ஶ்ரீமதி படுகொலை: கண்டித்த தஞ்சை மஜஇக தோழர்கள் கைது
போராட்டத்தின் நோக்கத்தை மூடி மறைத்து தினத்தந்தி நாளிதழ் ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாக மாறியுள்ளதாக தோழர்.மணிவேல் கண்டனம்
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தஞ்சை கபிஸ்தலத்தில் நேற்று (01.08.2022) ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது நிமிடம் கூட அனுமதிக்காமல் மஜஇக தஞ்சை-அரியலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர். மணிவேல் உள்ளிட்ட 9பேரை கைது செய்தது திமுக அரசின் ஏவல்படையாக செயல்படும் காவல்துறை.
இது குறித்து தோழர். மணிவேல் அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் கூறியவை:
" திமுக அரசே!
ஸ்ரீமதியை வன்புணர்ந்து படுகொலை செய்த கும்பலை உடனே கைது செய்!
* சங்பரிவாரத்தைச் சேர்ந்த தாளாளர், அவன் மகன் உள்ளிட்ட அனைவரையும் கொலை மற்றும் போக்சோ வழக்கில் கைது செய்!! சங்பரிவாரங்களுக்கு வால் பிடிக்காதே!
* போராடும் மக்கள், ஜனநாயக சக்திகள் மீது போலீஸ் ராஜ்ஜியத்தை ஏவாதே!
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்!
* தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமையாக்கு!
போன்ற முழக்கங்களை அப்பகுதி பொதுமக்களிடம் கொண்டுச் செல்வதற்காகவே நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தோம். இந்த முழக்கங்களை தாங்கிய சுவரொட்டிகளையும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி குறித்த சுவரொட்டிகளையும் தஞ்சை - அரியலூர் மாவட்டம் முழுவதும் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்து வந்த பின்னரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவை அனைத்தையும் தெரிந்தே, தினத்தந்தி நாளிதழ் நாங்கள் எதற்காக போராடினோமோ அதை மூடிமறைத்து நாங்கள் மாணவியின் தற்கொலைச் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இன்று காலை செய்தியை வெளியிட்டுள்ளது. தற்கொலை என்பது தினத்தந்தியின் நிலைபாடாக இருந்துவிட்டு போகட்டும், ஆனால் எங்கள் போராட்டத்தின் சாரத்தை மூடிமறைக்க வேண்டிய அவசியம் என்ன? சங்பரிவார கும்பல்- திமுக அரசோடு சேர்ந்து தினத்தந்தி நாளிதழும் மாணவியின் படுகொலையை மூடிமறைக்கிறது. கொலைக்கும்பலுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் தொடர்ந்து ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது. இதற்கு என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்" என்றார்.
- செந்தளம் செய்திப் பிரிவு