மக்களை மனநோயாளிகளாக மாற்றும் தனியார்மாடல்தான் இந்த திராவிட மாடல்

செந்தளம் செய்திப்பிரிவு

மக்களை மனநோயாளிகளாக மாற்றும் தனியார்மாடல்தான் இந்த திராவிட மாடல்

கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை தனியார்மயம்

அக்டோபர் 23 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் சுப்ரியா சாஹூ கீழ்பாக்கம் மருத்துவமனை குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், 

“மனநல காப்பகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு, பணியாளர்கள் நிலை, காலிப் பணியிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது 360 டிகிரி கோணத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம் எனத் தெரிய வந்துள்ளது. அவற்றை முன்னெடுக்கும் திறன் தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புக்கு இல்லை. உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள், கார்ப்பரேட் பங்களிப்புகள் மூலம் நிதியைத் திரட்டும் வாய்ப்புகள் மனநல காப்பகத்திற்கு உள்ளன, இதை உறுதிசெய்யும் வகையில் நிறுவன சட்டப் பிரிவு 8ன் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு நிறுவனங்களைப் போன்று பிரத்யேக அரசு நிறுவனம் அமைப்பது அவசியம் எனவும் இதன் வாயிலாக காப்பகத்தின் மேம்பாட்டிற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்” 

என்று அக்கடிதத்தில் வழிகாட்டப்பட்டிருந்தது. இதன் மூலம் கீழ்பாக்கம் மருத்துவமனையை அரசு-தனியார்-பங்கேற்பு எனும் பெயரில் முழுவதுமாக தனியார்மயமாக்கும் முடிவை மு.க.ஸ்டாலின் அரசு எடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது.  230 ஆண்டுகள் பழமை வாய்ந்த இம்மருத்துவமனையை கம்பெனி சட்டத்தின் கீழ் தனியார்மயமாக்குவதே இந்த வழிகாட்டுதலின் நோக்கமாகும். நாளொன்றுக்கு 1250க்கும் மேற்பட்ட நோயாளிகள் இம்மருத்துவமனையின் மூலம் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதை தனியாருக்கு மாற்றினால் அவர்களின் நிலை என்னவாகும்? மனநலம் பாதிப்புக்குள்ளான எளிய மக்களை மீட்டெடுக்கும் பணிகள் செய்து வரும் இந்த அரசு மருத்துவமனையை தனியார் மயமாக்குவதன் மூலம் அவர்களை மனநோயாளிகளாகவே கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளது இந்த தனியார் மாடல் அரசு. 

இதை கண்டித்து மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்கவே, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் அரசுக்கு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பொய் பேசி ஏமாற்றுகிறார். கீழ்பாக்கம் மருத்துவமனையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் எடப்பாடி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே நடந்து வருகின்றன. மருத்துவ சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டன. மீண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது மு.க.ஸ்டாலின் அரசு.  

விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், அரங்குகள் தனியாருக்கு தாரை வார்ப்பு

ஏற்கெனவே சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த டென்னிஸ், பேட்மிண்டன் திடல்களை தனியாருக்கு கொடுத்து விட்டது திமுக அரசு. இதன் தொடர்ச்சியாக அக்.29 அன்று நடைபெற்ற மாநகர மேயர் கூட்டத்தில், 9 கால்பந்து விளையாட்டு மைதானங்களையும் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடும் முடிவை எடுத்துள்ளது. இதுவரை மைதானத்தை இலவசமாக பயன்படுத்தி வந்த விளையாட்டு வீரர்கள், பகுதி வாழ் இளைஞர்கள் இனி கட்டணம் செலுத்தி மைதானத்தை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கியுள்ளது.  அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல கொள்ளையோ கொள்ளை!. ஒரு நபருக்கு மணிக்கு ரூ. 120 கட்டணமாம்(!?). பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரம் கால்பந்து பயிற்சி எடுக்க வேண்டுமெனில் அவர்கள் ரூ.1200 கட்டியாக வேண்டும். இதில் அரசுக்கு வரும் வருவாயை விட பராமரிப்பு எனும் பெயரில் தனியார் நிறுவனமே பெரும் பகுதியை கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. இளைஞர்களின் விளையாட்டுப் பங்கேற்பையும் அவர்களின் வாழ்நாள் கனவையும் சிதைக்கிறது இந்த திராவிட தனியார் மாடல் அரசு. எதிர்ப்புக்கு பின்பு இம்முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 600 பூங்காக்கள், செனாய் நகர் அம்மா அரங்கம், தி.நகர் தியாகராயர் அரங்கம் என எளிய மக்களுக்கு சொந்தமான அனைத்தையும் தனியாருக்கு கேள்விக் கேட்பாரின்றி தாரை வார்த்துள்ளது. பூங்காக்களையும், அரங்குகளையும், மைதானங்களையும் எளிய மக்கள் இனி பயன்படுத்தவே முடியாத அவல நிலையை உருவாக்கியுள்ளது இந்த கேடு கெட்ட அரசு.

மிகக் கொடுமையான உழைப்புச் சுரண்டலால் அல்லல்பட்டு வரும் நகர்புறவாழ் உழைக்கும் மக்களுக்கு இதுபோன்ற பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும்தான் அவர்களின் துயரத்தின் வடிகாலாக இருந்து வருகின்றன. அவற்றிலிருந்து அம்மக்களை விரட்டுவதன் மூலம் அவர்களையும் மனநோயாளிகளாக்கி வருகிறது. மறுபக்கம், மனநல மருத்துவமனையையும் தனியார்மயமாக்கி அவர்களை கொல்கிறது. 

மத்திய மோடி பட்ஜெட்டில் மக்கள் நலன், சுகாதாரத் துறைகளுக்கு நிதியை வெட்டுகிறது என்றால் மாநில மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பைத் துறந்து அத்துறைகளை தனியார்மயத்திற்கு பலியாக்கி வருகிறது. இவ்விரு அரசுகளுக்கும் கூட்டுச் சேர்ந்து மக்களை மனநோயாளிகளாக்கி அடக்கம் செய்கின்றன. அடக்கம் செய்யவும் ஜி.எஸ்.டி விதிக்கிறது நரமாமிச மோடி அரசு. சுடுகாட்டையும் கூட தனியார்மயமாக்கி கொள்ளையடிக்கிறது இந்த பிணந்தின்னி மு.க.ஸ்டாலின் அரசு.

சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகளோ இத்தகைய தனியார்மயப் போக்குகள் அரசுக்கு தெரியாமல் துறைசார் செயலர் எடுத்த முடிவாக கருதி அவருக்கு எதிராக மட்டும் குரலெழுப்பி வருகின்றன. கூச்ச நாச்சமே இல்லாமல், மு.க.ஸ்டாலினின் பாதத்தை தங்களது தலையில் வைத்து ஆராதிக்கின்றன. 

எனவே பாசிச மோடி அரசை தூக்கியெறியப் போராடும் அதேவேளையில் முற்போக்கு முகமூடி அணிந்த இந்த துரோக கும்பலின் முகத்திரையை கிழித்தெறிவதும் நமது இன்றைய அத்தியவாசிய கடமையாகியுள்ளது. 

- செந்தளம் செய்திப் பிரிவு