புவி வெப்பமயமாதலுக்கான பொறுப்புகளை காலனிய நாடுகள் மீது சுமத்தும் ஜி20 வல்லரசுகள்

விஜயன்

புவி வெப்பமயமாதலுக்கான பொறுப்புகளை காலனிய நாடுகள் மீது சுமத்தும் ஜி20 வல்லரசுகள்

சொன்னதை செய்ய மறுக்கும் G20 நாடுகள்: புவி வெப்பமயமாதலை 1.5 °C கீழ்  கொண்டு செல்வதற்கான பொறுப்புகளை துறக்கும் பணக்கார G20 நாடுகள்.

புவி வெப்பமயாவதற்கு G20 நாடுகளே முதன்மையான காரணம் என்றும், தங்கள் பசுமை குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்குரிய போதுமான நடவடிக்கைகளை இந்நாடுகள் முன்னெடுக்கவில்லை என்றும் ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆக்ஸ்பாம் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. புவி வெப்பமயமாவதற்கு காரணமான பசுமை குடில் வாயு உமிழ்வை சிறிது சிறிதாக குறைக்க G20 நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். ஆபத்தான காலநிலை மாற்றத்தைத் தவிர்க்க இந்நாடுகள் பெருமளவிற்கு பசுமை குடில் வாயுக்களை குறைத்தாக வேண்டும் என்பதை ஆய்வின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

G20 நாடுகள்தான் உலகில் பசுமை குடில் வாயு வெளியேற்றத்தை அதிகம் உற்பத்தி செய்கின்றன. அந்நாடுகளே 78% வாயுக்களை வெளியேற்றுகிறார்கள். ஜி20 நாடுகளின் கூட்டம் இந்தியாவில் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெறுகிறது. பருவநிலை மாற்றத்திற்கு எதிராக என்ன செய்யப் போகிறோம் என்பதை ஐக்கிய நாடுகள் சபையிடம் கூறுவார்கள். பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குகளை அடைய அவர்களின் திட்டங்கள் போதுமானதாக உள்ளதா என்பதை ஐக்கிய நாடுகள் சபை சரிபார்க்கும். பாரிஸ் ஒப்பந்தம் புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

காலநிலை நெருக்கடியைத் தடுக்க ஜி20 நாடுகள் போதுமான அளவு செயல்படவில்லை என்று Oxfam நிறுவனத்தைச் சேர்ந்த Nafkote Dabi கவலை தெரிவித்துள்ளார். பிரச்சனையைத் தீர்ப்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று அவர் நினைக்கிறார். நவம்பரில் ஐ.நா அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் இந்நாடுகள் பலதரப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

புவி வெப்பமடைவது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என அறிவியல் எடுத்துக் காட்டுகிறது என்று டாபி கூறுகிறார். காட்டுத்தீ, வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள், புயல்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை ஏற்படுவதற்கு புவி வெப்பமடைதலே காரணம் என்று அவர் கூறுகிறார். இந்த பிரச்சனைகள் பணக்காரர்களை விட ஏழை மக்களையும் ஏழை நாடுகளையும்தான் அதிகம் பாதிக்கிறது என்றும், ஜி 20 நாடுகள் மேலதிகமான பொறுப்புடன் தகுந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

G20 நாடுகளில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பசுமை குடில் வாயு வெளியேற்றத்தை உருவாக்குகிறார்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே கொண்டு செல்ல வேண்டுமெனில் 2030க்குள் எவ்வளவு வாயுக்களை குறைக்க வேண்டும் என்பதும் அதே ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே புவி வெப்பமயமாதலுக்கு எதிரான பாதுகாப்பான நிலை என்று விஞ்ஞானிகளின் கூறுகிறார்கள்.

G20 நாடுகள் தங்கள் உமிழ்வை போதுமான அளவு குறைக்க திட்டமிடவில்லை என்று ஆய்வறிக்கையில் அம்பலமாகியுள்ளது. அந்நாடுகள் பசுமை குடில் வாயு உமிழ்வை பாதியாக குறைத்தாக வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் அவர்கள் படிப்படியாக சிறிதளவு மட்டுமே குறைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஏழைளை விட பணக்காரர்கள் அதிக உமிழ்வை வெளியேற்றுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 5 லட்சம் மக்கள் வெளியேற்றும் அளவைவிட அதிகமான உமிழ்வை G20 நாடுகளில் உள்ள 125 பில்லியனர்கள் வெளியேற்றுகிறார்கள் என்று ஆக்ஸ்பாம் கூறுகிறது.

பணக்கார G20 நாடுகள் ஏழை நாடுகளை விட மோசமாக செயல்படுகின்றன என்றும் அந்நாடுகளில்தான் தனிநபர் அளவிலான பசுமை இல்ல வாயு உமிழ்வு அதிகமாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதிகமாக உமிழ்வை வெளியேற்றும் பணக்கார நாடுகள்தான் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகைள மிகக் குறைந்த அளவில் முன்னெடுத்து வருகின்றன என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட பணக்கார G20 நாடுகள்தான் தங்கள் உமிழ்வைக் குறைக்க வேண்டும் என்று ஆக்ஸ்பாம் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:

     ஐக்கிய நாடுகள்

     ஆஸ்திரேலியா

     கனடா

     ஜப்பான்

     ஜெர்மனி

     பிரான்ஸ்

     ஐக்கிய இராச்சியம்(UK)

     இத்தாலி

     ஐரோப்பிய ஒன்றியம்(EU)

     சவூதி அரேபியா

     தென் கொரியா

கீழ்க்கண்ட நடுத்தர வருமானமுடைய, ஏழை G20 நாடுகளும், தங்களின் உமிழ்வை அதிகமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், பணக்கார நாடுகள் குறைக்க வேண்டிய அளவைவிட இது குறைவுதான் என்கிறது ஆய்வுக் கட்டுரை:

     ரஷ்யா

     துருக்கி

     இந்தோனேசியா

     மெக்சிகோ

     அர்ஜென்டினா

     பிரேசில்

     சீனா

     இந்தியா

தென்னாப்பிரிக்கா நாட்டை பொறுத்தமட்டில் உமிழ்வைவிட கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகள் அதிகமாக இருப்பதால் அந்நாடு ஒப்புக்கொண்ட அளவைவிட அதிகமாக குறைக்கக்கூடும்.

G20 நாடுகள் தங்கள் உமிழ்வை போதுமான அளவு குறைப்பதாக உறுதியளிக்கவில்லை. பருவநிலை மாற்றம் குறித்த ஐ. நா-வின் பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை சரிபார்க்கும் வகையில் நவம்பரில் COP28 அறிக்கையின் மூலமாக மேலதிகமான தெளிவு கிடைக்கக்கூடும். இருந்தபோதிலும், பணக்கார நாடுகள் மற்ற நாடுகளைத்தான் குறை கூறுகிறார்கள், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். குறிப்பாக, பணக்கார G7 நாடுகள் தாங்கள் போதுமான அளவு செயல்படுவதாகவும், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்தான் அதிகமாக பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். இது உண்மையல்ல என்பதே இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

பணக்கார ஜி20 நாடுகள் இரண்டு விஷயங்களைச் செய்தாக வேண்டும். முதலில், பணக்கார நாடுகள் தங்கள் சொந்த உமிழ்வைக் பெருமளவு குறிப்பாக செல்வந்தர்களால் உருவாகும் உமிழ்வை குறைத்தாக வேண்டும்; மேலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாழ்க்கை முறைகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யும் திட்டத்திற்கு துணை நிற்க வேண்டும். இரண்டாவதாக, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உமிழ்வைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு வேண்டிய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க வேண்டும்.

பணக்கார G7 மற்றும் G20 நாடுகள் தங்கள் உமிழ்வைக் குறைப்பதற்கும், கடந்தகாலத்தில் வெளியிடப்பட்ட உமிழ்வுகளுக்குச் ஈடுசெய்யும் வகையிலும் மேலதிகமாக தீர்வுகாணும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதுவே சரியானது என்பது மட்டுமல்ல, பாரிஸ் ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கு இதுவே அவசியமானது.

- விஜயன்

based on: https://www.oxfam.org/en/press-releases/g20-countries-failing-big-margins-cut-greenhouse-gas-emissions-below-catastrophic