சோழர் ஆட்சி கால அரசியல் பொருளாதாரமும் வர்க்க போராட்டமும்
நா. வானமாமலை
சோழர் ஆட்சியில் அறப் போர்கள்
தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி. 846-ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று போரிட்டான். ராஜராஜன், கங்கை பாடி, நுளம்பாடி, வேங்கைநாடு இவற்றை வென்று சோழ சாம்ராஜ்யத்தை விசாலப்படுத்தினான். அவனது மகன் ராஜேந்திரன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் போரிலேயே கழித்து இடைத்துறை நாடு, வனவாசி, கோசலம், விராடம், வங்காளம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினான். சோழரது படை வலிமை குன்றியவுடன் இந்நாட்டு மன்னர்கள் தாங்களே சுதந்திரமாக ஆட்சி நடத்தத் தலைப்பட்டனர். இராஜேந்திரனுக்குப் பின்பு பட்டமெய்திய மூன்று சோழ மன்னர்கள் தங்களின் முன்னோர்களின் வெற்றிகளை உறுதிப்படுத்தப் பல போர்களில் ஈடுபட்டனராயினும், வட புல நாடுகளை அதிக நாட்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை.
கி.பி.1070 முதல் 1120 வரை தமிழ்நாடு முழுவதையும் தெலுங்கு நாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்த முதல் குலோத்துங்க சோழ தேவன் வனவாசி, கலியாணபுரம், கன்னியாகுமரி, கோட்டாறு, தென்கலிங்கம், வடகலிங்கம் ஆகிய நாடுகள் மீது போர் தொடுத்து வென்று ஆண்டு வந்தான். அவனது வெற்றிகளின் பயனை அவனது மகன் விக்கிரம சோழனும், அவனது பெயரன் குலோத்துங்க சோழனும் அனுபவித்தார்கள். இராஜேந்திரனுடைய காலத்திற்குப் பின்பு குலோத்துங்க சோழனுடைய காலத்தில் தான் சோழ சாம்ராஜ்யம் அதிகப் பரப்புடையதாய் இருந்தது. முதல் குலோத்துங்கன் கலிங்கத்துப் பரணியின் தலைவன். விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன். மூவரும் ஒட்டக்கூத்தர் பாடிய ‘மூவருலா’வின் தலைவர்கள். இரண்டாம் இராஜராஜனுக்குப் பின் பட்ட மெய்திய சோழ மன்னர்கள் காலத்தில் வெளிநாட்டு மன்னர்கள் சோழ நாட்டிலும் படையெடுத்து வந்தார்கள். சிற்றரசர்கள் கலகம் விளைவித்தார்கள், பாண்டியர்கள் முத்துச் சலாப வருமானத்தாலும், அராபிய வர்த்தகத்தாலும் தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு சோழ நாட்டின் மீது படையெடுத்தார்கள். மாறவர்மன் சுந்தர பாண்டியனும், சடைய வர்மன் சுந்தர பாண்டியனும் நடத்திய இறுதிப் போர்களால் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது.
இதுவே சோழர் காலத்துச் சரித்திர சுருக்கம். ஒவ்வொரு சோழ மன்னனும், சாம்ராஜ்ய விஸ்தரிப்புப் போர்களில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் போர்களை நடத்துவதற்கும் போரிட்டு வென்ற நாடுகளை அடிமைப்படுத்தி வைப்பதற்கும் சோழ மன்னர்கள் பெரும்படைகளை வைத்திருந்தனர்.
சோழர் கல்வெட்டுகளில் மூவகை நிலைப்படைகளைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. வலங்கைப் படை, இடங்கைப் படை , மூன்று கை மகாசேனை என்ற மூன்று படைப் பிரிவுகள் இருந்தன என்று கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது.
