தவெகவை நம்பி ஓட்டு போட்டோமே... அரசு ஊழியர், ஆசிரியர்கள் தலையில் சம்மட்டி அடி!

அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் காட்டம்

தவெகவை நம்பி ஓட்டு போட்டோமே... அரசு ஊழியர், ஆசிரியர்கள் தலையில் சம்மட்டி அடி!
சட்டசபையில் நிதி அமைச்சரின் அறிவிப்பு, தவெகவை நம்பி ஓட்டு போட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தலையில் சம்மட்டியால் அடித்தது போன்ற வலியும், வேதனையும் அடைந்துள்ளனர் என்று அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கூட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் அமிர்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசியபோது நிதி அமைச்சர் மத்திய அரசு கடன்பெற அனுமதி அளித்தால் மட்டுமே தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் தலையில் சம்மட்டியால் அடித்தது போன்ற வலியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
முந்தைய அரசு தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தது. இவை ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட கவாஜ் கமிட்டியின்படி செயல்படுத்தப்போவதாக கூறியிருந்தது.
நம்பிக்கையுடன் ஓட்டளித்தோம்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தினை பரிசீலித்து மதிப்பீடு செய்யப்படும் எனக் கூறியிருந்ததை ஏற்று தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் ஓட்டளித்து இருந்தனர், என்று குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான அறிக்கை வேண்டும்

புதிய ஆட்சி பதவி ஏற்றவுடன் முதல்வர் விஜயை சந்தித்தபோது கடந்த 4 மாதங்களாக 01.04.2023க்கு பிறகு பணிக்கு வந்தவர்கள் ஓய்வு பெறும் போது ஓய்வூதியக் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர் என கூறியபோது விரைவில் இது தொடர்பாக முடிவெடுக்கின்றேன் எனக் கூறினார்.
தற்போது நிதியமைச்சர் சட்டமன்றத்தில் கூறும்போது மத்திய அரசு கடன் பெற அனுமதி அளித்தால் மட்டுமே இத்திட்டத்தினை செயல்படுத்த முடியும் என கவாஜ் கமிட்டி பேடி தலைமையில் அமைக்கப்பட்ட ஓய்வூதியம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட குழு அறிக்கை அளித்திருந்ததாக கூறியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி போன்று உள்ளதால், அக்குழுவின் முழுமையான அறிக்கையினை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பழைய ஓய்வூதியம்

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்காக இவ்வாண்டு அறிவிக்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்யாது தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் 6 லட்சத்து 24 ஆயிரம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகவே உள்ளது.
மேலும் இந்த நிதி நிலை அறிக்கையில் விடுப்பு சரண், ஓய்வூதியப்படிகள், பணிக்கொடை போன்றவற்றுக்காக ஒதுக்கீடு செய்த தொகையில் சுமார் ரூ.3 லட்சம் குறைத்துள்ளது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தையும், இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தையும் ரத்து செய்து விட்டு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு பரிசீலித்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜ ராஜேஸ்வரன், பிரெடெரிக் எங்கெல்ஸ், செல்வக்குமார் ஆகியோர் கூறியது:
மத்திய அரசு கடன் வழங்கினால் டாப்ஸ் திட்டத்தை அமுல்படுத்தலாம் என்று கவாஜ் பி பேடி குழு பரிந்துரை செய்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.
திமுக அரசு எந்த அடிப்படையில் டாப்ஸ் திட்டத்தை அறிவித்தது என்பதை தெளிவுபடுத்த குழுவின் பரிந்துரைகள், அதன் அறிக்கையை தமிழக அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும். தேர்தல் நேரத்தில் அறிக்கை யில் திமுக அரசு கொண்டு வந்துள்ள டாப்ஸ் திட்டம் ஒழிக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப முழுமையான பழைய ஓய்வூதிய திட்டம் கவாஜ் பரிசீலிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுமென்று கூறியிருந்தது. அந்த, டாப்ஸ் திட்டத்தை ஒழிப்பதற்கு பதிலாக மத்திய அரசு கடன் உதவி வழங்கினால் அமுல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியை மீறிய செயல். பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துவோம் என்று திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக டாப்ஸ் திட்டத்தை அறிவித்துதற்கான பலனை இப்போது அனுபவிக்கிறது.
அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்றலாம் என்று தவெக அரசு நினைத்தால் திமுகவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் அன்பழகன்:
தவெக தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை பரிசீலித்து மதிப்பீடு செய்வதாக கூறியது. அந்த வாக்குறுதியையும் அதற்கான திட்டமிடலையும் அரசு தொடங்கவில்லை.
திமுக அரசு கொண்டு வந்த டாப்ஸ் திட்டத்துக்கு அந்த அரசு ஒதுக்கீடு செய்த ரூ.15 ஆயிரத்து 997 கோடியையும் ரூ. 4 ஆயிரத்து 997 கோடியாக குறைத்துள்ளது.
பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ககன் தீப்சிங் பேடி குழு மத்திய அரசு கடன் வாங்க அனுமதித்தால் மட்டுமே டாப்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக அரசு செயல்படும்போது வலுவான போராட்டத்தை கையில் எடுப்போம்.
அமிர்தகுமார், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் 
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு