12 நாள் இஸ்ரேல்-ஈரான் போர்: இராணுவ-தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான ஒரு சோதனைக் களம்

தமிழில்: விஜயன்

12 நாள் இஸ்ரேல்-ஈரான் போர்: இராணுவ-தொழில்நுட்ப மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான ஒரு சோதனைக் களம்

ஈரானுடன் வெறும் 12 நாட்கள் நிகழ்ந்த போரில், இஸ்ரேல் பல ஆண்டுகளாகத் வளர்த்தெடுத்திருந்த தனது இராணுவத் தொழில்நுட்பங்களையும் திட்டமிடல் திறன்களையும் களமிறக்கியிருந்தது. ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, தனது அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு போர்க்களத்தை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதனையும் இந்தக் குறுகியகாலப் போரில் இஸ்ரேல் எடுத்துக் காட்டியுள்ளது.

ஜூன் 13 அன்று ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் “துல்லியமான, முன்கூட்டிய தாக்குதல்” நடத்தியதிலிருந்து மோதல் வெடித்தது. நீண்டகாலப் பரம எதிரிகளாக விளங்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போர்களில், இதுவரை நிகழ்ந்ததிலேயே இதுவே மிகப்பெரியதும் மிகக்கொடியதுமான மோதலாக அமைந்தது. இஸ்ரேல் இந்த நடவடிக்கைக்கு “ரைசிங் லயன்” எனப் பெயரிட்டது. இந்த நடவடிக்கையின்போது, ஈரானின் உட்பகுதிக்குள் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்திருந்தது. மேலும், இஸ்ரேல் பல ஆளில்லா விமானங்களைப் (ட்ரோன்கள்) பயன்படுத்தியதுடன், பதிலுக்கு ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தனது பல்வேறு தற்காப்பு அமைப்புகளையும் பயன்படுத்தியது.

ஜூன் 24 அன்று மோதல் திடீரென முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர்நிறுத்தம் ஒன்று ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவிவந்த தீவிர மோதலுக்கு, இப்போதைக்கு ஒரு முடிவு கட்டியது.

வான்காப்பு அரண்கள் உறுதியாகவே நிலைத்து நின்றன

ஆரம்பத்தில், இஸ்ரேலின் வான்காப்பு அமைப்புகள் முன்புபோல செயலாற்றவில்லை எனப் பலரும் கூறி வந்தனர். ஆனால், ஈரான் ஏவிய பாலிஸ்டிக் எறிகணைகளில் (ballistic missiles) சுமார் 86 சதவீதத்தை இஸ்ரேலின் பல்முனை வான்காப்பு அரண் வெற்றிகரமாக இடைமறித்துத் தடுத்து நிறுத்தியதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதே அளவிலான வெற்றி விகிதத்தை, இஸ்ரேல் முந்தைய மோதல்களிலும் எட்டியுள்ளது. போர் வெடிப்பதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர் களமிறக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அஸ்திர அமைப்புகளை இஸ்ரேல் துரிதமாகப் பயன்படுத்தியதே இந்தச் சாதனைக் கைவரப்பெறுவதற்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

இம்முறை அதிக ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளதாகப் பரவலாக நம்பப்பட்டது. ஈரான் தனது ஏவுகணைகளை இராணுவத் தளங்கள் மீது மட்டும் குறிவைப்பதற்கு மாறாக, மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளை இலக்காகக் கொண்டு ஏவியதே இதற்கு முக்கியக் காரணமாகும். எனவே, ஏவுகணை ஒன்று குடியிருப்புப் பகுதியை தாக்கியபோது, அது வெற்று நிலத்திலோ அல்லது நகரங்களுக்கு அப்பாலுள்ள இராணுவத் தளத்தின் அருகிலோ விழுந்ததைவிடப் பெரும் சேதத்தையும், மக்களின் பரவலான கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்தத் தாக்குதல்களின் விளைவாக, 28 பேர் மரணமடைந்தனர், 3,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் 13,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

உதாரணமாக, 2025 ஜூன் 19 அன்று, ரமத் கான் பகுதியில் ஒரு ஏவுகணை தாக்கியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக உதவிக்கு வந்தனர்.

மேலோட்டமாக நிலைமை மோசமானதாகத் தோன்றினாலும், வான்காப்பு அமைப்புகள் உண்மையில் மிகப் பெரிய அழிவைத் தடுத்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். உண்மையில் நிகழ்ந்த சேதத்தைவிட(சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சுமார் ஏழு மடங்கு அதிகம் சேதாரம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என் அவர்கள் மதிப்பிட்டனர்.

போர்க்களத்தையும், போர்முறைகளையும் மாற்றியமைக்கும் ட்ரோன்கள்

ஈரான் ஏவிய 99%க்கும் அதிகமான ஆளில்லா விமானங்களை (UAVs) இஸ்ரேலின் நவீனமயப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்துத் தடுத்து நிறுத்தின. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல ஆளில்லா விமானப் படைகளுக்கு எதிராக அயன் டோம் தற்காப்பு கட்டமைப்பை புதிய சோதனைக்கு உட்படுத்தியது மட்டுமல்லாது இஸ்ரேல் தனது பன்முக வான் பாதுகாப்பு அரணை தொடர்ச்சியாகப் பலப்படுத்தியதே இந்த வியத்தகு வெற்றி விகிதத்திற்கு முக்கியக் காரணம்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகத்தின் (MAFAT) தலைவரான, ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் டாக்டர் டேனியல் கோல்ட், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆகிய இரு நிலைகளிலும் அபார வெற்றியைப் பெற்றன என்று தெரிவித்தார். ஈரானுக்குப் போதிய இராணுவ வலிமை இருந்தபோதிலும், இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பமும், நுட்பமான போர் வியூகமுமே இந்த வெற்றிக்குக் காரணங்களாக அமைந்தன என்பதை டேனியல் கோல்ட் தெளிவுபடுத்தினார். “எங்களின் மிகவும் செம்மையான செயல்பாட்டுத் திட்டமிடலால், எங்களால் அவர்களை முறியடிக்க முடிந்தது” என்று அவர் மேலும் உறுதியுடன் கூறினார்.

இஸ்ரேல் ஈரானின் உட்பகுதிக்குள் வெகுதூரம் ஊடுருவி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்களை) தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதே இந்த மோதலில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக கருதப்படுகிறது. இஸ்ரேலிய ட்ரோன்கள் ஆயிரக்கணக்கான மணிநேரம் விண்ணில் பறந்து, ஈரானிய எல்லைக்குள் அமைந்திருந்த ஏவுகணை ஏவுதளங்கள், அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மீது 500க்கும் மேற்பட்ட தாக்குதல்களையும், முன்கூட்டியே நிகழ்த்தப்பட்ட துல்லியத் தாக்குதல்களையும் மேற்கொண்டன.

காசாவில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தக் காலகட்டத்தில் இஸ்ரேலிய வான்படையின் மொத்த விமானப் பறப்பு நேரங்களில் 60% பங்கையும், இஸ்ரேலிய தற்காப்புப் படைகள் (IDF) மேற்கொண்ட ஒட்டுமொத்த நடவடிக்கைகளில் 50% பங்கையும் ஆளில்லா விமானங்களே பயன்படுத்தப்பட்டன. “ஈரானை இன்னோரு காசாவாக மாற்றியுள்ளோம்” என்று இந்த வியத்தகு முன்னேற்றத்தை பற்றி டேனியல் கோல்ட் வர்ணித்துப் பேசியிருந்தார். அதாவது, காசாவில் தமது ஆளில்லா விமானங்களை எவ்வளவு எளிதாகவும் திறம்படவும் இஸ்ரேலால் இயக்க முடிந்ததோ, அதேபோல ஈரானிய வான்வெளியிலும் அவற்றைத் திறம்படவும், இலகுவாகவும் பயன்படுத்த முடிந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆளில்லா விமானங்களின் பயன்பாடு, போர் விமான ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், ஈரான் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்வதையும் மிகக் கடுமையாக்கியது.

இந்த மோதலில், விண்வெளிசார் உளவுத் தகவல்களும் முக்கியப் பங்காற்றின. மத்திய கிழக்குப் பரப்பில் சுற்றிவருகிற இஸ்ரேலிய செயற்கைக்கோள்கள், போர்ச் சூழலில் தங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதக அம்சமாக அமைந்துள்ளது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டனர். இச்செயற்கைக்கோள்கள் முதன்மையாக உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கே பயன்பட்டன. இப்படங்கள் மூலம் கிடைத்த தகவல்கள், இஸ்ரேலியப் படைகள் தங்கள் நடவடிக்கைகளில் பல அவசர மாற்றங்களை நிகழ்நேரத்தில் மேற்கொள்ள வழிவகுத்தன.

எடுத்துக்காட்டாக, மேக்ஸார் டெக்னாலஜிஸ் (Maxar Technologies) நிறுவனத்தின் செயற்கைக்கோள் பதிவுகள், 2025 ஜூன் 3 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னரும் பின்னரும் மத்திய ஈரானில் அமைந்துள்ள இஸ்பஹான் (Isfahan) அணுசக்தி செறிவூட்டல் மையத்தின் நிலையைத் துல்லியமாக படம்பிடித்துக்காட்டியது. மோதல் நிகழ்ந்த காலகட்டத்தில், இச்செயற்கைக்கோள்கள் ஈரானின் பல கோடிக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவை, பகல், இரவு பாராது, மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களாகப் பதிவு செய்தன மொத்தமாக 12,000க்கும் அதிகமான செயற்கைக்கோள் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த இடையறாத, பரந்துபட்ட கண்காணிப்பின் விளைவாக, இஸ்ரேலிய இராணுவம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இலக்குகளை பாதுகாப்பாகவும், இரகசியமாகவும் கண்டறிந்தது. இச்செயற்கைக்கோள்கள், பல இலட்சக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவை இடைவிடாது கண்காணிக்க உதவியதோடு, உடனுக்குடன் பயனுள்ள உளவுத் தகவல்களை வழங்கியது.

தீர்க்கமான தொடக்கத் தாக்குதல்

மோதலில் இஸ்ரேல் தொடுத்த முதல் தாக்குதல், 'ரெட் வெட்டிங்' என்று பெயரிடப்பட்டது, இது ஒரு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலாகும்.

இந்தத் தாக்குதல் ஜூன் 13 அன்று அதிகாலைப் பொழுதில் தொடங்கியது. இது கவனமாகத் திட்டமிடப்பட்ட, முன்கூட்டிய தாக்குதலாகும். ஈரானின் அணுசக்தி தளங்கள், இராணுவத் தளங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மட்டுமல்லாது உயர்மட்டத் தலைவர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இஸ்ரேலிய விமானப்படை அதிகாலை 3 மணியளவில் பல கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, காலைப் பொழுதை தாண்டியும் தொடர்ந்தது.

இந்த நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அவை ஈரான் முழுவதும் பரவியிருந்த சுமார் 100 வெவ்வேறு இலக்குகள் மீது 330க்கும் அதிகமான குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசித் தாக்கின.

இந்தத் தாக்குதலில், கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட, மேம்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நுண்ணறிவுள்ள, துல்லியமாக வழிநடத்தப்படும் ஆயுதங்கள், எதிரியைத் திகைக்க வைப்பதிலும், ஈரானின் வான்பரப்பின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதிலும் மிகப் பெரும் பங்கு வகித்தன. மின்னணுப் போர் நுட்பங்கள் மூலம் ஈரான் இவற்றின் சமிக்ஞைகளைத் தடுத்து முறியடிக்க முயன்றபோதும், தொலைதூரத்திலிருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் இஸ்ரேலின் தனித்திறனே மேலோங்கியிருந்தது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட சிறப்புத் தற்காப்பு அமைப்புகளையும் பயன்படுத்தின. இந்த அமைப்புகள் போர் விமானங்களை எதிரி ஏவுகணைகளிலிருந்து பாதுகாத்து, ஆபத்தான வான்பரப்பில்கூட இஸ்ரேலிய விமானிகள் பாதுகாப்பாகப் பறக்க வழிவகுத்தன.

இந்த போரில் தரை, வான், விண்வெளி, இணையவெளி என அனைத்துத் தளங்களின் தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்தது ஒரு பெரும் சாதனையாகும். பல்வேறு தளங்களில் நிகழ்நேர ஒருங்கிணைப்பு ஒரு மாபெரும் திருப்புமுனை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் தலைவரான மோஷே படேல், இஸ்ரேலின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்பும் — அத்துடன் அமெரிக்க அமைப்புகளுடனான தடையற்ற ஒத்துழைப்பும் — இப்போரில் இஸ்ரேலின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என விளக்கினார்.

“இச்செயல்பாட்டின் தலையாய சாதனை என்னவென்றால், இஸ்ரேலின் அத்தனை பாதுகாப்பு அமைப்புகளும் அமெரிக்க அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதுதான். இந்தக் கூட்டுப்பணி எங்களுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தர பேருதவியாக அமைந்தது” என அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

மேலும், போரின் விளைவுகள் இஸ்ரேல் எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாய் அமைந்திருந்தன என்றும் படேல் சுட்டிக்காட்டினார். “எங்களின் அனைத்து பயிற்சி ஒத்திகைகளிலும், திட்டமிடல்களிலும், இந்தளவுக்கு நாங்கள் வெற்றியடைவோம் என்று நாங்கள் எண்ணியிருக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்துத் தெரிவிக்கையில், செலவினங்களை மதிப்பிடும்போது, ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் செயற்கைக்கோள்களுக்காக செலவிடப்பட்ட தொகை, இந்த பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்திய சேதத்தின் மதிப்பைக் காட்டிலும் மிகக் குறைவு. இராணுவத் தொழில்நுட்பத்தில் நீண்டகால முதலீட்டுகளை செய்வது எவ்வளவு மகத்துவத்துவமானது என்பதையே இவை மெய்ப்பிக்கின்றன என்பதே அதிகாரிகளின் வாதமாக இருந்தது.

ஈரானும் இந்தப் போரில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தனது ஆயுதங்களையும் தந்திரோபாயங்களையும் மேம்படுத்தி வருகிறது. இஸ்ரேலும் தொடர்ச்சியாக மேம்பாடுகளைச் செய்துவருவதோடு, தொழில்நுட்பத்திலும் தரத்திலும் ஒரு தெளிவான ஆதிக்க நிலையை இஸ்ரேலிய தொடர்ந்து தக்கவைத்துள்ளது என்பறே இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படேல் தொடர்ந்து, “ஒவ்வொரு வான் பாதுகாப்பு அமைப்பின் புதிய மேம்ப்பட்ட பதிப்புகளையும் நாங்கள் இடைவிடாது உருவாக்கி வருகிறோம்” எனக் கூறினார். மேலும், “ஈரானை திக்குமுக்காடச் செய்யும் புதிய புதிய நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒவ்வொரு வான் பாதுகாப்பு அமைப்பையும் தயார்ப்படுத்தி வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இஸ்ரேல் அரசை பாதுகாப்பதற்கு எங்களால் இயன்ற அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம். நாங்கள் தொடர்ந்து சிறந்து விளங்க முயன்று வருகிறோம்” என்று டேனியல் கோல்ட் கூறினார்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.timesofisrael.com/israels-12-day-war-with-iran-was-a-test-of-technological-dominance/