திருவண்ணாமலை தென்முடியனூரில் சாதிக் கொடுமை - வன்முறை
இந்து தமிழ்திசை
சாதிக் கொடுமை: அரசு நிர்வாகம் பொறுப்பிலிருந்து நழுவக் கூடாது!
திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில், பட்டியலின மக்களின் கோயில் நுழைவுக்குப் பிறகு அரங்கேறியிருக்கும் வன்முறைச் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சாதி, மத அடிப்படையில் பாகுபாடு கூடாது, அனைவருக்கும் வழிபாட்டு உரிமை உண்டு என இந்திய அரசமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால், இந்த இரண்டும் தென்முடியனூர் பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. கூடவே, இந்த உரிமைகளை உறுதிசெய்ய வேண்டிய அரசு அமைப்புகள் உறுதியுடன் செயல்படவில்லை எனும் விமர்சனமும் எழுந்திருக்கிறது.
தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் நுழைய நீண்ட காலமாகவே பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்தது. தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், தாங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாகவே அம்மக்கள் கோரிக்கை விடுத்துவந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக வட்டார வளர்ச்சி அலுவலர் இரு தரப்புப் பிரதிநிதிகளிடமும் ஜனவரி 25 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில், ஜனவரி 30 அன்று பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்லலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரில் தொடங்கிப் பலரும் இந்த நிகழ்வின்போது மிகுந்த மரியாதையுடன் முன்னிறுத்தப்பட்டனர். ஆனால், அந்நிகழ்வுக்குப் பிந்தைய விளைவுகளை எதிர்கொள்ள அவர்கள் துணைநின்றார்களா என்பது கேள்விக்கு உரியதாகிவிட்டது.
"ஆதிக்க சாதியினர் இதை எதிர்க்கிறார்கள். நாங்கள் பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்துள்ளோம். அசம்பாவிதம் நடந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என காவல் துறை உயர் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது. கோயில் நுழைவில் பங்கெடுத்த பட்டியலின மக்கள் மிரட்டப்பட்டனர்; பெண் ஒருவரின் பெட்டிக் கடை கொளுத்தப்பட்டது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல் துறையினர், 'புகார் தரப்படவில்லை' எனும் காரணத்தைச் சொல்லி முதலில் வழக்குப் பதிவுசெய்யவில்லை; பிறகு பதியப்பட்ட வழக்கு, பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்காகப் பதிவுசெய்யப்படவில்லை. இதைவிடக் கொடுமையாக, பட்டியலின மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தடுக்கும் வகையில் ஆதிக்கச் சாதியினர் தங்கள் கடைகளை மூடியுள்ளனர். பட்டியலின மக்களிடமிருந்து பால் கொள்முதல் போன்ற வர்த்தகத் தொடர்புகளையும் துண்டித்துள்ளனர். வேளாண் நிலங்களுக்கான தண்ணீரையும் தடுத்துள்ளனர்.
அனைவரும் சமம் என அரசமைப்பு வலியுறுத்தினாலும் நாட்டின் பல கிராமங்களில் இம்மாதிரியான சாதிக் கொடுமைகள் இன்றும் நிலவுகின்றன. பொதுக் கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. ஆதிக்கச் சாதியினர் ஒரு குடையின் கீழ் கூடும்போது, பட்டியலின மக்கள் தனித்துவிடப்படுகின்றனர். மேலவளவு சம்பவம் இதற்கு ஒரு சோற்றுப் பதம்.
அரசு அமைப்பும் போதிய அக்கறையுடன் செயல்படவில்லை என்பதைத்தான் இம்மாதிரியான சம்பவங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன. மக்களாட்சியில் சமத்துவத்தையும் அனைவருக்குமான உரிமைகளையும் உறுதிசெய்ய வேண்டிய அரசு அமைப்புகள் இனியாவது வழுவாமல் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும்.
- இந்து தமிழ்திசை