள் இராஜதந்திரம் பீரங்கிகளின் இராஜதந்திரம் அல்ல, அச்சுறுத்தல்களின் இராஜதந்திரம் அல்ல, ஏனென்றால் உலகம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய உலகமாக இருக்க முடியாது,” என்று அவர் கூறினார். அதே நேரத்தில், நாடு எந்தவொரு நேரடித் தாக்குதலுக்கும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த தேசியப் பாதுகாப்புப் பயிற்சிகளை அவர் திரட்டுகிறார். வெனிசுலா கப்பல்கள் மீதான தாக்குதல்களும், வெனிசுலா அரசாங்கத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் (United Nations Charter) கீழ் தேசத்தின் கடமைகளை மீறுகின்றன என்றும், இது பகிரங்கப் பகைமைக்கு (open hostilities) வழிவகுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்றும் NYCBA எச்சரித்தது.

ஈராக் போருடனான ஒப்பீடுகள்: எண்ணெய், சித்தாந்தம் மற்றும் சூழ்ச்சி

தற்போதைய நிலைமை 2003 ஈராக் ஆக்கிரமிப்புக்கு முந்தைய காலகட்டத்தை மிகவும் அச்சுறுத்தும் வகையில் நினைவூட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில், புஷ் நிர்வாகம் “பேரழிவு ஆயுதங்கள்” (weapons of mass destruction) என்ற அடிப்படையில் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை நியாயப்படுத்தியது, ஆனால் இது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. உண்மையான இலக்குகள் எண்ணெயுடன் மட்டும் நின்றுவிடவில்லை, ஆனால் ஆழமான சித்தாந்த மற்றும் அரசியல் இலக்குகளை அடைவதையும் உள்ளடக்கியது – அதாவது மத்திய கிழக்கு அரசியலை மறுவடிவமைக்கவும் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் அரசாங்கத்தையே வீழ்த்துவது.

அமெரிக்கா இந்த வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். புஷ் நிர்வாகம் ஈராக்கில் விரைவான வெற்றியை கண்டது. அதற்குப் பதிலாக, ஆக்கிரமிப்புகள் மற்றும் படையெடுப்புகள் எண்ணற்ற ஈராக்கிய உயிர்களைப் பலிகொண்டன, பல்லாயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர், மேலும் பிராந்தியத்தை நிலைகுலையச் செய்தது. லத்தீன் அமெரிக்காவின் மையப்பகுதிக்குள் அமெரிக்கா இராணுவப் படையெடுப்புகளை பாரிய பின்விளைவு இல்லாமல் மேற்கொள்ள முடியும் என்ற கருத்து அபத்தமானது.

வெனிசுலாவின் விஷயத்தில், “போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” மற்றும் அரசாங்கத்தை “அச்சுறுத்தல்” என்று முத்திரை குத்துதல் ஆகியவை வார்த்தை ஜாலங்களாக உள்ளன. அமெரிக்காவின் ஆர்வம் பலதரப்பட்டது: இது உலகின் மிகப்பெரிய கண்டறியப்பட்ட எண்ணெய் வளங்களைக் கைபற்றவும் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் லத்தீன் அமெரிக்க அரசியலை மறுவடிவமைக்கவும் ஒரு சோசலிச அரசாங்கத்தை வீழ்த்துவுமான சித்தாந்த மற்றும் அரசியல் இலக்கை அடைவது ஆகியவற்றை உள்ளடக்கியது. அமெரிக்கா பொலிவேரியன் புரட்சியை (Bolivarian Revolution) அகற்றவும், இந்த அரைக்கோளத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் முக்கிய மையத்தை ஒழிக்கவும் முயல்கிறது.

தற்போதைய தீவிர அச்சுறுத்தலானது, சட்ட அமலாக்கம் அல்லது போதைப்பொருள் எதிர்ப்பு பற்றியது அல்ல; அது ஆட்சி மாற்றம் மற்றும் கொள்ளை பற்றியதாகும். ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், அத்துடன் பொதுக் கருத்தின் முக்கிய குரல்கள், இந்தத் தாக்குதல்களின் சட்டவிரோத தன்மை மற்றும் நிர்வாகத்திடமிருந்து நம்பத்தகுந்த தகவல் இல்லாதது பற்றி அதிகளவில் குரல் கொடுத்து வந்தாலும், இன்னும் தீவிர எதிர்நடவடிக்கை தேவைப்படுகிறது. ஏணிப்படியில் ஏறிய பிறகு, திரும்பிச் செல்வது சாத்தியமில்லாமல் போகலாம். சர்வதேச சமூகம் இந்த ஆக்கிரமிப்புப் பிரச்சாரத்தை அதன் உண்மையான வடிவத்தில் அங்கீகரிக்க வேண்டும்: இது சர்வதேச ஆக்கிரமிப்பின் ஒரு குற்றச் செயலாகும். புதிய, பேரழிவு தரும் மோதலின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக உலகம் நிற்க வேண்டும்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://theaidem.com/en-trumps-military-escalation-in-venezuela-mimics-iraq-war-blueprint/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு