பங்களாதேஷ் பொருளாதார நெருக்கடி: கடன் வாங்குவதற்கு IMF உச்சவரம்பு விதிப்பு

தமிழில்: வெண்பா

பங்களாதேஷ் பொருளாதார நெருக்கடி: கடன் வாங்குவதற்கு IMF உச்சவரம்பு விதிப்பு

ஏற்கனவே நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கற்ற நிலைமையால் நலிவடைந்து வரும் பங்களாதேஷின் பொருளாதாரம், தற்போது பெரிய நெருக்கடியை நோக்கி வேகமாகச் சரிந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF), சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளிடமிருந்து மேலும் கடன் வாங்குவதற்கு உச்சவரம்பை விதித்துள்ளது. பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு IMF அனுப்பியுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவலின்படி, தற்போதைய நிதியாண்டின் (2025-2026) மீதமுள்ள காலத்தில் அந்நாட்டின் இடைக்கால அரசாங்கம் IMF, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற மூலங்களிலிருந்து 8.44 பில்லியன் டாலர்களுக்கு மேல் கடன் பெற முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம், பங்களாதேஷ் அரசாங்கம் IMF-இடமிருந்து 5 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனைப் பெற்றது. இது நாட்டின் மொத்தக் கடனை 112.15 பில்லியன் டாலர் என்ற பிரம்மாண்டமான அளவிற்கு உயர்த்தியுள்ளது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையின் அடிப்படையில் கடனை நிர்வகிப்பது மிகவும் கடினமாகும்.

IMF-இன் சமீபத்திய உத்தரவுக்குப் பதிலளித்த நிதி ஆலோசகர் டாக்டர் சலேஹுடின் அகமது, அவசர காலங்களுக்கு பங்களாதேஷின் டாலர் கையிருப்பு இன்னும் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார். செப்டம்பர் 23 அன்று, அமைச்சரவைக் குழு கூட்டத்திற்குப் பிறகு, சந்தையிலிருந்து டாலர்களை வாங்குவதற்கான பங்களாதேஷ் வங்கியின் முடிவு பொருத்தமானது என்றும் அவர் கூறினார்.

IMF புள்ளிவிவரங்களின்படி, அந்நியச் செலாவணி கையிருப்பு இப்போது 26.39 பில்லியன் டாலராக உள்ளது, அதே நேரத்தில் பங்களாதேஷ் வங்கி 31.27 பில்லியன் டாலர் என்று மதிப்பிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 23 வரை, வெளிநாடுகளில் இருந்து பெறப்பப்பட்ட தொகை (remittances) 2.2 பில்லியன் டாலரை எட்டியது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.6% அதிகமாகும். ஜூலை 1 முதல் செப்டம்பர் 23 வரை, வெளிநாட்டுப் பண பரிமாற்றங்கள் மொத்தமாக 7.06 பில்லியன் டாலராக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 18.2% அதிகமாகும்.

இருப்பினும், இது நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகச்சிறிய ஆறுதலை மட்டுமே அளிக்கிறது. பங்களாதேஷ் கடன் சார்பைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் வாதிடுகின்றனர். வலுவான பொருளாதார அடித்தளத்தை உருவாக்க, வருவாய் திரட்டலை அதிகரிப்பது, ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்துவது மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவை அவசியமாகும்.

எனவே, IMF-இன் இந்த நிபந்தனை, கடன் வாங்கும் வரம்பை விட மேலானது—இது ஒரு எச்சரிக்கை மணி. பதினைந்து ஆண்டுகளாகக் கடனைச் சார்ந்து இயங்கிய வளர்ச்சி இப்போது புதிய சிக்கல்களை உருவாக்குகிறது. அரசாங்கம் உள்நாட்டு வருவாயை அதிகரிக்காவிட்டால், வெளிநாட்டுக் கடன் இனி ஒரு மீட்பு வழியாக இல்லாமல், பொருளாதார நெருக்கடியின் காரணியாகவே மாறும்.

- வெண்பா (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://tripurainfo.com/EnglishNews.aspx?intnid=3472&title=Bangladesh-economy-heading-for-a-major-crisis-IMF-imposes-ceiling-on-further-borrowing

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு