சீனாவின் கொள்ளைக்கு எதிராக கிளம்பும் ஆப்பிரிக்க நாடுகள்
தமிழில்: விஜயன்
ஆப்பிரிக்க நாடுகள் சீனாவின் கொள்ளையாதிக்க கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
சீனாவில் மின்னணு வாகனத் தொழிற்துறையை வளர்த்தெடுப்பதற்காக ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் அருமண் கனிம வளங்களை சீனா கொள்ளையடித்து வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில், சில சீன நிறுவனங்கள் சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு நைஜீரியா அரசாங்கம் தடை விதித்தது. அந்த சுரங்க பணிகளும் அதுவரை சட்டவிரோதமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ருய்டாய்(Ruitai) சுரங்க நிறுவனம் சட்டவிரோதமாக டைட்டானியம் கனிமங்களை சுரங்கம் அமைத்து கொள்ளையடித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜின்ஃபெங் இன்வெஸ்ட்மன்ட்ஸ்(Xinfeng) என்ற சீன சுரங்க நிறுவனத்தின் உரிமத்தை கடந்த மே மாதம் நமீபியா அரசு ரத்து செய்துள்ளது. இந்நிறுவனம் சட்ட விரோத வழிகளில் லித்தியம் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) தெற்கு கிவுவில் செயல்பட்டு வந்த ஆறு சீன நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிறுவனங்களும் சட்ட விரோத வழிகளில் தங்கம் மற்றும் பிற கனிம வளங்களை சுரங்கம் அமைத்து சூறையாடி வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், காங்கோ நாட்டில்தான் இரண்டு சீன நாட்டவர்கள் கொல்லப்பட்டனர். சுரங்கத்திலிருந்து தங்கத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்த போது அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் சீன நாட்டவர்களை குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, மார்ச் 2023 இல் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்க நிறுவனத்தில் ஒன்பது சீனர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து கனிம வளங்களை இறக்குமதி செய்வதில் சீனாவே முதன்மையான நாடாக திகழ்கிறது. வில்சன் சென்டர் என்ற ஆய்வு நிறுவனத்தின் கருத்துப்படி, சஹாரா பாலைவனத்திற்கு தெற்கு பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனிம வளங்களின் தோராய மதிப்பு 2019 இல் 10 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
காங்கோவில், பல குழந்தைத் தொழிலாளர்கள் சுரங்கப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது மட்டுமின்றி சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்களும் கோபால்ட், லித்தியம் மற்றும் அருமண் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்று இங்கிலாந்தை சேர்ந்த RAID (Rights and Accountability in Development) என்ற NGO வெளியிட்ட ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் 2016 இல் காங்கோவில் சீன நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள கோபால்ட் சுரங்க வயல்களில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.
சீனவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்கள் பலர் காங்கோவில் வசித்து வருகிறார்கள். அங்கு செயல்படக்கூடிய 19 கோபால்ட் சுரங்க வயல்களில் 15 சுரங்க வயல்கள் சீன நிறுவனங்களுக்கோ அல்லது சீனாவைச் சேர்ந்த துணை நிறுவனக்கோ சொந்தமானதாக இருந்து வருகிறது. அங்குள்ள ஐந்து பெரிய சீனச் சுரங்க நிறுவனங்களுக்கு, சீனாவைச் சேர்ந்த வங்கிகளிடமிருந்து சுமார் 124 பில்லியன் டாலர்கள் கடன்களாக வழங்கப்பட்டுள்ளன.
ஜூலை 2023 இல், காங்கோவில் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்தியதன் மூலமோ அல்லது தொழிலாளர்கள் பணி செய்வதற்கு தகுதியற்ற நிலைமைகளின் கீழ் வெட்டியெடுக்கப்பட்ட கனிம வளங்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில் அமெரிக்காவின் மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுரங்க விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்திற்காக சியாங் ஜியாங்(Xiang Jiang ) என்ற சீன நிறுவனத்தின் மீது காங்கோ அரசாங்கம் 90,000 டாலர்களை அபராதமாக விதித்திருப்பதும் கவனிக்கத்தக்க விசயமாகும்.
2019 ஆம் ஆண்டில், கானாவில்(Ghana) சட்டவிரோதமாக தங்க வயல்கள் அமைத்ததற்காக சீனவைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர். ஆப்பிரிக்காவில் அதிகளவு தங்க உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக கானா(Ghana) விளங்குகிறது. சீனாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட சுமார் 30,000 பேர் இந்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. சீன நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் குறிப்பாக தங்கம் மற்றும் பிற கனிம வளங்களை கைப்பற்றுவதன் மூலம் தங்களுக்கான கொள்ள லாபத்தை உத்திரவாதப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை தேடியலைகின்றன. கானா நாடுதான் சீன நிறுவனங்களுக்கு பொன் முட்டையிடும் வாத்தாக கருதப்படுகிறது. பெரும்பாலும், இதுபோன்ற சட்ட விரோத சுரங்க வயல்களில் இருந்து பெறப்படும் தங்கம்தான் மேற்கு ஆசியா வழியாக உலக சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது.
2017 ஆம் ஆண்டில், ஜாம்பியா அரசாங்கம் 31 சீன நாட்டவர்களை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சுரங்க வயல்களில் பணி செய்து வந்தபோது கைது செய்துள்ளது. சட்ட விரோத சுரங்கப் பணிகளில் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதற்கான போதிய வலுவான ஆதாரத்தை கானா அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டதாக அச்சமயத்தில் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.
சீனவைச் சேர்ந்தவர்கள் சுமார் 22,000 பேர் ஜாம்பியாவில் வசித்து வருகிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் 280 நிறுவனங்களில் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜாம்பியாவில் உள்ள சீனர்களை குறிவைத்து தாக்கதல் தொடுக்கப்படும் சங்பவங்களும் நடந்தேறி வருகின்றன.
- விஜயன்
(தமிழில்)