காசாவில் படுகொலைசெய்யப்பட்ட 18,500 மழலைகளின் பெயர்களை வெளியிட்ட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை: மனதை உலுக்கும் பதிவு

விஜயன் (தமிழில்)

காசாவில் படுகொலைசெய்யப்பட்ட 18,500 மழலைகளின் பெயர்களை வெளியிட்ட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை: மனதை உலுக்கும் பதிவு

பத்திரிகையுலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத, மனதை உலுக்கும் தருணமாக, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலியத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட காசாவைச் சேர்ந்த 18,500 பாலஸ்தீனியக் குழந்தைகளின் பெயர்கள் அனைத்தையும் அச்சிட்டு, வரலாற்றுப் பதிவாக்கியிருக்கிறது. இந்த இளம் உயிர்களின் பெயர்களை ஆவணப்படுத்திய இந்தச் செயல், காலங்கடந்து கிடைத்த ஓர் அங்கீகாரம் எனலாம்.

காசாவில், குழந்தைகள் மிகவும் மெலிந்து, தளர்ந்து, பசியால் வாடும் கோலங்களில் தோன்றும் புதிய படங்கள் உலகச் செய்திகளில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், இத்தப் பதிவை எதிர்கொள்வதும் ஒரு வேதனையான உண்மைதான். இந்நினைவூட்டல், இச்சிறு நிலப்பரப்பில் நிகழ்ந்த பெரும் உயிர் இழப்பைப் பற்றியது மட்டுமல்ல, இப்போரின் கதைகள் எவ்வாறு கட்டவிழ்த்து விடப்படுகின்றன, எவ்வாறு திரித்துக் கூறப்படுகின்றன, அல்லது சில சமயம் முழுவதும் மறைக்கப்படுகின்றன என்பதையும் பற்றியதாகும். இத்தகைய கதையாடல்கள் பெரும்பாலும் துயரத்தின் மூலக் காரணங்களை மூடிமறைத்து விடுகின்றன. 

அக்டோபர் 2023 இல் போர் மூண்டதிலிருந்து, 60,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்புள்ளிவிவரங்கள் உலகையே உலுக்கியதோடு, ஒவ்வொரு மனிதர்களின் மனதையும் உருக வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் பொறுக்கியெடுக்கப்பட்ட முறையில் நிலைநாட்டும் ஊடக தர்மத்தின் காரணமாக, இப்புள்ளிவிவரங்கள் உலக மக்களின் மனதை உலுக்கவுமில்லை, அனைத்து மக்களையும் சென்றடைய முடியாமல் மறைந்தும் போயின.

பல மாதங்களாக, முன்னணிச் செய்தி நிறுவனங்கள் ஒரே ஒரு முக்கியக் கூற்றை மட்டுமே மீண்டும் மீண்டும் முன்வைத்தன: “இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது”. மோதல் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியபோதுதான் ஆரம்பித்தது என்றும், அந்த நிகழ்வே அதன் பின்னர் நடந்த அனைத்தையும் விளக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ போதுமானது என்றும் அவர்கள் தொடர்ந்த எழுதி வந்தனர்.

ஆனால், இந்தக் கதையாடல் அதன் உண்மையான தொடக்கத்தை வசதியாக மறைத்துவிட்டது. உண்மை என்னவென்றால், அக்டோபர் 7க்கும் வெகு காலத்திற்கு முன்பே காசா இஸ்ரேலின் கடுமையான அடக்குமுறையின் கீழ் ஆளப்பட்டு வந்தது. இது மட்டுமல்ல, அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன; மேலும், காசா மக்கள் பல்லாண்டுகளாக ஒரு சிறிய, அடைபட்ட நிலப்பரப்பில் வாழும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக, காசா நிலப்பரப்பு திறந்தவெளியில் அடைபட்ட ஒரு சிறைக்கூடம்போல், இஸ்ரேலின் முழுமையான கெடுபிடிக்குள் சிக்கியிருந்ததோடு, வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டும் கிடக்கிறது. காசாவின் வான்பரப்பு, நில எல்லைகள், மக்களின் நடமாட்டம், குடிநீர், மின்சாரம் என அனைத்தையும் முழுமையாக ஆக்கிரமித்துள்ள இந்த அடக்குமுறை, அப்பகுதியை எந்த நேரத்திலும் ஒரு பெரும் மனிதகுலப் பேரழிவு நிகழக்கூடிய களமாக மாற்றியுள்ளது.

காசா மக்கள் வெறும் ஹமாஸின் ஆட்சியின் கீழ் மட்டுமல்ல, கொடூரமான ஆக்கிரமிப்பின் கீழும் வாழ்கிறார்கள்; தங்களை தாங்களே ஆளும் அவர்களின் உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. ஆகையால், வல்லரசு நாடுகள் ஹமாஸை உடனடியாகக் கண்டித்து இஸ்ரேலுக்குப் பக்கபலமாக நின்றபோது, ஏற்கெனவே தொடர்ச்சியாகவும், கட்டமைக்கப்பட்ட முறையிலும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வரும் ஒரு நாட்டிற்கு வல்லரசு நாடுகள் துணைபோவது வெளிப்படையாகவே உறுதியானது– இத்தகைய வன்முறை சட்டப்பூர்வமானது எனப் பாசாங்கு செய்யப்பட்டதோடு, உலக நாடுகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் வந்தது.

உலக ஊடகங்களும் முழுமையான உண்மைச் செய்திகளை வெளியிடுவதை தவிர்த்தன. போர் துவங்கிய சில மாதங்கள் வரை, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை எந்தளவிற்கு கொடூரமானது என்று கேள்வி எழுப்பிய ஊடகங்கள் மிகச் சிலவே. பெரும்பாலான செய்திகள் அதை “படுகொலை” என்பதற்குப் பதிலாக “போர்” என்றும், “ஆக்கிரமிப்பு” என்பதற்குப் பதிலாக “தற்காப்பு” என்று கூறியே செய்தி வெளியிட்டன. அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புகள், பெரும் துயரமாக பார்க்கப்படாமல், வெறும் பக்கவிளைவுகளாகவே காட்டப்பட்டன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல – பத்திரிகையாசிரியர் குழுவின் திட்டமிட்ட முடிவுகளின் விளைவே ஆகும். மரணமும் துன்பமும் சகஜமான, எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளாக மாறிவிட்ட ஓர் இடமாகவே காசா காட்சிப்படுத்தப்பட்டது.

அதன்பின், ஏதோவொன்று மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. போரைச் சூழ்ந்திருந்த நெடுங்கால மௌனம் உடைபடத் துவங்கியது — அதிகார வர்க்கத்திற்கு திடீரென இரக்கம் பொங்கியதாலன்று; மாறாக, பொது மக்கள் அதிகாரப்பூர்வமான கதைகளை நம்ப மறுத்ததாலேயே அது நிகழ்ந்தது. பல நாடுகளில், போராட்டக்காரர்கள் உண்மையும் நீதியும் வேண்டி வீதிகளில் திரண்டனர். மாணவர்கள் பல்கலைக்கழகங்களை போராட்டக் களமாக மாற்றினர். காஸாவில் நடந்த பேரழிவையும் வேதனையையும் அப்பட்டமாய்க் காட்டும் நேரடியான, திருத்தப்படாத காணொலிகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிந்தன.

அப்போது, முன்னெப்போதும் கேள்விப்படாததொரு நிகழ்வு அரங்கேறியது. ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை, போரில் கொல்லப்பட்ட 18,500 பாலஸ்தீனியக் குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டது. இது அவர்களை நினைவுகூரும் அரியதொரு செயலாக இருந்தபோதிலும், அவர்களின் பெயர்கள் உலகிற்கு அறிவிக்கப்பட எத்தனை மாதங்கள் கடந்தன என்பதையும் இது அம்பலப்படுத்தியது. கடும் மக்கள் அழுத்தம் ஏற்பட்ட பின்னரும், உணவு உதவிக்காகக் காத்திருக்கையில் பசியால் மடிந்த குழந்தைகளின் மனதைப் பிழியும் காட்சிகள் பரவிய பின்னரே, பெரும்பாலான முக்கிய செய்தி நிறுவனங்கள் இந்தப் போரை அதன் உண்மை வடிவத்தில் — அதாவது, ஆரம்பம் முதலே ஒரு மனிதகுலப் பேரழிவு என்ற முறையில் — செய்தி வெளியிடத் தொடங்கின.

இப்போது, எலும்புக்கூடுகளாய் மெலிந்த, பசியால் வாடும் குழந்தைகளின் படங்களும், தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளும், சிதைந்த சாலைகளும் உலகம் முழுவதும் மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. இது மேலும் பல நாடுகளை பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கத் தூண்டியுள்ளது. சமீபத்தில் கனடா அவ்வாறு அங்கீகரித்த நாடுகளுள் ஒன்றாகும். நீடித்த போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது சர்வதேசக் கூட்டங்களில் நடந்து வருகின்றன. இப்பேச்சுவார்த்தைகள் இன்னும் பலவீனமானவையாகவும், பெரும்பாலும் அரசியல் சார்புகளுக்கு ஆட்பட்டவையாகவும் உள்ளன — ஆயினும், அவை நடப்பதே முக்கியத்துவம் வாய்ந்தது. இது, தற்காப்பு நடவடிக்கை என்னும் போர்வையில் மறைந்திருக்கும் முடிவில்லா ஆக்கிரமிப்பை உலகின் பெரும்பகுதி நாடுகள் ஏற்க மறுக்கிறது என்பதையே காட்டுகிறது.

ஆனால், சர்வதேச அங்கீகாரம் மட்டுமே நீதியாகாது. காஸாவிற்கு அவசர உணவுப் பொருட்களும் தற்காலிக போர்நிறுத்தங்களும் மட்டும் போதாது. காஸாவிற்குச் சுதந்திரம் வேண்டும் — ஆக்கிரமிப்பின், அடக்குமுறையின் முடிவு, பிரிவினைச் சுவர்களின் அகற்றம், மட்டுமல்லாது தங்கள் இனம் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராட முயன்ற ஒட்டுமொத்த மக்களையும் தண்டிக்கும் கொடூரமான அமைப்பிற்கு முடிவுகட்டுதல் ஆகியவை வேண்டும்.

இந்த மிகப் பெரிய எண்ணிக்கையிலான மரணங்கள், நடப்பு யுத்தத்தின் நேரடி விளைவு மட்டுமல்ல. மாறாக, பல பத்தாண்டுகளாகப் பாலஸ்தீனிய உயிர்களை மதிப்பற்றதாகக் கருதி வந்த உலக ஒழுங்கின் விளைவுதான் இது.

இந்த யுத்தம் 2023-ல் தொடங்கவில்லை. மேலும், இது வெறும் புகைப்படங்களாலும், அதிகாரப்பூர்வமாக வருத்தத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளாலும் முடிந்துவிடப் போவதில்லை. காஸாவின் ரத்தக் கறை படிந்த மண்ணிலிருந்து உலகம் உண்மையாகவே பாடம் கற்றுக்கொள்ள விரும்பினால், அது ஒரு தெளிவான கேள்வியைக் கேட்கத் தொடங்க வேண்டும். அநீதியான யுத்தத்திற்கு எதிராக துவக்கத்திலேயே கேள்வி எழுப்புவதற்கு பதிலாக 18,500 குழந்தைகள் படுகொலை செய்யப்படும் வரை இந்த உலகம் செவிசாய்க்காதது ஏன்? கேள்வி எழுப்பாதது ஏன்? என்ற கேள்வியைக் கேட்கத் தொடங்க வேண்டும்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://theaidem.com/en-washington-post-publishes-names-of-all-the-children-killed-in-gaza/