நேபாள நெருக்கடி குறித்த ஐந்து ஆய்வுரைகள்

தமிழில்: வெண்பா

நேபாள நெருக்கடி குறித்த ஐந்து ஆய்வுரைகள்

உங்கள் வீடு சுத்தமாக இல்லையென்றால், எறும்புகள் கதவு வழியாக வந்து பாம்புகளையும் உடனே கூட்டி வரும்.

நேபாளத்தில் நிலவிய நெருக்கடி செப்டம்பர் தொடக்கத்தில் தீவிரமடைந்து, பிரதமர் கே.பி. ஓலியின் மைய-வலதுசாரி அரசாங்கத்தைக் கவிழ்த்தது. செப்டம்பர் 4 அன்று சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தி தடை விதித்ததே இதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது. போராட்டங்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 19 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இது பெரும் கலகமாக வளர்ந்து, அரசியல்வாதிகளின் வீடுகள், நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகை மீதான தாக்குதல்களுக்கு வழிவகுத்தது.

தற்போதைய கொந்தளிப்பு குறித்து பல கதைகள் பரவி வருகின்றன, ஆனால் இரண்டு முக்கியத்துவம் பெறுகின்றன:

அமைப்புரீதியான ஆட்சித் தோல்வி: பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், ஊழல் மற்றும் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் ஆகியவை கட்சிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கே ஒரு சட்டபூர்வமான நெருக்கடியை உருவாக்கின. ஒட்டுமொத்த புறக்கணிப்பின் காரணமாக ஏற்பட்ட மக்கள் பின்னடைவே தற்போதைய எழுச்சிக்குக் காரணம் என்று விளக்கப்படுகிறது.

வண்ணப் புரட்சி ஆய்வுக் கோட்பாடு: இந்தப் போராட்டங்கள் ஒரு வெளிப்புற சக்தியால் தூண்டிவிடப்பட்டவை என்றும், பெரும்பாலானோர் அமெரிக்காவையும், அமெரிக்க காங்கிரஸின் ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை 'ஹாமி நேபாளத்திற்கு' (2015-ல் நிறுவப்பட்டது) வழங்கிய நிதியுதவியையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த இரு கோட்பாடுகளுமே, நேபாளத்திலுள்ள சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பொறுப்பை வெளிநாட்டுத் தலையீட்டாளர்கள் மீதோ அல்லது "அரசியல் வர்க்கம்" என்ற தெளிவற்ற கருத்தின் மீதோ திசைதிருப்ப எளிதாக்குகின்றன. இந்தக் கோட்பாடுகளில், நேபாளத்தின் அடிப்படை முதலாளித்துவ ஒழுங்கு மற்றும் அதன் பிரச்சினைகள் குறித்து எந்த விவாதமும் இல்லை: ஒரு நூற்றாண்டு கால சலுகைப் பொருளாதாரம், முடியாட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட ஒரு சிலர் ஆதிக்கத்தின் கைகளில் நிலம், நிதி மற்றும் அரசாங்க ஒப்பந்தங்களின் கட்டுப்பாடு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் ஏற்றுமதி, கடன்-நிதியுதவி பெற்ற உள்கட்டமைப்பு வளர்ச்சியைச் சார்ந்திருக்கும் பொருளாதார மாதிரி போன்றவை விவாதிக்கப்படவில்லை. மக்களின் போராட்டங்களுக்கான அடிப்படைக் காரணங்கள் "ஊழல்" மற்றும் "வண்ணப் புரட்சி" போன்ற எளிமையான, உணர்வைத் தூண்டும் கருத்துக்களாகச் சுருக்கப்படுகின்றன.

இந்த இரு கோட்பாடுகளும் முழுமையாகச் சரியோ அல்லது தவறோ அல்ல, ஆனால் அவை பகுதியளவிலான உண்மைகளே, அவற்றின் இந்த அரைகுறைத் தன்மை மிகவும் தவறாக வழிநடத்தக்கூடும். இந்தக் கட்டுரை மட்டுமே அந்த அரைகுறைத் தன்மையை சரிசெய்ய முடியாது, ஆனால் அது விவாதத்திற்கான சில கருத்துக்களை வழங்கும் என நம்புகிறது. நேபாளத்தின் இக்கட்டான நிலைமை பற்றி மட்டுமல்லாமல், தெற்குலகில் உள்ள பல நாடுகளின் நிலைமை குறித்தும் நாங்கள் நடத்த விரும்பும் விவாதத்தை எழுப்பதற்காகவே கீழே உள்ள ஐந்து ஆய்வுரைகள் முன்வைக்கப்படுகின்றன.

1. வாய்ப்பை தவறாக நிர்வகித்தல்

2015-ல் நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, பரந்த இடதுசாரிகளால் நேபாள மக்களின் சமூக நிலையை முன்னேற்ற முடியும் என்று பெரும் நம்பிக்கை இருந்தது. இதன் விளைவாக, 2017-ல், பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய நாடாளுமன்றத்தில் 75 சதவீத இடங்களை வென்றன. அடுத்த ஆண்டு, பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கின - எனினும், கட்சிகள் தங்களின் சொந்த கட்டமைப்புகளையும், திட்டங்களையும் கொண்டிருந்ததால் அந்த ஒற்றுமை ஆழமானதாக இருக்கவில்லை; அது உண்மையான ஒன்றுபட்ட கட்சியாக இல்லாமல், முக்கியமாக ஒரு ஒன்றுபட்ட தேர்தல் கூட்டணியாகவே இருந்தது. கம்யூனிஸ்ட் அரசியல் செயல்பாட்டிற்கான ஒரு பொதுவான திட்டம் இல்லாததாலும், அரசின் கருவியைப் பயன்படுத்தி மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரு பொதுவான செயல்திட்டம் இல்லாததாலும், இடதுசாரிகளுக்குக் கிடைத்த வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.

இந்த ஒன்றுபட்ட கட்சி 2021-ல் பிளவுபட்டது, அதன் பின்னர் பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தது, இதை மக்கள் தனிநபர்வாதமாகவும் சந்தர்ப்பவாதமாகவும் பார்த்தனர். மாவோயிஸ்ட் மையத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நாராயண் காஜி ஸ்ரேஷ்டா (2023-2024), அரசின் கருவிகளைப் பயன்படுத்தி ஊழல் நடைமுறைகளை - தனது சொந்தக் கட்சியில் கூட - விசாரிக்க முயன்றபோது, அவர் பதவியிலிருந்து விரட்டப்பட்டார். 2024 முதல், நேபாள அரசாங்கத்தில் இடதுசாரிகளின் ஒரு வலதுசாரிப் பிரிவும் (கே.பி. ஓலி தலைமையில்), வலதுசாரிகளின் ஒரு பிரிவும் (நேபாளி காங்கிரஸ்) இணைந்திருந்ததால், அது ஒரு மைய-வலதுசாரி அரசாங்கமாக மாறியது. 1951 புரட்சியுடன் தொடங்கி, 1990 ஜன அந்தோலன் (மக்கள் இயக்கம்) மூலம் ஆழமாகி, பின்னர் 2006 லோக்தந்திர அந்தோலன் (ஜனநாயக இயக்கம்) மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகத் தோன்றிய ஜனநாயகத்திற்கான நீண்ட போராட்டம் தோற்கடிக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் உண்மையில் அந்த நீண்ட போராட்டம் மற்றொரு வடிவத்தில் மீண்டும் தோன்றும்.

2. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியது

புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 2015-ல், நேபாளத்தின் பிரச்சினைகள் கடுமையாக இருந்தன. கோர்க்காவில் ஏற்பட்ட ஒரு பெரிய பூகம்பம் அந்த மாகாணத்தையே பேரழிவிற்கு உள்ளாக்கியது, 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். குறைந்தபட்சம் கால்வாசி நேபாளிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்தனர். சாதி மற்றும் இனப் பாகுபாடு பெரும் விரக்தியை உருவாக்கியது. நேபாள-இந்திய எல்லையில் உள்ள மாதேஷ் பகுதி, தாங்கள் பின்தங்கியிருப்பதாக உணர்ந்ததாலும், பின்னர் 2015 அரசியலமைப்பால் மேலும் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்ததாலும் கோபமடைந்திருந்தது. நூற்றாண்டாக போதிய நிதிஒதுக்கீடு பெறாத பொது சுகாதாரம், கல்வி ஆகியவை பலவீனமடைந்துள்ளது; வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.

இந்த பிரச்சினைகளில் சிலவற்றைக் கையாள்வதற்காக இடதுசாரி அரசாங்கங்கள் பல்வேறு கொள்கைகளை முன்வைத்தன, மக்கள்தொகையின் பெரும் பகுதியினரை வறுமையிலிருந்து மீட்டன (குழந்தை வறுமை 2015-ல் 36 சதவீதத்திலிருந்து 2025-ல் 15 சதவீதமாகக் குறைந்தது). அடிப்படை கட்டமைப்பு வசதிகளற்ற நிலையிலிருந்து மீட்டன (மின்சார வசதி இப்போது 99 சதவீதம் - மனித மேம்பாட்டுக் குறியீட்டில் பதிவுசெய்யப்பட்ட முன்னேற்றம்).

இருப்பினும், எதிர்பார்ப்புகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது, சமத்துவமின்மை விகிதங்கள் குறையவில்லை. புலம்பெயர்வு வியக்கத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. நாட்டில் ஊழலும் மிக அதிகமாகவே இருந்தன, ஊழல் குறித்த கண்ணோட்டம் மோசமடைந்தது (2024-ல் 180 நாடுகளில் 107-வது இடம்). ஊழல், சமத்துவமின்மை, பணவீக்கத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. வர்த்தகம் மற்றும் நிதிக்காக மிகவும் மோசமான ஒப்பந்தங்களைச் செய்தது (IMF-ன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்குத் திரும்பியதானது அதன் நிதி ஆதாரங்களை மேலும் குறைத்தது).

3. இந்து முடியாட்சி என்ற கருத்தில் தஞ்சம் புகும் போக்கு

நேபாள குட்டி முதலாளித்துவம், தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு அனுப்புபவர்கள், பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட அல்லது "பிற்படுத்தப்பட்ட" சாதிகளைச் சேர்ந்தவர்கள், உயர் சாதிகளின் தொடர்ச்சியான ஆதிக்கத்தால் விரக்தியடைந்துள்ளனர், மேலும் நேபாளத்தின் எல்லையில் உள்ள மாநிலங்களில் ஒன்றான இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் வலதுசாரி இந்துத்துவா குட்டி முதலாளித்துவ அரசியலால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதனால்தான் போராட்டங்களில் இந்தியாவின் வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரும், உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் தலைவருமான யோகி ஆதித்யநாத்தின் பல சுவரொட்டிகள் காணப்பட்டன. இந்த மக்கள் பிரிவு "இந்து முடியாட்சிக்குத் திரும்புவதற்கான" மனநிலையிலும் உள்ளது. முடியாட்சி ஆதரவுக் கட்சி (ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி அல்லது RPP) மற்றும் அதன் பரந்த கூட்டணிகளான கூட்டு மக்கள் இயக்கக் குழு (முடியாட்சிக்குத் திரும்புவதற்கான போராட்டங்களின் ஒரு பகுதியாக மார்ச் 2025-ல் உருவாக்கப்பட்டது), சிவசேனா நேபாளம், விஸ்வ இந்து மகாசபை போன்ற பல அரசியல் சக்திகள் இந்தப் போக்குகளுக்கு ஆதரவளிக்கின்றன.

1990-களிலிருந்து, இந்து ஸ்வயம்சேவக் சங் (HSS), இந்திய ஆர்.எஸ்.எஸ்-இன் சர்வதேச இணைப்பு அமைப்பு, தொண்டர்களையும் சாகாக்களையும் அமைதியாகக் கட்டமைத்து வருகிறது. HSS - சிவசேனா மற்றும் RPP போன்ற பரந்துபட்ட அமைப்புகளுடன் சேர்ந்து - மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராகவும், இந்து ராஜ்ஜியத்திற்குத் திரும்புவதற்காகவும் பிரச்சாரம் செய்து வருகிறது. அவர்கள் தங்கள் கோஷங்களை ஊழல் எதிர்ப்பு மற்றும் தொண்டு ஆகியவற்றைச் சுற்றி வடிவமைக்கின்றனர், இந்துப் பண்டிகைகள் மூலமாகவும், ஆன்லைன் செல்வாக்குள்ளவர்கள் மூலமாகவும் அணிதிரட்டல்களை மேற்கொள்கின்றனர். இந்து ஒற்றுமையின் பெயரால் ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைத் தேர்ந்தெடுத்து அணுகுகின்றனர். இளைஞர்களைப் போலல்லாமல் சக்திவாய்ந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த அணி, அதிகாரத்தைக் கைப்பற்றி இந்துத்துவ முடியாட்சியின் பெயராலும், ஊழல் எதிர்ப்பின் பெயராலும் சர்வாதிகாரத்தைத் திரும்பக் கொண்டுவரும்.

4. புலம்பெயர்வு என்ற தப்பிக்கும் வழியால் சோர்வடைதல்

மொன்செராட் மற்றும் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற சிறிய நாடுகளைத் தவிர்த்தால், வேலைக்காகப் புலம்பெயர்ந்தோரின் தனிநபர் விகிதத்தில் நேபாளம் முதலிடத்தில் உள்ளது. 31 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நேபாளத்தில், தற்போது 534,500 நேபாளிகள் (பதிவுசெய்யப்பட்டவர்கள்) வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள் - 1,000 நேபாளிகளுக்கு 17.2 பேர். சமீபத்திய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2000-ல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிகளைப் பெற்ற நேபாளிகளின் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 55,000 ஆக இருந்தது, இப்போது அது பத்து மடங்கு அதிகமாக உள்ளது. 2022-23-ல் 771,327 அனுமதிகள் வழங்கப்பட்டு புதிய உச்சத்தைத் தொட்டது.

நேபாளத்திற்குள் தங்கள் வேலைவாய்ப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல், புலம்பெயரவும், பெரும்பாலும் மோசமான வேலைகளுக்குச் செல்லவும் கட்டாயப்படுத்தப்படுவதால் இளைஞர்களின் பெரும் பகுதியினர் கோபத்தில் உள்ளனர். தென் கொரியாவின் இயோங்கம்-இல் 2025 பிப்ரவரியில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது, அங்கு துளசி புன் மгар என்ற 28 வயது புலம்பெயர்ந்த தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். அவர் வேலை செய்த பன்றிப் பண்ணையின் முதலாளி தொடர்ந்து ஊதிய விகிதத்தைக் குறைத்ததே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. துளசி, பொக்காராவில் உள்ள கூர்க்கா சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது தற்கொலையைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் தென் கொரியாவில் 85 நேபாளிகள் இறந்துள்ளனர் என்றும், அவர்களில் பாதி பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் அறிக்கைகள் வந்தன. இதுபோன்ற செய்திகள் அரசாங்கத்தின் மீதான விரக்தியையும் கோபத்தையும் அதிகரித்தன. அந்நிய நேரடி முதலீட்டாளர்களை விட தங்கள் சொந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது அரசாங்கம் அக்கறை காட்டுவதில்லை என்ற உணர்வு இணையத்தில் பலரால் பகிரப்பட்டது, ஏனெனில் நேபாளத்தில் பணம் அனுப்புதல் மூலம் அவர்கள் செய்யும் முதலீடு எந்தவொரு வெளிநாட்டு மூலதனத்தையும் விட மிக அதிகம்.

5. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் புறநிலைத் தாக்கங்கள்

கே.பி. ஓலியின் மைய-வலதுசாரி அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்தது. நேபாளம் பிப்ரவரி 2017-ல் அமெரிக்க அரசின் மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷனில் (MCC) இணைந்தது. இது இடதுசாரி அரசின் முடிவாக இருந்தபோதிலும், இடதுசாரிகளின் ஏனைய பிரிவினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அடிமட்டத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக, நேபாள அரசு MCC-யிலிருந்து விலகியே இருந்தது. ஆனால் ஓலியின் மைய-வலதுசாரி அரசு, அமெரிக்க உதவியை மீண்டும் தொடங்குவது, உள்கட்டமைப்புத் திட்டங்களின் தொடர்ச்சி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த MCC-யின் துணைத் தலைவர் ஜான் விங்கிளை ஆகஸ்ட் 2025-ல் காத்மாண்டுவிற்கு வரவேற்றது. இதற்கிடையில், நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் தீவிர வலதுசாரி அரசு, நேபாளத்தில் இதுவரை ஓரங்கட்டப்பட்டிருந்த இந்து தேசியவாத தீவிர வலதுசாரிக் கட்சியின் பங்கை ஊக்குவிக்க முயன்றது. 2025 போராட்டங்களில் ஏதேனும் புறநிலைச் செயல்பாடு இருந்திருந்தால், அது அமெரிக்காவை விட இந்தியாவே அந்த நிகழ்வுகளில் ஈடுபட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், இங்கும் கூட, நேபாளத்தில் உள்ள தீவிர வலதுசாரிகள் ஓலி அரசாங்கத்தின் வீழ்ச்சியையும் ஊழலுக்கு எதிரான உணர்வையும் சுலபமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

RPP-யின் எந்தவொரு வீடோ அல்லது அலுவலகமோ தாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் மார்ச் மாதம் RPP தொண்டர்கள் ஒரு கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கினர் - இது செப்டம்பரில் நடந்ததற்கு ஒரு முன்னோட்டமாக இருந்தது.

இராணுவம் நேபாளத்தில் அமைதியை மீட்டெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இது ஒரு ஒழுங்கற்ற மற்றும் ஆபத்தான அமைதியாகும். அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புழுதி அடங்க நேரம் எடுக்கும். இராணுவம், காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா போன்ற ஆன்லைன் பிரபலங்களில் ஒருவரைப் பொறுப்பேற்க அழைக்குமா? போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகளிடம் இணைந்து செயல்படாததன் மூலம் புகழ்பெற்ற நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான (2016-2017) சுஷிலா கர்கியைப் பரிந்துரைத்துள்ளனர். இவை இடைக்காலத் தேர்வுகளே. எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் செய்ய அவர்களுக்கு அதிகாரம் இருக்காது. அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பாசாங்கு செய்வார்கள், ஆனால் அது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி, நாட்டை ஒரு நீண்டகால நெருக்கடிக்குள் தள்ளும். புதிய பிரதமர் நேபாளத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லை.

(விஜய் பிரசாத் - அதுல் சந்திரா) 

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/09/five-theses-on-the-situation-in-nepal/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு