இந்தியா ரஷ்யாவின் பொருளாதாரங்கள் ஒருசேரச் சரிந்தாலும் தனக்குக் கவலையில்லை! டிரம்ப்பின் சமீபத்திய பதிவுகள்

தி வயர் - தமிழில்: விஜயன்

இந்தியா ரஷ்யாவின் பொருளாதாரங்கள் ஒருசேரச் சரிந்தாலும் தனக்குக் கவலையில்லை! டிரம்ப்பின் சமீபத்திய பதிவுகள்

ஜூலை 31ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார். இந்தியா, ரஷ்யாவுடன் பேணும் உறவைப் பற்றித் தனக்கு கடுகளவும் கவலையில்லை. இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரங்களும் பலவீனமாகவே உள்ளன என்றும், அவை விரும்பினால் ‘ஒருசேரப் படுகுழியில் வீழலாம்’ என்றும் அவர் பதிவிட்டிருந்தார். ரஷ்யாவுடன் இந்தியா எந்தப் போக்கைக் கடைப்பிடித்தாலும், அது தனக்குப் பொருட்டல்ல என்பதே டிரம்பின் கருத்தாக உள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 1 முதல், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீது 25% கூடுதலாக வரி விதிப்பதுடன், கூடுதலாக ஒரு தண்டனைக் கட்டணத்தையும் அமெரிக்கா விதிக்கும் என டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தியாவின் சுங்க வரிகள் — அதாவது, இறக்குமதிப் பொருட்கள் மீது இந்தியா விதிக்கும் வரிகள் — மிகவும் உச்சபட்சமானவை என்றும், உலகிலேயே மிக உயர்ந்த வரிகளில் சிலவாக அவை திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டதே இதற்குக் காரணம். இத்தகைய உயர்ந்த சுங்க வரிகளாலேயே, அமெரிக்கா இந்தியாவுடன் கணிசமான வர்த்தகத்தில் ஈடுபடவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

மேலும், ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத் தொடர்புகளை இந்தியா பேணி வருவதற்காகவும் டிரம்ப் அதைக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். இதன் பொருட்டே, ஏற்கனவே இருந்த சுங்க வரியுடன் அவர் மேலும் ஒரு தண்டனைக் கட்டணத்தையும் சேர்த்திருக்கிறார். தனது அண்மையப் பதிவில், அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றோடொன்று மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் மேற்கொள்வதாகவும், இதே நிலை நீடிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். ரஷ்யாவின் முன்னாள் அதிபரான மெட்வெடேவ் – இன்றும் தன்னை அதிபராகவே அவர் கருதுவதாக டிரம்ப் சுட்டிக்காட்டுகிறார் – தான் பேசும் வார்த்தைகளில் அதிகக் கவனத்துடன் பேசுமாறு டிரம்ப் அறிவுறுத்தினார். மெட்வெடேவ் பேராபத்து நிறைந்த களத்தில் கால் பதிப்பதாக டிரம்ப் கடுமையாக எச்சரித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில், உக்ரைனில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுப்பதாக பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலடியாக, ரஷ்ய பாதுகாப்புச் சபையின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், டிரம்ப் ரஷ்யாவுடன் 'இறுதி எச்சரிக்கை விளையாட்டு' ஆடுவதாகக் கண்டித்து எச்சரிக்கும் வகையில் X தளத்தில் பதிலடி கொடுத்தார். மேலும், டிரம்ப் இரண்டு விடயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்: முதலாவதாக, ரஷ்யா இஸ்ரேல் அல்லது ஈரானைப் போன்றதல்ல; இரண்டாவதாக, ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மட்டுமல்லாமல், அமெரிக்காவையும் நேரடியாகவே பெரும் போருக்குள் இழுத்துவிடும் பேரச்சுறுத்தலாகவும், ஒரு படிநிலையாகவும் அமையும் என்று அவர் வலுவாகச் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் ஒரு மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், "இந்தியாவுடன் நமக்கு ஒரு பிரமாண்ட வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது!!!" என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கு எதிர்வினையாக, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், டிரம்ப் அறிவித்த வரிகளின் விளைவுகளை நுணுக்கமாக ஆய்வு செய்து வருவதாகப் பதிலளித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் டிரம்ப் வெளிப்படையான நட்புறவைப் பேணி வந்தபோதிலும், இந்தியாவின் மீது டிரம்ப் கொண்டிருக்கும் கடுமையான நிலைப்பாடு கவனிக்கத்தக்கது. மேலும், இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள், டிரம்பின் நடவடிக்கைகள் குறித்து அரசின் துணை போகும் கள்ள மௌனத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மூத்த காங்கிரஸ் தலைவரான ப. சிதம்பரம், X தளத்தில் வெளிப்படையாகவே இவ்வாறு பதிவிட்டிருந்தார்: அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய ஏற்றுமதிகள் அனைத்தின் மீதும் விதிக்கப்படும் 25% வரி விதிப்பும், ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவதற்கான கூடுதல் அபராதத் தொகையும், இந்திய-அமெரிக்க வர்த்தக உறவுகளுக்கு ஒரு பெரும் பேரிடியாகவே அமையும் என்று குறிப்பிட்டார். வெறும் நட்பு நாடு ("தோஸ்தி") என்பது மட்டும் ஒருபோதும் போதுமானதல்ல என்றும், கவனமான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மிகவும் இன்றியமையாதவை என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். அமெரிக்கா விதித்துள்ள வரிகள், உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளை அப்பட்டமாகவே மீறுவதாகவும் சிதம்பரம் தெரிவித்தார். மோடி (MIGA-Make India Great Again) மற்றும் டிரம்பின் (MAGA-Make America Great Again) முழக்கத்திற்கு இடையிலான கூட்டாண்மையைக் குறிக்கும் "MIGA + MAGA = MEGA" எனும் கோஷம் எங்கே போனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://m.thewire.in/article/diplomacy/india-russia-can-take-their-dead-economies-down-trumps-latest