ஆசியாவில் நேட்டோ விரிவாக்கம்-மடமையின் உச்சம்

தமிழில்: விஜயன்

ஆசியாவில் நேட்டோ  விரிவாக்கம்-மடமையின் உச்சம்

ஆசிய கண்டம் வரை நேட்டோ படையை விரிவுபடுத்துவதென்பது தவிர்க்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது என்று அமெரிக்கா அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். உண்மையில், இந்த யோசனை முற்றிலும் தவிர்க்கக்கூடியது மட்டுமல்ல, முற்றிலும் மடத்தனமானதுமாகும்.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு முன்பு, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுளின் காரணமாக நெருக்கடி ஏற்படும் நிலை வருகிற போது தங்களுக்கு துணை நிற்க வேண்டும் எனக் கூறி பல்வேறு ஒப்பந்தங்களின் வாயிலாக கூட்டணிகள் அமைக்கப்பட்டன. உலகம் அதுவரை கண்டிராத முற்றிலும் தேவையற்ற பேரழிவை உண்டாக்கிய முதலாம் உலகப் போரை துவக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளை இந்த இராணுவக் கூட்டணிகளே இட்டுச்சென்றது. இன்றும் அது போன்றதொரு சூழல்தான் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. அமெரிக்க – சீன ஏகாதிபத்திய நலன்களுக்கு இடையில் முரண்பாடு கூர்மையடைவதும், நேட்டோவின் தலைமையகமான பிரசல்ஸிலிருந்து கிட்டத்தட்ட 6,000 மைல்கள் தள்ளியிருக்கக்கூடிய ஆசிய கண்டம் வரை நேட்டோ படையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள்தான் போர் பதற்றம் உருவாகுவதற்கு காரணமாக விளங்குகிறது.

இவ்வாறு கூறுவது மிகைப்படுத்துவதாகாது. அமெரிக்காவின் மாநிலங்களவை உறுப்பினர் டாமி டக்வர்த் (இலினோஸ் மாநிலம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக கட்சி உறுப்பினர்) மற்றும் டான் சல்லிவான் (அலாஸ்கா மாநில-குடியரசுக் கட்சி உறுப்பினர்) ஆகியோரிடம் ‘மீட் த பிரஸ்’ என்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஆசிய நாடுகளையும் நேட்டோ பக்கம் இழுப்பது தவிர்க்க முடியாத நிகழ்வு என்று நீங்கள் கருதுகிறீர்களா எனக் கேட்ட போது இருவருமே ஆம் என்றவாறு பதிலளித்துள்ளனர்.

“தவிர்க்க முடியாத ஒன்றுதான் என நினைக்கிறேன்” என்று சல்லிவன் பதில் கூறினார்.

“என் நன்பர் சொல்வதை எற்கிறேன்” என்றார் டக்வர்த்.

நேட்டோவின் விரிவாக்கம் தவிர்க்க முடியாதது என்று அவர்கள் சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. லிதுவேனியா தலைநகர் வில்னியஸில் இந்தாண்டு நேட்டோவின் உச்சி மாநாடு நடைபெற்றது போல கடந்தாண்டு ஸ்பெயின் தலைநகரான மேட்ரிடில் மாநாடு நடைபெற்றது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கூட்டறிக்கையில் ஒரே ஒரு முறை  மட்டுமே சீனாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தாண்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் பல முறை இடம்பெற்றுள்ளது. பிரசல்ஸ் (2021) நேட்டோ மாநாடு முடிந்த பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் சீனாவின் கொள்கைகளும், நடைமுறைகளும் “நமக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும்” என்று எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தது. எனினும், அதே அறிக்கையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கும், நடைமுறைக்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தது. ஆனால், அச்சயத்தில் இந்த அறிக்கையே கூட போர் வெறியை வெளிப்படுத்துவதாகவே பலராலும் கருதப்பட்டது. ரஷ்யாவே முதன்மையான எதிரி என்று 2010ல் நேட்டோ வெளியிட்டிருந்த போர்த்தந்திர கொள்கையறிக்கையில்(2010 strategic concept) கூறப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு அதேபோன்றதொரு கொள்கையறிக்கை வெளியிட்டபோது சீனாவே புதிய எதிரி என்ற வகையில் ஒன்பது இடங்களில் குறிப்பிட்டிருந்தது.

நேட்டோவில் இருந்துக்கொண்டு முக்கிய பங்காற்றக்கூடிய நபர்கள் அதாவது செல்வாக்குமிக்க போர் வெறியன் ஜான் போல்டன், ப்ரூக்கிங்ஸ் ஆய்வு நிறுவனம் முதல் அமெரிக்காவின் அயலுறவு கொள்கை வடிவமைப்பில் நீண்ட காலம் பணியாற்றிய அதிகாரிகள் வரை பலரும் நேட்டோ விரிவாக்கம் தவிர்க்க முடியாதது என்றே பேசியும், எழுதியும்  வருகின்றனர்.

ஆனால், இவர்கள் பேசுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. 2020ல் “இந்தோ-பசிபிக் கூட்டாளிகள்” (Indo-pacific partners) என்ற பெயரில் ஆஸ்திரலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது போல இந்தாண்டும் அதே நான்கு நாடுகளை இரண்டாவது முறையாக அழைப்பு விடுத்திருப்பதுடன் புதிதாக நேட்டோ உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட பின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளுக்கும் சீனாவின் அதிகரித்துவரும் மேலாதிக்கம் குறித்து விவாதிப்பதற்கு வெளியுறவுத் துறை அமைச்சக அளவிலான கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன நான்கு நாடுகளுமே தனித்தனியாக நேட்டோவின் நட்பு நாடுகளாக இருப்பது மட்டுமல்லாது நேட்டோவின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவது தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளன. நேட்டோவின் உறுப்பு நாடுகளாக இல்லாவிட்டாலும் நேட்டோவிற்கு வெளியிலான நட்பு நாடுகளை மென்மேலும் தன் பக்கம் தக்கவைப்பதற்காகவே இது போன்ற அழைப்புகள் விடுக்கப்படுகின்றன. இதற்கிடையில்தான், ஜப்பான் தலைநகரான டோக்யோவில் நேட்டோவிற்கான தொடர்பலுவலகம் (liaison office) அமைப்பதற்கான பேச்சுவார்த்தை பல மாதங்களாக நடந்து வந்தது. எனினும், இதற்கு பிரான்ஸ் தரப்பிலிருந்து எதிர்புகள் கிளம்பியதால் இப்போதைக்கு அமைதியாகியுள்ளனர். எனினும், இதே அஜன்டா குறித்தான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கப்படுவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது.

‘ஐரோப்பிய-அட்லாண்டிக் பிராந்தியத்தில் என்ன நிகழ்ந்தாலும் அது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எதிரொலிக்கும். அதுபோல, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எது நிகழ்ந்தாலும் அது ஐரோப்பிய-அட்லண்டிக் பகுதிகளில் எதிரொலிக்கும்” என்று இதற்கு முன்னதாக பல முறை கூறிவந்த விசயத்தைதான் நேட்டோவின் பொதுச்செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் என்பவர் லிதுவேனியாவில்(வில்னியஸ்) இருந்த போது கூறியுள்ளார். “நேட்டோ நாடுகளின் பாதுகாப்பை பிராந்திய அளவில் உறுதிபடுத்தினால் மட்டும் போதாது; மாறாக உலகளவில் உறுதிபடுத்த வேண்டும்” என்றும், “சீனாவின் நடவடிக்கைள் பற்றி நேட்டோவிற்கு என்ன கவலை என நாம் சொல்வது கூட தவறான கருத்தாகும்” என்று ஸ்டோல்டன்பர்க் கூறியுள்ளார்.

இதை சாதிக்க வேண்டுமெனில், இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களிலுள்ள நாடுகளிலும் புதிய தொடர்புகளையும், கூட்டணிகளையும் உருவாக்குவதற்கு நேட்டோ முயலுதல் வேண்டும். ”சர்வாதிகார நாடுகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொள்வது போல, சுதந்திரம், ஜனநாயகம் மீது பற்று கொண்ட நாமும் நமக்கான கூட்டணியை உருவாக்க வேண்டியுள்ளது.” என்று விளக்கினார்.

நேட்டோ கூட்டணியின் செயல்பாடுகளும், செல்வாக்குகளும் ஐரோப்பிய கண்டத்தோடு மட்டும் சுருங்கிவிடாமல் பிற கண்டங்களிலும் குறிப்பாக ஆசியா மற்றும் பிற தொலைதூர பிரதேசங்களிலும் தடம்பதிக்க முனைவதாகவே தெரிகிறது. மேற்கு ஜரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் இராணுவ ரீதியிலான தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வதே நேட்டோ இராணுவக் கூட்டணியின் பணி எனத் துவக்கத்தில் கூறப்பட்டது. பின்னர், காலப்போக்கில், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக உலகெங்கிலும் ஜனறாயக ஆட்சியை வளர்ப்பதே தங்கள் இலக்காக மாற்றப்பட்டது.

காலங்காலமாக நேட்டோவிற்குள் இருந்துவரும் இரண்டக நிலை

ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகள் மட்டுமே நேட்டோவில் உறுப்பினர்களாக சேர முடியும்; மேலும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலுள்ள நாடுகள் (இந்நாடுகளுக்கு சொந்தமான அயல்நாட்டு நிலப்பரப்புகள்) நேரடியாக தாக்கப்படும்போது மட்டுமே தற்காப்பிற்காக உறுப்பு நாடுகளும் போரில் பங்கேற்க முடியும் என நேட்டோ ஒப்பந்தத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, ஆசிய கண்டத்தில் நேட்டோவின் விரிவாக்கம் என்பது நேரடியாக ஆசிய நாடுகளை உறுப்பினர்களாக சேர்ப்பதனால் உருவாகப்போவதில்லை.

ஒரு நாடு நேட்டோ படையில் உறுப்பினராகக்கூட சேரத் தேவையில்லை; நேட்டோ நாடுகளுடன் நட்பு பாராட்டுவது, குறிப்பாக இராணுவ ரீதியிலான கூட்டு செயல்பாடுகளில் இறங்குவதன் மூலம் நேட்டோ நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது போன்ற செயல்பாடுகளே பிற தேசியவாத அரசியல் பேசக்கூடிய நாடுளை தூண்டுவதற்கு அதாவது ஒரு நாட்டின் இராணுவ ரீதியிலான செயல்பாடுகள் இன்னொரு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக காரணங்காட்டப்பட்டு அந்நாடுகள் போர் வெறியில் பேரழிவை உண்டுபன்னத் துவங்க முடியும் என்பதையே உக்ரைன் போர் எடுத்துக் காட்டுகிறது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் குவாட் போன்ற பெயரளவுக்கு நேட்டோ சாராத இராணுவக் கூட்டணிகளை அதிகாரப்பூர்வமல்லாத வழியில் அமெரிக்கா உருவாக்குவதன் நோக்கமே அப்பிராந்தியத்தில் நேட்டோவின் தடத்தை விரிவுபடுத்துவதற்காகத்தான் என்று மாநிலங்களவை உறுப்பினர் டக்வர்த் ஒரு முறை கூறியுள்ளார். ஆசிய கண்டத்திற்குள் நேட்டோவின் விரிவாக்கம் தவிர்க்க “முடியாத” ஒன்றாகிவிட்டது என தான் கருதுவது ஏன் என்பது குறித்து NBC தொலைகாட்சி நெறியாளர் சக் தோட் என்பவரிடம், கூறியபோது “அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் முதலான நாடுகளுக்கிடையில் வெற்றிகரமாக ஆக்கஸ் ஒப்பந்தம் ஏற்கப்பட்ட போதே நேட்டோ விரிவாக்கத்திற்கான வேலைகள் துவங்கிவிட்டது” என விளக்கமளித்தார்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ விரிவாக்கத்திற்கான முயற்சிகள் எந்தளவில் இருந்தாலும் அதை அங்குள்ள போட்டி நாடுகள் அதாவது சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்த்தே வருகின்றன. அதிலும் குறிப்பாக சீனாவின் அண்டை நாடுகளுடனான எந்தவொரு விரிவாக்கத்திற்கான நடவடிக்கைக்கும் “கடுமையான பதிலடிகள்” தரப்படும் என்றே சீனா எச்சரித்து வந்துள்ளது. நேட்டோ விரிவாக்கத்திற்கான வேலைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தத் துவங்கியது முதல் மேற்சொன்ன மூன்று நாடுகளுமே தங்கள் இராணுவ மற்றும் அரசியல் ரீதியிலான கூட்டணியை வலுப்படுத்துவதற்கு துவங்கியுள்ளனர்.

