தலைமைப் பண்பின்றி தடுமாறிய மோடி!- அம்பலமாக்கிய ராணுவத் தளபதி!

அறம் இணைய இதழ்

தலைமைப் பண்பின்றி தடுமாறிய மோடி!- அம்பலமாக்கிய ராணுவத் தளபதி!

எவ்வளவு பதற்றம்..! கடும் எதிர்ப்பு, ராகுலை பேச விடாமல் பெரும் கூச்சல்! இந்த நூலில் எழுதப்பட்டுள்ளவை வெளியானால் மிகைப்படுத்தப்பட்ட மோடியின் இமேஜ் சரிந்து தரைமட்டமாகும் என்று தான் இதை தடுக்க நினைத்தனர். ”அட, இவ்வளவு தானா, மோடி?” என அதிர வைக்கும் ராணுவ மேஜரின் அனுபவப் பதிவைப் பார்ப்போமா?

ராகுல் காந்தியை பேச விட்டு, அதற்கு சரியான பதிலடி தரலாமே, பாஜகவினர்!

”நீ எதையும் பேசாதே, நீ பேசுவது இன்னும் வெளிவராத புத்தகம். இன்னும் வெளிவராத ஒரு புத்தகம் பற்றிப் பேசுவதை நாடாளுமன்ற விதிகள் அனுமதிக்காது..’’ என்று கதறினார்கள், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரிண் ரிஜ்ஜு, அமித்ஷா..என இன்னும் பலர்!

விவகாரம் இது தான்; இந்திய ராணுவத்தின் தரைப்படைத் தளபதியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே. இவர் தன்னுடைய அனுபவங்களை four stars of destiny என்று ஒரு நூலாக எழுதியுள்ளார். அந்த நூலை அவர் 2024 ஏப்ரல் மாதமே எழுதிவிட்டார். ஆனால், அந்த நூலை வெளியிட அனுமதிக்காமல் பாஜக அரசு தடுத்து வைத்துள்ளது.

ஏன் தடுத்தார்கள்? அப்படி என்ன அதில் உள்ளது? என எல்லோருக்கும் ஒரு தேடல் வரும் தானே! அந்தத் தேடலில் அந்த நூலின் சில பக்கங்கள் வெளியே கசிந்துவிட்டன. உறங்க வைத்த உண்மைகள் விழித்து வெளிக் கிளம்பி நாளிதழ்கள் சிலவற்றில் விவாதப் பொருளாகவும் ஆகிவிட்டன. அப்படி வெளியான உண்மைகளை சபையில் கவனப்படுத்தி விளக்கம் பெறவே ராகுல்காந்தி பேச விழைந்தார்.

ஆனால், அந்த உண்மைகள் வெளிவந்துவிடக் கூடாது என்ற தவிப்பில் தான் நாடளுமன்ற விதிகளைக் காரணம் காட்டி தடுத்துவிட்டனர், பாஜக உறுப்பினர்கள்! இப்படியான விதிகளால் அதிகார மையங்களின் அவலங்கள் நாடாளுமன்றத்தில் அம்பலப்படாமல் தடுக்கலாமே அன்றி, மக்கள் மன்றத்தில் அம்பலமாவதை எப்படி தடுப்பார்கள். ..? பிறகு, மக்கள் அவர்களின் விதியை எழுதமாட்டார்களா?

ஒன்றடுத்து ஒன்றென மோடியின் பிம்பம் உடைந்து நொறுங்கி சிதறிக் கொண்டுள்ளது..! அந்த வகையில் ஜெனரல் முகுந்த் நரவனேவின், ‘விதியின் நான்கு நட்சத்திரங்கள்’ என்ற நூல், ‘இந்திய ராணுவம் ஒரு பெரும் இக்கட்டை சந்தித்த நேரத்தில் இந்திய ஆட்சியாளர்கள் எப்படி வெளிப்பட்டனர்’என்பதை விவரிக்கிறது.

சீன ஊடுருவலை தடுக்கும் விதமாக பனி கொட்டும் இமய மலையின் ( லடாக்கை ஒட்டிய) ரெய்சின் பகுதியில் உள்ள பாங்காங்க் ஏரி பகுதியில் இரவு 8.15 மணி வாக்கில் ஊடுருவுகிறது சீனப்படை நான்கு டாங்குகள் மற்றும் காலாட் படைகளுடன். மோதலுக்கான பதற்றத்தை அவர்கள் வலிந்து உருவாக்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. ”ஆக, இந்த நேரத்தில் போரிடலாமா? நாங்கள்  அர்ப்பணிப்புடன் தயாராக உள்ளோம். உங்கள் கட்டளை என்ன?” என நான் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் ஆகியோருக்கு தொலைபேசி செய்து கேட்கிறேன். ”மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும் அது வரை எதுவும் செய்யாதீர்கள்” என்கிறார்.

ஆனால், நிமிடத்திற்கு நிமிடம் அவர்களின் ஊடுருவல் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே மீண்டும், நரவனே அமைச்சர் ராஜ் நாத் சிங்கை அழைக்கிறார். ஆனால், அவரிடம் இருந்து எந்த வழிகாட்டலும் இல்லை. அவர்கள் மேன்மேலும் ஊடுருவிக் கொண்டிருந்தனர். என்னால் வேடிக்கை பார்க்க முடியவில்லை. மீண்டும் ராணுவ அமைச்சரை இரவு 10.30க்கு அழைத்த போது அவர், தான் பிரதமர் மோடியுடன் பேசிவிட்டதாகவும், ”நீங்கள் என்ன கருதுகிறீர்களோ, அதை செய்யலாம் என மோடிஜி சொன்னார்” என்றார்.

ஆனால், போர் என்பது ஒரு அரசியல் தலைமை எடுக்க வேண்டிய முடிவு. ஏனெனில், இதன் அரசியல்,பொருளாதார விளைவுகளையும், இதன் பின்னணியில் சீனாவும், பாகிஸ்தானும் கை கோர்த்தால், இந்தியாவுக்கு அமெரிக்க உதவி உறுதிப்படுமா? என்பதையெல்லாம் மதிப்பீடு செய்ய வேண்டியது அரசியல் தலைமையே தவிர, ராணுவத் தளபதி அல்ல. கார்கில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் தான் கட்டளையிட்டார். 1971-ல் பாகிஸ்தானுடனான போரின் போது இந்திராகாந்தி தான் முடிவெடுத்தார். இது தான் இந்திய மரபு. ராணுவத் தலைமைத் தளபதி ஒரு போதும் போர் குறித்த முடிவை எடுக்க முடியாது.

எனக்கு நன்றாக உணர முடிந்தது. இந்திய பிரதமர் மோடி உறுதியாக தன் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார். நான் தனிமைப்பட்டேன். ஒரு இக்கட்டான நேரத்தில் இப்படியான பொறுப்பு துறப்பு என்பது இந்திய மக்களிடம் மோடி குறித்து இருக்கும், ‘மிக தைரியசாலி, தீர்மானகரமானவர், சக்தி வாய்ந்த தலைவர்’ போன்ற பிம்பங்களுக்கு எதிர்மறையாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தில் உறுதியாக போரிடு என்று சொல்லவும் ஆளில்லை. தடுக்கவும் ஆளில்லை. நம்பிக்கை தந்து வழிகட்டவும் ஆளில்லை… என்று ராணுவ மேஜர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே  எழுதியுள்ளார்.

ஆட்சியாளர்கள் தங்கள் பதற்றத்தின் மூலம் மறைக்கப்பட்ட உண்மை என்ன? என்ற தேடலை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டனர். அந்த தேடலின் தேவையை நிறைவேற்றவே நாமும் உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டோம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23910/general-m-m-naravane-modi/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு