ஈஷாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை: முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு
பாதிக்கப்பட்ட 5 குடும்பங்கள் ஈஷா அறக்கட்டளையின் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேச முன்வந்துள்ளனர்.
ஈஷா ஹோம் ஸ்கூலின் முன்னாள் ஆசிரியர் யாமினி ரகானியும் அவரது கணவருமான சத்யா N. ரகானியும் சேர்ந்து பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, நடத்தைக்கேடு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையின் மீது முன்வைத்தனர். தமிழ்நாட்டில் உள்ள அந்த ஆசிரமம் சமீபத்தில் (உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முன்பு) சில ரெய்டுகளையும் எதிர்கொண்டது.
ரகானி, ஈஷா அறக்கட்டளையை "குழந்தை துன்புறுத்தலின் விளைநிலம்" என்று கூறினார். அறக்கட்டளையின் பள்ளிகளான ஈஷா வித்யா, ஈஷா சம்ஸ்க்ருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் ஆகியவை முறையான கண்காணிப்புக்குள்ளாக்கப்படாததால் அப்பள்ளியின் குழந்தைகள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"குழந்தைகள் மனரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள், வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், விவரிக்க முடியாத பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்குச் சரியாகக் கற்பிப்பதும் இல்லை. தகுதியான ஆசிரியர்களே இல்லை,'' என குற்றம் சாட்டினார். மேலும், பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கு கண்காணிப்புக் குழுவும் இல்லை என்றார்.
ஈஷா ஹோம் பள்ளியின் முன்னாள் மாணவரான தனது மகனும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ரகானி குற்றம் சாட்டினார். எட்டு வயது சிறுமி உட்பட நிறைய குழந்தைகள் துன்புறுத்தப்பட்ட விவரங்களை ரகானி தம்பதியினர் பகிர்ந்து கொண்டனர்.
சத்குரு குழந்தைகளுக்காக ஆறுதல் சொல்ல வந்ததே இல்லை.
எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படும் அறக்கட்டளையின் அதிகாரத்தை இவர்கள் கேள்வி எழுப்பினர். "இது மிகவும் கொடியது" என்றார் யாமினி.
2016 ஆம் ஆண்டிலிருந்து மட்டும், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா அறக்கட்டளை வளாகத்தில் இருந்து 6 பேர் காணாமல் போயுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்தது. ஈஷா ஹோம் ஸ்கூலில் படிக்கும் மாணவியான எஸ். மோக்ஷக்னா(17) யோகா மையத்திற்குள் உயிரிழந்தது குறித்தும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றது.
இத்தகைய சூழ்நிலையில்தான், கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் எஸ்.காமராஜ் என்பவர், 42 மற்றும் 39 வயதுடைய தனது இரண்டு மகள்களை மூளைச் சலவை செய்து வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எந்தவொரு போலீஸ் விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ராகனி தம்பதியர் மட்டுமல்லாமல் மேலும் ஐந்து குடும்பங்கள் தாங்கள் சந்தித்த கொடுமைகளை வெளிப்படுத்த முன்வந்துள்ளனர்.
பெயர் குறிப்பிடாமல் பேசிய ஒரு தாய், தனது மகள் உடற்கல்வி ஆசிரியரால் பலமுறை வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதனால் அக்குழந்தை இரண்டு முறை தற்கொலைக்கும் கூட முயன்றுள்ளதாகவும் மனமுடைந்து கூறினார். மேலும், மாணவர்களை அவர்களது குடும்பங்களில் இருந்து தனிமைப்படுத்த பள்ளி எடுத்த முயற்சிகளே இத்தகைய மோசமான நிலைக்கு காரணமாகும். "எங்கள் குழந்தைகள் வாரந்தோறும் எழுதும் கடிதங்களை அவர்கள் இடைமறித்து தடுத்தனர். ஒவ்வொரு மாதமும் ஒருவர் மட்டுமே குழநதைகளை பார்க்க அனுமதித்தார்கள் என்றார்.
சில பெற்றோர்களையும் கூட அமைதியாக இருக்குமாறு மிரட்டியுள்ளதாகவும் கூறினர். "நாங்கள் ஈஷாவின் வட்டத்திற்குள் சிக்கி இருந்தோம். இதை வெளிப்படுத்தினால் உயிரையே இழக்க நேரிடும் என எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
அறக்கட்டளையின் ஆன்மீக நடைமுறைகள் குறித்தும் கூட பல பெற்றோர்கள் அச்சம் எழுப்பியுள்ளனர். இளம் பெண்கள் ஆன்மீக தியானம் எனும் பெயரில் வெற்றுடலுடன் அரை நிர்வாணத்துடன் இருக்க வற்புறுத்தப்பட்டுள்ளனர். “இது என்ன அரை நிர்வாண ஆன்மீக தியானம்? பெண்கள் ஏன் வெறும் மார்போடு இருக்க வேண்டும்? முதுகுத்தண்டு வெளிப்பட வேண்டும் என்கிறார்கள் – இதுஎந்த மரபுப்படி?” என ரகானி கோபமுடன் கேட்கிறார்.
அறக்கட்டளையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குத்தொடுக்க பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இருந்து ஆதரவளிக்க அழைப்பு விடுத்துள்ளனர் அந்த தம்பதியினர். அவர்களைப் போன்றே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஆதரவைப் பெற அவர்கள் மின்னஞ்சல் கணக்கை அமைத்துள்ளனர்.
- வெண்பா (தமிழில்)
(மூலக்கட்டுரை: டெக்கான் க்ரோனிக்கல்)