இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு?.. – புத்தக மதிப்புரை

அபூ சித்திக்

இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு?.. – புத்தக மதிப்புரை

இந்தியாவில் நடத்தப்படும் தீவிரவாத சம்பவங்களை புலனாய்வு செய்வதற்காகவே ATS( தீவிரவாடஹ் தடுப்பு பிரிவு) ஒன்று இயங்கி வந்தது. இதன் தலைவராக இருந்த கர்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார். தனது நண்பன் கர்கரே கொல்லப்பட்டதன் பிண்ணனியை ஆராய தொடங்கிய IPS அதிகாரி எஸ்.எம்.முஷ்ரிப் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான பதில் கிடைத்தது.

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் முழுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் கிளை அமைப்புகளும் இருக்கின்றன. இதற்கு உளவுத்துறை, ஊடகம், ராணுவம் என பல தரப்பில் இருந்து உதவிகளும் கிடைத்திருக்கின்றது என்பதை கண்டறிகிறார்.

இதனை “கர்கேரேயைக் கொலை செய்தது யார்?” என்றும் “26/11 நீதித்துறை மயங்கியது ஏன்” இரண்டு விரிவான புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு என்ற 64 பக்கம் கொண்ட சிறு நூலையும் எழுதியிருக்கிறார்.

( மூன்றாவதாக *பிராமினிஸ்டுகள் குண்டு வைத்தார்கள் முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்* என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்)

இந்த நூல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மூத்த பத்திரிக்கையாளர் குலாம் முஹம்மது அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முஷ்ரிப் எழுதிய இரண்டு நூல்களையும் தமிழில் மொழியாக்கம் செய்தவர் குலாம் முஹம்மது.

இந்த புத்தகத்தை கண்டிப்பாக ஒவ்வொருவரும் படித்தாக வேண்டும். அப்போது தான் நம் நாட்டில் சூழப்பட்டிருக்கும் பாசிச பிடியை பற்றி நாம் விளங்குவோம்.

இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய சம்பவங்கள்,

புத்தகத்தின் ஆசிரியர் ஒரு IPS அதிகாரி என்பதால் ஒவ்வொன்றையும் மிகவும் ஆதாரப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு காவல்துறையால், நீதித்துறையால் கொடுக்கப்பட்ட ஆவணங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

*ஆர்.எஸ்.எஸ்*

அஜ்மீர்(2007), மக்கா மஸ்ஜீத்(2007), சம்ஜூதா எக்ஸ்பிரஸ்(2006) மாலேகான்(2008), மொடாஸா(2008) நாண்டேட்(2006) பர்பணீ(2003) ஜாலாணா(2004) போர்னா(2004) லாம்பா கேரா, போபால்( ம.பி), கான்பூர்(2008), கண்ணூர்(2008) என மொத்தம் 13 குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிரவாதிகள் ஈடுபட்டிருப்பது காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உலகில் உள்ள அனைத்து பயங்கரவாத சம்பவங்களையும் ஆராய்ந்து அதனை ஆவணப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த  வேண்டும் என்ற நோக்கத்தோடு Terrorism, Watch and warning  என்ற அமெரிக்க அமைப்பு www.terrrorism.com என்ற ஒரு இணையத்தளத்தை நடத்தி வருகிறது. அதில் 2014ல் வெளியான கட்டுரையில் உலகில் உள்ள பயங்கரவாத அமைப்புகளில் ஒன்று ஆர்.எஸ்.எஸ் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் நடந்த 14 தீவிரமான குண்டு வெடிப்பு சம்பங்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புகள் அனைத்தும் RDX பயன்படுத்தப்பட்ட தீவிர பாதிப்பை உண்டாக்கும் குண்டுகள்.

இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் மூளையாக செயல்பட்டாலும் அதனை செயல்படுத்த பல்வேறு கிளை அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது.

*அபினவ் பாரத்*

ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பு தான் அபினவ் பாரத். 2002-2003ம் ஆண்டுகளில் நாட்டில் உள்ள தீவிர சிந்தனை கொண்ட பிராமணர்கள் பலர் இணைந்து அபினவ் பாரத் அமைப்பை உருவாக்கினார்கள்.

அஜ்மீர்(2007), மக்கா மஸ்ஜீத்(2007), சம்ஜூதா எக்ஸ்பிரஸ்(2007), மாலேகான்(2006 மற்றும் 2008), மொடாஸா(2008) ஆகிய குண்டு வெடிப்புகளில் அபினவ் பாரத் சம்பந்தபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கையாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

*சனாதன் சாஸ்தா*

ஆர்.எஸ்.எஸ் உடைய மற்றொரு கிளை அமைப்பான சானதன் சாஸ்தா பல்வேறு தீவிரவாத வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த அமைப்புக்கும் தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோகித்க்கும் தொடர்பு இருப்பது கோவா(2009) குண்டுவெடிப்பு விசாரணையில் தெரிய வந்தது.

எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்ட வழக்கிலும் சனாதன் சாஸ்தாவை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை கைது செய்திருக்கிறது காவல்துறை.

பன்வேல்(2008) , தானா(2008), வாஷி(2008) ஆகிய குண்டுவெடிப்புகளில் சனாதன் சாஸ்தாவுடனான தொடர்பு நிரூபிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சனாதன் சாஸ்தா உறுப்பினர்கள் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

*முஸ்லிம்கள் மீது பழி*

கர்கரே தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியாவதற்கு முன்பு வரை இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த குண்டு வெடிப்புக்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்று அரபு பெயரில் ஒரு அமைப்பின் பெயர் குறிப்பிடப்படும். இது தொடர் கதையாக இருந்தது.

ஆனால், 2008 மாலேகான் குண்டுவெடிப்பை கர்கரே ஆய்வு செய்ய தொடங்கிய பின் நாட்டில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்த சதி கண்டறியப்பட்டது.

*மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு*

மாலேகானில் 2008ம் செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். குண்டு வெடித்த சில மணி நேரங்களில் உளவுத்துறை இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் ஜெய்ஷ் இ முஹம்மது மற்றும் இந்தியன் முஜாஹிதீன் என்று அறிவித்தார்கள். ஊடகங்களும் இதை எடுத்துக்கொண்டு முதற்பக்க செய்தியாக வெளியிட்டன.

ஆனால், விசாரணையை தொடங்கிய கர்கரேவுக்கு கிடைக்கும் ஆதாரங்கள் வேறு திசையை நோக்கி கொண்டு சென்றது. அது, குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த மோட்டார் சைக்கிள் சாத்வி பிரக்யா சிங் எனும் இந்துத்துவ பெண் சாமியாருக்கு உரியதாக இருந்தது. இந்த சாத்வி பிரக்யா தான் இன்று இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்

இதன் தொடர் விசாரணையில் பல்வேறு கைதுகள் நடந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு முழுக்க திட்டமிட்டு நிர்வாக மயமாக்கப்பட்ட ஒரு செயல் என்று கண்டறிந்தார்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி கர்கரே கொல்லப்பட்டார். இந்த கொலையும் திட்டமிட்டு இந்துத்துவவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்கிறார் எஸ்.எம்.முஷ்ரிப்.

*இராணுவத்தின் உதவி*

கர்கரே அவர்களால் மாலேகான் குண்டுவெடிப்பில் கர்னல் புரோகித் என்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்று மடிக்கணிகளில் இருந்து இந்துத்துவ தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த பல்வேறு குண்டுவெடிப்புகள் பற்றிய தகவல் வெளியானது.

“*புரோகித் லேப்டாப்பில் இருந்தது என்ன?*” புத்தகம் வேர்கள் பதிப்பகத்தால் போடப்பட்டிருக்கிறது.

கர்னல் புரோகித் மூலம் இராணுவத்தின் கைகளில் இருக்கும் RDX வெடிகுண்டுகள் இந்துத்துவ தீவிரவாதிகளின் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்தது.

இந்த கர்னல் புரோகித் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் பயிற்சி முகாம்களில் ஆயுத பயிற்சி அளிப்பவராகவும் இருந்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இவர் பயிற்சி அளித்தது குற்றப்பத்திரிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

*அஜ்மீர், மக்கா மஸ்ஜீத், சம்ஜௌதா எகஸ்பிரஸ்*

2007ம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலியானார்கள். அதே போல் மக்கா மஸ்ஜீதில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியானார்கள்.

குண்டு வெடித்த ஒரு மணி நேரத்திற்குள் உளவுத்துறை, இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் லஷ்கரே தய்யிபா, ஹர்கத்துல் முஜாஹிதீன், ஜைஷ் இ முஹம்மது, மற்றும் சிமி அமைப்பு என்று அறிக்கை விட்டார்கள்.

அதே போல் பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையே சென்று வரும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் இந்தியாவின் பானிபட் நகரில் 68 பேர் பலியானார்கள்.

இந்த மூன்று குண்டுவெடிப்பிலும் இந்துத்துவ தீவிரவாதிகள் தான் ஈடுபட்டிருந்தனர். இதனை கைது செய்யப்பட்ட கர்னல் புரோகித் உண்மையா, பொய்யா எனக் கண்டறியும் நார்கோ சோதனையின் போது ஒப்புக்கொண்டார்.

*குற்றங்களை ஒப்புக்கொண்ட தீவிரவாதிகள்*

தீவிரவாத சம்பவங்களுக்கு காரணம் என கைது செய்யப்பட்ட கர்னல் புரோகித் மற்றும் சாமியார் அசீமானநந்தா இருவரும் தாங்கள் குண்டு வெடிக்க உதவியதாகவும் இதில் பல்வேறு இந்துத்துவ அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதையும் ஒப்புக்கொண்டார்கள்.

கர்னல் புரோகித் நார்கோ சோதனையில் ஒப்புக்கொண்டார். சாமியார் அசீமானநந்தா நீதிமன்றத்தில் நடுவருக்கு முன்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

*அசீமானந்தாவின் வாக்குமூலம் என்று தனியாக வேர்கள் பதிப்பகம் மூலமாக புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.* பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

*NIA*

ATS( தீவிரவாத தடுப்பு படையின்) மீது நம்பிக்கை இழந்து அது முழுக்க அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற குற்றசாட்டின் அடிப்படையில் தீவிரவாத வழக்குகலை விசாரிப்பதற்காக NIA என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு குண்டுவெடிப்பு வழக்கு சரியான திசையை நோக்கி நகரும் போது அது திட்டமிட்டு விசாரிக்கும் அதிகாரியிடம் இருந்து மாற்றப்பட்டு ATSக்கு மாற்றப்படும். இதன் பிறகு இந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள்.

2006ம் ஆண்டில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தை ஆய்வு செய்த IG முக்கியமான தடயங்கள் கிடைத்திருக்கிறது விரைவில் கைது செய்து விடுவோம் என்று அறிக்கை விட்டார். ஆனால் அந்த வழக்கு அவசர அவசமாக ATS பிரிவுக்கு மாற்றப்பட்டு முஸ்லிம்கள் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்.

இதன் பிறகு இத்தகைய வழக்குகளில் மறுவிசாரனை NIAவின் வசம் ஒப்படைக்கப்பட்டது. NIA விசாரித்து மக்கா மஸ்ஜீத், அஜ்மீர் குண்டுவெடிப்பில் இந்துத்துவ தீவிரவாதிகளின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

மாலேகான் மறு ஆய்வு வழக்கிலும் இந்துத்துவ தீவிரவாதிகளின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

ஆனால், இதுவெல்லாம் NIA 2014க்கு முன் செய்தவை. 2014க்கு பின் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு NIA அமைப்பு தற்போது அரசின் கைப்பாவையாக செயல்படுவதை கண்கூடாக பார்க்கிறோம்.

*முஸ்லிம்கள் மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகள்*

இந்துத்துவ தீவிரவாத செடல்களுக்கு முஸ்லிம்கள் பலிகடாவாக மாற்றப்பட்டனர். அதில் காவல்துறை முஸ்லிம்களை எப்படியெல்லாம் சிக்கவைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு.

இதில் குற்றம் சாட்டப்பட்ட முஷாவரஹ் சௌக் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது மாலேகான் நகரிலிருந்து 700 கி.மீ தொலைவில் இருக்கும் அயொத் மாகாணத்தில் இருந்தார்.

குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என்று குறிப்பிடப்பட்டிருந்த ஷப்பீர் மஸீஹுல்லாஹ் குண்டு வெடிப்பின் போது ஏற்கனவே காவல்துறையால் மற்றொரு வழக்கில் சிறையில் இருந்தார்.

இன்னொரு குற்றவாளியான நூருல் ஹுதைபா பல காலமாக காவல்துறை கண்காணிப்பு வட்டத்திற்குள் இருந்தவர்.

