உலகெங்கிலும் நிகழும் மோதல்கள் போர் இடர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான தேவையை அதிகரித்துள்ளன
பிபிசி - தமிழில்: விஜயன்

உக்ரைன் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளில் போர்கள் தொடர்ந்து நீடிப்பதால், அதிகம் கவனம்பெறாத ஓர் பன்னாட்டு சந்தை இன்று மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது — அதுவே போர் இடர்க் காப்பீட்டுச் சந்தை ஆகும்.
கடந்த நவம்பர் மாதம், கீவ் (Kyiv) நகரின் எல்லையில் அமைந்திருந்த ஓர் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் நடாலியா கிறிஷ்கோ என்பவரின் (Natalia Grishko) வீட்டை ரஷ்ய ஏவுகணை தாக்கிச் சிதைத்தபோது, நல்லவேளையாக அவர் காயம் ஏதுமின்றித் உயிர் தப்பினார்.
ஏவுகணை சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் வந்து வீழ்ந்ததாக அவரது மகள் அலினா கால்சேவா (Alina Kalcheva) கூறுகிறார். "அந்த வெடிப்பின் தாக்கத்தால் என் தாயார் குடியிருந்த வீட்டின் பால்கனி, சன்னல்கள், கதவுகள் மட்டுமல்லாது குடியிருப்பின் உட்பகுதியும் சேதமடைந்தது," என்றார்.
அவரது தாய் முதலில் அதிர்ச்சியடைந்து அழுதாலும், இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிராகத் தங்களது வீடு காப்பீடு செய்யப்பட்டிருப்பதை அறிந்த பின்னர் அவர் மன அமைதி கொண்டதாக அவர் மகள் கால்சேவா தெரிவித்தார்.
நீங்கள் உக்ரைனில் வசிக்கிறீர்களா அல்லது வேறு நாட்டில் வசிக்கிறீர்களா என்பதெல்லாம் கணக்கில்லை, சாதாரணமாக வீடுகளுக்கு வாங்கப்படும் காப்பீடானது போர்ச் சேதத்தை ஈடுகட்டாது. ஆனால், கால்சேவா தமது தாய்க்காக ஒரு பிரத்யேக போர் இடர்க் காப்பீட்டுத் திட்டத்தை முன்னெச்சரிக்கையாக வாங்கியிருந்தார். தற்போது ஏவுகணை தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை பழுதுநீக்கம் செய்வதற்காக காப்பீட்டு நிறுவனம் $1,000 டாலர்களை (£740) வழங்கியிருக்கிறது.
ஆண்டுக்கான பிரீமியம் (சந்தா) வெறும் $52 டாலர்தான். "அதை வாங்குவதற்கு முன் நான் ஒரு கணம் கூடத் தயங்கவில்லை. இறுதியில், அது சரியான முடிவு என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது," என்று 33 வயதான மகள் கால்சேவா கூறுகிறார்.
மற்றொரு உக்ரைனியரான எகடெரினா வஸ்யேவா (Ekaterina Vasylieva), ஏப்ரல் 2024-ல் தனது மகிழுந்தைக்கூட போர் இடர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருந்தார். சரியாக ஒரு நாள் கழித்து, ஒடேசா என்ற கடலோர நகரில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது, ரஷ்யத் தெறி குண்டுகள் அவரது வாகனத்தைச் சேதப்படுத்தின.
"அதற்கு முந்தைய நாள்தான் நான் என் காருக்கான முழுமையான காப்பீட்டைப் புதுப்பித்தேன், மேலும் போர் இடர் காப்பீட்டையும் சேர்த்துக்கொள்ளுமாறு மேலாளர் எனக்குப் பரிந்துரைத்தார்" என்று அவர் கூறுகிறார். "அந்த முடிவானது எனக்குப் பெருமளவு பணத்தைச் சேமித்தது, ஏனெனில் ரஷ்யத் தாக்குதலுக்குப் பிறகு, கார் சல்லடையாகிப்போனது ".
போர் இடர்க் காப்பீடு என்பது ஒரு விரிவான துறைசார்ந்த கலைச்சொல் ஆகும். இது பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான காப்பீட்டையும் உள்ளடக்கியுள்ளது. 2001-ல் அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு இத்துறை மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தனிநபர்களால் இத்தகைய காப்பீடுகளை வாங்க முடியுமென்றாலும், பெரும்பாலான காப்பீட்டுத் திட்டங்கள் நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன — குறிப்பாக அதிக அபாயம் நிறைந்த மண்டலங்களில் — நிறுவனங்களின் வணிகங்கள், பணியாளர்கள், மற்றும் உலகெங்கிலும் உள்ள கிளைகளைப் பாதுகாப்பதற்காகவே இவை வாங்கப்படுகின்றன.
துல்லியமான எண்ணிக்கைகள் தெளிவாக இல்லாவிட்டாலும், உலகெங்கிலும் உள்ள மக்களும் நிறுவனங்களும் தற்போது போர் இடர்க் காப்பீட்டுத் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் $1 பில்லியன் (£800 மில்லியன்) டாலர்கள் செலவிடுவதாக ஒரு வர்த்தக இதழ் மதிப்பிட்டுள்ளது. இதில், சுமார் £621 மில்லியன் யூரோ மதிப்பிலான — கிட்டத்தட்ட 80% காப்பீட்டுத் திட்டங்களை— இத்தகைய காப்பீடுகளுக்கு சர்வதேச மையமாகத் திகழும் லண்டனில் உள்ள சிறப்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கே செல்கிறது.
வெஸ்ட்பீல்ட் ஸ்பெஷாலிட்டி (Westfield Speciality) என்ற நிறுவனத்தில், அரசியல் வன்முறை, போர் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளும் ஒன்பது பேர் கொண்ட ஒரு சிறிய குழுவிற்கு லண்டனைச் சேர்ந்த ஜோனா கசின்ஸ் (Joanna Cousins) என்பவர் தலைமை தாங்குகிறார். மேற்கத்திய நிறுவனத்தால் நடத்தப்படும், ஈராக்கில் உள்ள ஒரு பிரமாண்டமான எரிசக்தித் தளம் சமீப ஆண்டுகளில் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானதை உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.
அந்த நிறுவனம் £100 மில்லியன் யூரோக்கும் அதிகமான போர் இடர் காப்பீடுகளை வாங்கியிருந்தது. அது இல்லாவிடில், அந்தத் தளம் முற்றிலுமாக மூடப்பட்டிருக்கவோ அல்லது அதன் செயல்பாடுகளைக் குறைத்திருக்கவோ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம்.
இதுபோன்ற காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் துல்லியமான செலவு விவரங்களைப் பகிர்ந்துகொள்வது அரிது. ஆனால், லெபனான் அல்லது இஸ்ரேலில் போர் இடர் காப்பீடுகளை வழங்கி வரும் ஒரு பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க நிறுவனங்கள், மொத்தக் காப்பீட்டுத் தொகையில் 0.5% முதல் 2% வரை பிரீமியத் தொகையாக நிர்ணயித்துள்ளன என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த லண்டன் அபாய மதிப்பீட்டாளர் (underwriter) கூறியுள்ளார்.
ஓர் அபாய மதிப்பீட்டாளர் என்பவர் இடரின் அளவை மதிப்பிட்டு, அதன்பின் காப்பீட்டுக் கட்டணத்தைக் கணக்கிடும் ஓர் நிதித்துறை வல்லுநர் ஆவார்.
இதன் பொருள், ஒரு வணிக நிறுவனம் £100 மில்லியன் யூரோவிற்கு போர் இடர் காப்பீடுகளை வாங்கினால், £5,00,000 முதல் £2 மில்லியன் யூரோ வரை அந்த நிறுவனத்தால் இழப்பீடு பெற இயலாம். ஆயினும், மத்திய கிழக்கு நிலையற்றதாகவே நீடிப்பதால் இந்த விலைகள் அடிக்கடி மாறுவதாக அந்த அபாய மதிப்பீட்டாளர் சேர்த்துக் கூறினார்.
பாதுகாப்பு நிறைந்த வளைகுடா நாடுகளில், பிரீமியங்கள் மிகவும் குறைவு – இவை காப்பீடுளில் வெறும் 0.025% முதல் 0.05% மட்டுமே இருக்கின்றன.
காப்பீடு எவற்றை ஈடுகட்டுகிறது என்ற விவரங்கள் மிகவும் வேறுபட்டு இருக்கலாம். சில கொள்கைகள் ஆட்கடத்தல், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்கும் தொகைகள், தீவிர காயங்களுக்கான மருத்துவ சிகிச்சை, அல்லது "தாக்குதல்தாரிகளின் நேரடி தாக்குதல்களுக்கான" (active attacker) சூழல் நிலவும்போது உதவுதல் ஆகியவற்றுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.
"இத்துறை சந்தை அளவிலும், தயாரிப்பு அளவிலும் வளர்ந்து வருகிறது". "தற்போது, துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் (active shooter cases), அல்லது வேலைநிறுத்தங்கள் மற்றும் கலவரங்களின்போது பாதுகாப்பு வழங்குவது போன்ற பிரத்யேக காப்பீடுகளுக்கான நாட்டம் அதிகரித்துள்ளது," என்று முனிச் ரீ ஸ்பெஷாலிட்டி (Munich Re Specialty) நிறுவனத்தில் பயங்கரவாதம் மற்றும் அரசியல் வன்முறைக்கான அபாய மதிப்பீட்டாளராகவும், குழுத் தலைவராகவும் பணிப்புரியும் டேனியல் ஹில்லர் (Daniel Hiller) கூறுகிறார்.
மோதலின் தீவிரத்தைப் பொறுத்து, போர் இடர்க் காப்பீடு ஏழு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாசவேலை மற்றும் பயங்கரவாதம் மிக லேசான நிலை எனக் கருதப்படுகின்றன, அதேவேளையில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான யுத்தங்கள் பேரிடர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
"ஒரு நிலைமை பயங்கரவாதத்திலிருந்து உள்நாட்டுப் போராகவோ அல்லது நாடுகளுக்கு இடையேயான போராகவோ எப்போது மாறுகிறது என்பது எப்பொழுதும் தெளிவாகப் புரிவதில்லை, எனவே காப்பீட்டு நிறவனங்கள் பெரும்பாலும் அனைத்து நிலைகளுக்கும் காப்பீடு வழங்க முயல்கின்றனர்," என்று லண்டனைத் தளமாகக் கொண்ட காப்பீட்டு நிறுவனமான ட்ரிகர் பாராமெட்ரிக் (Trigger Parametric) நிறுவனத்தின் நிறுவனர் ரவீம் இஸ்மாயில் (Raveem Ismail) கூறுகிறார்.
1689 ஆம் ஆண்டு முதல் காப்பீட்டுத் துறையில் சிறப்புப் நிபுனத்துவம் பெற்ற லாயிட்ஸ் ஆஃப் லண்டன் (Lloyd’s of London) இருப்பதாலேயே லண்டன் இத்தொழிலின் மையமாக நிலைத்துள்ளது.
லாயிட்ஸில், போர் இடர்க் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பல மறுகாப்பீடு வழங்கும் நிறுவனங்களும் (reinsurers) பணியாற்றுகிறார்கள். மறுகாப்பீட்டு நிறுவனங்கள் என்பவை காப்பீட்டு திட்டத்தின் பகுதிகளை வாங்கி விற்கும் நிறுவனங்கள் ஆகும். இது ஒரு தனிக் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும் இழப்பைக் குறைக்கிறது. "ஒவ்வொரு மறுகாப்பீட்டு நிறுவனமும் ஒரு காப்பீடு திட்டத்தின் 1% முதல் 10% வரை பொறுப்பேற்கலாம்," என்று கசின்ஸ் கூறுகிறார்.
பொருத்தமான பிரீமியத்தை (சந்தாவை) தீர்மானிப்பதே போர் இடர்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உள்ள பெரும் சிக்கல் என்று வடக்கு கொலராடோ பல்கலைக்கழகத்தில் (University of Northern Colorado) நிதிப் பேராசிரியராக பணிப்புரியும் கான்ஸ்டான்டின் குர்த்கீவ் (Constantin Gurdgiev) கூறுகிறார்.
"போர்கள் மிகவும் அரிதான, முன்கூட்டி அறிய முடியாத நிகழ்வுகள்". "ஆகையால், விலைகளை நிர்ணயம் செய்யும்போது பழைய தரவுகள் பெரும்பாலும் அதிகம் பயன்படுவதில்லை," என்று மேலும் அவர் விளக்குகிறார்.
அப்படியிருந்தும், கார் காப்பீட்டுடன் ஒப்பிடுகையில், போர் இடர் வணிகம் மிகவும் இலாபகரமானதாக இருக்க முடியும் என்று இஸ்மாயில் சுட்டிக்காட்டுகிறார்.
"ஒரு கார் காப்பீடு வழங்கும் நிறுவனமாக, பிரீமியங்களில் நீங்கள் வசூலிக்கும் ஒவ்வொரு £1 க்கும், உரிமைகோரல்களில் சுமார் £1.05 திருப்பிச் செலுத்த நேரிடலாம்," என்றார் அவர். இது இழப்பு போலத் தோன்றினாலும், கார் காப்பீட்டாளர்கள் முதலீட்டு வருவாயின் மூலம் இலாபம் ஈட்டுகின்றனர்.
ஆனால், போர் இடர்க் காப்பீட்டு நிறுவனங்களோ, தாங்கள் திரட்டும் பிரீமியங்களில் வெறும் 2% மட்டுமே செலுத்த வேண்டியிருக்கலாம். கார் விபத்துகள் பொதுவாக அதிகம் ஏற்படுகிறது, ஆனால் போர்ச் சேதம் மிகவும் அரிதாகவே ஏற்படுகிறது என்பதே இதற்கான காரணமாகும்.
(பாட்ரிக் பெல்டன்)
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.bbc.com/news/articles/c15kzjkqpqeo.amp
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு