ரஷ்ய எரிசக்திக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிளவுண்ட நிலைப்பாடு
வெண்பா (தமிழில்)
ரஷ்யாவைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க ஐரோப்பிய ஒன்றியம் முயல்கிறது; ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளோ வேறு திட்டங்களைக் கொண்டுள்ளன. உக்ரைன் மீண்டும் தனது அண்டை நாடுகளான ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிடமிருந்து நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வழங்கப்படவிருந்த 90 பில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றியக் கடனைத் தடுப்பதாக ஹங்கேரி மிரட்டியுள்ள நிலையில், அவசர மின்சார விநியோகத்தை நிறுத்திவிடுவோம் என்று ஸ்லோவாக்கியா எச்சரித்துள்ளது. இந்த இரண்டு பதற்றங்களுக்கும் மையமாக விளங்குவது த்ருஷ்பா குழாய் வழித்தடம் ஆகும்; இது ரஷ்யாவை கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் மிக நீண்ட குழாய் வழித்தடங்களில் ஒன்றாகும். த்ருஷ்பா குழாய் வழித்தடத்தின் ஓட்டம் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது, ரஷ்ய ட்ரோன் தாக்குதலால் உள்கட்டமைப்பு சேதமடைந்ததே இதற்கு காரணம் என்று உக்ரைன் கூறியது. இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக உக்ரைன் வேண்டுமென்றே இந்த குழாய் வழித்தடத்தை மீட்டமைப்பதில் தாமதம் செய்வதாக ஹங்கேரியும் ஸ்லோவாக்கியாவும் குற்றம் சாட்டுகின்றன.
ஆனால், ரஷ்யாவைச் சார்ந்திருப்பதை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்து வரும் வேளையில், ஹங்கேரியும் ஸ்லோவாக்கியாவும் ஏன் இன்னும் த்ருஷ்பா குழாய் வழித்தடம் மூலம் ரஷ்ய எண்ணெயை பெரிதும் நம்பியுள்ளன?. ரஷ்யா-உக்ரைன் போரை தொடர்ந்து ஐரோப்பாவில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியானது, ரஷ்ய எரிபொருட்களின் மீது ஐரோப்பிய கூட்டமைப்பு கொண்டுள்ள அதிகப்படியான சார்பை வெளிப்படுத்தியது. மார்ச் 2022-ல் கையெழுத்தான வெர்சாய்ஸ் பிரகடனத்தில், ரஷ்ய எரிவாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரி மீதான சார்பை படிப்படியாகக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை அதிகரித்தல், எரிவாயு தேவையை குறைத்தல் மற்றும் மாற்று ஆதாரங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்த அவர்கள் 'REPowerEU' திட்டத்திற்கு இணங்கினர்.
இருப்பினும், அடுத்தடுத்த மாதங்களில், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, செக்கியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்ய தற்காலிக விதிவிலக்குகள் (exemptions) வழங்கப்பட்டன. ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் ரஷ்ய எரிசக்தி மீதான சார்பைக் குறைக்க கூடுதல் கால அவகாசம் வழங்குவதற்காக இது மேற்கொள்ளபட்டது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், ரஷ்ய எண்ணெயையே பெரிதும் நம்பியிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாக ஹங்கேரியும் ஸ்லோவாக்கியாவும் நீடிக்கின்றன. ஆனால் இந்தச் சார்பானது, அவசியம் என்பதைவிட அரசியல்-பொருளாதாரக் காரணங்களிலிருந்தேதான் அதிகம் உருவாகிறது.
எரிசக்தியா அல்லது அரசியலா?.
ஜனநாயக ஆய்வு மையத்தின் (CSD) சமீபத்திய அறிக்கை, ஹங்கேரி தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வது அரசியல் ரீதியானதே தவிர, அது கட்டாயம் என்பதல்ல என்று வாதிட்டது. 'கட்டிங் தி கார்டு' (Cutting the Chord) என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, "மாற்று விநியோகப் பாதைகள் மற்றும் ரஷ்யா அல்லாத கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தபோதிலும், ஹங்கேரி ரஷ்ய எண்ணெய் மீதான தனது சார்பை மேலும் அதிகரித்துள்ளது, இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஷ்யதடைகளில் இது நிரந்தர ஓட்டையாக மாற்றியுள்ளது" என்றும் CSD அறிவித்தது.
எரிசக்தி மற்றும் தூய காற்றுக்கான ஆராய்ச்சி மையத்தின் தரவுகள், 2024-ல் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் 87% ஆக இருந்தது என்பதைக் காட்டுகின்றன. இது போருக்கு முந்தைய ஆண்டுகளை விட மிக அதிகம். இதன் பொருள் அவர்கள் அந்த விதிவிலக்கு சலுகையின்கீழ் செய்ய வேண்டியது போல மாற்று வழிகளைத் தேடத் தவறிவிட்டனர் என்பது மட்டுமல்ல, மாறாக, இந்தநிலை ரஷ்யாவை அவர்களின் மிகப்பெரிய விநியோகஸ்தராக மாற்றியுள்ளது.
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், கடந்த ஆண்டு நவம்பரில் மாஸ்கோ செல்வதற்கு முன்னதாக, தனது பயணமானது "ஹங்கேரியின் குளிர்காலத்திற்கான மற்றும் அடுத்த ஆண்டிற்கான எரிசக்தி விநியோகத்தை மலிவான விலையில் உறுதி செய்வதற்காக" என்று கூறினார். ஆனால் விநியோகப் பாதுகாப்பு மற்றும் மலிவான எரிபொருள் விலையை உறுதிப்படுத்த ரஷ்யா அவர்களின் ஒரே விருப்பம் அல்ல.
முதலாவதாக, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரு நாடுகளும் ரஷ்யா அல்லாத கச்சா எண்ணெய்க்கான மாற்று குழாய் வழித்தடங்களைக் கொண்டுள்ளன. அட்ரியா குழாய் வழித்தடம் ஹங்கேரிக்கு நேரடியாகவும், த்ருஷ்பா குழாய் வழித்தடத்தின் தெற்குப் பகுதியுடன் இணைவதன் மூலம் ஸ்லோவாக்கியாவிற்கும் ரஷ்யா அல்லாத கச்சா எண்ணெயை வழங்குகிறது. குரோஷியாவின் அரசு நிறுவனமான JANAF ஆல் இயக்கப்படும் இந்த குழாய் வழித்தடம் ஆண்டுக்கு 14.4 மில்லியன் டன் பாய்ச்சும் திறனைக் கொண்டுள்ளது. இது ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரியின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானது என்று அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், கூடுதல் முதலீடுகளுடன் கருங்கடல் வழியாக மற்ற நாடுகளின் விநியோகங்களிலிருந்து எண்ணெயைக் கொண்டு வர ஒடெசா-ப்ரோடி (Odesa-Brody) குழாய் வழித்தடத்தை மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பும் ஹங்கேரியிடம் உள்ளது. இத்தகைய மாற்று வழிகளும் சாத்தியமானவைதான். ஹங்கேரியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான MOL குழுமம், ஏற்கனவே 2019-ல் த்ருஷ்பா குழாய் வழித்தடத்தில் ஏற்பட்ட இடையூறுகளின் போது ரஷ்ய விநியோகம் இல்லாமலேயே செயல்பட்டது என்று CSD குறிப்பிட்டது.
இரண்டாவதாக, ரஷ்ய எண்ணெயை நிறுத்துவது எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று ஹங்கேரி கூறுகிறது. ஆனால் 2024-ல் தனது விதிவிலக்கு சலுகையை தள்ளுபடி செய்த பல்கேரியா, விலையேற்றம் இல்லாமலேயே ரஷ்ய எண்ணெயிலிருந்து வெற்றிகரமாக வேறு மூலத்திற்கு மாறியது என்பதை CSD-யின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஹங்கேரி தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கியதானது நுகர்வோருக்கு குறைந்தவிலையிலான எரிபொருளாக மாறவில்லை.
த்ருஷ்பா குழாய் வழித்தடம் மூலமான விநியோகம் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஷ்யாவும் உக்ரைனும் மாறிமாறி தங்களது எரிசக்தி உள்கட்டமைப்பை மற்றொன்று தாக்கிக் கொண்டிருந்தபோது, உக்ரைனியத் தாக்குதலால் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கான விநியோகம் பாதிக்கப்பட்டது.
யுத்ததந்திர நிலைபாடுகளில் பிளவு
உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரக் காரணங்களைத் தாண்டி, ஹங்கேரியும் ஸ்லோவாக்கியாவும் ரஷ்யாவைத் தொடர்ந்து சார்ந்து இருப்பது புடினுடனான அவர்களின் சுமுகமான உறவுகள் மற்றும் அந்த உறவுகளைத் தொடருவதில் அவர்கள் எடுக்கும் முடிவுகளிலிருந்தே உருவாகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, நவம்பரில், ரஷ்யாவிலிருந்து வரும் எரிசக்தி விநியோகமே ஹங்கேரியின் எரிசக்தி விநியோகத்திற்கு அடிப்படையாகும் என்று ரஷ்ய அதிபருக்கு உறுதியளித்ததன் மூலம் ஓர்பன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் முரண்பட்டார். முன்னதாக, டிசம்பர் 2023-ல் உக்ரைனுக்குத் தேவையான 50 பில்லியன் யூரோ நிதி உதவித் தொகுப்பிற்காக அவர் தனது வீட்டோ (veto) அதிகாரத்தைப் பயன்படுத்தினார். ஓர்பன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் பகுதியாக உக்ரைன் போரை முன்னிறுத்துகிறார், எதிர்கட்சியினர் நாட்டை உக்ரைன் போருக்குள் இழுத்துச் செல்வார்கள் என்றும் அவர் பேசி வருகிறார்.
ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ, அக்டோபர் 2023-ல் உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தியதோடு ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களை வழங்கும் அமைப்பாக இருப்பதிலிருந்து மாறி அமைதியை உருவாக்குபவராக மாற வேண்டும் என்று கூறினார். ஹங்கேரியும் ஸ்லோவாக்கியாவும் ரஷ்ய வர்த்தகத்துடன் பிணைந்திருக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவை விட்டு வெகுவாக விலகிச் சென்றுள்ளது. ரஷ்ய எரிவாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதிகள் மீதான தனது சார்பை ஐரோப்பிய ஒன்றியம் ஓரளவிற்கு படிப்படியாகக் குறைத்துள்ளது. உதாரணமாக, 2021-ன் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெட்ரோலிய எண்ணெய்களை வழங்கிய மிகப்பெரிய விநியோகஸ்தராக ரஷ்யா இருந்தது. 2025-ன் 3-வது காலாண்டு நிலவரப்படி, ரஷ்யாவின் பங்கு வெறும் 1% ஆகக் குறைந்துள்ளது. ரஷ்யாவின் இடத்தை அமெரிக்கா, நார்வே போன்ற பிற நாடுகள் பிடித்துள்ளன.
போருக்கு முந்தைய காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இயற்கை எரிவாயு இறக்குமதியில் ரஷ்யா 48% பங்கைக் கொண்டிருந்தது. இது 2025-ன் 3-வது காலாண்டில் 15% ஆகக் குறைந்தது. தற்போது, நார்வே அந்த கூட்டமைப்பின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு விநியோகஸ்தராக உருவெடுத்துள்ளது. இருப்பினும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) இரண்டாவது பெரிய விநியோகஸ்தராக ரஷ்யாவே தொடர்கிறது. எண்ணெய் மற்றும் நிலக்கரியைப் போல எல்என்ஜி இறக்குமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாகத் தடை விதிக்காததே இதற்கு ஒரு காரணம். திரவமாக்கப்பட்ட எரிவாயு மீதான சார்பைக் குறைக்கும் திட்டம் கடந்த ஆண்டுதான் சட்டப்பூர்வமாகப் புதுப்பிக்கப்பட்டது.
த்ருஷ்பா குழாய் வழித்தட பிரச்சனையானது, மறைந்துள்ள பனிப்பாறையின் மேல்நுனி மட்டுமே. ஆனால், ரஷ்யாவிலிடமிருந்து தங்களது எரிசக்தி சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகள் மிகப்பெரிய சிக்கலைப் பிரதிபலிக்கின்றன.
- வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://epaper.thehindu.com/ccidist-ws/th/th_international/issues/172908/OPS/GIAFJQULI.1+G3UFKUOEA.1.html
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு