உக்ரைனுக்கு டொமஹாக்குகளை வழங்குவதற்கு எதிராக ட்ரம்பிற்கு புடின் எச்சரிக்கை
தமிழில்: வெண்பா
உக்ரைனுக்கு டொமஹாக்குகளை வழங்குவதற்கு எதிராக ட்ரம்பிற்கு புடின் எச்சரிக்கை விடுத்தார், இந்த நடவடிக்கை அமைதிக்கும் அமெரிக்கா-ரஷ்யா உறவுகளுக்கும் அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறுகிறது. உக்ரைனுக்கு டொமஹார்க் கப்பல் ஏவுகணைகளை அனுப்புவது அமைதி முயற்சிகளை சேதப்படுத்தும் என்றும் இருதரப்பு உறவுகளைச் சீர்குலைக்கும் என்றும் ட்ரம்பை புடின் தொலைபேசி வாயிலாக எச்சரித்ததாக அவரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்தார்.
உஷாகோவ் செய்தியாளர்களிடம், "டொமஹாக்குகள் வழங்குவது போர்க்களத்தின் சூழ்நிலையை மாற்றாது, ஆனால் அது அமெரிக்கா-ரஷ்யா உறவுகளையும் அமைதி செயல்முறையையும் பாதிக்கும்" என்றும் கூறினார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நீடித்த அந்த அழைப்பை புடின் தான் தொடங்கினார் என்று உஷாகோவ் தெரிவித்தார், மேலும் அந்த விவாதத்தில் ரஷ்ய எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உட்பட உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளும் பேசப்பட்டன.
உச்சிமாநாடு திட்டங்களும் தொடர் பேச்சுவார்த்தைகளும்
உஷாகோவ் கூற்றுப்படி, புடாபெஸ்டில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு, அடுத்த சில நாட்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவிற்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிற்கும் இடையில் ஒரு அழைப்பு நடைபெறும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
சந்திப்புக்கான இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ரஷ்யா கூறியது. இருப்பினும், ட்ரம்ப் பின்னர் ஹங்கேரியின் புடாபெஸ்ட்டை முன்மொழிய, புடின் "உடனடியாக ஒப்புக்கொண்டார்".
‘தீர்க்க மிகவும் கடினமானது’ என்று உக்ரைன் போரைப் பற்றி ட்ரம்ப் கருத்து
இந்த உரையாடலின் போது, ட்ரம்ப் போரின் சிக்கலான தன்மையை ஒப்புக் கொண்டார், உக்ரைனில் நடக்கும் போர் " தீர்க்க அனைத்து வகையிலும் மிகவும் கடினமானது" என்று கூறினார். வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜெலென்ஸ்கியைச் சந்திக்கும் போது புடினின் சிக்கல்களைக் கருத்தில் கொள்வதாக ட்ரம்ப் உறுதியளித்ததாக உஷாகோவ் கூறினார். "இந்த போரின் முடிவு ரஷ்யாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கு அற்புதமான வாய்ப்புகளைத் திறந்துவிடும்" என்று ட்ரம்ப் புடினிடம் கூறியதாகத் தெரிகிறது.
டொமஹாக்குகளும் அபாய எல்லைக் கோடுகளும்
உக்ரைன் நீண்ட காலமாக அமெரிக்காவின் டொமஹார்க் நீண்ட தூர கப்பல் ஏவுகணைகளை நாடி வருகிறது, இது மாஸ்கோவையும் மற்ற முக்கிய ரஷ்ய நகரங்களையும் உக்ரைனிய தாக்குதல்களின் வரம்பிற்குள் கொண்டு வரும். இந்த ஆயுதங்களை வழங்குவது "அபாய எல்லைக் கோட்டைக்" கடக்கும் என்று புடின் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ட்ரம்ப் அந்த விருப்பத்தை கைவிடவில்லை. இந்த வார தொடக்கத்தில், ட்ரம்ப் ஜெலென்ஸ்கியைப் பற்றிக் குறிப்பிடுகையில்: "அவர் டொமஹாக்குகளை விரும்புவார்", "எங்களிடம் நிறைய டொமஹாக்குகள் உள்ளன" என்றார்..
போர்க்களத்தில் பதற்றம் அதிகரிப்பு
இராஜதந்திர திட்டங்கள் தொடரும் வேளையில், இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் ரஷ்யா 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் 37 ஏவுகணைகளையும் ஏவியதாகவும், நாட்டின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்ததாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். சரடோவ் பகுதியில் உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் தாக்கி உக்ரைன் பதிலடி கொடுத்தது.
போர் நான்காவது ஆண்டில் நுழையும் நிலையில், குளிர்கால மாதங்களில் உக்ரைனின் எரிசக்தி மற்றும் மின் நிலையங்களை ரஷ்யா மீண்டும் மீண்டும் குறிவைத்துள்ளது. விரைவில் ஜெலென்ஸ்கியை ட்ரம்ப் சந்திக்க உள்ளார். இந்த ஆண்டு அவர்களுக்கு இடையே நடக்கும் நான்காவது நேரடி சந்திப்பு இதுவாகும். அங்கு, புடினுடனான அவரது அழைப்பைத் தொடர்ந்து, அவர் டொமஹார்க் ஏவுகணை மற்றும் சாத்தியமான இராஜதந்திர வாய்ப்புகள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு