பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்
செந்தளம் செய்திப் பிரிவு
பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். அங்கு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 62 ஆக உள்ளது. இதனை 64 ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முயன்று வருகிறது. இந்த வருட தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின்படி, 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து பிரான்ஸ் முழுவதும் கடந்த ஜனவரி 20ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் போராட்டகாரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க முயன்றனர். ஓய்வூதியத் திட்டத்தை நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு, நடைமுறைப்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் முடிவு செய்திருப்பதால் அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஜனாதிபதியின் இந்த முடிவால் பாரீஸ், ரென்னஸ், அல்பி, மார்செல் ஆகிய நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் புதிய ஓய்வூதியத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் நடப்பாண்டில் மட்டும் எட்டு முறை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகத் தொழிலாளர்கள் செய்திருக்கிறார்கள்.
தலைநகர் பாரீசில் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கான்சார்ட் சதுக்கம் அருகே குப்பை உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது, தீவிரமடைந்ததால், இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் போலீசாருடன் கடும் மோதலில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் கீழ் அவையான தேசிய அவையில் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தவுடன், அந்த அவையின் ஒப்புதலைக் கேட்காமலேயே திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி முடிவெடுத்தார். அரசியல் சட்டத்தின் 49.3 ஆம் பிரிவை இதற்குப் பயன்படுத்தப் போகிறார். இதுபோன்ற அரசியல் சட்டப்பிரிவுகள் மக்களின் நலன்களுக்காகப் பயன்படவே வைக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக இல்லை என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற அவைகளில் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களைக் கைவிடப் போவதில்லை என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மார்ச் 24 ஆம் தேதியன்று எட்டாவது நாடு தழுவிய வேலை நிறுத்தத்தைப் செய்யப் போகிறார்கள். இந்நிலையில் போராடி வரும் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. தடியடி, கண்ணீப்புகைக் குண்டுகள் வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதாவை நிறைவேற்றும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னதாக, நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 49.3 ஐ மெக்ரான் பயன்படுத்தினார். இந்த மசோதா கடந்த மார்ச் 16ஆம் தேதி செனட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இருப்பினும், தேசிய சட்டமன்றத்தில் இருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மெக்ரானை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரம் அடைவதால் பாசிச அரசு போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவுகிறது.
நாடாளுமன்ற அவைகளில் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களைக் கைவிடப் போவதில்லை என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொடர்ந்து பாசிசக் கொள்கைகளுக்கு ஆதரவு தரும் செனட் அவை உறுப்பினர்கள் (201 உறுப்பினர்கள் ஆதரவுடன்) அதிகமாக உள்ளதை சாதகமாக பயன்படுத்தி தொழிலாளர் விரோத ஓய்வூதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 105 உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப் படும் எனவும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
மசோதா நிறைவேறிய நாள் முதல் இன்று வர தொடர்ந்து 15 நாட்கள் தொழிலாளர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து வெளியேறி நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசோதா தாக்கல் செய்த நாளன்று 12 லட்சம் பேர் பேரணிகளில் பங்கேற்று எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் போராட்டத்தை பிரான்ஸ் அரசு கண்டுகொள்ளாமல் மசோதாவை நிறைவேற்றியது. போராட்டத்தின் பொழுது சில இடங்களில் போலீசார் வன்முறையை அரங்கேற்றிய பொழுதிலும், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இந்நிலையில், ஓய்வூதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் முழுவதும் எட்டு தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் அணி வகுப்பால் பாரீஸ் நகர தெருக்கள் மூச்சு திணறியது. போலீசார் கணக்கின் படி சுமார் 1.19 லட்சம் பேர் தலைநகர் பாரீஸில் மட்டும் அணிவகுத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. பாரீஸில் இது வரை நடந்த போராட்ட பேரணிகளிலேயே இதுதான் மிகப்பெரியது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களும் களமிறங்கினர்
இதுவரை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த பள்ளி ஆசிரியர்கள் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 24% ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 15% ஆசிரியர்களும் பேரணியில் கலந்து கொண்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாரீஸ் ஸ்தம்பித்தது
தொழிலாளர்கள் பேரணியில் கலந்துகொண்டதால் பொதுப்போக்கு வரத்தை இயக்க ஆளின்றி போக்கு வரத்து சேவைகள் தடைபட்டது. ரயில் சேவைகள், பாரீஸ் மெட்ரோ, பிற முக்கிய நகரங்களின் பாரீஸ் போக்குவரத்து சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தொழிலாளர்கள் இல்லாததால் பாரீஸ் ஓர்லி விமான நிலையத்தில் 30% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம், வெர்சாய்ஸ் அரண்மனை ஆகியவை மூடப்பட்டன.
வன்முறையை அரங்கேற்றிய காவல்துறை
பேரணியின் பொழுது பாரீஸில் உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், வங்கியைத் தாக்கியதாக தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். பேரணியை கலைக்க போலீசார் பலமுறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால் தொழிலாளர்கள் தொடர்ந்து அமைதியாக பேரணியை நடத்தினர். பிரான்ஸ் நாட்டின் மேற்கு நகரங்களான நான் டெஸ், ரென்ஸ், லோரியண்ட் ஆகிய பகுதிகளிலும் வன்முறை நிகழ்ந்தது.
போராட்டக்களமாக மாறிய ரயில் நிலையம்
பாரீஸின் கேர் டி லியொன் ரயில் நிலையத்தில் பணிபுரியும் பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ரயில் நிலையத்திலேயே போராட்டம் நடத்தினர். ரயில்கள் நகருவதை தடுக்க தண்ட வாளங்களில் அமர்ந்தனர். “நாங்கள் செல்வோம். திரும்பப் பெற்றபின் செல்வோம்”, “மக்ரோனே போ” என்று கோஷமிட்டு நாட்டின் முக்கிய ரயில் நிலையத்தை போராட்டக்களமாக மாற்றினர் தொழிலாளர்கள்.
ஏன் ஓய்வூதியம் கொடுக்க முடியவில்லை?
இந்தப் பிரச்சினை பிரான்சில் மட்டுமல்ல உலக தழுவிய பிரச்சினையாக உள்ளது. நாம் வாழும் சமூக அமைப்பு தற்பொழுது ஏகாதிபத்திய சகாப்தத்தில் (சுரண்டல்) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகள் சமுதாய தேவைக்காக உருவாக்கப்பட்ட வில்லை. அலை ஏகாதிபத்திய நலன்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த லாபவெறி எல்லா நாடுகளிலும் பரவி உள்ளது. இதன் விளைவாகவே உலகம் முழுவதும் கடுமையான ஏற்றத்தாழ்வு உண்டாகிறது.
2008 அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளும், அதனைத் தொடர்ந்த கொரோனா கால நெருக்கடிகளும், உக்ரைன் மீதான ரஷ்யா போரும் நெருக்கடிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன் மீதான நேட்டோ - ரஷ்யா பனிப்போரால் ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. பல்வேறு நாடுகளும் ஆயுதங்கள் மட்டுமே வாங்கி குவிக்கின்றன. ஆளும் வர்க்க அரசுகள் செய்து வந்த போலி ஜனநாயக சீர்திருத்தங்களை கூட செய்ய முடியவில்லை. எனவே தொழிலாளர் நலம் சார்ந்த இருக்கக்கூடிய சட்டங்களை பாரபட்சம் இன்றி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதனால்தான், உலகில் உள்ள நாடுகளில் ஓய்வூதியத்தையும் தொழிலாளர் நல சட்டங்களையும் மாற்றி அமைக்கிறது. அதை தொடர்ச்சியாக பிரான்சிலும், ஜெர்மனி, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நலங்களுக்காக தங்கள் முகத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு தீர்வும் அனைத்து தர மக்களின் மத்தியிலும் அனைத்து மனிதனின் தேவை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அமைப்பு தேவை அதுவே சோசியலிசம் மக்கள் மத்தியில் இந்த சிந்தனை ஆழ்ந்து உள்ளது.
பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் அழைப்பு
இப்போராட்டம் பற்றி, பிரான்சில் உள்ள தொழிற்சங்கவாதியும், Révolution Permanente கட்சி உறுப்பினருமான அனஸ்சே காசிப் (Anasse Kazib) "பொது வேலை நிறுத்தத்திற்கான வலையமைப்பை உருவாக்கத் தயாராகி, நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். இறுதிவரை போராடும் ஒரு தலைமையுடன், வேலைநிறுத்தத்தில் உள்ள அனைத்து துறைகளையும் ஒழுங்கமைத்து, போராடுவதற்கு உறுதியான அனைத்துப் பகுதிகளிலும் தொழிலாளர்களை நாம் திரட்ட வேண்டும். பொது வேலைநிறுத்தத்திற்கான இந்த வலையமைப்பு, பொது வேலைநிறுத்தத்தை கட்டமைக்க நாடு முழுவதும் பரவ வேண்டும்". என்று கூறுகிறார்.
- செந்தளம் செய்திப் பிரிவு