தாராவி: 9 லட்சம் மக்களுக்கு நாமம்! அதானிக்கு லாபம்!

அறம் இணைய இதழ்

தாராவி: 9 லட்சம் மக்களுக்கு நாமம்! அதானிக்கு லாபம்!

இந்தியாவின் வளங்கள் மட்டுமல்ல, மக்களுமே அதானிக்கானவர்கள் தான் என்ற ஒரே லட்சியத்தில் இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளார்கள்! இதற்கு சுமார் 9 லட்சம் மக்களை வெளியேற்றிவிடும் ஒப்பந்தம் போட்டு, மும்பை தாராவியின் 557 ஏக்கர் நிலத்தை  தூக்கி அதானியிடம்  ஆட்சியாளர்கள் தந்திருப்பதே அத்தாட்சியாகும்;

இந்தியாவில் எந்த தொழில்  முதலீடு என்றாலும், அதில் அதானி தான் முதலீடு செய்வார். துறைமுகமா? கப்பல் கட்டும் தொழிலா? விமான நிலையமா? அல்லது ராணுவத்திற்கான ஆயுதங்கள்,  போர் விமானங்களா? மின்சார உற்பத்தியா? குவாரிகளா? இயற்கை எரிவாயுவா? விவசாயப் பொருட்கள் கொள்முதலா? கட்டுமானங்களா..? எல்லாவற்றிலும் அதானிக்குத் தான் முன்னுரிமை! அதானிக்காகத் தான் இந்தியா!

மும்பை தாராவியை ஒரு சிறிய அளவினான இந்தியா என்று சொல்லலாம். பிழைப்பு தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்ற  ஏழை, எளிய மக்களுக்கு  நூறாண்டுக்கும் மேலாக அது ஒரு வாழ்வாதாராமாக  திகழ்கிறது. அந்த வகையில் மும்பையில் தமிழர்கள் மட்டுமே பத்து முதல் 12 சதவிகித்தினர் வாழ்கின்றனர். குஜராத்திகளும், பீகாரிகளும், ராஜஸ்தானியர்களும் கணிசமாக உள்ளனர். 30 சதவிகித இஸ்லாமியர்கள் ஆறேழு சதவிகித கிறிஸ்த்துவர்களும் தராவியில் வசிக்கிறார்கள்!

தராவியின் சிறப்பு என்னவென்றால், அங்கு அற்புதமான கைவினைஞர்கள் உள்ளனர்! எளிய பாரம்பரியமான தொழில்களின் தாயகமாக அது திகழ்கிறது. அழகிய லெதர் பொருட்களா? மண் பாண்டங்களா? நுட்பமான கண்ணாடி குவளைகளா? இது போல எத்தனையோ சிறு தொழில் செய்வோர்களை பார்த்து பொருட்கள் வாங்கிச் செல்லவென்றே அங்கு சுற்றுலா பயணங்கள் நடைபெறுகின்றன. இந்த வகையில் சுமார் 20,000 சிறு தொழில் உற்பத்தி மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த எளிய மக்களிடம் புழங்கும் பணம் கார்ப்பரேட்களின்  கண்களை உறுத்துகிறது…!

இது ஒருபுறம் இருக்க, தாராவியானது சுகாதாரச் சீர்கேடுகள் மலிந்த பகுதியாக உள்ளது. இத்தனை லட்சம் மக்களுக்கான போதுமான கழிவு நீர் கால்வாய்கள் கிடையாது. பெரும்பாலான மக்கள் பொதுக் கழிப்பிடத்தை நம்பி வாழ்கிறார்கள். மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுக் கழிப்பிடங்களும் கிடையாது. மிகக் குறுகலான தெருக்கள், கற்றோட்டமில்லாத பத்துக்கு பத்தடி வீடுகள்..என மக்கள் நெருக்கியடித்து வாழ்கிறார்கள்! ஆகவே தாராவியை ஒழுங்குபடுத்தி மேம்படுத்த வேண்டும்…என தொடர்ச்சியாக பல்லாண்டுகள் பேசப்பட்டாலும், அதற்கு உறுதியான செயல்பாடுகள் அரசிடம் இல்லை.

இந்த நிலையில் ராஜிவ்காந்தி காலத்தில் ரூ 100 கோடிகள் ஒதுக்கினார். இதில் கழிவு நீர் கால்வாய் சிஸ்டம் அரைகுறையாகத் தான் செய்துள்ளனர். அரசியல்வாதிகளும் காண்டிரக்டர்களும் பணத்தை ஏப்பம் விட்டது தான் கண்ட பலனாகிவிட்டது.

பிறகு 2004 ஆண்டு தொடங்கி இதை பிரைவேட் பில்டர்களிடம் ஒப்படைத்து சீர்படுத்தும்  முயற்சிகள் தொடர்ந்து நடந்தாலும், மக்கள் எதிர்ப்பால் எதுவும் நடக்கவில்லை. லோக்கல் அரசியல்வாதிகள் தரும் டார்ச்சர் காரணமாக எல்லா பில்டர்ஸும் ஓடிவிட்டதாக சொல்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டு மிகப் பெரிய கார்ப்பரேட்களிடம் தாராவியை தூக்கி கொடுக்க பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு நடந்த டெண்டரில் அதானி நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி வேறொரு நிறுவனம் தாராவி சீரமைப்பு டெண்டரை எடுத்தது. அந்த நிறுவனத்திற்கு போதுமான ஒத்துழைப்பு அரசாங்கம் தரப்பில் கிடைக்காத நிலையில் அவர்கள் விட்டுவிட்டனர்.

தற்போது அதானியிடம் மும்பையின் தாராவி தாரைவார்க்கப்பட்டுள்ளது. அதானியோ ஒட்டு மொத்தமாக 557 ஏக்கர் நிலத்தையும் எடுத்துக் கொண்டு, தாராவியில் வசிக்கும் மக்களுக்கு தாராவியில் இருந்து 50 கீமீ தொலைவில் உள்ள உப்பளத்தில் ( உப்பு காய வைக்கும் இடம்) வீடு கட்டித் தர திட்டமிட்டுள்ளது. ”தாராவியை மொத்தமாக என்னிடம் ஒப்படைத்துவிட்டு அனைவரும் வெளியேறுங்கள்” என்பது தான் அதானி கூறுவதாகும்.

இது தாராவி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும் தன் செயல்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்த அதானி, அந்தப் பகுதியில் உள்ள லோக்கல் முக்கியஸ்தர்களை வளைத்துப் போட்டு பணத்தை அள்ளி இறைக்கிறார். இந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தாராவிக்குள் இருக்கும் 356 மண்டல் பொறுப்பாளர்களுக்கும் கணபதி சிலைக்கான பணத்தை அதானி நிறுவனம் தந்துள்ளது. உள்ளுர் கவுன்சிலர்கள் எல்லாம் விலைபேசப்பட்டு விட்டனர் என சொல்லப்படுகிறது. இதே போல முஸ்லீம்கள் ரம்ஜான் மற்றும் முகரம்  செலவுகளுக்கும் அதானி நிறுவனம் அள்ளித் தந்த வண்ணம் உள்ளது. கிறிஸ்துமஸ் விழாக்களுக்கும் பஞ்சமின்றி பணத்தை இறைத்து வருகிறது அதானி நிறுவனம்.

அதானி நிறுவனம் தாராவி மக்களுக்கு வீடுகட்டித் தருவதாக சொல்லும் இடம் கடல் உட்புகக் கூடிய இடமாகும். அங்கு வீடுகள் கட்டக் கூடாது என சுற்றுச்  சூழல்  ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். மக்களும் ”எங்களை தூரத்தில் தூக்கி எறியாதீர்கள் எங்கள் வாழ்வாதாரமே நாசமாகிவிடும்” எனக் கதறுகிறார்கள்.

இந்தச் சூழல் குறித்து தாராவியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ்.என்.செல்வனிடம் பேசினேன். ”சார், நான் 40 வருஷமாக தாராவியில் வசிக்கிறேன். இது மும்பையின் எல்லா பகுதிகளுக்கும் சென்றுவரத் தோதான ரயில் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இடமாகும். பல ஆயிரம் பேர் இங்கிருந்து மும்பையின் பல பகுதிகளுக்கு வேலைக்கு சுலபமாக அரைமணி நேரத்தில் சென்றுவிடவும், திரும்பவும் முடியும். இங்கிருந்து மக்களை புலம் பெயர வைத்தால், அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உரியதாகிவிடும்.

நான் ஒரு மில் தொழிலாளியாக இருந்தவன். எங்களை போன்ற மில் தொழிலாளர்களுக்கு அன்றைக்கு மில் இருந்த இடத்தில் அரசாங்கம் இலவச வீடுகள் கட்டித் தந்தது. மொத்தம் 9.15 நிலத்தில் ஒரு ஏக்கர் மைதானத்திற்கு சுற்றிலும் நாலாபுறமும் தெருக்களுக்கு தலா 25 அடி நிலத்தையும்  விட்டுவிட்டு ஏழே முக்கால் ஏக்கரில் வீடுகட்டி 6,432  வீடுகள் கட்டித் தந்தார்கள். அந்த அடிப்படையில் சொல்கிறேன். இங்கே உள்ள மக்களுக்கு 90,000 வீடுகள் கட்டுவதை அரசாங்கமே செய்யலாம்.

557 ஏக்கரில் அரசாங்கம் சரிபாதியை எடுத்துக் கொண்டு அதை கார்ப்பரேட்களுக்கு விற்று லாபம் அடையட்டும். அந்த லாபத்தின் சிறுபகுதியைக் கொண்டு மற்ற பாதி இடத்தில் மக்களுக்கு வீடு கட்டித் தந்து தரமான டிரெய்னேஜ் திட்டத்தையும், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களையும், விளையாட்டு மைதானங்களையும் உருவாக்கலாம். இதில் அரசாங்கமும் பெரிய அளவில் பலடையும். இங்கே ஒரு ஏக்கர் நிலம் 800 முதல் 900 கோடிகள் மதிப்பு கொண்டதாகும். மக்கள் லாபத்தை எதிர்பார்க்கவில்லை. வீடு தந்தால் போதும் பலடைவார்கள். சுகாதாரமும் மேம்படும்.

தனியாரான அதானிக்கு மிகக் குறைந்த விலைக்கு தராவியை தருவது ஏற்புடையதல்ல. இதில் அரசுக்கு 20 சதவிகிதமாம்! அதானிக்கு 80 சதவிகிதமாம்..! என்ன கொடுமை சார்!  பிரதமர் மோடி அவர்கள் அதானியை ஆனந்தம் கொள்ள வைப்பதற்கு எங்களை பலிகடாவாக்கக் கூடாது. மக்கள் போராட்டம் தான் இந்த அநீதியை தடுத்து நிறுத்த ஒரே வழியாகும்’’ என்றார்.

ஆட்சியாளர்கள் அதானிக்கு பணிவிடை செய்வதில் குறியாக உள்ளனர். அவர் பலனடைந்து தங்களுக்கு பிச்சை போடட்டும் என நினைக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வு பெறாமல் தீர்வில்லை.

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/19576/adani-dharavi-sale-bjp-govt/?amp

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு