நூல் அறிமுகம்: இன்னுமா இது பெரியார் மண்ணு?!

செந்தளம்

நூல் அறிமுகம்: இன்னுமா இது பெரியார் மண்ணு?!

தமிழகத்தின் அரசியல் வெளியெங்கும் ‘திராவிட மாடல்’ எனும் பெருங்கூச்சலும், ‘இது பெரியார் மண்’ எனும் ஆளும் வர்க்கக் குரலும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், "இன்னுமா இது பெரியார் மண்!?" என்ற கேள்வியைத் தத்துவார்த்த ரீதியாக எழுப்புவது வரலாற்றின் தவிர்க்க முடியாத தார்மீகக் கடமையாகிறது. இன்று மேடைதோறும் முழக்கமிடுபவர்கள் கட்டமைத்திருக்கும் ‘புனித பிம்பத்தின்’ நிழலில்தான் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களும், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளும், எவ்வாறெல்லாம் பலிகொடுக்கப்பட்டுள்ளன, பலிகொடுக்கப்பட்டு வருகின்றன என்பதை இந்நூல் சான்றுகளுடன் நிறுவுகிறது.


வரலாற்று உண்மைகளைச் சான்றுகளுடன் முன்வைக்கும் கம்யூனிஸ்டுகளை நோக்கி — "சிவப்புச் சங்கிகள்", "நூலிபான்", "பூணூல் தோழர்கள்" — என முத்திரை குத்தித் திசைதிருப்புவது திராவிட இயக்கத்தின் பழைய ஆனால் என்றென்றும் புதியதாகவே உள்ள உத்திதான். கேள்வி கேட்டாலே 'சிவப்புச் சங்கி'; பெரியாரை விமர்சித்தாலே 'பார்ப்பனக் கைக்கூலி' என்று அரசியலற்ற முத்திரை குத்தி விதண்டாவாதம் செய்வதுதான் இவர்களின் ‘பகுத்தறிவு’. அதிலும், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களைப் பார்த்து 'பூணூல் தோழர்கள்', ‘குட்டி பார்ப்பனர்கள்‘ எனச் சாதிய முத்திரை குத்தி, அவர்களின் வர்க்க அரசியலைக் கொச்சைப்படுத்துவதுதான் இவர்களின் ஒரே தத்துவப் பார்வை. வாதத்தை வாதத்தால் எதிர்கொள்ளத் திராணியற்றவர்களின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம், இந்த அவதூறு வார்த்தைகள் மட்டும்தானே?


நாங்கள் வரலாற்றை ஒருபக்கச் சார்பாகப் பார்க்கவில்லை. ஈ.வெ.இரா.வின் பங்களிப்புகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் நாம் துல்லியமாகவே கணிக்கிறோம். தோழர் ஏ.எம்.கே. குறிப்பிடுவதைப் போல:
"பெரியார், காங்கிரசில் இருந்தபொழுது தேசியவாதியாக இருந்தார். அக்கட்சியில் இருந்த பிற்போக்குத்தனம் மற்றும் பார்ப்பனிய ஆதிக்கத்தால் வெளியேறி சுயமரியாதை இயக்கம் துவங்கினார். வர்ணாசிரம எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை போன்ற அவரது நடவடிக்கைகள் சரியான ஒன்றே ஆகும். பிறகு சிங்காரவேலர் மற்றும் ஜீவாவின் நட்பால் சோஷலிச சமதர்ம கருத்துக்கள் பேசத்துவங்கினார். ரசிய பயணத்திற்குப் பிறகு அது தீவிரமடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு சென்றார். இதுவும் அவரின் சரியான அம்சமே ஆகும்."


ஆனால்...
தோழர் ஏ.எம்.கே. சுட்டிக்காட்டுவது போல:"சீர்திருத்தவாதியாக இருந்தவரை அவரை அனுமதித்த பிரிட்டிஷ் அரசு, அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகளை அனுமதிக்கவில்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார்."


இந்த இடத்தில்தான் அந்த மாபெரும் சரிவு நிகழ்கிறது! சிறை அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர் ஏன் தனது பாதையை மாற்றிக்கொண்டார்?
அன்று ஈ.வெ.இரா. எந்தெந்தப் புள்ளிகளில் நின்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும், தமிழ்த்தேசிய இனத்திற்கும் எதிராகச் செயல்பட்டாரோ, துல்லியமாக அதே புள்ளியில் நின்றுகொண்டுதான் இன்றைய ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள் என்பதை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


இந்நூலின் அரசியல் திசைகாட்டியாக நின்று தோழர் ஏ.எம்.கே. பாய்ச்சும் தத்துவார்த்த வெளிச்சம், திராவிட அரசியலின் ஆணிவேரில் ஊறியுள்ள நச்சுக் கூறுகளைத் துல்லியமாக அடையாளம் காட்டுகிறது.


அவர் முன்வைக்கும் அந்தத் தத்துவார்த்த வெளிச்சத்தில்தான் பெரியாரின் ‘சரணாகதி அரசியல்’ அம்மணமாகிறது. "ஈ.வெ.ராவின் ஏகாதிபத்திய ஆதரவு அரசியல் வழி பற்றி" ஆய்வு செய்யும் தோழர் ஏ.எம்.கே., 1932-ல் பிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தவுடன், சிறை பயத்தில் சிவப்பைத் துறந்து, காலனியாதிக்கவாதிகள் கற்றுக்கொடுத்த 'இனவாதச் சட்டையை' ஈ.வெ.இரா. அவசர அவசரமாக அணிந்துகொண்டதையும், தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க அவர் நிகழ்த்திய அந்தச் 'சந்தர்ப்பவாதத் திருப்பம்'தான் திராவிட அரசியலின் அடிப்படை என்பதையும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்துரைக்கிறார்.


பகத்சிங் போன்ற தியாகிகள் தூக்குக்கயிறை முத்தமிட்டபோது, "சுதந்திரம் வேண்டாம்; வைஸ்ராய் ஆட்சியே தொடர வேண்டும்" என்று பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு ஈ.வெ.இரா. எழுதிக் கொடுத்தது ஓர் அடிமைச் சாசனம் அன்றி வேறென்ன? என்ற அழுத்தமான கேள்வி நம்முன் எடுத்து வைக்கப்படுகிறது.


இந்த ஏகாதிபத்திய அடிவருடித்தனத்திற்குப் போர்த்தப்பட்ட போலி முகமூடிதான் 'சமூக நீதி'. "வெள்ளையன் போனால் பார்ப்பான் வருவான்" (இன்று, தி.மு.க.விற்கு ஓட்டு போடாவிட்டால் பாஜக உள்ளே வந்துவிடும் என்கிறார்கள் அவ்வளவே) எனப் பூச்சாண்டிக்காட்டி, ஜமீன்தார்களின் பதவி வேட்டைக்காக விடுதலையை விலைபேசிய அந்தத் 'தரகு முதலாளித்துவ அரசியலை' தோழர் ஏ.எம்.கே.வின் ஆய்வு ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்துகிறது.


வர்க்க அரசியலிலும் இதே முரண்பாடுதான்! 1931-ல் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை' வெளியிட்ட அந்த ஈ.வெ.இரா.விற்கு ஒரெயடியாக ருஷ்யக் காதல் கசந்தது ஏன்?


உண்மையில் ஈ.வெ.இரா.வின் அரசியல் உழைக்கும் மக்களுக்கானது அல்ல. "உழைக்கும் தொழிலாளியும், அவனைச் சுரண்டும் பண்ணையாரும் அண்ணன் தம்பிகள், பங்காளிகள்" என்று 1952-ல் அவர் நிறைவேற்றிய தீர்மானம், உழைக்கும் வர்க்கத்தை நிலப்பிரபுத்துவத்திற்கு அடகு வைத்த பச்சைத் துரோகம் இல்லையா?


ஜனநாயக நாட்டில் சுதேசி ராஜாக்கள் ஒழிக்கப்பட்டதை நினைத்து, "பரசுராமன் சத்திரியர்களை அழித்தது போல, ராஜாக்களை அழித்துவிட்டார்களே!" என்று பண்ணையார்களுக்காகவும் மன்னர்களுக்காகவும் கண்ணீர் வடித்தவர், எப்படி ஒரு ஜனநாயகவாதியாக இருக்க முடியும்? — என்றவாறு சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புவதன் மூலம் ஈ.வெ.இரா.வின் முகமூடியைக் கிழித்தெறிந்து, மறைக்கப்பட்ட வரலாற்றை தோழர் ஏ.எம்.கே. வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.


தொடர்ந்து, "ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும் - திராவிடமும் ஒன்றே!!" என இடித்துரைக்கும் தோழர் ஏ.எம்.கே., திராவிட இயக்கம் கட்டமைத்திருக்கும் ‘இனவாதக் கோட்டையின்’ அஸ்திவாரத்தையே தகர்த்தெறிகிறார். "ஆரியம் - திராவிடம்: இரண்டுமே ஏகாதிபத்தியம் கள்ளத்தனமாக ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள்! ஒன்று காவி மடம்; மற்றொன்று கருப்பு மடம்!" என்பதை நிறுவுகிறார். பைபிளின் ‘நோவா’ புராணத்தை வைத்துக்கொண்டு வெள்ளையன் உருவாக்கிய இந்த ‘இனவாதக் கட்டுக்கதையை’த்தான் இன்றும் இந்திய வரலாறு என நம்ப வைக்கப் பார்க்கிறார்கள் என்பதை, தோழர் ஏ.எம்.கே.வின் அரசியல் பார்வையில் நின்று மற்ற கட்டுரைகளைப் படிக்கும் பொழுது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.


ஈ.வெ.இரா.வையும் அம்பேத்கரையும் இணைத்துப் பேசுவோரே... இந்த ஆரிய-திராவிட இனவாதத்தை 'அறிவியல் வக்கிரம்' என அம்பேத்கர் அன்றே குப்பையில் வீசியதை வசதியாக மறைத்துவிட்டு, அவர் எதிர்த்த பொய்யை விற்பதற்கு அவரையே கூட்டுச் சேர்த்துக்கொள்வது அப்பட்டமான அரசியல் மோசடி என்பதையும் இந்நூல் தோலுரித்துக் காட்டுகிறது.


திராவிடத்தின் மொழிக்கொள்கை என்பது விடுதலையின் அடையாளம் அல்ல; அது அடிமைத்தனத்தின் உச்சம். "மொழிப் பிரச்சனையில் பாட்டாளி வர்க்க நிலைபாடு" என்ன என்பதை விளக்கும் தோழர் ஏ.எம்.கே., "இந்தி வேண்டாம், ஆங்கிலம் வேண்டும்" என்பது விடுதலையல்ல; இந்தி எனும் இரும்புச் சங்கிலியை அறுத்துவிட்டு, ஆங்கிலத்தின் வழியாக 'புதிய காலனிய ஆதிக்கத்தை' விரும்பி ஏற்றுக்கொள்வது மீளமுடியாத அடிமைத்தனமே என்று சாடுகிறார். "ஓட்டு கேட்கத் தமிழ்... ஆனால் சட்டம், நீதி, அதிகாரம் என்றால் ஆங்கிலமா? தன் மொழியில் நீதி பெறாதவன் சொந்த மண்ணிலேயே அகதிதானே?" என்றவாறு நம்மை யோசிக்க தூண்டும் தோழர் ஏ.எம்.கே., டெல்லியில் குவியும் ‘தரகு முதலாளித்துவ அதிகாரக் கட்டமைப்பை’ உடைக்காமல் உண்மையான மொழிச் சமத்துவம் சாத்தியமில்லை எனப் போராட்டத்தின் திசைவழியையே வகுத்தளிக்கிறார்.


இந்தத் தத்துவார்த்த அடித்தளத்தின் மீது நின்றுதான் திராவிடத்திற்கு எதிரான மற்ற கட்டுரைகளையும் அணுக வேண்டியுள்ளது:
திராவிடத்தின் ‘மொழிப்போர்’ நாடகத்தை சல்லிசல்லியாக நொறுக்குகிறது ஈழத்துச் சிவானந்த அடிகளின் வரலாற்று ஆவணம்!
"1938-ல் இந்தி எதிர்ப்பைத் துவக்கியவர் ஈ.வெ.இரா. அல்ல; சிவானந்த அடிகளே!" — மறைக்கப்பட்ட இந்த உண்மை ஒன்றே திராவிட முகமூடியைக் கிழிக்கப் போதுமானது.


1965-ல் மாணவர்களை "காலிகள்... சுட்டுக் கொல்லுங்கள்” என்று வெறியாட்டம் ஆடிய ஈ.வெ.இரா., “தமிழால் பயனில்லை; ஆங்கிலமே ஆள வேண்டும்” எனச் செய்த துரோகத்தை இந்நூல் அணுவணுவாக அம்பலப்படுத்துகிறது. பள்ளியிலும் நீதிமன்றத்திலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு, மேடையில் மட்டும் முழங்கும் திமுக-வின் இந்தி எதிர்ப்பு ஒரு பச்சோந்தித்தனமான ஓட்டு வியாபாரம் என்பதை இந்நூல் நிரூபிக்கிறது.


"ஈ.வெ.ரா வின் ஆங்கில மோகம்" கட்டுரையில், "தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழி! வேலைக்காரியிடமும் ஆங்கிலமே பேசு!" என்று ஈ.வெ.ரா. கூறியது சுயமரியாதை அல்ல, அது பக்கா காலனிய அடிமைத்தனம் எனச் சுட்டெரிக்கிறார் தோழர் செங்காற்று. அடுத்ததாக, "நாட்டின் பெரும் அச்சுறுத்தலான இந்துத்துவ பாசிசத்திற்கு மாற்று திராவிடமல்ல!" — ஆரியத்தின் பெயரால் பாஜகவும், திராவிடத்தின் பெயரால் திமுகவும்... நாட்டை கூறுபோட்டு விற்பது அதே பன்னாட்டு முதலாளிகளிடமே! என்ற உண்மையையும் போட்டுடைக்கிறார் செங்காற்று.


இதற்கு வலுசேர்க்கும் விதமாக, "திராவிட இனம் என்பதே வெள்ளையன் உருவாக்கிய அறிவியல் மோசடி" என்பதையும், "மூல திராவிடம் தமிழே" என்பது அறிவியலல்ல, அது வெறும் விருப்பமே (Wish) என்பதையும் தனது ஆய்வின் மூலம் நிறுவுகிறார் பேரா. தெய்வசுந்தரம் நயினார்.
மேலும், "பிராமணரல்லாதார் இயக்கம் என்பது பதவி சுகத்துக்கானதேயன்றி சமத்துவத்திற்கானதல்ல" என்று பாரதி அன்றே எச்சரித்ததை நினைவுபடுத்தி, திராவிடத்தின் போலித்தனத்தைச் சாடுகிறார் தோழர் பட்டாபி ராமன்.


"மார்க்சியமும் மொழியியலும்" கட்டுரையில், செந்தளம் பதிப்பகத்தார் பாட்டாளி வர்க்கத் தலைவர் தோழர் ஸ்டாலினின் மொழிக்கொள்கையை முன்வைக்கின்றனர். "மொழி என்பது அடிக்கட்டுமானமும் அல்ல, மேற்கட்டுமானமும் அல்ல" என விளக்கி, ஆங்கில ஆதிக்கத்தால் தமிழ் எங்ஙனம் வழக்கொழிந்து போகும் ஆபத்து உள்ளது என்பதை எச்சரிக்கின்றனர்.


தோழர் ராமன் ராஜு எழுதிய "திராவிடர் ஓர் ஆய்வு" கட்டுரை, சங்க இலக்கியங்களில் 'திராவிடம்' என்ற சொல்லே இல்லை என்பதையும், அது 18-ம் நூற்றாண்டில் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட இனவாதக் கற்பனை என்பதையும் தரவுகளுடன் நிறுவுகிறது. இந்த இனவாத அரசியலின் வர்க்கப் பின்னணியை — அதாவது "எதிர்ப்பது அக்கிரஹாரத்து ஏழைகளை; அரவணைப்பது டிவிஎஸ் (நம்ம ஸ்கூல் திட்டம்) போன்ற பார்ப்பனப் பணமுதலைகளை!" என்ற முரண்பாட்டை — பதிப்பகம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறது.


வரலாற்றுத் துரோகங்களைப் பதிவு செய்யும் தோழர் சே.ரா.வின் கட்டுரைகளைப் படிக்கும்போது, 1857 புரட்சியை "துரோகம்" என்று பேசிய ஈ.வெ.இரா. "ஏகாதிபத்தியத்தின் கடைசி விசுவாசி"யாகவே நம் கண்களுக்குத் தெரிகிறார். மேலும், விவசாயிகளை ஒடுக்க திமுக நடத்திய "கிஷான் போலீஸ்" எனும் 'சல்வா ஜுடும்' பயங்கரவாதத்தையும் சே.ரா. பதிவு செய்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழை "காட்டுமிராண்டி மொழி" என இழிவுபடுத்திய ஈ.வெ.இரா.வை, "நன்றிகெட்டத்தனம்" எனச் சாடிய பாரதிதாசனின் வரிகளை நினைவூட்டும் தோழர் கதிர்நிலவன் (தமிழ்தேசியன் இணையதளம்), வெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட மக்கள் தீயில் கருகியபோது, பண்ணையார்களுக்கு ஆதரவாக நின்று "சங்கத்தில் சேர்ந்ததே தவறு" எனப் பலியானவர்களையே பழித்த பெரியாரின் துரோகத்தையும், இன்றைய சாம்சங் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறையையும் நம்மால் எளிதாக இணைத்துப் பார்த்துவிட முடியும்.


அரசியல் தளத்தில் திராவிடம் நிகழ்த்திய நாடகங்களும் இங்குத் துகிலுரிக்கப்படுகின்றன. "திராவிட நாடு" என்பது வரலாற்றுக்கு முரணான ஒரு கற்பனைக் கோஷம் என்பதைத் தோழர் ஜீவாவின் வாதங்கள் மூலம் "ஐக்கிய தமிழகம்" பற்றிய நூல் ஆய்வில் உடைக்கிறார் தோழர் கதிர் நிலவன். அதேபோல, "எல்லை மீட்பு போராட்டத்தை திசை திருப்ப விநாயகர் சிலை உடைப்பு" என்ற கட்டுரையில், சித்தூரை ஆந்திராவிடம் தாரைவார்த்துவிட்டு, அதை மறைக்க "பிள்ளையார் சிலை உடைப்பு" நாடகமாடிய வஞ்சகத்தையும் (அன்று சித்தூர்... இன்று கச்சத்தீவு மற்றும் சிக்கந்தர் தர்கா) அவர் அம்பலப்படுத்துகிறார்.


இன்னொரு பக்கம், "தமிழ்நாடு நாள்: திராவிடத்தின் பொய்யும் புரட்டும்" கட்டுரையில், எல்லைக் காத்த தியாகிகளை இருட்டடிப்பு செய்து, நவம்பர் 1-ஐ மறைத்து ஜூலை 18-ஐத் திணிக்கும் மோசடியைத் தோலுரித்துக் காட்டுகிறார் தோழர் பா. ஏகலைவன்.


இந்த அரசியல் நாடகத்தின் உச்சமாக, "ஆச்சாரியார் துணையோடு திராவிட நாடு வெல்வோம்" என 1947-ல் பெரியார் அடித்த பல்டியையும், மேடையில் பார்ப்பன எதிர்ப்பு - திரைக்குப் பின்னால் பார்ப்பனக் கூட்டு என்ற இரட்டை வேடத்தையும் தோழர் விசுவநாதன் கரிகாலன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.


இறுதியாக, பண்பாட்டுத் தளத்தில் பெரியாரின் பகுத்தறிவு வேடத்தைக் கலைத்துப் போடுகிறார் தோழர் மா.செ. சரவணன். "பெரியாருடன் ஒரு கலந்துரையாடல்" கட்டுரையில், நாத்திகம் பேசிக்கொண்டே "ஒரு நல்ல கடவுளை வணங்குங்கள்" எனச் சமரசம் செய்ததையும், தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்மத்தையும் பெரியாரின் வாக்குமூலங்கள் வழியாகவே சல்லி சல்லியாக நொறுக்கிவிடுகிறார்.


பாரதி மீதான அவதூறுகளுக்குப் பதிலடி கொடுக்கும் தோழர் சுப்புராஜ் V, "முரண்பாடுகளின் மொத்த உருவம் பாரதியா? பெரியாரா?" என்ற கட்டுரையில், பெரியாரின் முரண்பாடுகளைத் தோலுரித்துக் காட்டுகிறார்.


இவர்களின் வாரிசுகள் எங்கே வந்து நிற்கிறார்கள் என்பதை, "பெரியார் வழியில் 'அடல்ட்ஸ் ஒன்லி' பட்டிமன்றம்" நடத்தப்பட்டது பற்றி பெருமிதம் கொள்ளும் அமைச்சர் பொன்முடியின் பண்பாட்டுச் சீரழிவைச் சுட்டிக்காட்டி, இதுதான் திராவிடத்தின் உண்மையான பண்பாடா எனக் கேள்வி எழுப்புகிறது இந்நூல்.


ஆக, இந்நூல் ஒரு சாதாரணத் தொகுப்பு அல்ல; இது திராவிட மாயைக்கு எதிராக நாம் ஏந்தும் சித்தாந்தப் போர்வாளாகும்!


தோழர் ஏ.எம்.கே. ஏற்றிய அந்தத் தத்துவார்த்தத் தீப்பந்தம், ஒரு நிதர்சனமான உண்மையை நம்முன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது...

திராவிடம் என்பது சாதி ஒழிப்பிற்கான, வர்க்க ஒழிப்பிற்கான, இவ்வளவு ஏன், அது சமூக விடுதலையின் தொடக்கப்புள்ளி கூட அல்ல; ...மாறாக அது என்றென்றும் ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவத்திற்கு மட்டுமல்லாது நிலவுடைமை கும்பலுக்குச் சேவை செய்யும் 'பழைய/புதிய காலனிய கைத்தடி' என்பதை இந்நூல் ஆணித்தரமாக நிறுவுகிறது.

செந்தளம் வலைதளத்தில் வந்த கட்டுரைகளின் தொகுப்பினை நூலாக கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆர்வமூட்டிய தோழர்களுக்கும், வலைதளத்திலும் புத்தக தொகுப்பிலும் தங்களது கட்டுரைகளை தாராளமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்ததோடு இம்முயற்சியை பெரிதும் வரவேற்ற கட்டுரையாளர்கள் அனைவருக்கும் செந்தளம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இத்தொகுப்பில் ஏஎம்கே - செந்தளம் கட்டுரைகள் நமது நிலைப்பாட்டை விளக்குவதாக வாசகர் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் பிற கட்டுரைகள் நமது நிலைப்பாட்டை முழுமையாக எடுத்தியம்புவதாக கொள்ளக் கூடாது. அவற்றில் நமக்கு சில மாறுபட்ட கருத்துகளும் உண்டு. அவை தகவல்கள், ஆதாரங்களுக்காக இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை செந்தளம் நிலைப்பாட்டிலிருந்து வாசிக்குமாறு தோழமையுடன் கோருகிறோம்.

செந்தளம்

(இன்னுமா இது பெரியார் மண்ணு?! நூல் முன்னுரையிலிருந்து)

நூலின் விலை : ரூ. 150

தொடர்புக்கு

95437 38415

90953 65292