நவம்பர்25 - 4ஆம் ஆண்டு ஏஎம்கே நினைவுநாள்!

ஏகாதிபத்தியங்களின் பனிப்போரையும், கார்ப்பரேட் ஏகபோக நலன்களுக்கான இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியையும் வீழ்த்த உறுதியேற்கும் நாள் !

நவம்பர்25 - 4ஆம் ஆண்டு ஏஎம்கே நினைவுநாள்!

வருகின்ற நவம்பர் - 25, மார்க்சிய-லெனினிய புரட்சியாளர் ஏ.எம்.கே வின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரின் அரசியல் வழியை உயர்த்திப் பிடித்து வரும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் தருமபுரி, நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அரங்க கூட்டமும் தஞ்சை மாவட்டத்தில் பொதுக் கூட்டமும் நடத்த திட்டமிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள விளக்க பிரசுரத்தில் உள்ளனவற்றை இங்கே பதிவேற்றுகிறோம். 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 

ஜனநாயகம் விரும்பும் சான்றோர்களே!

இந்தியப் பொதுவுடைமை இயக்கம் ஈன்றெடுத்த மகத்தான மார்க்சிய லெனினியவாதியும், இகக(மக்கள் யுத்தம் – போல்ஷ்விக்) கட்சியின் நிறுவனரும், நக்சல்பாரி புரட்சியாளருமான ஏஏம்கே அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில் பின் வரும் அரசியல் வழியை உயர்த்திப் பிடிப்பது பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

அமெரிக்க - நேட்டோ மற்றும் ரசிய ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உக்ரைனை மறுபங்கீடு செய்யவும், அதன் மூலம் ஐரோப்பாவில் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவும் கடந்த 9 மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான மக்களும் போர்வீரர்களும் மாண்டுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். ரசியாவின் மீது பொருளாதாரத் தடை விதித்து ரசியாவைத் தனிமைப்படுத்திவிடலாம் என்ற அமெரிக்காவின் திட்டமும் கூட முழுமையாக வெற்றிபெறவில்லை. ரசியாவும் கூட யுத்த களத்தில் பெரிதளவு முன்னேற முடியவில்லை. அண்மையில் கெர்சான் பகுதியிலிருந்து ரசியா பின்வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி கைப்பற்றிய பகுதிகளைக் கூட நேட்டோ-உக்ரைனிடம் இழந்து வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்காக ரசியாவை சார்ந்து ஐரோப்பிய நாடுகள் இயங்கிவருவதால் அந்த நாடுகள் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த ஐரோப்பிய பொருளாதார மந்த நிலையானது உலகப் பொது நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளதாக ஐ.எம்.எப் போன்ற ஏகாதிபத்திய புதிய காலனிய நிறுவனங்களே எச்சரித்து வருகின்றன. ஏகாதிபத்தியங்களின் யுத்தவெறியால் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியால் ஏகாதிபத்திய நாடுகளில் மட்டுமின்றி காலனிய நாடுகளிலும் பாசிசம் தீவிரம் பெற்று வருகிறது. அதை எதிர்த்து இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டங்களும் ஆளும் வர்க்கத்தை குலை நடுங்க வைத்துவருகின்றன. 

ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் எரிசக்தி விலை உயர்வால் ஐரோப்பாவின் மொத்த பணவீக்கம் 6% உயர்ந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஐரோப்பிய பிரிவு இயக்குனர் ஆல்பிரட் கேமர் தெரிவித்துள்ளார். மேலும் எரிபொருள் விலை உயர்வால் 2022-ம் ஆண்டில் முழு ஐரோப்பாவிலும் அன்றாட வாழ்க்கை செலவு 7% உயரும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல் எரிசக்தி விலை உயர்வால் தொழில் நிறுவனங்களின் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை செலவுகள் அதிகரித்திருப்பது, ஐரோப்பிய பணவீக்கத்தை மேலும் தீவிரமாக்கும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும் ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2022-ம் ஆண்டில் உள்ள 3.2%ல் இருந்து 2023-ம் ஆண்டில் 0.6% ஆக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் நோக்கில் ஐரோப்பிய யூனியன் சீனாவுடனான வர்த்தக உறவுகளை பலப்படுத்தி வருகிறது. இதன் பொருட்டு அண்மையில் நடந்த சீன - ஜெர்மன் நாடுகளின் சந்திப்பை அமெரிக்கா கண்டித்துள்ளது. 

ஒருபுறம் அமெரிக்க - நேட்டோ முகாம் இணைந்து உக்ரைன் ஆளும் வர்க்கத்தை பதிலிப்போரில் ஈடுபடுத்தி வருகிறது. மறுபுறம் அமெரிக்காவும் சீனாவும் தைவானை மறுபங்கீடு செய்யவும் தெற்காசிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவும் பனிப்போர் தயாரிப்புகளில் ஈடுபட்டுவருகின்றன. இவ்விரு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையில் மட்டுமின்றி நேட்டோ முகாமிற்குள்ளேயும் கூட முரண்பாடுகள் தீவிரம் பெற்று வருகின்றன. 

உக்ரைன் போரால் எண்ணெய், எரிவாயு விலை உயர்வின் காரணமாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியானது கிரீமியா - ரசியாவிற்கு இடையிலான பாலம் தகர்க்கப்பட்டதாலும், நார்ட்ஸ்ட்ரீம்-2 எண்ணெய் எரிவாயு குழாய் உடைக்கப்பட்டதாலும் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. கிரீமிய - ரசிய பாலமும் நார்ட் ஸ்ட்ரீம் குழாயும் உக்ரைன் மற்றும் நேட்டோவால் தகர்க்கப்பட்டுள்ளது என கூறி ரசியா அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்காவும் அணு ஆயுதத்தை அணு ஆயுதத்தால் எதிர்கொள்வோம் என கூறியுள்ளது. இவ்வாறு ஏகாதிபத்தியங்கள் தங்கள் நிதியாதிக்க கும்பல்களின் ஏகபோக நலன்களுக்கான பனிப்போரை மூன்றாம் உலகப்போராக மாற்ற முயற்சித்துவருகின்றன. 

பாசிச மோடி ஆட்சி ஒழிக! 

அண்மையில் அமெரிக்கா தனது தேசியப் பாதுகாப்பு யுத்ததந்திர கொள்கையை (NSS 2022) வெளியிட்டுள்ளது. அதில் ரசியாவை உடனடி அச்சுறுத்தல் எனவும், சீனாவை நீண்டகால அச்சுறுத்தல் எனவும், இந்தியாவை முக்கியமான யுத்ததந்திர கூட்டாளி எனவும் கூறியுள்ளது. 

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கொள்கைப் பிரகடனம் 2022 ஆனது பனிப்போரையும் அப்போரின் தேர்க்காலில் இந்தியாவை பூட்டியுள்ளதையும் தெளிவாக காட்டுகிறது. 

அமெரிக்காவின் யுத்தவெறிக்கும் தெற்காசிய மேலாதிக்க முயற்சிகளுக்கும் பாசிச மோடி ஆட்சி நாட்டை பலியிட்டு வருகிறது.அதற்காக குவாட்டில் இடம் பெற்று வருவதுடன் ஆக்கஸ் கூட்டமைப்பையும் ஆதரித்து வருகிறது. இந்திய பெருங்கடலை அமெரிக்காவின் இராணுவ தளமாக மாற்றி வருகிறது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அமெரிக்காவின் இராணுவத் தளம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க சுமார் 72 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே லடாக்கில் அமெரிக்காவின் இராணுவ தளம் அமைப்பதற்கு மோடி ஆட்சி அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களின் கீழ் அனுமதி தந்துள்ளது. சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல் தேசியவெறியை ஊட்டி வருகிறது. 

ஹிட்லர் - முசோலினி நாஜிச கும்பலின் இந்திய வாரிசான மோடி கும்பல், ஜெலன்ஸ்கியின் நாஜிச ஆட்சிக்கு எதிரான போர் எனும் பேரில் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த ரசியா ஐ.நாவில் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், போர் விமானங்களை இறக்குமதி செய்து அம்பானி - அதானிகளை கொழுக்க செய்யவே மோடி ஆட்சி ரசியாவை ஆதரிப்பது அனைவரும் அறிந்ததே. ரசியாவை இந்தியா ஆதரிப்பது குறித்தான பிரச்சினையில், ரசியாவிடமிருந்து பெறும் இந்தியாவின் எந்தவொரு உதவியும் தனது யுத்ததந்திரத்திற்கு அனுகூலமாக மாறும் என பைடன் நிர்வாகம் கருதுகிறது. ஆகவேதான், இந்தியா மீது காட்சா தடை உள்ளிட்ட பொருளாதார தடைகள் இன்னமும் விதிக்கப்படவில்லை. அமெரிக்க உலக மேலாதிக்க கனவு தகர்க்கப்பட்டு சீனா - ரசியாவின் உலக மேலாதிக்க முயற்சிகள் பலமடைந்து வரும் நிலைமையுடன் இதை பரிசீலிக்க வேண்டும். 

அமெரிக்கா - அம்பானி - அதானிகளின் ஏகபோக நலன்களில் இருந்தே மோடி ஆட்சி பாசிசத்தை கட்டியமைத்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திருத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. போராடுபவர்களையும் தன் ஆட்சியை விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளையும் குற்றவாளிகளாக மாற்றும் நவீன குற்றப்பரம்பரை சட்டமான குற்றவியல் நடைமுறை ஆளறிதல் சட்டத்தை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டது. இது ஊபா என்.ஐ.ஏ வில் கைது செய்யப்படும் அனைவரையும் குற்றவாளிகளாக மாற்றி பிணையில் வரமுடியாமல் சிறையிலேயே சிதைக்கும் சட்டமாகும். இது மட்டுமின்றி ஒன் டேட்டா - ஒன் என்ட்ரி - ஒரே காவல்துறை எனும் திட்டம் மூலம் சட்டம் ஒழுங்கு மீதான மாநில உரிமைகளைப் பறித்து மையத்தில் குவிக்க முயல்கிறது. 

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை திணித்து சாதி அடிப்படையில் சமூக ஒடுக்குமுறைக்கு ஆளானவர்க்கு இடஒதுக்கீடு எனும் சமூக நீதிக்கு சவக்குழி பறிக்கிறது. இதன் மூலம் இடஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்ட முயல்கிறது. எனவே 10% EWS எனும் சமூக நீதிக்கு எதிரான இடஒதுக்கீட்டு முறையை எதிர்ப்பது அவசியமாகும். வட மாநிலங்களில் சுமார் 40% உள்ள உயர்சாதியினரின் வாக்கு வங்கியை குறிவைத்தே பாஜக இதைக் கொண்டுவந்துள்ளது. ஆகவேதான் காங்கிரசும் இதை ஆதரிக்கிறது. 

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ந்து வருகிறது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ 80.50 ஆக உள்ளது. பணவீக்கம் 10.7% ஆக உயர்ந்துவிட்டது. உலக வறுமை குறியீட்டில் இந்தியா ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டி போட்டு வருகிறது. பாகிஸ்தான் பங்களாதேசை விட மோசமான பட்டினிக் குறியீட்டில் இந்தியா உள்ளது. இதை மூடிமறைக்கவே தேசபக்தி வேடம் போட்டு தேசியவெறியை ஊட்டி பாசிசத்தை அரங்கேற்றுகிறது. அம்பானி-அதானிகளின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக காட்டி வாய்ச்சவடால் அடிக்கிறது. இந்தி ஆங்கில மொழி திணிப்பின் மூலம் தேசிய இன - மொழிகளை நசுக்குகிறது.

மோடி ஆட்சிக்கு முட்டு கொடுக்கும் திராவிட மாடல்! 

மோடி ஆட்சியின் அனைத்து கொள்கைகளையும் இம்மி பிசகாமல் திமுக அரசு அமல்படுத்திவருகிறது. அண்மையில் கார்ப்பரேட்டுகளுக்கான மோட்டார் வாகனச் சட்டத்தை நம்மீது ஏவியுள்ளது. தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்துகிறது. வீட்டுவரியை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடிக்கிறது. எண்ணெய், எரிவாயு, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயந்துவருகிறது. 

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பாஜக நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்துள்ளது. கோவையில் மதக்கலவரத்திற்கு திட்டமிடும் சங்பரிவார காடையர்களுக்கு களம் அமைத்து தருகிறது திமுக அரசு. அடிப்படை பிரச்சினைகளை திசைதிருப்பும் வகையில் பாஜகவுடன் வார்த்தை ஜாலத்தில் ஈடுபட்டுவருகிறது. இந்தி எதிர்ப்பின் பேரால் ஆங்கில ஆதிக்கம் மூலம் தமிழை அழிக்கும் திமுகவின் 'மொழிப்போர்' நாடகம் பாஜகவின் தமிழ்மொழி ஆதரவு நாடகத்திற்கு ஒப்பானதாகும். 

இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கும், மாலெ வழியில் போராடுவதற்கும் ஏ.எம்.கே வழிகாட்டுதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 

ஏகாதிபத்தியங்களின் யுத்தம் குறித்த லெனினிய அணுகுமுறையில் இருந்து ஏ.எம்.கே சர்வதேச அரசியல் வழியை உருவாக்குவதற்கு பாட்டாளி வர்க்கத்திற்கு வழி காட்டியுள்ளார். அதாவது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இந்த பனிப்போரை உள்நாட்டுப் போராக மாற்றும் சர்வதேச அரசியல் பொது வழியை நவம்பர் 25 அன்று உறுதியுடன் உயர்த்திப் பிடிக்க சபதமேற்கவேண்டியது நமது முக்கிய சர்வதேசியக் கடமையாகும். 

இந்த சர்வதேச அரசியல் பொதுவழியில் இருந்து தேசிய அரசியல் வழியை உருவாக்கவும் வழிகாட்டியுள்ளார். இந்திய பாசிசத்தின் வர்க்க வேர்களை (ஏகாதிபத்திய, தரகுமுதலாளித்துவ, நிலவுடைமை வர்க்கங்களை) எடுத்துக்காட்டி பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்தவும், காங்கிரசு உள்ளிட்ட எந்தவொரு கட்சியும் பாஜகவிற்கு மாற்றல்ல எனவும் பாசிச அரசிற்கு நிரந்தர தீர்வு மக்கள் ஜனநாயக குடியரசுதான் எனவும் சரியான மாலெ நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார். மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாசிசத்தின் வடிவங்களில் சிற்சில மாற்றம் வருமே ஒழிய பாசிசத்தின் வேரை அகற்றாமல் பாசிசத்தை வீழ்த்த இயலாது எனவும் வழிகாட்டியுள்ளார். ஆகவே அவரது நினைவு நாளில் இந்த தேசிய அரசியல் வழியை உயர்த்திப் பிடிப்பது நமது தேசியக்கடமை ஆகும். 

ஏ.எம்.கே நினைவு நீடூடி வாழ்க! 

ஏ.எம்.கேவின் மாலெ வழியை உயர்த்திப் பிடிப்போம்!

(நன்றி: சமரன்)

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்,  தமிழ்நாடு

- செந்தளம் செய்திப் பிரிவு