அக்டோபர் புரட்சியின் சர்வதேசத் தன்மை

ஜே.வி. ஸ்டாலின்

அக்டோபர் புரட்சியின் சர்வதேசத் தன்மை

அக்டோபர் புரட்சியினை "தேசிய எல்லைகளுக்கு உள்ளேயே நிகழ்ந்த" ஒரு புரட்சியாக மாத்திரமே கருதிட முடியாது. அது நாடுகளுக்கிடையே நிகழ்ந்த உலக அமைப்பின் பிரதானமான ஒரு புரட்சியாகும். ஏனென்றால், மனித குலத்தின் உலக சரித்திரத்தில் ஒரு (அடிப்படையான) தீவிர திருப்பத்தை, பழமையடைந்துவிட்ட முதலாளித்துவ உலகத்திலிருந்து புதிய சோசலிச உலகத்திற்கான திருப்பத்தைக் குறிக்கிறது.

கடந்த காலத்தில் நிகழ்ந்த புரட்சிகள் ஆட்சிக் கட்டிலில் இருந்த சுரண்டல் கும்பல் ஒன்றினை இறக்கிவிட்டு மற்றொரு சுரண்டல் கும்பலினை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவதில் முடிந்தன. சுரண்டல்காரர்கள் மாறினர், சுரண்டல் தொடர்ந்தது. அடிமைகளின் விடுதலை இயக்கங்கள் நடந்த அந்தக் காலத்தில் நடந்தது அவ்விதமே; பண்ணை அடிமைகளின் கிளர்ச்சிப் போராட்டங்களின்போது நடந்ததும் அவ்விதமே. இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் நிகழ்ந்த பிரசித்தி பெற்ற "மாபெரும்" புரட்சிகள் நடந்த போதும் அவ்வண்ணமே நடந்தன. முதலாளி வர்க்கத்தை எதிர்த்து சரித்திரத்தை திருப்பும் பாட்டாளி வர்க்கத்தின் முதல் மகத்தான வீரமான முயற்சியான ஆனால் இருந்தும் வெற்றியடையாத பாரீஸ் கம்யூனைப் பற்றி நான் பேசவில்லை.

அக்டோபர் புரட்சி இந்தப் புரட்சிகளில் இருந்து கொள்கையளவில் மாறுபடுகிறது. அதன் நோக்கம் ஒரு சுரண்டல் வடிவத்தினை மாற்றிவிட்டு மற்றொரு சுரண்டல் வடிவத்தை ஏற்படுத்துவதல்ல. ஒரு சுரண்டல் கும்பலைத் துரத்திவிட்டு மற்றொரு சுரண்டல் கும்பலைக் கொண்டு வருவதல்ல, ஆனால் அக்டோபர் புரட்சியின் நோக்கம் மனிதனை மனிதன் சுரண்டும் அத்தனை சுரண்டல் வடிவங்களையும் ஒழிப்பது, எல்லா சுரண்டல் கும்பல்களையும் ஒழித்துக் கட்டுவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது, இதுவரை இருந்திட்ட ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடையே மிகவும் புரட்சிகரமான வர்க்கத்தின் ஆட்சியை நிறுவுவது, ஒரு புதிய, வர்க்கங்களற்ற சோசலிச சமுதாயத்தை ஏற்படுத்துவது என்பதாகும்.

அக்டோபர் புரட்சி, தெளிவான இந்தக் காரணத்தினால்தான் மனிதகுல வரலாற்றில் அடிப்படையான ஒரு மாற்றத்தை குறிக்கிறது;  உலக  முதலாளித்துவத்தின்  சரித்திரத்தின்  தலைவிதியில் நேர்ந்திட்ட ஒரு அடிப்படையான மாற்றத்தைக் குறிக்கிறது; உலகத் தொழிலாளி வர்க்க விடுதலை இயக்கத்தில் நிகழ்ந்திட்ட ஒரு அடிப்படையான மாற்றத்தை குறிக்கிறது; உலகம் முழுதுமுள்ள சுரண்டப்பட்ட மக்களின் அமைப்பு ரீதியான போராட்ட வழிமுறைகளிலும், வடிவங்களிலும், வாழ்க்கை முறைகளிலும், மரபுகளிலும், பண்பாட்டிலும், சித்தாந்தத்திலும் நிகழ்ந்திட்ட அடிப்படையான ஒரு மாற்றத்தினைக் குறிக்கிறது.

அக்டோபர் புரட்சி, நாடுகளிடையே நிலவிய உலக அமைப்பில் நிகழ்ந்திட்ட ஒரு புரட்சி என்பதற்கான அடிப்படைக் காரணம் அதுதான்.

அதுவே எல்லா நாடுகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அக்டோபர் புரட்சியின்பால் கொண்டுள்ள ஆழ்ந்த அனுதாபத்தின் மூலாதாரமும் ஆகும். அவர்கள் அக்டோபர் புரட்சியினை,  தங்களது  சொந்த  விடுதலையையும் உறுதிப்படுத்தும் ஒன்றாக கருதுகிறார்கள்.

அக்டோபர் புரட்சி, உலகம்  முழுவதும் உள்ள புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியின் மீது செல்வாக்கு செலுத்துகிற ஏராளமான அடிப்படை விஷயங்களைப் பார்போம்.

1. அக்டோபர் புரட்சி உலக ஏகாதிபத்திய முன்னணியில் உடைப்பினை ஏற்படுத்திய பிரதான காரணத்திற்காகவும், மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகளில் ஒன்றில் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, சோசலிசப் பாட்டாளி வர்க்கத்தினை ஆட்சியில் அமர்த்தியதற்காகவும் குறிப்பிடத்தக்கது.

கூலித்  தொழிலாளி  வ ர்க்கம் ,  அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட வர்க்கம், ஒடுக்கப்பட்டவர்களுக்கானதும் சுரண்டப்பட்டவர்களுக்குமானதுமாகிய வர்க்கம், மனிதகுல வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் வர்க்கம் என்ற நிலைக்கு உயர்ந்து, எல்லா நாடுகளிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தினருக்குப் பரவக் கூடிய உதாரணத்தினை அமைத்துக் காட்டியது.

இதன் பொருள் அக்டோபர் புரட்சி, ஏகாதிபத்திய நாடுகளில் - ஒரு புதிய யுகத்தினை - பாட்டாளிவர்க்க புரட்சிகளின் யுகத்தினைக் கொண்டுவந்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அது (அக்டோபர் புரட்சி) நிலப்பிரபுக்களிடம் இருந்தும், முதலாளிகளிடம் இருந்தும் உற்பத்திச் சாதனங்களையும் கருவிகளையும் எடுத்து, அவைகளைப் பொதுச் சொத்துக்களாக மாற்றியது. அது அவ்வண்ணம் முதலாளித்துவ சொத்திற்கு எதிராக சோசலிச சொத்தை முன்வைத்தது. அது அவ்வண்ணமே, முதலாளித்துவ சொத்து தொடப்பட முடியாதது, புனிதமானது, நிரந்தரமானது என்ற முதலாளித்துவப் பொய்யினை அம்பலப்படுத்தியது.

அக்டோபர் புரட்சி முதலாளி வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. முதலாளி வர்க்கத்தின் அரசியல் உரிமைகளைப் பறித்தது, முதலாளித்துவ அரசு எந்திரத்தை உடைத்து அழித்தது. சோவியத்துகளுக்கு அதிகாரத்தினை, ஆட்சியினை மாற்றியது. இவ்வண்ணம், அது சோவியத்துக்களின் சோசலிச ஆட்சியினை பாட்டாளிவர்க்க ஜனநாயகம் என்றும், முதலாளித்துவ பாராளுமன்றத்தினை முதலாளித்துவ ஜனநாயகம் என்றும் வேறுபடுத்திக் காட்டியது. தோழர் லாபார்க், கி.பி., 1887லேயே எவ்வளவு சரியாகச் சொல்லி இருந்தார்; "புரட்சி நிகழும் வேளையில் எல்லா முன்னாள் முதலாளிகளும் தங்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டு நிற்பர்"1. (1. பால் லாபார்க், "புரட்சியின் அடுத்த நாளில்", லெனினின் எழுத்துகள் - ருஷ்யப் பதிப்பு, தொகுதி 1, 1925, பக்கம் 329-330)

அக்டோபர் புரட்சி, மேலும் முதலாளித்துவ பாராளுமன்ற வாதத்தின் மூலம் அமைதியான வழியில் சோசலிசத்திற்கான மாற்றம் நிகழ முடியும் என்ற சமூக ஜனநாயகவாதிகளின் பொய்க்கூற்றினை அம்பலப்படுத்தியது.

ஆனால் அக்டோபர் புரட்சி அதோடு நின்றுவிடவில்லை, நின்றுவிடமுடியாது. அது பழைய, முதலாளித்துவ அமைப்பினை உடைத்தெறிந்த பின்னர், புதிய சோசலிச அமைப்பினை நிர்மாணிக்க ஆரம்பித்தது. அக்டோபர் புரட்சியின் 10 ஆண்டுகள் என்பவை கட்சி, தொழிற் சங்கங்கள், கலாசார அமைப்புகள், போக்குவரத்து, தொழில், செம்படை ஆகியவைகளைப் புதிதாக நிர்மாணித்த 10 ஆண்டுகளாக இருந்திருக்கின்றன. சோவியத் நாட்டின் கட்டுமானப் பணிகளில் சோசலிசத்தின் சந்தேகத்திற்கிடமில்லாத வெற்றிகளானது, பாட்டாளி வர்க்கம் முதலாளிகள் இல்லாமலும் முதலாளிகளை எதிர்த்தும் வெற்றிகரமாக ஆட்சி நடத்த முடியும் என்பதனையும் முதலாளிகள் இல்லாமலும் முதலாளிகளை எதிர்த்தும் அது (பாட்டாளி வர்க்கம்) வெற்றிகரமாக தொழிற்சாலைகளைக் கட்ட முடியும் என்பதனையும் அது முதலாளிகள் இல்லாமலும் முதலாளிகளை எதிர்த்தும் முழுமையான தேசப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக வழிநடத்த  முடியும்  என்பதனையும்  முதலாளித்துவம் சுற்றிச் சூழ்ந்துகொண்டு இருந்தாலும் பாட்டாளி வர்க்கம் வெற்றிகரமாக சோசலிசத்தைக் கட்ட முடியும் என்பதனையும் தெள்ளத்தெளிவாகக் எடுத்துகாட்டி இருக்கிறது அக்டோபர் புரட்சி.

எப்படி வயிறு இல்லாமல் தலையும் உடம்பின் மற்ற பாகங்களும் செயல்பட முடியாதோ அப்படியே சுரண்டுபவர்கள் இல்லாமல் சுரண்டப்படுபவர்கள் இருக்க முடியாது என்கிற பத்தாம்பசலிச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தது புராதன ரோம் சாம்ராஜ்யத்தின் மிகவும் புகழ்வாய்ந்த ரோமானிய செனட்டர் மெனீனியஸ் அக்ரிப்பா ஒருவர் மாத்திரமல்ல. இன்றைக்கு இந்த "சித்தாந்தம்"தான் பொதுவாக சமூக ஜனநாயக அரசியல் "தத்துவத்தி"னுடையவும், குறிப்பாக சமூக ஜனநாயகத்தினை ஏகாதிபத்திய முதலாளிகளோடு கூட்டணி என்கிற கொள்கையினுடைய மூலாதாரமாகவும் இருக்கிறது. எங்கும் இயல்பாகவே புரையோடிப் போயிருக்கின்ற இந்த "சித்தாந்தம்" இன்றைக்கு முதலாளித்துவ நாடுகளில் வாழும் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமாக்குதல் என்கிற பாதையில் குறுக்கே நிற்கின்ற பெரிய தடைகளில் ஒன்றாகும். அக்டோபர் புரட்சியின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று - இந்த பொய்யான "சித்தாந்தத்திற்கு" மரண அடி கொடுத்ததுதான்.

அக்டோபர் புரட்சியின் இது போன்றனவும் இன்ன பிற இதே மாதிரியான விளைவுகளும் முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் மீது முக்கியமானதொரு செல்வாக்கினைச் செலுத்திட தவறாது, தவற முடியாது என்ற விஷயத்தினை நிரூபித்திட இனியும் அவசியம் உள்ளதா?

முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிச கருத்துக்களின் முற்போக்கான வளர்ச்சி, சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் தொழிலாளி வர்க்கத்தின்பால் எல்லா நாடுகளிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் வளர்ந்து வரும் அனுதாபம், இறுதியாக சோவியத் நாட்டிற்கு வருகை தருகின்ற தொழிலாளரின் பல தூதுக்குழுக்கள் - இவை போன்ற பொதுவாகத் தெரிந்த பல உண்மை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிரூபிப்பதென்ன? அக்டோபர் புரட்சியால் தூவப்பட்ட வித்துக்கள் ஏற்கெனவே கனிகொடுக்கத் தொடங்கிவிட்டன என்ற உண்மையைத்தான் இவை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

2. அக்டோபர் புரட்சி ஏகாதிபத்தியத்தை அதன் ஆதிக்க மையங்களில் அசைத்திருப்பது மட்டும் அல்லாமல் அதன் வளர்ச்சியடைந்த நகரங்களில் மட்டும் அல்லாமல் ஏகாதிபத்தியத்தின் பின்புறப் பகுதிகளிலும் அதன் முகடுகளிலும் கூடத் தாக்கி இருக்கின்றது. அது காலனி நாடுகளிலும் சார்பு நாடுகளிலும் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியை, அதிகாரத்தைத் தகர்த்திருக்கின்றது.

அக்டோபர் புரட்சி நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் தூக்கி எறிந்த பின்னர் - தேசிய மற்றும் காலனி ஆதிக்க ஒடுக்குமுறை என்கிற சங்கிலிகளை உடைத்து எறிந்துவிட்ட பின்னர் - ஒரு பரந்த ராஜ்ஜியத்தின் ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரையும் அது விடுவித்தது. பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் அனைத்து  மக்களையும் விடுவிக்காமல், தானாகவே தன்னை (பூரணமாக) விடுவித்துக்கொள்ள முடியாது.

பாட்டாளி வர்க்கம் இத்தகைய தேசிய மற்றும் காலனி நாடுகளின் புரட்சியை வெற்றிகரமாக சோவியத் யூனியனில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த வெற்றி தேசியப் பகைமை, தேசங்களிடையே சண்டை ஆகியவற்றின் கொடியின் கீழல்ல; ஆனால் பரஸ்பர நம்பிக்கையினுடையவும், சோவியத் யூனியனின் பலதரப்பட்ட மக்களின், மற்றும் தொழிலாளர்கள் விவசாயிகள் இவர்களிடையே நேசமான சகோதரத்துவ ஒப்பந்தம் என்கிற பதாகையின் கீழ்தான், தேசியவாதம் என்கிற பெயரில் அல்ல - சர்வதேசியவாதம் என்கிற பெயரால் அடையப்பட்டது. இந்த உண்மை அக்டோபர் புரட்சியின் ஒரு சிறப்பான குணாம்சமாகும்.

நமது நாட்டில் தேசிய மற்றும் காலனி நாட்டுப் புரட்சிகள் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் சிறப்பாக நடைபெற்றிருந்த காரணத்தால்தான், ஒடுக்கப்பட்ட மக்கள், காலனி ஆட்சியில் வாடிய மக்கள் அனைவரும் மனிதகுல வரலாற்றில்,  முதல்  தடவையாக,  உண்மையிலேயே சுதந்திரமான - உண்மையிலேயே சமமான - மக்கள் என்கிற நிலைக்கு உயர்ந்து, இவ்வண்ணமே முழு உலகத்தின் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் பரவக்கூடிய ஒரு முன்மாதிரியினைப் படைத்துக் காட்டி இருக்கின்றார்கள். இதன்மூலம் அக்டோபர் புரட்சி ஒரு புதிய யுகத்தினை - காலனி நாடுகளின் புரட்சி யுகத்தினை - பாட்டாளி வர்க்கத்தின் தோழமையோடும் தலைமையின் கீழும் உலகத்தின் ஒடுக்கப்பட்ட நாடுகளில் நடத்தபடப் போகிற காலனிய புரட்சிகளின் யுகத்தினைக் கொண்டுவந்து காட்டியிருக்கிறது என்றுதான் பொருள் கொள்ளலாம்.

நினைவுக்கெட்டாத காலம் முதல், உலகத்தில் உள்ள மக்களை தாழ்ந்த இனம் என்றும், உயர்ந்த இனம் என்றும் கருப்பர்கள் என்றும் வெள்ளையர்கள் என்றும் பிரித்துவைத்து, அதில் முன்னவர்கள் நாகரிகத்திற்குத் தகுதியற்றவர்கள் - சுரண்டுவதற்கு ஆட்பட்டு விட்ட பொருள்கள் என்றும், பின்னவர்கள் நாகரிகத்தின் காவலர்கள் - தூண்கள் மற்றும் அவர்களின் லட்சியமே முன்னவரைச் சுரண்டுவதுதான் என்ற முந்தைய காலத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து, புராணக்கதை இவையெல்லாம் இன்றைக்கு உடைத்து எறியப்பட்டுவிட்டதாகக் கருதவேண்டும். அக்டோபர் புரட்சியின் அதிமுக்கிய விளைவுகளில் ஒன்று அத்தகைய கட்டுக்கதைகள் மரண அடி வாங்கியது ஆகும்.

இன்றைக்கு சோவியத் யூனியனின் வளர்ச்சிப் பாதைக்குள் ஈர்க்கப்பட்டிருக்கின்ற, விடுதலை அடைந்துவிட்ட ஐரோப்பியர் அல்லாத நாட்டினரும், உண்மையிலேயே, முற்போக்கான நடைமுறையின் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். அவர்களும் இதன் மூலமாக ஒரு முன்னேற்றமான நாகரிகத்தினை ஏற்படுத்தி, அதன் மூலம் இத்தகைய வல்லமையில் ஐரோப்பியரல்லாத மக்கள் ஐரோப்பிய மக்களுக்கு கிஞ்சிற்றும் குறைந்தவர்கள் அல்லர் என்று அக்டோபர் புரட்சி, நடைமுறையில் நிரூபித்துக் காட்டியதன் மூலம் அத்தகைய பழங்கதைகளுக்கு மரண அடி கொடுத்தது.

முன்னாளில் "ஒத்துக்கொள்ளப்பட்ட" மற்றொரு கருத்து: ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்திட ஒரே வழி தேசியவாதம்தான், தேசங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து நிற்கின்ற முறைதான், தேசங்களைப் பிரிவினை செய்கின்ற முறைதான் பல்வேறு தேசங்களைச் சார்ந்த உழைக்கும் வெகுஜன மக்களிடையே தேசியப் பகைமையினைத் தீவிரப்படுத்தும் வழிதான் என்பது ஆகும். அந்தப் பழங்கருத்து இன்றைக்கு மறுக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்.

அக்டோபர் புரட்சி இத்தகைய பழங்கதைக்கு மரண அடி கொடுத்தது. இது அக்டோபர் புரட்சியின் மிக முக்கிய விளைவுகளில் ஒன்றாகும். பாட்டாளி வர்க்க சர்வதேசிய முறை மூலம்தான் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் விடுவிக்கின்ற நிகழ்ச்சி நிகழமுடியும், நிகழ வேண்டும். அந்த முறை ஒன்றுதான் சரியான முறை என்று நடைமுறையில் நிரூபித்துக் காட்டியதன் மூலம் "முந்தைய ஒத்துக்கொள்ளப்பட்ட பழங்கருத்துக்கு" மரண அடி கொடுத்தது அக்டோபர் புரட்சி. கட்டாயமின்மை, சர்வதேசியம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் தான் மிகவும் வித்தியாசமான - மாறுபட்ட - நாடுகளின் தொழிலாளர்கள், விவசாயிகளின் சகோதரத்துவ ஐக்கியம் ஏற்பட முடியும், ஏற்பட வேண்டும் என்று அக்டோபர் புரட்சி நடைமுறையில் நிரூபித்துக்காட்டி இருக்கிறது. சோவியத் (சோசலிசக் குடியரசுகளின்) யூனியன் அனைத்து நாடுகளையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒரே பொருளாதார அமைப்பில் எதிர்காலத்தில் சேரப்போவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது; நேரடி நிரூபணமாகவும் விளங்குகிறது. அக்டோபர் புரட்சியின் இத்தகைய - இன்னும் இதுபோன்ற - இன்னபிற விளைவுகளும், காலனி ஆதிக்க நுகத்தடியிலும் சார்பு நாடுகளிலும் உழலுகின்ற மக்களின் புரட்சிகர இயக்கத்தின் மீது ஒரு முக்கியமான செல்வாக்கை பிரயோகிக்கத் தவறமுடியாது, தவறாது. சீனம், இந்தோனேசியா, இந்தியா முதலான நாடுகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியும், சோவியத் யூனியன்பால் இந்த மக்களிடம் வளரும் அன்பும் அனுதாபமும் இந்த உண்மையை பளிச்சென்று விளக்குகின்றன.

கேட்பாரற்றுச் சுரண்டிக்கொண்டிருந்த யுகம் - காலனி மற்றும் சார்பு நாடுகளை ஒடுக்கிக்கொண்டிருந்த யுகம் - இன்றைக்கு சாய்ந்திருக்கின்றது. காலனி நாடுகளிலும், சார்பு நாடுகளிலும் விடுதலைப் புரட்சிகளின் யுகம் - அத்தகைய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் விழிப்படைகின்ற யுகம் - புரட்சியில் பாட்டாளிவர்க்கம் தலைமை தாங்கும் யுகம் துவங்கிவிட்டது.

3. அக்டோபர் புரட்சி, புரட்சியின் வித்துகளை ஏகாதிபத்தியத்தின் நடுவிலேயும், பின்புறப்பகுதிகளிலேயும், "முக்கிய பெரிய நகரங்களிலும்" விதைத்து, ஏகாதிபத்தியத்தின் வலிமையைப் பலவீனப்படுத்திவிட்டதாலும், காலனி நாடுகளில் அதன் ஆதிக்கத்தை அசைத்துவிட்டதாலும், உலக முதலாளித்துவத்தை இன்றைக்கு முழுமையாகவே பேரபாயத்தில் கிடத்தி இருக்கிறது.

ஏகாதிபத்திய நிலையை அடைந்துவிட்ட முதலாளித்துவத்தின் தன்னிச்சையான வளர்ச்சியின் காலம் கடந்துவிட்டது. முதலாளித்துவம் ஏகாதிபத்திய காலகட்டத்தில் சமத்துவமற்று வளர்ச்சியடைகிறது. இத்தகைய சமத்துவமற்ற வளர்ச்சியின் காரணமாக,  பிணக்குகள்  மற்றும்  ஆயுதம்  ஏந்திய மோதல்கள் தவிர்க்க முடியாமல் நிகழ்கின்ற காரணத்தாலும் முன்னெப்போதுமில்லாத ஏகாதிபத்திய அடக்குமுறைகள் காரணமாகவும் 'முதலாளித்துவத்தின் தன்னிச்சையான வளர்ச்சிக் கட்டம் தாண்டி அது இன்றைக்கு சீர்கேடு அடைந்து செத்துக்கொண்டு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அக்டோபர் புரட்சியின் மூலம் ஒரு பெரிய நாடு தன்னை உலக முதலாளித்துவ அமைப்பிலிருந்து விடுவித்துக்கொண்ட நிகழ்ச்சி, முதலாளித்துவ அமைப்பின் மரணத்தை - இறுதிக்காலத்தை - விரைவுபடுத்தாமல் இருக்க முடியாது. இத்தகைய செயல்மூலமாக ஏகாதிபத்தியத்தின் அஸ்திவாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருக்கின்றன.

அதையும்விட அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்ன? அக்டோபர் புரட்சி ஏகாதிபத்தியத்தை உலுக்கிய அதே நேரத்தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற வடிவில் சக்திவாய்ந்த பகிரங்கமான ஒரு தளத்தை - உலக புரட்சிகர இயக்கம் முன்னெப்போதும் பெற்றிராத ஒரு தளத்தை, - ஆதரவிற்காகதான் இப்போது நம்பிக்கொண்டிருக்கிற ஒன்றினை - உருவாக்கியிருக்கிறது. அக்டோபர் புரட்சி உலகப் புரட்சிகர இயக்கத்தின் பகிரங்க - சக்திவாய்ந்த - மையத்தை ஒரு தலைமையகத்தை உருவாக்கி இருக்கிறது. அக்டோபர் புரட்சி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கமும் எல்லா நாடுகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்த புரட்சிகரமான ஒரு முன்னணியினை ஸ்தாபன ரீதியில் திரட்டிக்கொண்டு இருக்கிறது.

அக்டோபர் புரட்சி, பிரதானமாக உலக முதலாளித்துவத்திற்கு மரண அடியை கொடுத்தது. இந்த மரண அடியிலிருந்து முதலாளித்துவத்தினால் எப்போதும் மீள முடியாது. இந்த ஒரே காரணத்தால் மட்டும், முதலாளித்துவம் அக்டோபருக்கு முன்பு, தன் வசமிருந்த "நிதானம்" "ஸ்திரத்துவம்" ஆகியவற்றை இனி எப்போதும் மீண்டும் பெறப் போவதில்லை.

முதலாளித்துவம் தற்காலிகமாக ஒரளவு உறுதி அடையலாம், தன் உற்பத்தியினை அது திட்டமிடலாம். நாட்டின் அதிகாரத்தினை, நிர்வாகத்தினை அது பாசிசத்தின் கையில் மாற்றி விடலாம், தொழிலாளி வர்க்கத்தினைத் தற்காலிகமாக அடக்கலாம், ஆனால் அது (முதலாளித்துவம்) இதமாக, சுகமாக அனுபவித்து வந்த "அமைதியினை"யும் "உறுதியினை"யும் "நிதானத்தை"யும் "நிலைத்ததன்மை"யினையும் இனி எப்போதும் மீண்டும் பெறமுடியாது. ஏனென்றால் உலக முதலாளித்துவம், தவிர்க்க முடியாதபடி தனது முழுவளர்ச்சிக் கட்டத்தினை அடைந்துவிட்டது. இப்போது தவிர்க்க முடியாதபடி அதைப் புரட்சியின் தீக்கங்குகள் வெடித்து நொறுக்கியே தீரும்.

இப்போது ஏகாதிபத்தியத்தின் நடு மையத்திலும், இன்னும் கொஞ்ச நேரத்தில் அதன் சுற்றுப்புறங்களிலும் முதலாளித்துவ படைப்பினை (ஒன்றுமில்லாமல் ஆக்குகின்ற) அடியோடு தகர்க்கின்ற - முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தினந்தோறும் நெருக்கமாகிக் கொண்டு வருகின்றது. மிகவும் புகழ்பெற்ற நீதிக்கதை ஒன்றில் சொல்லப்பட்டு இருப்பது போல "சேற்றிலிருந்து அது தனது காலை எடுத்தபோது, அதன் அலகு சேற்றில் மாட்டிக்கொண்டது. அது அதன் அலகை எடுத்துவிட்டவுடன் அதன் வால் சேற்றில் சிக்கிக் கொண்டது" என்றவாறு மீளமுடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

இதன் பொருள் முதலாவதாக, அக்டோபர் புரட்சியானது, ஆம் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஒரு முக்கிய காரணியாகக் கருதிட ஆளும் வர்க்கங்களைக் கட்டாயப்படுத்தியது.

இரண்டாவதாக, அக்டோபர் புரட்சியானது உலகம் முழுதும் உள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் முக்கியத்துவத்தையும், வலிமையையும், தீரத்தையும், போரிடத் தயாராக இருக்கும் நிலைமையையும் பெருமளவுக்கு உயர்த்தி இருக்கிறது. எனவே இப்போது உழைக்கும் வெகுஜனங்கள் அறிவு ஏதும் இன்றி இருட்டில் தடுமாறிக் கொண்டு இருக்கின்ற "ஒரு குருட்டுக் கும்பல்" என்று இனி ஒருபோதும் கருதப்படமாட்டார்கள். ஏனென்றால், அக்டோபர் புரட்சி, அவர்களின் பாதையினை ஒளிமயமாக்குகின்ற - கலங்கரை விளக்கத்தை - உருவாக்கி இருக்கின்றது. அது அவர்களுக்கென்று பயனுள்ள எதிர்காலத்தினை திறந்து விட்டிருகின்றது. முன்பெல்லாம் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் அபிலாசைகள், தாக்கங்கள், முயற்சிகள், திட்டங்கள் ஆகியவைகளை வகுப்பதற்கும், விளக்கிச் சொல்வதற்கும் ஒரு பகிரங்க உலக மேடை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அத்தகைய உலக மேடை, உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற வடிவத்தில் அமைந்து இருக்கின்றது.

இவ்வகையில் ”போல்ஷ்விக் அரசு” என்று ஒன்று இருப்பதே, மோசமான, இருண்ட பிற்போக்கு சக்திகளுக்கும் கட்டுப்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது. இவ்வண்ணம் அக்டோபர் புரட்சி விடுதலைக்கான போராட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது.

எல்லா நாடுகளையும் சார்ந்த சுரண்டல்காரர்கள், "போல்ஷ்விக்குகள்" என்றாலே காட்டுத்தனமான வெறுப்பினைக் கொண்டிருப்பதற்கான காரணத்தை, இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். சரித்திரம் திரும்புகிறது. ஆனால் இப்போது புதியவடிவில் திரும்புகிறது. முன்புபோலவே, நிலமானிய அமைப்பின் வீழ்ச்சிக் கால கட்டத்தின் போது, "ஜெகபின்" என்ற சொல் எல்லா நாடுகளையும் சார்ந்த பணக்கார வர்க்கத்தினர் மத்தியில் வெறுப்பினை - பீதியினைக் கிளப்பியதைப் போல, முதலாளித்துவ வீழ்ச்சியின் காலகட்டமான இப்போது, "போல்ஷ்விக்" என்ற சொல் எல்லா நாடுகளையும் சார்ந்த முதலாளிகள் மத்தியில் பீதியினையும் வெறுப்பினையும் கிளப்புகிறது. இது போலவே, அன்று உருவாகிக் கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் புரட்சிப் பிரதிநிதிகளின் அடைக்கலமாகவும், பள்ளிக்கூடமாகவும் "பாரீஸ்" நகரம் இருந்தது போலவே, இப்போது தோன்றிக்கொண்டு இருக்கின்ற பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிப் பிரதிநிதிகளின் அடைக்கலமாகவும் பள்ளிக்கூடமாகவும் "மாஸ்கோ" விளங்குகிறது. அன்று "ஜெகோபின்களின் மீதான வெறுப்பு" எப்படி நிலமானிய அமைப்பினை அதன் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றவில்லையோ அது போலவே இன்று போல்ஷ்விக்குகளை வெறுப்பதுவும் முதலாளித்துவத்தை அதன் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றாது; காப்பாற்ற முடியாது என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா?

முதலாளித்துவத்தின் "ஸ்திரத்துவ" யுகம் மாய்ந்து விட்டது. முதலாளித்துவ அமைப்பு அழிவிற்கு அப்பாற்பட்டது என்ற பழங்கதையும் அதனோடு சேர்ந்து முடிந்து போய்விட்டது. முதலாளித்துவத்தின் வீழ்ச்சி யுகம் தொடங்கிவிட்டது.

4. அக்டோபர் புரட்சி, பொருளாதார, சமூக, அரசியல் உறவுகளில் மட்டும் ஏற்பட்ட புரட்சி என்று மாத்திரம் கருதிடமுடியாது. அதே நேரத்தில், அது (அக்டோபர் புரட்சி) தொழிலாளி வர்க்கத்தின் உள்ளங்களில் ஏற்பட்ட புரட்சி - அவர்களின் சித்தாந்தத்தில், வழிகாட்டும் நெறியில் நேர்ந்திட்ட ஒரு புரட்சியுமாகும். அக்டோபர் புரட்சி மார்க்சிய பதாகையின் கீழ் - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற கொள்கைப் பதாகையின் கீழ் - ஏகாதிபத்தியத்தினுடையவும் பாட்டாளி வர்க்க புரட்சிகளினுடையதுமான யுகத்தின் மார்க்சியமான லெனினியப் பதாகையின் கீழ் பிறந்து வலுப்பெற்றது. ஆகவேதான் அது சீர்திருத்தவாதத்தின் மீது மார்க்சியம் பெற்ற வெற்றியைக் குறிக்கிறது. சமூக ஜனநாயகவாதத்தின் மீது லெனினிசம் பெற்ற வெற்றியினை - இரண்டாவது அகிலத்தின் மீது மூன்றாவது அகிலம் பெற்ற வெற்றியினைக் குறிக்கிறது.

அக்டோபர் புரட்சியானது, மார்க்சியத்திற்கும் சமூக ஜனநாயக வாதத்திற்கும் இடையே, லெனினிசத்திற்கும் சமூக ஜனநாயகவாதத்திற்கும் இடையே - கடக்க முடியாத ஒரு பெரிய பிளவினை உருவாக்கிவிட்டு இருக்கின்றது.

முன்பு அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வெற்றிக்கு முன்பு சமூக ஜனநாயகவாதம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்திலிருந்து பகிரங்கமாகவே விலகி இருந்து கொண்டும், இந்த கருத்தினை அடையவேண்டி முழுக்கமுழுக்க ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டும், மார்க்சியப் பதாகையை வெறுமனே ஜம்பமாக உயர்த்திப் பிடித்துக்கொண்டு இருக்க முடிந்தது. சமூக ஜனநாயகத்தின் இத்தகைய நடத்தையானது, முதலாளிவர்க்கத்திற்கு ஆபத்து எதையும் உருவாக்கவில்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த ஒன்றே. அந்த காலகட்டத்தில், சமூக ஜனநாயகமும் மார்க்சியமும் ஒன்றேதான் அல்லது கிட்டத்தட்ட ஒன்றேதான் என்று சம்பிரதாய ரீதியில் நம்பப்பட்டு வந்தது. இப்போது - அதாவது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வெற்றிக்குப் பின்னர் - மார்க்சியம் எதற்கு வழிகாட்டுகிறது என்பதை (ஒவ்வொருவரும் தாமகவே பார்த்துவிட்டபோது) அதன் வெற்றி முக்கியமாக எதனைக் குறிக்கிறது என்பதனை ஒவ்வொருவரும் தாமாகவே பார்த்து விட்டிருக்கிற இப்போது, சமூக ஜனநாயகம் இனி ஒரு போதும் மார்க்சிய பதாகையை ஜம்பமாக ஆட்டமுடியாது.

முதலாளித்துவத்திற்கு திட்டவட்டமான - நிச்சயமான ஆபத்தினை உருவாக்கக்கூடிய வேலைகளில் இறங்காமல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தோடு கொஞ்சிக் குலாவுவது இனி ஒ ரு போதும் நடவாது. மார்க்சிய உணர்வோடு நீண்ட காலத்துக்கு முன்னரேயே உறவை முறித்துக்கொண்ட காரணத்தால், மார்க்சியப் பதாகையைக் கைவிட்டுவிட வேண்டிய கட்டாயத்தில் சமூக ஜனநாயகவாதம் இருந்து கொண்டு இருக்கின்றது. சமூக ஜனநாயகவாதம் பகிரங்கமாகவும், திட்டவட்டமாகவும், மார்க்சியத்தின் தோன்றலுக்கு எதிரான நிலையை - அக்டோபர் புரட்சிக்கு எதிரான நிலையை - உலகத்தின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிரான நிலையை - எடுத்து இருக்கிறது அது. இப்போதைக்கு மார்க்சியத்திலிருந்து தனது தொடர்பினை அறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நிஜத்தில் அது அப்படியே செய்து இருக்கிறது. ஏனென்றால், இப்போதைய நிலைமைகளில் உலகத்தின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசினைப் பகிரங்கமாகவும், உண்மையான அன்போடும், விசுவாசத்தோடும் ஆதரிக்காமல், ஒருவர் தன்னை மார்க்சியவாதி என்று அழைத்துக்கொள்ள முடியாது. தனது சொந்த முதலாளிவர்க்கத்தினை எதிர்த்து ஒரு புரட்சிகர போராட்டத்தினைச் செய்யாமலேயே - தனது சொந்த நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் வெற்றிக்கான நிலைமைகளை உருவாக்கிடாமலேயே ஒருவர் தன்னை மார்க்சியவாதி என்று அழைத்துக்கொள்ள முடியாது. சமூக ஜனநாயகத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையே ஒரு பிளவு தோன்றிவிட்டது. இனிமேல், மார்க்சியத்தின் ஒரே பாதுகாவலாகவும், கொத்தளமாகவும் விளங்குவது லெனினிசமும், கம்யூனிசமும் ஆகும். ஆனால் விசயம் இத்தோடு முடிந்துவிடவில்லை.

அக்டோபர் புரட்சி, சமூக ஜனநாயகத்திற்கும், மார்க்சியத்திற்கும் இடையே வித்தியாசங்களை வெளிப்படுத்திவிட்டதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது, சமூக ஜனநாயகவாதிகளை, உலகத்தின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசிற்கு எதிராக நிற்கும் முதலாளித்துவத்தின் நேரடிப் பாதுகாவலர்களின் முகாமுக்குத் தள்ளியது. திருவாளர்கள் ஆட்லர்களும், போயர்களும், வேல்சுகளும், லோங்கேக்களும், ப்ளம்களும், லெவிக்களும் சோவியத் சர்க்காரை எதிர்த்துக் கூச்சல் போடுவதின் அர்த்தம் என்ன? சோவியத் யூனியனில் முதலாளித்துவ அமைப்பை மீண்டும் கொண்டுவருவதற்காக, "நாகரீகமான" நாடுகளில் முதலாளித்துவ அடிமைத்தனத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்காகப் போராடுவார்கள், தொடர்ந்து போராடுவார்கள் என்றுதான் அர்த்தம்.

இன்றைய சமூக ஜனநாயகத்துவம் முதலாளித்துவத்தின் சித்தாந்த ரீதியான ஆதரவுடன் செயல்படுகிறது. லெனின் எவ்வளவு சரியாக சொல்லி இருக்கிறார்:

"இன்றைய சமூக ஜனநாயக அரசியல்வாதிகள் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மத்தியில் இருந்து செயல்படும் முதலாளி வர்க்கத்தின் உண்மையான ஏஜெண்டுகள்; முதலாளி வர்க்கத்தின் தொழிலாளர் படைத்தளபதிகள்; பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் உள்நாட்டு யுத்தம் நடந்திடும் போது அவர்கள் (சமூக ஜனநாயகவாதிகள்- மொர்) தவிர்க்க முடியாதபடி "கம்யூனிஸ்டுகளுக்கு" எதிரான "வார்சலியர்களின்" நிலையைத்தான் எடுப்பார்கள்.2 (2. வி.ஐ.லெனின்: "ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்", லெனின் எழுத்துகள், நான்காவது ருஷ்யப் பதிப்பு, தொகுதி 22, பக்கம் 182)

தொழிலாளர் இயக்கத்தில் சமூக ஜனநாயகவாதிகளுக்கு ஒரு முடிவுகட்டாமல் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டுவது என்பது முடியாது.

அதனால்தான், செத்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவ யுகம்தான், தொழிலாளர் இயக்கத்திலும் செத்துகொண்டிருக்கும் சமூக ஜனநாயகவாதத்தின் யுகமும்கூட. மற்ற எல்லா அம்சங்களையும்விட அக்டோபர் புரட்சியின் மாபெரும் முக்கியத்துவம், உலகத் தொழிலாளர் இயக்கத்தில் சமூக ஜனநாயகவாதத்தின் மீது லெனினிசம் பெற்ற வெற்றியைக் குறிக்கிறது என்ற உண்மையில் அடங்கியுள்ளது.

தொழிலாளர் இயக்கத்தில், இரண்டாம் அகிலத்தினுடையவும், சமூக ஜனநாயகத்தினுடையவுமான யுகம் முடிவு பெறுகிறது. லெனினிசத்தினுடையவும், மூன்றாவது அகிலத்தினுடையவமான யுகம் துவங்கி இருக்கிறது.

- ஜே.வி.ஸ்டாலின்
(பிராவ்தா, எண். 255 நவம்பர் 6-7, 1927)