இப்படி 700 கி.மீ அப்பாலிருந்த ஒருவரை, குண்டு வெடிப்பின் போது சிறையில் இருந்த ஒருவர் என எந்த முகாந்திரமும் இல்லாமல் கூட முஸ்லிம்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள்.

ஆனால் இவர்கள் மீது குற்றசாட்டை உறுதி செய்ய காவலர்கள், இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள் எனவும், இவர்கள் குற்றம் செய்ததற்கு இரண்டு சாட்சிகள் இருப்பதாகவும், குற்றவாளி என்று உறுதி செய்ய குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டிலிருந்து குண்டு வெடிப்புக்கு தொடர்புள்ள மாதிரிகளை கைப்பற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். இப்படி தான் ஒவ்வொரு முறையும் முஸ்லிம்கள் கைது செய்யப்படும் போது திட்டமிட்டு சாட்சிகள் உருவாக்கப்படுகிறது.

*தானாக வெடித்த குண்டுகள்*

புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்த இந்துத்துவ தீவிரவாதிகள் என்றல்லாமல் இறைவனின் செயலால் பல இந்துத்துவ தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். பல முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

2006ல் நந்தேத் நகரில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது குண்டு எதிர்பாரா விதமாக வெடித்தது. இதில் இருவர் பலியானார்கள். நான்கு பேர் காயத்துடன் கைது செய்யப்பட்டார்கள்.

கைதானவர்கள் தாங்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என்பதையும், தயாரித்த குண்டுகள் பர்பணீ, ஜால்னா, போர்னா ஆகிய பள்ளிவாசல்களில் வைப்பதற்காக தயாரிக்கப்பட்டது என்பதையும் நார்கோ சோதனையில் ஒப்புக்கொண்டார்கள்.

அதே போல் 2008ல் கான்பூர் நகரில் குண்டு            தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பலியானார்கள்.அங்கிருந்து பல்வேறு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவின் கண்ணூர் நகரில் இதே போல் 2008ல் வெடிமருந்து தயாரிக்கும் போது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பலியானார்கள். அப்போது அருகில் இருந்த ஸ்ரீ பிரகாசன் என்ற பாஜக தலைவரின் வீட்டிலிருந்து வெடிகுண்டுகள் எடுக்கப்பட்டன.

மார்கௌன் நகரில் 2009ம் ஆண்டில் குண்டுகள் தயாரித்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் இருவர் பலியானார்கள்.

இப்படி இறைவனின் செயலால் மாட்டிக்கொண்ட தீவிரவாதிகள் இவர்கள். ஒருவேளை இவர்கள் குண்டுகள் தயாரித்து அதனை வைத்திருக்கும் நிலையில் அந்த குண்டுவெடிப்புக்கும் முஸ்லிம்களை தான் கைது செய்திருப்பார்கள். அதனால் தான் இறைவனின் செயலால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்று கூறினேன்.

*போன்சாலா இராணுவ பள்ளி*

போன்சாலா இராணுவ பள்ளி 1937ல் ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர்களில் ஒருவரான மூஞ்சேவால் தொடங்கப்பட்டது. தற்போது மஹாராஷ்டிராவில் இரண்டு பெரிய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இந்த இராணுவ பள்ளியின் மூலம் குண்டுகள் தயாரிக்கும் வேலை போன்ற தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதும் இந்துத்துவ தீவிரவாதத்தை பற்றிய விசாரணையில் தெரிய வந்தது.

2001ம் ஆண்டு நாக்பூரில் உள்ள போன்சாலா இராணுவ பள்ளியில் 40 நாட்கள் 115 பயங்கரவாதிகள் இணைந்து பயிற்சி மேற்கொண்டதும் காவல்துறை குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இந்த கல்வி நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.

*இந்துக்களுக்கு எதிரானவர்கள்*

கோவாவில் 2009ம் ஆண்டு சனாதன் சாஸ்தா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் குண்டு தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டு பெரும் தீவிரவாத செயல் தடுக்கப்பட்டது.

இவர்கள் குண்டு வைக்க நினைத்தது பள்ளிவாசல்களிலோ, முஸ்லிம்கள் கூடும் இடங்களிலோ அல்ல. தீபாவளி அன்று இந்துக்கள் ஒன்று கூடும் பகுதியில் குண்டு வெடிக்க திட்டமிட்டிருந்தார்கள். வெடிகுண்டை அரபு மொழி பதிந்த ஒரு பையில் போட்டும், அந்த பையில் முஸ்லிம்கள் அதிகம் உபயோகிக்கும் அக்தர் வாசனை திரவியங்களை நிரப்பி வைப்பதற்கான தயாரிப்போடு இருந்தார்கள்.

அந்த குண்டு திட்டமிட்டபடி நடந்திருந்தால் இந்துக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டிருக்கும். அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

*தமிழகத்தில் இந்துத்துவ தீவிரவாதிகள்*

2008 ஜனவரி மாதம் 24ம் தேதி தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆரம்பத்தில் முஸ்லிம் அமைப்புகள் தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டன. அதன் பிறகு தீவிர விசாரணைக்கு பிறகு எட்டு இந்துத்துவ தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

வேண்டுமென்றெ வெடிக்க செய்து முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விடுவதே தங்கள் நோக்கம் என குற்றவாளிகள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

பழிக்கு பழி தான் குண்டுவெடிப்புகள்

ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு  குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தும் இந்துக்களின் கோயில்களில் முஸ்லிம்கள் வைத்த குண்டுகளுக்கு பழி வாங்கும் சம்பவம் தான் என அக்சர்தம் கோவில் குண்டுவெடிப்பை காட்டி நியாயப்படுத்தினார்கள்.

2002ல் அக்சர்தாம் கோவிலில் குண்டு வெடித்தது. இதனை முஸ்லிம் தீவிரவாதிகள் தான் செய்தார்கள் என கைது செய்தார்கள். அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2014ம் ஆண்டு மே மாதம் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் அப்பாவிகள் என்று விடுதலை செய்தது.

இந்த அக்சர்தம் கோவில் குண்டுவெடிப்பும் முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டதல்ல. இது கண்டிப்பாக இந்துத்துவ சதியாக இருக்கக் கூடும் என மறுவிசாரணைகாக கோரப்பட்டது. ஆனால் அது காதில் வாங்கப்படவே இல்லை.

முஸ்லிம் அப்பாவிகள் சிறைகளில்

இப்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் பல ஆண்டு காலங்கள் முஸ்லிம்கள் குற்றவாளிகளாக தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்தார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் விடுதலை செய்தது.

அக்சர்தம் கோவில் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் நிரபராதிகள் என்று விடுதலை செய்த பின்னர் நீதிபதிகள் இப்படி குறிப்பிட்டார்கள், “ எண்ணற்ற அப்பாவிகளை பிடிப்பதற்கு பதிலாக காவல்துறையினர் ஏதும் அறியாத அப்பாவிகளை கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் மீது படு மோசமான குற்றங்களை சுமத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.”

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1996ம் ஆண்டு ஒரு குண்டு வெடித்தது. இதில் பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பில் கைத் செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் தள்ளிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தது.

காலுபூர்(2006) குண்டுவெடிப்பிற்கு பிறகு பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். எட்டு ஆண்டுகள் கழித்து 2014ல் நீதிமன்றம் கொடுத்த உத்தரவில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்று விடுதலை செய்தது.

பயிற்சி முகாம்கள்

புனேவில் ஜெல்லட்டின் குண்டுகலை உபயோகிக்கும் பயிற்சி, நாக்பூரில் ஆயுதங்களை கையாளுதல், வெடுகுண்டு பயிற்சி, RDX வெடிமருந்து பயிற்சி, பெண்களுக்கான கத்தி, வாள், அரிவாள் கையாளும் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் பயிற்சி, வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி முகாம் என நாட்டில் 71 இடங்களில் இதுபோல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டிருப்பது காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இன்னும் நிறைய தகவல்கள்

இப்புத்தகத்தில் இருக்கும் முக்கிய தகவல்களை மட்டும் தான் குறிப்பிட முடிந்தது. கண்டிப்பாக இந்தியாவில்  உள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல். முஸ்லிம்கள் மீது எப்படியெல்லாம் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.

30 ரூபாய் மதிப்புள்ள புத்தகம். மறக்காமல் படியுங்கள். மற்றவர்களுக்கும் பரப்புங்கள்.

அபூ சித்திக்.

*புத்தக தேவைக்கு அழைக்கவும் Gulam Mohamed ByVaigarai Velicham செல் 8148129887*

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு