வேலை நிறுத்தம் - சீர்திருத்தம் பற்றி பாரதியார்
Subbaraj V

தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றி பாரதியார்
……. ஏழைத் தொழிலாளிகள் சாமான்யத்திலே தமது ஜீவனாதாரமாகிய தொழிலைக் கைவிடமாட்டார்கள். மேலே முதலாளிகள் பொறுக்கமுடியாத நிஷ்டூரங்கள் செய்தால்தான் இவர்கள், 'என்ன வந்தாலும் சரி. நான் இவனிடம் வேலைக்குப் போக மாட்டேன்' என்று பிடிவாதம் செய்யக் கூடிய நிலைமை ஏற்படும்.
அவர்கள் கையிலே வேலை நிறுத்துவதைத் தவிர வேறே ஆயுதமில்லை. ஸகலவிதமான பலங்களும் முதலாளி பக்கத்திலே யிருக்கின்றன. ஆதலால், தொழில் நின்ற பிறகும் முதலாளி இலேசாக ஸமாதானத்துக்கு வரமாட்டான். தொழிலாளிகளின் வேண்டுதல்களுக்கு அவன் இணங்க மாட்டான்.
எப்படியும், இவர்கள் வறுமையின் கொடுமையால் நமது காலில் வந்து விழுவார்கள் என்பதை அவன் அறிந்திருக்கின்றான். படிப்பு, அறிவு, யோசனை, பொருள் முதலிய அனைத்தும் முதலாளி பக்கத்திலிருக்கின்றது. தொழிலாளி பக்கத்திலே அந்த ஸௌகரியங்களில் ஒன்றுமே யில்லை. இந்த நிலையில் பொதுஜனச் சார்பும் முதலாளி பக்கத்தைச் சேர்ந்து விடுமானால் தொழிலாளியின் பாடு அதோகதியாய்விடும்.
ஆதலால், ஏழைத் தொழிலாளிகள் வேறு உபாயமறியாமல் வேலை நிறுத்தும்போது, பொது ஜனங்கள் அவர்களிடம் கோபங்கொள்ளாமலிருப்பது மட்டுமே யன்றி, அவர்களுக்குத் தம்மால் இயன்ற ஸௌகரியங்க ளெல்லாம் செய்து கொடுக்க வேண்டும். இதையெல்லாம் ஆலோசனை செய்தே தேசபக்த திலகமும், ஆபத்பாந்தவரும் ஆகிய
ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியிலே 'கோரல் மில்ஸ்' யந்திரசாலை விவகாரத்தில் தொழிலாளிகளின் பக்கம் அனுதாபஞ் செலுத்தினார்.
==========================================================================
சுப்ரமணிய பாரதியார் எழுதியது.
......
ஜனாசாரச் சீர்திருத்தங்களே இப்போது முதலாவது செய்யவேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே காட்டப்படும் பண்டிதர்களின் அபிப்பிராயங்களைக் கவனிப்பார்களாக.
ஐரோப்பாவில் ஸோஷலிஸ்ட் மார்க்கத்தாருக்கு மூல குருவாகிய "கார்ல் மார்க்ஸ்" என்பவர் பின்வருமாறு சொல்லுகிறார்:
"எந்தச் சமயத்தில் பார்த்த போதிலும் ஒரு தேசத்து ஜனங்களின் ஆசாரங்கள், அறிவு, பயிற்சி முதலிய யாவும் அத்தேசத்தின் பொருள் நிலையையே பொருத்தனவாகும்."
"ஸெலிக்மான்' என்ற பண்டிதர் "உலக சரித்திரத்திற்குப் பொருள் நூல் தழுவிய வியாக்கியானம்" என்றோர் கிரந்தமொன்று எழுதியிருக்கிறார்.
அதில் பொது ஜனங்கள் தமது முயற்சியினாலே தமது செல்வத்தை விருத்தி செய்வதிலிருந்து தான் ஸகல நன்மைகளும் பெருகுகின்றன. உலக நாகரிகத்துக்குப் பொருள் காரணம். யுத்தங்களும், ராஜ்யப் பிரளயங்களும், ஸகலமும் பொருள் பற்றிய காரணங்களாலேயே உண்டா யிருக்கின்றன என்பதை நன்கு விளக்குகிறார்.
10.04.1909 இந்தியா பத்திரிகையில்
"ஜன அபிவிருத்தியும் பொருள் நிலையும்"
என்ற கட்டுரையில் இருந்து...
ஜனாசாரச் சீர்திருத்தங்கள் என்பதற்கு "ஜன ஸமூஹ விஷயங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள்" என்று பாரதியே இக்கட்டுரையில் விளக்கம் கொடுத்துள்ளார்.
Subbaraj V
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு