திமுக அரசின் சமத்துவப் பொங்கல் வேசத்தை தோலுரிக்கும் பாரதிநகர் பொது மக்கள்

திமுக அரசின் சமத்துவப் பொங்கல் வேசத்தை தோலுரிக்கும் பாரதிநகர் பொது மக்கள்

தஞ்சை மாவட்டம் நாயக்கர் பேட்டை பாரதிநகரில் பொங்கல் விழாவினை சிறப்புடன் கொண்டாடுவது வழக்கம். இதில் இப்பகுதியில் புதிதாக உருவாகியிருக்கும் பரதநாட்டிய கலைஞர்கள், சிலம்பம் சுற்றுவோர், பாடல்களை பாடுவோர், நடனம் ஆடுவோர், பேச்சு திறன் உள்ளவர்கள், ஜக்லிங் எனப்படும் செப்பீடு வித்தை திறனாளர்கள்  என அவர்களது தனித்திறமைகளை மேடையேற்றி அவர்களை மேலும் வளருவதற்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டுவது நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்து வருகிறது. இதில் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் அளவிற்கு இந்த மேடை அவர்களை உருவாக்கியிருக்கிறது. மேலும் பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கபடி போட்டிகள், ஓட்டப்பந்தயம் என சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கெடுப்பர். கிராமத்தின் பெண்கள் அனைவரும் வீடு தவறாமல் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பெற்று பொதுப் பொங்கல் வைத்து அதை வீடு தவறாமல் பகிர்ந்தளிப்பது அத்தனை மகிழ்ச்சிகரமானது. வெளியூர் சென்று வேலைபார்த்து வரும் இக்கிராமத்தினர் மற்றும் நகரங்களில் நிரந்தரமாக தங்கிவிட்ட அனைவரும் பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவே ஆண்டுக்காண்டு தவறாது வந்து விடுவர். இந்நிகழ்ச்சிகளில் மக்களுக்கிடையே உள்ள சிறு சிறு பிணக்குகள் கூட சிதறி சின்னாபின்னமாகி, ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வதை அனைவரும் காணமுடியும்.

வழக்கமாக இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வர்ணனை வழங்கும் பொறுப்பை செய்து வரும் இளைஞர்கள் பெரும்பாலும் ம.ஜ.இ.க அமைப்பை சேர்ந்தவர்களும் அதன் ஆதரவாளர்களுமாவர். தோழர்கள் ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்தும்போது கிராமத்திற்கே உரிய சின்ன சின்ன சச்சரவுகளை எளிமையாக தீர்த்து வைத்து நிகழ்ச்சியினை எப்போதும் மிகச்சிறப்பாக நடத்திவருகின்றனர்.

அவ்வகையில் இவ்வாண்டும் நிகழ்ச்சியினை புதிய இளைஞர்கள் முன்னெடுத்து நடத்துவதற்காக தயாராகியுள்ளனர். மக்களும் நிகழ்ச்சி செலவிற்கான வரியை கொடுத்து ஊக்கமளித்துள்ளனர். பாடல், ஆடல் உள்ளிட்டவற்றுக்கான முன்னோட்டம் நடத்தப்பட்டு அனைவரும் தயார் நிலை.

அவ்வாறிருக்கையில் இன்று நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதிக்கோரி பாரதிநகர் இளைஞர் மன்றத்தினரும் கிராம முக்கியஸ்தர்களும் கபிஸ்தலம் காவல் நிலையத்திற்கு அனுமதி கோரி சென்றபோது, உங்கள் ஊரில் தனிராஜ்ஜியமே நடத்துகிறீர்கள் -  ரணதீபனும் அவன் கட்சி சொல்வதையும் தான் கேட்கின்றீர் உங்களுக்கு எப்படி அனுமதி தரமுடியும் எனக்கூறி காவல்துறை நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. மேலும் நாங்கள் அனுமதிதராவிட்டாலும் நீங்கள் நடத்துவீர்கள் வருவதை பார்த்துக்கொள்ளுங்கள் என அனுமதிகோரி சென்ற கிராமத்தினரிடம் மிரட்டல் தொனியில் பேசியுள்ளது திமுக அரசின் காவல்துறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பெரிய அளவில் அரசியல் இல்லாமல் நடைபெறும் இந்நிகழ்ச்சியை - மக்கள் ஒற்றுமையுடன் கூடும் இப்பொங்கல் நிகழ்ச்சியினை சீர்குலைக்க முயலும் திராவிட மாடல் அரசின் காவல் துறையின் அணுகுமுறையிலிருந்து புரிந்துக் கொள்ளலாம் இவர்களின் சமத்துவ பொங்கல் வேசத்தை.

பாரதிநகர் மக்களின் மனதில் மகிழ்ச்சி பொங்கச் செய்யும் பொங்கல் விழா நிகழ்ச்சியினை ஒடுக்க முயலும் திராவிட மாடல் தி.மு.க அரசே! நிகழ்ச்சியினை தடுக்க முயலாதே!

ம.ஜ.இ.கவுக்கு ஆதரவாக இருந்து வரும் அப்பகுதி மக்களை தொடச்சியாக கபிஸ்தலம் போலீஸ் மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகிறது. ம.ஜ.இ.கவின் பகுதி பொறுப்பாளர் தோழர். ரணதீபனின் துடிப்பான கள செயல்பாட்டை முடக்க முயற்சி எடுப்பதாக எண்ணி அவரது வீட்டில் சென்று அவரது குடும்பத்தினரை மிரட்டுவது, அவர் உள்ளிட்ட பிற அமைப்பு தோழர்கள் மீது பொய் வழக்கு போடுவது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது பாசிச திமுக அரசு. 

மேலும் அவரிடம் பேசிய போது, "கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள் எத்தகைய இன்னல்களையும் அடக்குமுறைகளையும் சந்திக்க தயாராக இருக்கும் நிலையில், இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் நாம் அஞ்சப்போவதில்லை" என்றார்.

சமதத்துவ பொங்கல் என்று நாடகமாடி கொண்டு பாரதிநகர் மக்களை அச்சுறுத்தி மிரட்டி வரும் திமுக அரசின் காவல்துறையை அப்பகுதி ம.ஜ.இக. தோழர்களுடன் இணைந்து நாமும் வன்மையாக கண்டிப்போம்.

- செந்தளம் செய்திப்பிரிவு