இப்போதும் நம்ம ஆட்சிதான் நடக்குது! என்று திமுக சொன்னால் தப்பில்லை!
துரை. சண்முகம்
திமுகவின் அரசியல் வருகை ஆட்சி ஆகியவற்றின் போதும்
ஏற்கனவே தமிழ்நாட்டை தகவமைத்திருந்த தேசியக் கட்சி முகச்சுழிப்போடு இனிமே உருப்புட்ட மாதிரிதான்! என்றுதான் கருத்தை பரப்பியது.
இப்போது அதே மாதிரியான கறுவுதலை தவெக வின் மீது ஆண்ட வர்க்கம் பரப்புகிறது.
திமுக எனும் கட்சியின் வருகையை புரிந்து கொள்வதில் இருந்து அதன் தொடர்ச்சியை கவனிக்க முடியும்.
வளர்ச்சிப் போக்கின் ஊடாக முதலாளித்துவம் தன்னை தகவமைத்துக் கொள்ளவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் நில உடமை சமூக அமைப்புடன் இங்கே
அடிப்படையில் சமரசம் செய்து கொண்டது. ஆனாலும் வெளியே கூடவே வளர்ந்து வரும் கூலி விவசாய வர்க்க போராட்டம் தொழிலாளர் வர்க்க போராட்டங்கள் போன்றவற்றிற்கு ஈடு கொடுக்க சில சில்லறை சீர்திருத்தங்களையும் செய்ய வேண்டி இருந்தது.
விவசாய பிரச்சினைகளில் நில உச்சவரம்பு, கூலி நிலைமைகளில்
சிறிய கூலி உயர்வு, தொழிலாளர் சட்டங்கள் என்று முதலாளித்துவ வளர்ச்சிக்கு உட்பட்ட நிகழ்வு போக்குகளை கையாள வேண்டிய தேவை இருந்தது.
நில உடமை, கிராமப்புறத்து உழைப்பு சுரண்டல் முறை போன்றவற்றில் ஏற்கனவே அதிகாரத்தை கொண்டிருந்த வர்க்கங்களுக்கு, அரசியல் போக்கு பிரதிபலித்த முதலாளித்து வளர்ச்சி போக்கு மனநிறைவாக இல்லை.
இந்தப் புதிய சூழலை வெளிப்படுத்திய கட்சிகளின் மீது காழ்ப்பும் வன்மமும் வெளிப்பட்டது.
கண்டவனும் அரசியலுக்கு வந்துட்டான்! அமைச்சராயிட்டான்!
ஒரு கட்டுப்பாடே போச்சு! இனி நாடு கெட்டு குட்டிச்சுவரா போவப் போவுது! இன்று அக்கிரகாரங்களும் காங்கிரஸ் பழைய பெருச்சாளிகளும் மேல் அடுக்கு சாதிய அதிகார பேர்வழிகளும் பேசித் திரிந்தார்கள்.
குறிப்பாக போராட்ட களத்தின் மூலம் பழைய சமூக ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது பள்ளன் பறையன் கட்சி என்ற முத்திரையும் பார்வையும் பரப்பப்பட்டது. தேர்தல் அரசியலுக்கு இடதுசாரிகள் வந்த போதும், இந்திய தேசிய முதலாளிகளும் பார்ப்பனர் அல்லாத முதலாளித்துவ வர்க்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத வேறு ஒரு மாற்றையே
தமக்கான வளர்ச்சியாக கருதினர்.
முதலாளித்துவ கட்சிகள் உடனான தேர்தல் உடன்பாடு சமரசங்கள் மூலம் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இந்த வழிமுறையில் இது ஒரு தனித்த கட்சி எனும் தேவை இல்லாது போயிற்று.
இந்த அரசியல் நிகழ்வுப் போக்கில் திராவிடம் ! தமிழ்நாடு தமிழருக்கு! வடக்கை எதிர்க்கும் தெற்கு! எனும் உரிமை முழக்கங்களின் மூலம்
முதலாளித்துவ அடிப்படைக்கு பாதகம் இல்லாத ஆளும்வர்க்க பங்காளி கட்சியாக தன்னை பொருத்திக் கொண்டது திமுக.
தொடக்கத்தில் பண்ணையார் அரசியலை எதிர்த்து வசனங்கள் பேசி பார்ப்பன அதிகாரத்தை கேள்வி கேட்டு அம்பலப்படுத்தி நிலவும் அரசியல் அதிகாரத்தில் தனது பங்கை கோரிய பார்ப்பனர் அல்லாத சாதிகளின் குரலை
உள்ளடக்கி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று வந்த திமுகவையும் தொடக்கத்தில் மேட்டுக்குடி மேலடுக்கு சாதி பேர்வழிகள் திட்டி தீர்த்தனர்.
வர்க்கங்களில் வளர்ச்சிப் போக்கும் தொடர்ச்சியான முதலாளித்துவ வளர்ச்சி போக்கில் முதலாளித்துவ சுரண்டலுக்குட்பட்ட அரசியல் கட்சியாக திமுகவும் சேர்ந்து வளர, பின்பகுதியில் அதன் வர்க்க சமூகத்தன்மை 'சமூக நீதிக்' கட்சியாக உடமை வர்க்க பார்வையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. தனியுடமை அடிப்படையான வர்க்கங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற கட்சியாக பரவலானது.
இன்னும் சொல்லப்போனால் திமுகவின் தொடக்க காலம் ஒரு தனி நாடாக உரிமை கோரி! திராவிட நாட்டை வளம் பெறச் செய்ய முடியும் என புதிய தேசிய முதலாளிகளுக்கான ஆர்வத்தை கொடுத்தது.
ஆனால் நிலைமை தேசிய முதலாளித்துவ அரசியல் நோக்கத்திற்கு வடவர் எதிர்ப்பு மட்டும் போதாது வந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தாக வேண்டும். இப்படி எல்லாம் இம்மியளவும் அரசியல் திட்டமும் போக்கும் இல்லாத திமுக , பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பேச்சின் மூலம் பார்ப்பனர் அல்லாத உடமை வர்க்கங்களை பின்புலம் ஆக்கிக் கொண்டது போலவே வடவர் எதிர்ப்பு பேசி தமிழ்நாட்டு முதலாளித்துவ சக்திகளை தன் பின்னே ஈர்த்தது
இவர்கள் சொல்லிக்கொண்ட கொள்கைக்காக போராடுவது என்பதை விட இந்த வர்க்க சக்திகளை திரட்டிக் கொண்டு வடவராதிக்கத்திடம் குறிப்பாகச் சொன்னால் இந்திய தேசிய ஆளும் வர்க்கத்திடம் பேரம் பேசும் சக்தியாக சீரழிந்து போனதுதான் வரலாறு.
திராவிட நாடு திராவிடருக்கே! அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு! என்றெல்லாம் ஆர்ப்பரித்து " எல்லோரும் போய்விட்டால் கூட காஞ்சிபுரத்தில் என் வீட்டுத் திண்ணையில் படுத்து கொண்டாவது திராவிட நாடு கூறி முழக்கமிடுவேன்!" என்று சொன்னார் அண்ணா.
1962 பிரிவினை தடைச் சட்டம் வருவதாக மிரட்டியதும் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு மாநில சுயாட்சியாக மாற்றிக்கொண்டார்.
எந்தக் காலத்திலும் ஒரு தேசிய இன உரிமை எனும் அடிப்படையில் அரசியலை முன்னெடுக்காமல் தனி நாடு! பிறகு மாநில சுயாட்சி!
இப்போது கார்ப்பரேட்டுகளுடன் கூட்டாட்சி இந்திய தேசிய ஆளும் வர்க்கங்களுடன் பங்கு கோரும் பங்காளி கட்சியாக திரிந்து விட்டது. அந்தக் கட்சியின் வர்க்க இயல்பும் இவ்வாறாக வெளிப்படுகிறது.
தன்னுரிமை எனும் அரசியல் அடிப்படைதான் எல்லா தேசிய இனங்களுக்குமான சமத்துவ உரிமையை கோரக்கூடியது.
உலகமய ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆட்சிக்கு கீழான ஒரு அரசமைப்பில் மாநில சுயாட்சி என்பது! அடிமைத்தனத்தின் பிறிதொரு வெளிப்பாடு.
