மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது - பாஸூ அலீயெவா

udhaya sankar

மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது - பாஸூ அலீயெவா

வணங்குகிறேன் உமர்தாதா!

உண்மையில் சொல்கிறேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறை வாசித்த போது எதுவுமே புரியவில்லை. பசிக்காகவும் இல்லாமல் ருசிக்காகவும் இல்லாமல் கடனுக்காகவே மண்கட்டியைக் காற்று அடித்தப் போகாது நாவலைப் படித்தேன். அப்போது வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த காலம். புத்தகவாசிப்பு, தோழர்களுடன் உரையாடல், சினிமா, டீ, சிகரெட் என்று நாட்கள் ஒடிக் கொண்டிருந்தன. 

யாரோ சொன்னார்கள். யாரோ கொடுத்தார்கள். சொன்னவர்களும் சரி கொடுத்தவர்களும் சரி இந்த நாவலைப் பற்றிப் பிரமாதமாய்ப் பேசியதாக ஞாபகத்திலிலில்லை. அது மிகையீல் ஷொலகோவின் காலம். 

லட்சியமும் போராட்டமும் புரட்சியும் பரபரப்பும் நிறைந்த புத்தகங்களை மட்டுமே ( காதல் வந்தால் கூட அது புரட்சியுடன் தொடர்பு படுத்தப் பட்டிருக்க வேண்டும் ) வாசிக்கவும் கிளர்ச்சியடைந்து உரத்த குரலில் ஏதோ இங்கேயே புரட்சி நடந்து கொண்டிருப்பதைப் போல கத்திச் சண்டை அதுதான் விவாதம் செய்து  கொண்டிருந்த காலம். 

அந்த நேரத்தில் தான் பாஸூ அலீயேவின் மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது கிடைத்தது. அதுவும்  காலையில் கிடைத்த புத்தகத்தை மாலைக்குள் கொடுத்துவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு. வேக வேகமாகப் படித்தும் படிக்காமலும் கொடுத்து விட்டேன். இந்த நாவலைப் பற்றி அதிகம் பேசியதாகவும் நினைவில்லை. ஆனால் புத்தகத்தின் தலைப்பு மட்டும் மறக்கவில்லை.  

இப்போது வாசிக்கும்போது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்திருக்கிறோம். குழம்பின் ருசி தெரியாத அகப்பையாக வாழ்ந்திருக்கிறோமென்று தோன்றியது. மகத்தான இலக்கியப்படைப்புகளெல்லாம் வாசிக்கும் போது அதைப்போன்ற மகத்தான இலக்கியப் படைப்புகளை நினைவுபடுத்தும். மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது நாவலை வாசித்தவுடன் எனக்கு கோபல்ல கிராமம் நாவலும், அகிராகுரோசோவாவின் ட்ரீம்ஸ் குறும்படத்தொகுப்பிலுள்ள ஒரு மலைக்கிராமத்தைப் பற்றிய படமும் தான் நினைவுக்கு வந்தது.

உள்ளங்கையளவே உள்ள ஒரு இஸ்லாமிய மக்கள் வாழும் மலைக்கிராமத்தின் இதிகாசக்கதை. புரட்சிக்குப் பிந்தைய கூட்டுப்பண்ணைக் காலத்துக்கதை. கிராமமே ஒரு குடும்பமாக இருக்கிறது. ஒரே மனம் கொண்ட குடும்பம். மக்களின் கூட்டு நனவிலி மண்ணோடு, விவசாயத்துடன் காலம் காலமாகத் தொடர்புடையது. அதன் குரலாக உமர்தாதா இருக்கிறார். கதையின் முடிவில் இதிகாச நாயகனாக பேருருக் கொள்கிறார். 

அவருடைய வாழ்க்கை முதிர்ந்த எருது ஆழமாக உழுவதைப் போன்றது. நிலத்தை, அந்தக் கிராமத்தை, மக்கள் மனதை, கிராம சோவியத் என்ற அமைப்பை, கட்சியின் தவறுகளை, உழுது பண்படுத்திக் கொண்டேயிருக்கிறது. எல்லாருக்காகவும் மகிழ்ச்சியடைகிறார். எல்லாருக்காகவும் துக்கப்படுகிறார். எல்லாருக்காகவும் கோபப்படுகிறார். எல்லாருடைய வாழ்விலும் உமர்தாதா இரண்டறக் கலந்திருக்கிறார்.

பாத்திமாத் சொல்லும் கதைவழியே நேர்மையான கட்சி ஊழியன் அகமது பதவிக்காகவும் அகமதின் மனைவி பரீஹானுக்காகவும் ஜமாலினால்  குற்றம் சாட்டப்பட்டு பதவியிழக்கிறான். கட்சி தவறு செய்கிறது. பின்னர் தவறைச் சரிசெய்கிறது. ஆனால் அதே ஜமாலினால் கொலைசெய்யவும் படுகிறான். 

அதன் பிறகு அந்தக் குடும்பமும் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டமும் தான் கதையென்று சொல்லி விடலாம். அந்தக் குடும்பத்தின் மூத்தவளான பாத்திமாத் தான் கதையை நடத்துகிறாள்.

ஒருவகையில் இந்த அவர் மொழி நாவல் சோவியத்தின் வட்டாரமொழி நாவல்களில் முன்னோடியான நாவலாக இருக்கும். ஏனெனில் அவார் மொழிக்கு 1956 ஆம் ஆண்டுதான் வரிவடிவமே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவரை வாய்மொழியாகவே தங்கள் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார்கள். அதனால் தான் நாவல் நெடுக அத்தனை பழமொழிகள், சொலவடைகள், நாட்டார் பாடல்கள் தளும்பி வழிகின்றன. 

சோவியத்தின் கூட்டுப்பண்ணை, கட்சி, ஹிட்லரின் பாசிச யுத்தம் எல்லாம் பின்னணியில் நிழலாக வருகின்றன.

சுழித்தோடும் மலையோடையைப் போலவே நாவலும் ஏராளமான திருப்பங்களையும், எதிர்பாராத்தன்மைகளையும், அதிர்ச்சி தரும் நிகழ்வுகளையும் கொண்டிருக்கிறது. மேலே கொந்தளிக்கும் கடலலைகளுக்கு ஆழத்தில் அமைதியான ஆறு ஓடுவதைப் போல அவர் கிராமத்து வாழ்க்கை முன்னேறிக் கொண்டிருக்கிறது. எதற்காகவும், யாருக்காகவும்  நிற்கவில்லை. அகமது இறந்து விடுகிறான். ஜமால் கொலை செய்யப்படுகிறான். ஸைகிது ஹிட்லர் படையினரால் கொல்லப்படுகிறான். நூருல்லா யுத்தத்தில் காயம்பட்டு குரூபியாக வருகிறான்.

அவ்வளவு ஏன்?

 காலாகாலத்துக்கும் இருப்பாரென்று எல்லாரும் நம்புகிற உமர்தாதா மரணமடைகிறார்.

 பிறப்பு, இறப்பு, துரோகம், சோரம், காதல்.எல்லாம் இருக்கிறது. எல்லாவற்றுக்குமேல் மக்களின் உழைப்பு மண்ணைப்பொன்னாக்குகிற உழைப்பு அவர்களை வசந்தகால நிலத்தைப் போல பண்பட்டவர்களாக்குகிறது.  மலையிலிருந்து உருண்டு விழும் கரடுமுரடான பாறைகளை அநுபவங்களால் பட்டை தீட்டி அழகான கூழாங்கற்களாக மாற்றி விடுவதைப் போல மனிதர்களை அழகானவர்களாக மாற்றுகிறது.

இப்போது வாசிக்கும்போது நாவலின் சூட்சுமம் புரிகிறது. மாபெரும் வாழ்க்கையின் இடையறாத ஓட்டத்தை அப்படியே உள்ளங்கை ரேகையைப் பார்ப்பதைப் போலக் காட்டுகிறார்  பாஸூ அலீயேவ். 

ஒரு தியானம் போல இருந்தது. உமர்தாதா, ஹலூன், அகமது, பரீஹான், பாத்திமாத், நஜாபாத், அஸியாத், ஜமால், அலிபேக், ஹூரிஸாதா, பரீ, ஸைகிது, மஜீது, சாதுல்லா, நூலுல்லா என்று எல்லோரும் அந்தத் தியானத்துக்குள் வந்து சென்றார்கள். 

ஒரு பெரும் அமைதியும் பேரிரைச்சலும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

 மனிதர்களில்லாமல் வாழ்க்கைக்கோ, தியானத்துக்கோ அமைதிக்கோ ஏதாவது அர்த்தமிருக்கிறதா?

வாருங்கள்!

உமர் தாதா காத்திருக்கிறார். . உழைப்பைத் தியானிப்போம். 

வணக்கம் பாஸூ அலீயேவ்!

- udhaya sankar (முகநூலில்)

https://www.facebook.com/share/p/Q4TqnGMZA8b3uKWt/?mibextid=oFDknk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு