அதிகரிக்கும் நவீன அடிமைத்தனம்

ஐ.நா வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை

அதிகரிக்கும் நவீன அடிமைத்தனம்

உலகெங்கும் நவீன அடிமைத்தனத்திற்குள் தள்ளப்படும் மக்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று ஐ.நா வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பாகிய ILO தெரிவித்துள்ளது.

கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு சுரண்டல் மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட திருமணங்கள் ஆகியவை உள்ளடக்கியே நவீன அடிமைத்தனம் எனும் பதம் ILO வால் பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கும் 2016 ஆம் ஆண்டு இவ்வகை அடிமைத்தனங்களில் ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கை 4கோடியாக இருந்த நிலையில் தற்போது 2021 ல் இது 5கோடியாக அதிகரித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று, யுத்தங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உலகெங்கும் வறுமை நிலையை மேலும் அதிகரித்துள்ளது. 

இத்தகைய நவீன அடிமைத்தனத்தில் ஈடுபட்டிருக்கும் 5 கோடி பேரில் 2 கோடியே 76 லட்சம் பேர் அடிமை உழைப்பிலும் மற்றும் 2கோடியே 20 லட்சம் பேர் விருப்பமற்ற கட்டாய திருமணங்களிலும் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 2016 லிருந்து 2021வரை ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் அடிமை உழைப்பில் ஈடுபடுவோர்  எண்ணிக்கை 3.4 என்னும் அளவிலிருந்து 3.5 ஆக உயர்ந்துள்ளதாக ILO அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வகையான கட்டாய அடிமைத்தனம் என்பது தனியார் துறை சார்ந்த பொருளாதாரத்தின் மூலமாகவே வளர்கிறது என்றும் விபச்சாரம் மற்றும் இதர தனியார் துறைகளிலும் கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு என்பது அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றின் ஆரம்ப காலகட்டங்களில் இவ்வகையான அடிமைத்தனங்கள் அதிகரிக்க தொடங்கியதாகவும், கோவிட் பெருந்தொற்றினால் அதிகரித்த பொருளாதார மந்தநிலை மற்றும் அதனால் உருவான தனிநபர் வருவாய் பாதிப்பினால் அதிகமான மக்கள் கந்துவட்டி கடன்காரர்களின் வலையில் சிக்கியதாகவும் அதன் காரணமாகவே பலரும் கொத்தடிமை முறைக்குள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், வேலை செய்யும் இடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது பற்றி தொழிலாளர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் ILO தெரிவித்துள்ளது.

உலகெங்கும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளிலேயே இது போன்ற நவீன அடிமைத்தனங்கள் பாதிக்கும் மேல் அதிகம் நிலவுவதாகவும், ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 40 லட்சமாகவும் , ஆப்பிரிக்காவில் 38 லட்சமாகவும், அமெரிக்க நாடுகளில் 36  லட்சமாகவும், அரபு நாடுகளில் 9 லட்சமாகவும் இருப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடைகளானது  இந்தியா மற்றும் சூடான் நாடுகளில் குழந்தை திருமணங்களை மறைவாக நடத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது எனவும் அதுவே கட்டாய திருமணங்கள் அதிகமானதற்கு காரணம் எனவும் ILO அமைப்பு தெரிவித்தது. கட்டாய திருமணங்கள் மூன்றில் இரண்டு பங்கு ஆசிய பசிபிக் நாடுகளில் நடந்துள்ளதாகவும் 30 லட்சம் ஆப்பிரிக்காவிலும் மற்றும் 23 லட்சம் மத்திய ஆசியாவிலும் நடந்துள்ளதாகவும் அரபு நாடுகளில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 4.8  பேர் கட்டாய திருமணத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

- செந்தளம் செய்திப்பிரிவு