இப்படைகளுக்கு வேண்டிய உடை, உணவு முதலியவற்றையும், படைக் கலங்களையும், யானை, குதிரை முதலிய ஊர்திகளையும் சேகரித்துத் தருவது மன்னனது கடமையாக இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் படைவீரர்களது குடும்பங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மன்னனே ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. ஏனெனில் அக்காலத்தில் போர்வீரர்களுக்கு மாத ஊதியம் அளிப்பதில்லை. நிலங்களையோ, நிலங்களின் வருமானத்தில் வரும் ஒரு பகுதியையோ மானியமாகவும், கடமையாகவும், அக்குடும்பங்களுக்கு அளிப்பதுண்டு. கோயில் வருமானத்தின் ஒரு பகுதியைப் படைகளுக்கு அளித்ததாகவும், சில கோயில்களைப் படைகளின் பாதுகாப்பில் விட்டதாகவும், சில சாசனங்கள் கூறுகின்றன.
உதாரணமாகச் சில சாசனச் செய்திகளைக் கீழே தருவோம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன் மகாதேவிக் கோவிலில் கல்வெட்டு ஒன்று மூன்று கை மகாசேனையார், பக்தவத்ஸல ஸ்வாமி கோவில் தர்மங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இது முதல் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டு. பிரம்மதேசம் என்று பெயர் வழங்கும் திருவாலீச்வரம் கல்வெட்டு ஒன்று. அவ்வூர்க் கோவிலையும் – ஸ்ரீபண்டாரத்தையும் (பொக்கிஷம்) தேவ கன்மிகளையும், (கோவில் ஊழியர்கள்) மூன்று கை மகாசேனை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரச் சோழனது மகன் பாண்டிய நாட்டில் மண்டலேச்வரனாக ஆண்ட காலத்தில் வெட்டிக் கொடுத்தது. இச்சான்றுகள் லட்சக்கணக்கான போர்வீரர்களது ஊதியம் கோவில் வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன.
அப்படியானால், சோழர் காலத்தில் கோயில்களின் வருமானத்தைப் பெருக்க வழிவகைகள் செய்திருக்க வேண்டும். சோழர் காலத்துக்கு முன்பு கோவில்கள் மிகச் சிறியவையாயிருந்தன. பல்லவர் காலத்துக் கோயில்கள் மிகச் சிறிய குடைகோயில்களே. அவற்றை மாமல்லபுரத்திலும் திருக்கழுக்குன்றத்திலும் காணலாம். அவற்றிற்கு நிரந்தர வருமானமோ சொத்தோ இருந்ததில்லை. ஆனால் சோழர் காலத்தில் பிரம்மாண்டமான கற்கோயில்கள் எழுப்பப்பட்டன. ராஜராஜன் பிருகதீசுவரர் ஆலயம் கட்டினான் . ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அதே போன்றதொரு கோயில் கட்டினான். ஊருக்கு ஊர் கோவில்கள் தோன்றின. இதனைப் பெரிய புராணத்திலுள்ள வரலாறுகளிலிருந்து அறியலாம். கல்வெட்டுச் சான்றுகளும், ஏராளமாக உள்ளன. இக்கோயில்களைக் கட்ட, போரில் சிறைப்பட்ட யுத்தக் கைதிகளையும் போரில்லாத காலத்தில் உள்நாட்டு மகாசேனைகளையும் ஈடுபடுத்தினார்கள் என்று தெரிகிறது. இக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை சர்வ மானியமாக சோழ அரசர்கள் விட்டார்கள். இதற்குச் சில சான்றுகள் கீழே தருவோம்.
‘ராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுள் நான்கு சிற்றூர்கள் 500 முதல் 1000 ஏக்கர் பரப்புள்ளவை; மூன்று சிற்றூர்கள் 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை. ஆறு 100 முதல் 200 வரை; மற்றும் ஆறு 25 முதல் 50 வரை, இரண்டு சிற்றூர்கள் 25 ஏக்கருக்கும் குறைவு’ (சோழர் வரலாறு, மு. இராச மாணிக்கனார்). கல்வெட்டுக்களில், கிராமங்களின் பயிருள்ள நஞ்செய் நிலம் முழுவதையும் கோயில் காணியாக்கிய செய்திகள் காணப்படுகின்றன. இவற்றுள் புஞ்செயை உழவர்களுக்கு வெள்ளான் வகை(சொந்த நிலம்)யாக விடுத்து, அது நஞ்செயாகத் திருத்தினால் கோயில் கானியாக எடுத்துக் கொண்ட விவரங்களையும் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. உதாரணமாகக் கீழ் வரும் கல்வெட்டைப் பார்க்கலாம்.
‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமான் ராஜாதிராஜ ஸ்ரீ வீர நாராயண சோழ தேவர்க்கு செல்லா நின்றயாண்டு ஒன்பதாவது பரஞ்சரா வள்ளியில் மகாதேவர் நட்டூரமர்ந்தார்க்கும், (கோவில் மூர்த்தியின் பெயர்) பல நியந்தப் படிக்கும், தீபாராதனைப் படிக்கும் ஊரார் பிடாரியூர்க்குப் போகும் வழிக்குக் கீழ்பாகம் கொடுத்தோம். இதுக்கு நிலம் அரைக் கிடவுக்காக, பரஞ்சரா வள்ளியில் நிலத்தில் புஞ்செய் நீக்கி, நஞ்செய் கொடுத்தோம். இந்த நிலம் தேவதானமாக உழுது மேல் வாரம் மேற்கொண்டு படித்தரம் தீபாராதனை நடந்து வருகிறதற்காக’
இவை போன்ற ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களைத் தமிழ்நாட்டில் கோயிலுள்ள ஊர்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டுக்களின் மூலம், சோழர்கள் அதற்கு முன்பிருந்த நிலவுடைமை முறையை மாற்றினார்கள் என்பது புலனாகிறது. எவ்வாறு மாற்றினார்கள் என்பதறிய அவர்கள் காலத்தில் எத்தகைய நிலவுடைமை முறை நிலவியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நிலவுடைமை அக்காலத்தில் நான்கு வகையாகவிருந்தது.
(1) வெள்ளான் வகை:
இது சொந்த நிலம். இந்நிலங்களில் ஒரு பகுதி ‘உழுவித்துண்பார்’ என்ற உழவர்களிடமிருந்தன.
(2) தேவதானம்:
இந்நிலங்கள் கோயில்களுக்கு உடமையாக இருந்தன. அவற்றின் மேற்பார்வை சபையாரிடமிருந்தன. அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களே. சிறுபான்மை படையாரிடம் இருந்தன.
(3) பிரமதேயம்:
இந்நிலங்கள் பிராமணர்களுக்கு உடமையாக இருந்தன.
(4) ஜீவிதம்:
இந்நிலங்கள், கோயில் பணி செய்வார்க்கு இனாம் நிலங்களாக ஆயுள் காணியாக இருந்தன.
சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது.
இது மட்டுமல்ல; போர்களுக்கும், கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும் நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும், கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரிகொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள். வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் ’சிவத் துரோகி’ என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று ‘தண்டம்’ என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையைப் படைகளின் பாதுகாப்போடும், மதக் கொள்கைகளின் அனுசரனையோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.
இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்பொழுதும் சகித்துக் கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. வாழ்க்கை துயரங்கள் அவர்களை ஒற்றுமைப்படுத்தின. கொடுமை அளவு மீறும் போது அவர்கள் போராடினர். அப்போராட்டங்களைப் பற்றி நாம் இதுவரை சோழர் வரலாறுகளில் வெளிவந்துள்ள நூல்களில் காண முடியாது. ஏனெனில் அவை மன்னர் வரலாறுகளேயன்றி மக்கள் வரலாறுகளல்ல.
அப்போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்கள். இன்று நடைபெறும் உழவர் தொழிலாளிகளின் அறப்போர்களின் முன்னோடிகள். வரலாற்றை இயக்கும் தலைமையான சக்தியான சக்தி அவை. அவற்றுள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதும், அப்போர்களின் முறைகளை எடுத்துக் காட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.
தற்காலத்தில் அநீதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் ஒரு போர் முறையாகக் கையாளப்படுகிறது. இது உயிரைப் பணயம் வைத்து மக்களை அநீதிகளுக்கு எதிராகத் திரட்டும் முயற்சி. இது போலவே உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் ஓர் கல்வெட்டு அகப்பட்டது. அதன் விவரம் வருமாறு :- அக்கோயிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்ட நிலத்தை ஊர்ச் சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெளியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப் பார்த்தனர். பயனில்லை. அவ்வநீதியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்துத் தீயிலிறங்கி உயிர்த்தியாகம் செய்து கொண்டனர்.
இதேபோலத் தங்கள் உரிமையை நிலைநாட்ட, உழைக்கும் மக்கள் வீரமாக உயிர் நீத்த செய்திகள் அபூர்வமாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. தங்களுடைய உரிமைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும், மன்னனது கவனத்தை ஈர்க்கவும், சிலர் ஊர்க் கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகின்றன.
கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்த்தவும், பணி செய்யவும் தேவரடியார்கள் இருந்தனர். அவர்களில் இரு வகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பம் ஆகியவற்றைச் சேர்ந்த பெண்கள் பெருஞ்செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்கள் பெயரிலிருந்து இவர்களது சமூக நிலையை அறியலாம். அதிகாரிகளின் பட்டங்கள் இவர்கள் பெயரோடு சேர்த்து வழங்கப்படும். உதாரணமாக, நக்கன் ஸ்ரீதேவி, சோழ மாணிக்கம், மாசாத்து பூவேந்திய சோழ மாணிக்கம் என்ற பெயர்கள் பட்டம் சேர்ந்து வழங்குபவை. இவர்கள் கொணர்ந்த செல்வங்களால் கோயில்களுக்கு நிலங்கள் வாங்கி அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில உரிமைகள் இத்தேவரடியார்க்கு உண்டு.
தேவரடியாரில் மற்றோர் வகையினர் ஏழைப் பெண்கள். பஞ்சக்காலத்தில் நிலமிழந்தவர்களும், வெள்ளக் காலத்தில் நிலமிழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோயில்களுக்கு விற்று விடுவார்கள். அப்பெண்களுக்கென்று கொடுக்கப்படும் விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். அப்பெண்களின் தந்தையோ, தமையனோ அல்லது உறவினனோ அதனைக் காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும் போது கோவில் செலவு அதிகமாகும். அதனைக் குறைக்கச் சபையாரும், அரசனும் முயற்சி செய்வார்கள். அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவார்கள். அச்சமயங்கள் உழவர்களாயிருக்கும் தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள். இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும்படி நாடாள்வனான சோழ மன்னனது அதிகாரி கட்டளை அனுப்பினான். சபையார் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியாரான திருவீதிப் பணி செய்வாரும் திரண்டனர். தங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட ஒரு தேவரடியாள் முன் வந்தாள். அவள் பெயர் சதுரி மாணிக்கம். அவள் தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்டக் கோபுரத்தின் மேலேறி விழுந்து உயிர் விட்டாள், நாட்டார் கட்டளையை எதிர்த்தனர்! சபையார் கட்டளையை மாற்ற அரசனிடம் விண்ணப்பித்தனர். கட்டளையை மாற்ற அரசன் திருமுகம் (ஓலை) அனுப்பினான்.
அநியாயமான வரிகளை எதிர்க்க மக்கள் வரி கொடா இயக்கம் நடத்தியதும் உண்டு. அப்போர் முறை மேற்கூறிய தனிப்பட்ட தியாகங்களால் மக்கள் உணர்வைத் திரட்டிய பின் நடத்தப்படும்.
அதற்கு ஒரு உதாரணம் ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. அதிகாரிகளின் உதவியுடன், வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளைக் கல்வெட்டு கூறுகிறது. இதேபோல இடங்கை வகுப்பார் அந்தக் காலத்தில் ஏற்க வேண்டி வந்த வரிச் சுமைகளையும் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டு முக்கியமானது. அரசன் ஆணைக்கிணங்கக் கூடிய பெரிய விஷயத்தாரின் முடிவை அது தெரிவிக்கிறது. நிகரிலிச் சோழ மண்டலத்து 78 நாடுகளும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48,000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வமிசம் தோன்றிய நாள் முதல், எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும், அதனால் அதிகாரியான சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரியைக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் முடிவு கட்டினார்கள். அன்றி 18 விஷயங்களிலும் உள்ளவர்கள் கொடுக்க வேண்டிய வரி விகிதத்தையும் நிச்சயித்து நிர்ணயித்தார்கள். இதே சாசனத்தின் பிரதி உத்தனூரிலிருந்து கிடைத்துள்ளது (கோயில் சாசனங்கள் முன்னுரை).
பெரிய விஷயத்தார் என்பவர் நாட்டாரின் பிரதிநிதிகள். மக்களின் கிளர்ச்சி வலுப்படவே மேல் வர்க்கப் பிரதிநிதிகளைக் கொண்ட சபைகள்கூட மக்களின் கோரிக்கைகளை ஆதரித்தன. இந்நிகழ்ச்சி முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது.
சில சமயங்களில் ஆட்சியின் அநீதியையும், நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயதம் தாங்கிப் போராடியுமிருக்கிறார்கள். அரசனது ஆணைகளும், சபையாரின் முடிவுகளும், கோவில் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்ததால், இம்முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாகச் சில சமயங்களில் மக்கள் கோவில் – சுவர்களை இடித்து கல்வெட்டுகளை அழித்திருக்கிறார்கள். அநியாயமான நிலப் பரிவர்த்தனைகள், கோயில் மூர்த்தியின் பெயராலோ, சாண்டேசுவரா பெயராலேயோ, செய்யப்பட்டிருந்ததால் விக்கிரகங்களைப் புரட்சிக்காரர்கள் உடைத்திருக்கிறார்கள். அக்கல்வெட்டுக்கள் மன்னர் ஆணையால் வெட்டப்பட்டதால் கலகங்களின் காரணங்கள் எவை என்பதைக் குறிப்பிடமாட்டா. ஆனால் கலகங்களால் கல்வெட்டுகள் அழிந்து விட்டதையும், மூல பத்திரங்கள் அழிந்ததையும் குறிப்பிட்டு புதிய பத்திரங்கள் பிறப்பித்ததை மட்டும் குறிப்பிடும் இக்கலகங்கள் வர்க்கப் போராட்டமே என்பதும் உறுதி.
இத்தகைய கல்வெட்டுகள் மிகச் சிலவே கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, உடையாளூர் சாசனத்தையும், தலைச் செங்காட்டுக் கல்வெட்டையும் குறிப்பிடலாம். மூன்றாம் ராஜராஜனது 5-ம் ஆண்டு கல்வெட்டு, அதற்கு முன் நடந்த கலகங்களால் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோகப் பற்றொழுகை ஒட்டி புதிய பத்திரங்கள் வழங்க அரசன் ஆணையிட்டதைக் கூறுகிறது. (உடையாளூர்) இதுபோன்றே மூன்றாம் ராஜராஜனது 19ம் ஆண்டுக் கல்வெட்டு, ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்ததால் அனுபோகப்படி புதிய ஆதாரச் சீட்டுகள் பிறப்பிக்கப்பட்டன என்று கூறுகிறது (தலைக் செங்கோடு சாசனம்). இக்கலகங்களில் நிலவுடைமையைக் குறிக்கும் கல்வெட்டுக்களும், ஆதாரச் சீட்டுகளுமே மக்கள் கோபத்துக்கு இலக்காயின என்பது குறிப்பிடத்தக்கது. ‘அவை நம் வாழ்க்கையை அழிக்கும் சின்னங்கள் அவற்றை அழித்து நமது உரிமையை நிலைநாட்டுவோம்’ என்று பழந்தமிழ் உழவர்கள் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும்.
இக்கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும் சில சலுகைகள் உழவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் கடுமையாக அடக்கப்பட்டார்களென்றும் தெரிகிறது. மேற்குறித்த புரட்சிகளுக்குப் பின் வரி கழித்ததையும் தேவரடியார் முதல் கொள்ளாதபடி ஆணை பிறப்பித்ததையும் நிலங்களை உரியவர்களுக்கு அளித்ததையும், பற்றி சாசனங்கள் கூறுகின்றன. இக்கிளர்ச்சிகள் இன்றைய வர்க்கப் போராட்டத்தில் முதல் சுடர்.
- பேராசிரியர் நா.வானமாமலை
("தமிழர் வரலாறும் பண்பாடும்" நூலிலிருந்து)