செத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவம்...
30% அதிகமான இளம் அமெரிக்கர்கள் கம்யூனிசக் கொள்கை குறித்து நேர்மறையான கருத்து கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

அமெரிக்காவில், பழமைவாத கட்சி சார்புடைய கேட்டோ நிறுவனமும் (Cato Institute) யூகோவ் (YouGov) அமைப்பும் இணைந்து சமீபத்தில் ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்தின. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் அமெரிக்க சமூகத்தில் ஒரு நம்பிக்கையூட்டும் போக்கைப் பிரதிபலிக்கின்றன. அமெரிக்கா பல ஆண்டுகளாகப் பள்ளிக்கூடங்களிலும் ஊடகங்களிலும் கம்யூனிசத்திற்கு எதிரான போதனைகளையும், கம்யூனிச எதிர்ப்புச் செய்திகளையும் தொடர்ந்து பரப்பி வந்தபோதிலும், நாட்டில் உள்ள ஏராளமான இளம் ஆண்களும் பெண்களும் தற்போது சோசலிசம், கம்யூனிசம் குறித்து நேர்மறையான கண்ணோட்டம் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
கேட்டோ/யூகோவ் கணக்கெடுப்பின்படி, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களில் 62 விழுக்காட்டினர் சோசலிச சமூகம் குறித்து சாதகமான கருத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதே வயதுப் பிரிவில், 34 விழுக்காட்டினர் கம்யூனிசம் குறித்துச் சாதகமான கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில், தேசிய அளவில் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,000 அமெரிக்கர்களிடம், அரசின் பணக் கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதில், "சோசலிசம் உங்களுக்குச் சாதகமானதா அல்லது பாதகமானதா?", "பொதுவுடைமை உங்களுக்குச் சாதகமானதா அல்லது பாதகமானதா?" போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் மொத்தமாக 43 சதவீதம் பேர் சோசலிசம் குறித்துத் "தங்களுக்குச் சாதகமான பார்வை" உள்ளதாகக் குறிப்பிட்டனர். 18 முதல் 29 வயதுக்குட்பட்டோரில், 62 சதவீதம் பேர் சோசலித்தை நேர்மறையாகவே பார்ப்பதாகத் தெரிவித்தனர். கம்யூனிசத்தைப் பொறுத்தமட்டில், பதிலளித்தவர்களில் 14 சதவீதம் பேர் சாதகமான கண்ணோட்டம் கொண்டிருப்பதாகவும், 18 முதல் 29 வயதுடையோரில் இந்த விகிதம் 34 சதவீதமாக இருந்தது. இதன் வாயிலாக, சுமார் 1.8 கோடி இளம் அமெரிக்கர்கள் கம்யூனிசத்திற்குச் சாதகமான மனப்பான்மையைக் கொண்டுள்ளனர் என்பது வெளிப்படுகிறது. (இப்புள்ளிவிவரங்கள் தோராயமான மதிப்பீடுகளே: 18 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 5.2 கோடி அமெரிக்கர்கள் உள்ளதால், 34 சதவீதம் என்பது 1.768 கோடி மக்களைக் குறிக்கும்; இதே வயதினரில் 62 சதவீதம் பேர் என்பது சுமார் 3.2 கோடி மக்களைக் குறிக்கிறது.)
இந்தக் கணக்கெடுப்பு "சோசலிசம்" என்பதன் பொருளைத் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, இச்சொல்லை மக்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அரசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் மார்க்சியம்-லெனினியம் போன்ற விஞ்ஞானப்பூர்வமான சோசலிசத்தைப்பற்றி அவர்கள் சிந்தித்தனரா? அல்லது கலப்புப் பொருளாதாரம் மற்றும் விரிவான அரசு நலத்திட்டங்களைக் கொண்ட, ஆனால் முதலாளித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் "ஜனநாயக சோசலிசம்" பற்றி அவர்கள் எண்ணினரா? என்பது தெரியவில்லை. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் "சோசலிசம்" என்ற சொல் பெர்னி சாண்டர்ஸ், ஏ.ஓ.சி போன்ற சமூக ஜனநாயகக் கருத்துக்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆகையால், கணக்கெடுப்பில் பங்கேற்ற பெரும்பாலானோர் இரண்டாவது கருத்தைப் பற்றியே சிந்தித்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
கேடோ நிறுவனம் போன்ற கம்யூனிச எதிர்ப்பு அமைப்புகளுக்கும் குழுக்களுக்கும் ஒரு கடுமையான பின்னடைவாகவே இக்கணக்கெடுப்பின் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. இந்த அமைப்புகள் சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் இழித்தும் பழித்தும் பேசுவதற்கும், ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்குப் பக்கபலமாகத் துணை நிற்பதற்கும் பெருமளவிலான பணத்தை வாரி இறைத்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில், முதலாளித்துவத்தின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் பல இளைஞர்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையையும் இக்கணக்கெடுப்பு தெளிவாகவே அம்பலப்படுத்துகிறது. இது வேலையின்மை, வறுமை, சமூகத்தில் நிலவும் அநீதியான பாகுபாடுகள், சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுதல் போன்ற பல சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது.
சிஐஏவின் ஆதரவு பெற்ற 'கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டோர் நினைவு அறக்கட்டளை'க்காக யூகோவ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது கவனிக்கத்தக்கது. 1981 முதல் 1996க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த 36 சதவீதம் பேர் கம்யூனிசத்தை ஆதரித்ததாகவும், இது 2018 இல் 28 சதவீதமாக இருந்ததைவிட கனிசமானதொரு அதிகரிப்பு என்பதையும் இந்தக் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டியது. மேலும், 23 முதல் 38 வயதுக்குட்பட்ட இளம் அமெரிக்கர்களில் 70 சதவீதம் பேர் ஒரு சோசலிச அதிபர் வேட்பாளரை எதிர்ப்பார்ப்பதாகக் கூறியிருந்தனர்.
முதலாளித்துவம் காலத்தால் முதிர்ந்து, அதன் பொருத்தப்பாட்டை இழந்துவிட்டதால், அதன் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகும். முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் வரலாற்றுச் சக்கரத்தின் இடையறாத முன்னேற்றத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது.
- விஜயன் (தமிழில்)