நீண்ட கால நலனை அடிப்படையாகக் கொண்டு பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் ஒத்துணர்வே இப்போதைய தேவையாக உள்ளது. பிற நாடுகளின் சுற்றுப்புறங்களில் இராணுவ விரிவாக்கம் செய்வது என்ன மாதிரியான உணர்வுகளை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்று அவர்கள் நிலையிலிருந்து பார்க்க வேண்டும். சீனாவின் கடலோரப் பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பு அதிகரித்து வருவதை சீனா அச்சுறுத்தலாக எண்ணுவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது.

அமெரிக்க அரசு தோன்றியதிலிருந்து அந்நிய நாடுகளின் விவகாரங்களில் 500க்கு மேற்பட்ட முறை இராணுவ ரீதியில் தலையிட்டுள்ளது. மொத்தமாக நடந்த இராணுவ தலையீடுகளில் மூன்றில் ஒரு தலையீடு என்பது 1999க்கு பிறகு அதாவது பனிப்போர் முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகு நடந்துள்ளது. இரட்டைக் கோபுரம் தகர்ப்பிற்கு பின்னர் அமெரிக்கா தொடுத்த ஆறு போர்கள் 45 இலட்ச மக்களின் உயிர் குடித்துள்ளது. உலகிலேயே போர் வெறிபிடித்த அரசாக அமெரிக்கா திகழ்கிறது.  அமெரிக்கா தலைமையிலான அத்தனை போர்களுக்கும், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் நேட்டோ படையே பல முறை ஈட்டி முனையாக செயல்பட்டுள்ளது.

நேட்டோவின் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக போட்டி நாடுகள் மட்டும் அலறவில்லை. நேட்டோவின் நேச சக்திகளாக இருந்து வரும் நான்கு இந்தோ-பசிபிக் கூட்டாளிகளும் “நேட்டோவை” ஆரத்தழுவி வரவேற்பது போல ஊடகங்களில் காட்டப்பட்டாலும், அமெரிக்கா-சீனாவிற்கு இடையிலான போட்டியில் சீனாவை எதிர்ப்பதற்கான கருவியாக தங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதோ என்ற உணர்வு மேலோங்கி வருவதால் இரண்டக நிலையே இருந்து வருவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 

உண்மையில் சொல்லப்போனால், அமெரிக்க-சீனாவிற்கிடையிலான முரண்பாட்டில் தங்கள் நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பு போல ஆகிவிட்டதாகவே அங்குள்ள தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை அமெரிக்காவே செய்து வருகிறது என்பதையும் அந்நாட்டு மக்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

புதிய போருக்கான பழைய யோசனையே நேட்டோ விரிவாக்கம்

பல ஆண்டுகளாகவே கிழக்கு ஐரோப்பாவிலுள்ள நாடுகளை தன் பக்கம் இழுப்பதன் மூலம் நேட்டோ விரிவாக்கத்திற்காக அமெரிக்கா படிப்படியாக செய்து வந்த வேலைகள் சர்ச்சையாகவே நீடித்து வந்தது. இன்றோ வேறொரு கண்டத்தில் விரிவாக்கத்திற்கான வேலைகளில் முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் அது குறித்தான பேச்சோ, விவாதங்களோ எழவில்லை. விவாதத்தை துவக்குவது எப்படி?

ஆசிய கண்டத்தில் நேட்டோ விரிவாக்கத்திற்கான வேலைகள் புதியவை என்று சொல்ல முடியாது. அமெரிக்கா காட்டிய தீவிர முனைப்பின் காரணமாக ஜூன் 1990ல் அதாவது பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட அடுத்த மாதத்திலேயே நேட்டோ கூட்டணியை வலுப்படுப்பதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியபோது முதல்முறையாக ஜப்பான் அதில் பங்கேற்றது. ஆசியாவில் நேட்டோ விரிவாக்கத்திற்கான வேலைகள் நேட்டோ ஒப்பந்தத்திற்கே எதிரானது என்று கூறி அன்று நடந்த பேச்சுவார்த்தையை பிரான்ஸ் புறக்கணித்தது. பின்னாளில், டோக்கியோவில் நோட்டோவிற்கான தொடர்பு அலுவலகம் அமைப்பதற்கும் பிரான்ஸ் எதிர்ப்புத் தெரிவித்தது.

முன்னாள் இராணுவ அதிகாரியான(Colonel) ஜோசப் நுனீஸ் என்பவர் 2007ல் ஈராக்கில் போர்ப்பணி சாராத சிவிலியன் வேலைகளை செய்து வந்தபோது குறைந்தபட்சம் 6 பிரதேசங்களுக்கு அதாவது ஆசியா-பசிபிக், தெற்காசியா, மத்திய கிழக்கு, வட மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் நேட்டோ படை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.

“இறையாண்மை போன்ற நியாயமான கோரிக்கைகள் பற்றி நாடுகள் சிந்திப்பது ஒரு பக்கமிருந்தாலும், ஒன்றினைந்து ஆக்கப்பூர்வமான வேலைகளை முன்னெடுக்கவில்லையென்றால் அராஜக நிலையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாகவே அர்த்தமாகும்,” என்று அவர் கூறியிருந்தார்.

சோவியத் யூனியன் வீழ்ச்சியை வராலாற்றின் முடிவு என்று அறிவித்ததைத் தொடர்ந்து நேட்டோ உருவாக்கத்திற்கான நோக்கமே சூனியமாகிப்போனது. இதைத் தொடர்ந்துதான் நேட்டோ பொதுச்செயலாளர் ஸ்டோல்டன்பர்க் போன்றவர்கள் உலகெங்கிலும் இன்று ஜனநாயகத்தின் போர்வாளாக நேட்டோ செயல்படுவதாகத் கூறத் தொடங்கினர். சோவியத் யூனியன் கலைப்பு, பனிப் போரின் முடிவைத் தொடர்ந்து நேட்டோவை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதற்கு வலுவான காரணங்கள் இல்லாததால் புதிய காரணங்களை உருவாக்கத் தொடங்கினர். ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நாடான கொசோவோவில் நேட்டோ இராணுவ வழியில் தலையிட்டது. பின்னர், ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்''  என்ற பெயரில் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் போர் தொடுத்தது.

இலாபம் கொழிக்கக்கூடிய வியாபாரமாக ஆயுத விற்பனை செயல்பட்டுள்ளது. நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு போர்க் கருவிகள் தயாரிக்கும் முதலாளிகளே மூலக் காரணமாக செயல்பட்டுள்ளனர். எனினும், இன்று புதிய கண்டத்தில் அதிலும் ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடல் மற்றும் அதற்கு அருகாமையிலுள்ள தீவுப் பகுதிகளில்(ஓசியானியா) நேட்டோ விரிவாக்கத்திற்கான செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேற்கூறிய பகுதிகளில் இருக்கக்கூடிய நாடுகளே ஆயுத இறக்குமதி செய்வதில் உலகளவில் முன்னணியில் உள்ளது. அதிலும் ஓசியானியா பகுதியிலுள்ள ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பிரம்மாண்டமாக ஆயுதக் குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இப்பகுதியில் அமெரிக்காவின் ஆயுதங்களே பெருமளவில் விற்பனை செய்யப்படுவதும் கவனிக்கத்தக்கது. நிச்சயமாக இந்த விரிவாக்க நடவடிக்கைகள் கொலைக் கருவிகள் தயாரிக்கும் முதலாளிகளுக்கு கொள்ளை இலாபத்தை கொட்டித் தரும் என்பதில் சந்தேமில்லை. 2022ல் மட்டும் இந்தப் பிரதேசங்களில் ஆயுத விற்பனை 50 சதவீதம் அதிகரித்து 52 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளது. இராணுவ பலத்தை சீனா அதிகரிப்பதோடு ஆசியாவில் சீனவின் இராணுவ ரீதியிலான தலையீடுகள் அதிகரித்து வருவதை கவனித்து வரும் ஆசியாவிலுள்ள நேட்டோவின் நட்பு நாடுகள் தங்களது இராணுவ பலத்தையும் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்று பென்டகனை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆசியாவில் நேட்டோ விரிவாக்கத்திற்கான செயல் திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரைத் தொடர்ந்து நேட்டோ நாடுகள் இராணுவத்திற்கான செலவுகளை அதிகரித்தபோதிலும், அவர்களால் நிர்ணயித்தபடி 2 சதவீத ஜிடிபி அளவிற்கான தொகையை இராணுவத்திற்கு ஒதுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒராண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உக்ரைன் போரில் தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவதில் பற்றாக்குறை நிலவுவதாக நேட்டோ நாடுகள் மீது விமர்சனம் எழுந்துள்ளது. நேட்டோ நாடுகள் மூலமாக உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியதால் ஆயுதக் கையிருப்பு பெருமளவு குறைந்துவிட்ட சமயத்தில் இதே நிலை தொடர்ந்தால் தைவான் மீது சீனா ஒரு ஆக்கிரமிப்புப் போரை தொடுக்கும்பட்சத்தில் அங்கு தைவானிற்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என பீதியடையும் அளவிற்கு அமெரிக்காவைத் தள்ளியுள்ளது. குறைந்தது இராணுவத்திற்கான செலவினங்களை பன்மடங்கு அதிகரிக்காமல், இரண்டு கண்டங்களிலுள்ள, இராணுவ ரீதியில் பலம் வாய்ந்த இரண்டு நாடுகளை எதிர்த்து நேட்டோவால் செயல்பட முடியுமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. பொருளாதார பேரழிவு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பேரழிவை உண்டுபண்ணக்கூடியளவிற்கு பெருமளவிலான கழிவு பொருளாகவும் ஆயுதங்கள் மாறுவது கவனிக்கத்தக்க விசயமாகும்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளுடனான வர்த்தகத்தில் சீனாவே முன்னணியாக இருந்து வருகிறது. நேரடியாக சீனாவோடு மோதாமல் பதிலி போர்களை தொடுத்தாலும்கூட உலகளவில் கணக்கிடவியலா பொருளாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும். சீனாவை பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் வசைமாறி பொழிந்து வந்தாலும், அமெரிக்காவுடனான பெரும்பாலான வர்த்தகம் சீனாவுடன்தான் நடந்து வருகிறது. இதுமட்டுமல்லாது வேகமாக வளர்ந்து வரும் இந்த வர்த்தக உறவை நம்பியே அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பும் அமைந்துள்ளது. எனவே, இராணுவ ரீதியிலான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்குமே பெரும் சேதாரத்தை உண்டுபண்ணக்கூடும். ஒருவேளை அமெரிக்க - சீனாவிற்கிடையில் போர் மூளும்பட்சத்தில் என்னமாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று சமீபத்தில் முன்கணிப்பு செய்யப்பட்டது. அதில் வெற்றியென்பது அமெரிக்காவிற்கே கிடைத்தாலும், அதனால் அளவிடமுடியாத இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஊகித்துள்ளனர். அதாவது, நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது தோற்கடிப்பட்ட சீனாவை காட்டிலும் அதிக பாதிப்பு அமெரிக்காவிற்கே ஏற்படும்  என்று எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளனர்.

இதுபோன்றதொரு பேரழிவு வருங்காலங்களில் ஏற்படுவதைத் தடுப்பதற்கு நாம் இப்போதே தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளில் மட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகள் தங்களது இராணுவ விரிவாக்கத்தை சுருக்கிக் கொள்வதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மெக்கார்த்தி காலத்தில் இடதுசாரி, கம்யூனிச சித்தனைகளை எப்படி மிக மோசமானதாக சித்தரிக்க முயன்றாரோ அதுபோலவே டிரம்ப் ஆட்சி காலத்தில் நேட்டோ மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், விவாதங்களும் சர்ச்சைக்குரியதாகவும், பகைமை பாராட்டுவதாகவும்  மாறியது. உக்ரைன் போருக்குப் பிறகு இந்நிலைமை தீவிரமடைந்துள்ளது. கிட்டத்தட்ட, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் நேட்டோவை விமர்சித்தால் கூட பகைவர்களாக சித்தரிக்கும் மோசமான சூழலே உருவாகியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ விரிவாக்கம் எப்படியெல்லாம் நாசகரமான போர்களை தொடுப்பதற்கு இட்டுச்சென்றுள்ளது என்பதை கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறுவது, மேலுமொரு மோசமான போரை வேறு எங்கோ நடத்துவதற்கு தயார்படுத்துவதாகவே அர்த்தமாகும்.

- விஜயன்

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://jacobin.com/2023/07/nato-asia-expansion-us-military-china-conflict?mc_cid=dbf48ff9e0&mc_eid=159ee1d644