மாநில சுயாட்சி என்பது ஒரு நாட்டில் இணைந்துள்ள தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்பதில்லை. இதன் மூலம் மறுக்கிறது. அதாவது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசிய இனத்தை அடைத்து வைப்பது என்பதாகிறது.
ஒரு தேசிய அடிமைத்தனத்தை
ஏற்பதையே பெரிய சுதந்திர முழக்கம் போல மயக்கியது.
அனைத்திலும் மூலதனஆட்சிக்கு அடக்கம் ஆகிவிட்ட திமுக வாயளவில் திராவிடம் மாநிலம் சுயாட்சி என்றெல்லாம் பேசுவது
மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
அரசியல் அரங்கில் திமுகவின் உண்மையான தோல்வி இத்தகைய கொள்கை வழியில் வெளிப்படுவதுதான்.
எப்படி தேசிய ஒருமைப்பாடு எனும் பித்தலாட்டத்தின் மூலம் ஒரு வர்க்க ஒடுக்குமுறை ஆட்சியை நடத்திய காங்கிரசை மக்கள் தூக்கி எறிந்தார்களோ! அதேபோல
திராவிட ஒருமைப்பாடு பேசி அனைவருக்குமான சமூக நீதிப் பேசி கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கு வேலை செய்து , வர்க்க ஒடுக்கு முறை செய்து பங்கு வாங்கி கொழுத்த அதன் கட்சி முகங்களை பார்த்து மக்கள் வெறுத்து ஒதுக்கியதுதான் நடந்துள்ளது.
வர்க்கமற்ற ஜனநாயகம் வர்க்கமற்ற சமூக நீதி என்பது பித்தலாட்டம் என்பதை அரசியல் அரங்கில் உழைக்கும் வர்க்கம் உணரத் தொடங்கிவிட்டது.
இப்போது அரசியல் அரங்கில்
அன்று திமுகவின் வருகையின் போது ஐயோ நாடு கெட்டுவிட்டது எனும் புலம்பல் நடந்தது போல தவெகவின் வருகையில் திராவிட புலம்பல் இப்போ தூக்கலாக இருக்கிறது!
நிச்சயம் தவெகவும் முதலாளித்துவ கொள்கை வழியிலான ஒரு கட்சிதான்.
மாற்றம் வேண்டும் எனும் மக்களின் எதிர்பார்ப்பை முதலாளிகளுக்கான மாற்றமாக ஈடு செய்ய அரசியல் அரங்கில் வந்திருக்கும் கட்சிதான்.
இந்தச் சூழ்நிலையிலும் அதன் கார்ப்பரேட் நலன் அடிப்படைகளை எதிர்க்காமல் இந்திய ஆளும் வர்க்க முதலாளித்துவ விசுவாசத்துடன் திமுக, அதன் ஆதரவாளர்கள் தவெக வை பாஜக ஆள்! என்று மட்டும் நிலைநிறுத்த விரும்புகிறார்கள். இந்திய தேசிய ஆளும்வர்க்கத்தின் கீழான மூலதன ஆட்சி எனும் அடிப்படையில் எதிர்த்தால், தனது தேசிய அடிமைத்தன வர்க்க பங்கை வெளிப்படையாக மெயின்டைன் செய்ய முடியாது!
எசமான விசுவாசத்தை மீற முடியாது! என்பதால், வழக்கம்போல காவி என்பதை மட்டும் அரசியல் ஆதாயமாக எதிர்பாக்கிக் கொள்கிறது.
தவெக வும் மூலதன ஆட்சியில் முன்னோர்கள் பாதையில் அயராமல் நடக்கும்.
இதற்கு மாற்றாக மக்களுக்கான ஒரு கட்சி எனில் மேற்ச் சொன்ன கட்சிகளின் அடிப்படைகளை மறுத்த ஒரு கட்சிதான் மக்களிடம் இனி வளர முடியும். ஒன்னு திமுக இன்னொன்னு தவெக எனும் லாவணிக்குள் சிக்காமல், ஒன்னு முதலாளித்துவ வர்க்க கட்சி! இன்னொன்னு தொழிலாளி வர்க்க கட்சி! என்று திறம்பட வர்க்க அரசியல் பேசுவதற்கான வாய்ப்பான சூழலாக இதை பயன்படுத்துவதுதான் முக்கியமானது. தேவையானது.
துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு